Skip to main content

விசா' கன்.





பாரிஸின் நெரிசலான கட்டிடத் தொகுதி ஒன்றின் நாலாம் மாடியில் இருந்தது அந்த அறை . வெறும் முப்பது சதுர மீற்றரில் ரொயிலட் குளிக்கும் அறை என்று சகலதையும் அடக்கியிருந்தது அந்த அறை . அந்த அறையின் மூலையில் குசினி இருந்தது . அறையின் கீழே கார்ப்பெற்றில் கிழங்கு அடுக்கியமாதிரி இருபது மனித உடல்கள் குறட்டைப் போட்டி நடத்திக் கொண்டிருந்தன . இரவு குடித்த வைன் போத்தில்களும் , ஜே பி போத்தில்களும் அவர்கள் அருகே சிதறிக்கிடந்தன . அறையின் இன்னொரு மூலையில் இருந்த ரீவியில் , நீலப்படமொன்று வெக்கமின்றி ஓடிக்கொண்டிருந்தது . அறையின் சுவர்களில் கரப்பான் பூச்சிகள் பரவலாக ஓடி அறைக்கும் சுகாதாரத்திற்கும் வெகுதூரம் என்பதை உறுதிப்படுத்தின .

அந்த அறையில் பெரும்பாலோர்கள் வேலையற்றவர்கள் . அரச உதவித்தொகையில் காலம் தள்ளுபவர்கள் . 90 களில் பிரான்சில் வேலை முயல்கொம்பாகவே அவர்களுக்கு இருந்தது . ஒருசிலரே அந்த அறையில் சிவப்பு பேப்பரில் , ரெஸ்ரோறண்டில் குறிப்பறிந்து கோப்பை கழுவி 5,000 பிராங்கில் சம்பளத்துடன் ஹீரோவானார்கள் . அறையில் அவர்களுக்கு விசேட கவனிப்பும் உண்டு . எல்லோரது காசுப் பிரைச்னைகளையும் இவர்கள் தீர்த்துவைப்பார்கள் . அந்த அறையில் சாதிவேறுபாடோ , பிரதேசவேறுபாடோ கிடையாது . புலத்து அவலங்கள் அவர்களை ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாக்கியது .

அந்த அறையின் ஹீரோக்களில் ஒருவன் தான் விசாகன் . எண்பத்து மூன்றுகளில் கிழக்கு பேர்ளினால் ஜேர்மனி வந்து , இறுதியில் போர்டர் செய்யிற ஆக்கள் மூலம் பிரான்ஸ்சில் தஞ்சமானான் . அவனுக்கு ஆரம்பத்தில் அகதி அந்தஸ்த்துக் கோரியதிற்கான பச்சை நிற பேப்பர் 6 மாதத்திற்கு . பின்பு வேலை செய்கின்ற அனுமதியுடன் சிவப்பு நிற பேப்பர் 3 மாதக் கால இடைவெளியில் உள்துறை அமைச்சு குடுத்துக்கொண்டிருந்தது . அவனது வாழ்க்கை இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாத ரெஸ்ரோறண்டில் கோப்பைகழுவும் வேலையில் ஓடியது .

