இந்தப் பக்குவத்துக்குச் சொந்தக்காறி என்ரை மாமி தான் . நான் போனவருடம் பருத்தித்துறையில் நின்றபோது மாமியுடன் கதைத்து சுட்ட பக்குவம் .
தேவையான பொருட்கள்:
கோதுமை மா 1 கிலோ .*****
உளுத்தம்பருப்பு 500 கிறாம் .
உப்பு 2 மேசைக்கறண்டி .
பெருஞ்சீரகம் 2 மேசைக்கறண்டி .
மிளகாய்தூள் ( தேவைக்கு ஏற்ப ) .
கறிவேப்பமிலை 30 - 35 இலை .
எண்ணை ஒரு போத்தில் .
பக்