விசாகன் ஒர் வறிய குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயதிலேயே புலமைப்பரிசில் கிடைத்து . உயர்தரத்தில் அதிஉயர் சித்திகள் கிடைத்தாலும் தந்தையின் அகால மரணம் அவனை நிலைகுலையச் செய்தது . சிறிது காலம் தந்தை செய்து வந்த தோட்டங்களை செய்து வந்தவனுக்கு , அவர்கள் குடும்ப நிலை அறிந்த யாழ்ப்பாணத்தில் ஹார்ட்வெயர்ஸ் கடை வைத்திருக்கும் முதலாளி ஒருவர் தனது மகளை திருமணம் செய்து வைத்து வெளிநாட்டிற்கும் அனுப்புவதாகச் சொன்னார் . அவனது தாயின் வற்புறுத்தலுக்காகவும் அவனது தம்பி தங்கைகளின் வாழ்க்கைக்கும் அவன் அந்தக் கலியாணத்திற்கு சம்மதித்தான் . ஆரம்பத்தில் இனித்த திருமணபந்தத்தில் பெண்ணும் ஆணுமாக இரண்டு பிள்ளைகள் பிறந்தன . எல்லா சுமைகளையும் தனியொருவனாக இழுத்த விசாகனிற்கு , அவனது ஊரில் நடந்த சுற்றிவளைப்பில் அவனது தம்பி கைதுசெய்யப்பட்டு சென்றதன் பொழுது வாழ்வின் நம்பிக்கை கேள்விக்குறியாகியது . விசாகனின் அம்மாவினதும் மனைவியினது கண்ணீரும் அவனைக் கலங்க வைத்தன . இறுதியில் அவனது மாமனார் செய்த ஏற்பாட்டில் வெளிநாடு செல்லச் சம்மதித்தான் . சிறுவயதில் ஓடிவிளையாடிய ஒழுங்கைகளும் , பம்பல் அடித்த கேணியடிகளும் அவனிடமிருந்து வலுகட்டாயமாகப் பிய்த்து எடுக்கப்பட்டன .

அன்று அதிகாலை வேலையை முடித்து வந்த விசாகனின் உடலும் உள்ளமும் ஒரே சேரக் களைத்துக்கிடந்தன . அறையினுள் உள்ளே வர முயற்சித்த விசாகனுக்கு அறையின் அலங்கோலம் கோபத்தைக் கிளறியது. அறைவாசலில் இருபது சோடி சப்பாத்துகளும் இறைந்து கிடந்து , செத்த எலி நாத்தம் அடித்தன . ஓரமாகத் தனது சப்பாத்தை களட்டிய விசாகனக்கு அவனது சப்பாத்து மணம் குடலைப்பிரட்டியது. முதல்வேலையாக தொலைக்காட்சிப் பெட்டியை நிப்பாட்டி விட்டு , இறைந்து கிடந்த போத்தல்களை குப்பை பையில் போட்டு கீழே வீதியில் கொண்டு போய் வைத்தான் . குசினியில் காய்ந்துபோன இறைச்சி , பருப்புச் சட்டிகளையும் , சோத்துப்பானையையும் கழுவுவதற்கு தண்ணி ஊற்றி வைத்தான் .

அவன் களைத்து வந்தாலும் உடனடியாகப் படுக்க விசானுக்கு இடம் இல்லை . விடிய ஆறுமணிக்கு துப்பரவு வேலைக்கப் போக எழும்ப இருக்கும் ரகு , உதயன் , வசந்தன் ஆகியோருக்காக காத்துக்கொண்டிருந்த விசாகன் , வந்த நித்திரையை போக்க ஒரு தேத்தண்ணியை போட்டுக் கொண்டு வந்து அறைவாசலில் குந்தியிருந்து கொண்டு அன்று வந்த கடிதங்களை உடைக்கத் தொடங்கினான் . அதில் மனைவியின் கடிதமும் , உள்துறை அமைச்சுக் கடிதமும் முதலாக எட்டிப்பார்த்தன . மனைவியின் கடிதத்தை கலங்கும் கண்களுடன் விரித்துப்படித்தான் . மனைவியின் அழுகையும் பிரிவு ஆற்றாமையும் அக்கடித்தத்தில் எழுத்துக்களாய் விரிந்து கிடந்தன . பிள்ளகளினது அப்பா பற்றிய ஏக்கத்தையும் , எப்போது தாங்கள் ஒன்றாகச் சேரப்போகின்றோம் ? என்ற அவர்களது கேள்வியும் தன்னை வாட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தாள் . விசாகனுக்கு அவனையறியாமலே அழுகை கேவலுடன் வெடித்தது . அறையில் மற்றவர்கள் எழும்பி விடுவார்களே என்று வந்த கேவலை அடக்கிக் கொண்டான் . அடுத்த உள்துறை அமைச்சுக் கடிதம் அவனுள் பேரிடியாக இறங்கியது . அந்தக் கடித்ததில் , அவனது தஞ்சக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கபட்டு நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது . விசாகன் நிலைகுலைந்து போனான் . அவனுக்கு வந்த நித்திரை போய்விட்டது . நேரத்தைப் பார்த்தான் விடியக்காலை ஐந்தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது.

விசாகனுக்கு சோர்போர்ண் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் படித்துக்கொண்டிருக்கும் அவனது பள்ளி நண்பன் ஆதி நினைவுக்கு வந்தான் . ஆதி இவனைப்போல பொறுப்புகள் இல்லாதபடியால் வந்துடனேயே பிரெஞ்சு மொழியை முறைப்படி படித்து , இப்பொழுது சோர்பேர்ண் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான் . ஆதி அவனது ஆருயிர் நண்பன் . தனது மனப்பாரங்களை எல்லாம் ஆதியிடமே கொட்டுவான் . தத்துவம் படிப்பதால் எதையும் நிதானமாக அறிவுபூர்வமாகவே ஆதி விசாகனுடன் கதைப்பான் .

அறையில் அறைக்காறன் ரெலிபோனை வைத்தால் பில்லை ஏத்திவிடுவார்கள் என்று ரெலிபோனை வைக்காதபடியால் , விசாகன் மாற்றாத உடுப்புடன் கீழே வீதியில் உள்ள பொதுத் தொலைபேசி கூண்டிற்கு வந்தான் . அதிகாலை ஆதியை நித்திரையால் எழுப்பும் குற்ற உணர்வுடன் ஆதியின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினான் . சிறிது நேர இடைவெளியின் பின்பு ஆதி லைனுக்கு வந்தான் .

என்ன மச்சான் இந்த நேரத்தில ? ஆதியின் நித்திரைக் கலக்கம் அப்படியே தெரிந்தது .

மச்சான் எனக்கு ஒருபிரச்சனை உன்னோடை கதைக்கவேணும் .

சரி விசாகன் நான் இண்டைக்கு 2 மணிக்குப் பிறகு யுனிலை லீவா இருப்பன் . வேலை முடிய அங்கை வாவன் « என்றான் ஆதி .

விசாகன் மீண்டும் அறைக்குள் நுளைந்தபொழுது ரகு , வசந்தன் , உதயன் வேலைக்குப் போக ஆயத்தமாகி தேத்தண்ணி குடித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் படுத்த படுக்கை போர்வையுடன் அப்படியே கிடந்தது . குசினியை நோட்டமிட்ட விசாகனுக்கு அவர்கள் பாத்திரம் எல்லாம் கழுவி வைத்திருப்பது தெரிந்தது . களையுடன் களையாக ரைஸ்குக்கறில் சுறிநாம் அரிசயைக் கழுவி அளவாகத் தண்ணியை விட்டு பட்டனைத் தட்டிவிட்டான் . உடுப்பை மாற்றிப் படுத்த விசாகனுக்கு மனைவியைப் பற்றி நினைக்கவே விடாமல் நித்திரை இறுக்கி இழுத்தது . விசாகனுக்கு கிடைத்த சிறிய நின்மதியையும் சந்தோசத்தையும் காலம் என்ற நேரம் ஆலாரம் வாயிலாகப் பிய்த்தது எடுத்தது. அவனது அறையில் இருந்த மணிக்கூட்டில் நேரம் 9 மணி என்று பல்லிளித்தது . அசதியுடன் எழும்பியவனுக்கு அறை சமையல் நெடியால் கமகமத்தது . குசினியில் சமையலில் இருந்த நண்பன் தேத்தண்ணி போட்டுக் கொண்டு வந்தான் . விசாகன் தேத்தண்ணியைக் குடித்து விட்டு அவசரமாகக் குளித்து வெளிக்கிட்டான் . கீழே இருந்த ரெலிபோன் கூட்டினுள் புகுந்து ரெலிக்காட்டைத் தள்ளி விட்டு மனைவியின் இலக்கத்தை அழுத்தியவன் . மனைவியிடம் சிறுது நேரம் கதைத்து விட்டு வேலைக்கு இரயில் எடுத்தான் . அவன் றெஸ்ரோறண்டில் இயந்திரமாக இருந்து விட்டு ஆதியைச் சந்திக்க யுனிக்கு போயிருந்தான் .

000000000000000000000000000000

விரிந்து பரந்திருந்த சோர்பேர்ண் பல்கலைக்கழகத்தை அவன் ஏக்கத்துடன் பார்த்தான் . தனக்கும் சுமைகள் இல்லாவிட்டால் இப்படித்தானே படிப்பேன் என்று அவனது மனம் அழுதது . அவனை தூரத்தில் கண்ட ஆதி தனது நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு இவனிடம் வந்தான் . இருவரும் கம்பஸ் கன்ரீனுக்குள் நுளைந்தனர் . ஆதி இருவருக்கும் கபேயை எடுத்துக் கொண்டு வந்தான் .

"ஏன்மச்சான் காத்தால எழுப்பின்னி ? வீட்டிலை ஏதாவது பிரைச்சனையோ"? 

" இல்லையடாப்பா எல்லாரும் நல்லாய்த்தான் இருக்கினம் . இங்கை தான் எனக்கு பெரிய பிரச்சனையாப் போட்டுது . நீ தான்ராப்பா எனக்கு வழிசொல்லு" . 

என்றவாறே அவன் தனக்கு வந்திருந்த கடிதத்தை ஆதியிடம் குடுத்தான் கோப்பியை உறிஞ்சியவாறே கடிதத்தை புருவம் நெரியப் படித்தான்.

" உதுக்கே பயப்பிட்டனி . இதெல்லாம் சிம்பிள் வேலை . உந்த நசலுக்கையும் கடவுள் உனகொரு நல்ல வழியை விட்டிருக்கிறார் " .

" குழப்பாமல் விளப்பமாய் சொல்லடாப்பா " .

" உன்ரை வழக்கில நீ கலியாணம் கட்டேலை எண்டெல்லோ போட்டுக்கிடக்கு" ?

" ஓமடாப்பா".

" பேந்தேன் குழம்பிறாய் . நீ ஓமெண்டு சொல்லு என்னோடை படிக்கிற பெட்டை சண்டிறின் ஓடை உன்ரை விசயமாய் கதைக்கிறன் . மேரியில நீங்கள் ரெண்டுபேரும் ஒண்டாயிருக்கிறதாயும் கலியாணம் செய்யப்போறதாய் சொல்லுங்கோ" .

" என்ன………. எனக்கு கலியாணமோ ? என்ன விழையாடுறியே ? என்ரை மனுசிக்கு என்னால துரோகம் செய்யேலாது " .

ஆதி விசாகனை நிதானமாக ஊடுருவிப் பார்த்தான் .

" சொல்லிறன் எண்டு குறை இனைக்காதை . எப்பவும் நாங்கள் யதார்த்தமாய் யோசிக்கவேணும் . உணர்ச்சிக்கு இடம் குடுக்க கூடாது . இப்ப உனக்கு முன்னாலை இருக்கிறது விசா பிரச்சனை . இதை உடைக்கவேணும் . சண்டிறின் உன்னோடை குடும்பம் நடத்தப்போற பெட்டை இல்லை . எங்கடை ஆக்களிலை அவளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடக்கு . அவளோடை ஒண்டா வாழுற மாதிரி பக்கத்திலை நிண்டு கொஞ்ச படங்கள் அவளின்ரை அறையிலை நீ தங்கியிருக்கிறமாதிரி கொஞ்ச ஏற்பாடு அவ்வளவுதான். அவள் உன்னோடை கோட்டுக்கு வந்து கையெழுத்து போடுவள் . அவள் படிப்பை பாப்பள் . நீ உன்ரை பாட்டில இரு . ஒரு வருசம்தான் விசா உன்ரை கையிலை …. நான் சொல்லுறதைக் கேள் . உன்ரை நல்லதுக்குத்தான் எதையும் உனக்குச் சொல்லுவன் . இதை ஆருக்கும் சொல்லிப் போடாதை". 

விசாகனிற்கு ஆதி சொன்னது ஆரம்பத்தில் குழப்பமாகவே இருந்தாலும் , ஆதி கலியாணத்தைப் பற்றி விபரிக்க விபரிக்க ஆதி சொல்வது சரியாகவே பட்டது . விசாகன் இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக , மறுநாள் சண்டிறினை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி ஆதியிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்பினான் . அவனால் வேலையில் ஒன்றிணையமுடிவில்லை . அவன் மனதில் அடிக்கடி அவனது மனைவியின் சாந்தமான முகம் வந்து போய்க்கொண்டிருந்தது . மறுநாள் காலை ஆதி அவனுக்கு போன்பண்ணி வேலைமுடிய சண்டிறினுடனான சந்திப்பை உறுதி செய்தான் .

0000000000000000000000000000

சண்டிறின் பிரானஸின் வடபகுதியான நோர்மண்டியைச் சேர்ந்தவள் . தந்தையை பிரிந்து வாழும் தாயாருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். சண்டிறினுக்கு வாழ்க்கையில் எல்லாம் கிடைத்திருந்தும் தாய்தகப்பனின் பிரிவால் அன்பு என்பது அவளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது . எல்லோருடனும் கலகலப்பாக இயல்பாகவே பழகுவாள் . 23 வயதே எட்டிப் பிடிக்கும் சண்டிறினுக்கு இயற்கை அளவுக்கு அதிகமான அழகை அள்ளிச் சொரிந்து இருந்தது . அவளது நீலநிறக் கண்கள் எப்பொழுதும் படபடத்துக் கதைபேசியபடியே இருக்கும் .

யுனியை அடைந்த விசாகன் அங்கு ஆதியுடன் சண்டிறனைக் கண்டான் . அவன் கண்களால் அவனை நம்ப முடியவில்லை . சண்டிறனது இயல்பான பேச்சும் அழகும் அவனை சுண்டியிழுத்தன . ஆதியின் பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு மூவரும் மனந்திறந்து கதைத்தனர் . இறுதியில் சண்டிறின் தனது மேற்படிப்புக்காக இந்தக்கலியாணம் மூலம் 20 000 பிராங்குகளை , விசானுக்கு நிரந்தரவதிவிட உரிமை கிடைக்கும்பொழுது எதிர்பார்பதாகச் சொன்னாள் . அவனும் அதற்குச் சம்மதம் கொடுக்கவே ஒரு கிழமை கழித்து கோட்டில் கலியாணத்திற்கு ஆதி ஏற்பாடு செய்து விட்டான். கிராமசபையில் ஆதியின் நண்பர்கள் முன்னிலையில் விசாகன் சண்டிறின் இணைந்து வாழும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அத்தாட்சிப்பத்திரங்களையும் கொடுத்தார் . பின்பு சண்டிறினும் அவனும் அவரவர் பாதையில் போய்க்கொண்டிருந்தனர் . விசாகனும் தனது வழக்கை மறுபரிசீலனை செய்யக்கோரி புதிய ஆவணங்களுடன் சேர்த்து அனுப்பிவிட்டு காத்திருந்தான் . அடுத்தடுத்து விசாரணைகள் இருவரும் கணவன் மனைவி போலவே போய் பதிலளித்துவிட்டு வருவார்கள்.

நாட்கள் மாதங்களை கடந்தது அது கோடைகாலமாகையால் எங்கும் வசந்தமாகவே இருந்தது . விசாகனது வாழ்க்கையிலும் வசந்தத்திற்கான பூக்கள் மொட்விழ்க்கத் தொடங்கின . , ஒரு வருடத்தையும் தாண்டிய நாள் ஒன்றில் விசாகனையும் சண்டிரினையும் அழைத்து விசாரணைகளின் முடிவில் உள்துறை அமைச்சு விசாகன் சண்டிறின் தம்பதிகளுடைய கோரிக்கையை பரிசீலித்து விசாகனை பிரான்ஸ்சில் இருப்பதற்கு அங்கீகரித்து கடிதம் அனுப்பியிருந்தது . அவன் மகிழ்சியின் உச்சாணிக்கொம்பிற்கே போயிருந்தான் . ஒரு நாள் மாலை ஆதி இந்த சந்தோசத்தைக் கொண்டாட விசாகனை சண்டிறினது அறைக்கு அழைத்திருந்தான் . விசாகன் அங்கு சென்றிருந்தபொழுது ஆதியும் வந்திருந்தான் . மேசையில் போர்தோ அதிஉயர் சிவப்பு வைன் போத்தல்கள் இரண்டு கம்பீரமாக வீற்றிருந்தன . மூவரும் பலவிடையங்களையும் கலகலப்புடன் வைனை அருந்தியவாறே கதைத்துக் கொண்டிருந்தனர் . ஏற்கனவே தான் சண்டிறினுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியின்படி தான் சீட்டு போட்டு சேர்த்து கொண்டுவந்திருந்த இருபதினாயிரம் பிராங்குகளை ஒரு என்வலப்போடு பத்திரமாக இருக்கிறதா என பொக்கற்றில் தொட்டுப்பார்த்துச் சரிசெய்து கொண்டான் . விருந்தின் இடையில் ஆதிக்குவந்த அவசர தொலைபேசி அழைப்பால் , ஆதி இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டான் . வைனை துளித்துளியாய் இருவருமே சுவைக்கத் தொடங்கினார்கள் .

இரவு பத்து மணியைத் தாண்டியவேளையில் வைன் இருவருக்குமே உடலில் சூட்டை ஏற்றியிருந்தது . சண்டிறனது கண்களும் கன்னங்களும் வைன் நிறத்திற்கே மாறியிருந்தன . மெதுவாக போய்க்கொண்டிருந்த பாடலின் சத்தத்தை அதிகரித்தவள் . கேய்......... உனக்கு எந்தரக நடனம் தெரியும் ? என்றாள். நடனமா ? அதேல்லாம் எனக்குத் தெரியாது என்று நெளிந்தான். உனக்கு சம்பா நடனம் தெரியுமா?? சம்பாவா அப்படியொரு அரிசி இருக்கு அது மட்டும்தான் எனக்கு தெரியும் என்றான். சரி வா உனக்கு கற்றுக்கொடுக்கிறேன் என்று கையை நீட்டினாள். எழுந்து வந்த விசாகனின் வலக்கையை தனது இடையில் பொருத்தியவள் இடக்கையை தனது இடக்கையால் இழுத்து நிமித்தினாள் . ஒன்று இரண்டு சொன்னவள் கால்களை இப்படி ஒரு அடி முன்னிற்கு பின்றிற்கு என்று மெதுவாக நடனத்தை தொடங்கியவர்கள் அவர்களிற்கிடையிலான இடைவெளி குறைந்து மது போதையும் ஏற ஒருகட்டத்தில் விசாகன் நிதானமிழந்து சண்டிறினை நெருங்கி அவளது உதட்டில் தனது உதட்டை பதித்துவிட . சண்டிறினும் எதுவித எதிர்ப்பையும் காட்டவில்லை .

அவன் அதிகாலை கண்ணை விழித்து பார்த்தான் . போர்வைக்குள் அவனை அணைத்தபடி படுத்திருவளின் கைகளை மெதுவாக விடுவித்து எழுந்தவன் ஆடைகளை அணிந்து கொண்டு பொக்கற்றை தடவிப்பார்த்தான் .அவன் அவளிற்காக கொடுக்க கொண்டுவந்த பணம் பத்திரமாக இருந்தது. அதனை எடுத்து அங்கு மேசையில் வைக்கப்போனவன் சே...கஸ்ரப்பட்டு வேலைசெய்து சீட்டு போட்டு சேத்த காசு என்று நினைத்தவன் மீண்டும் சட்டைப்பையில் வைத்துவிட்டு மெதுவாக சண்டிரினை எட்டிப்பார்த்தான் அவள் அசையவில்லை. தனது விசாவும் சரியாக இருக்கிறதா என்று சட்டைப்பையில் சரிபார்த்தவன் அங்கிருந்து வெளியேறி வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கியிருந்தான்.






September 08, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...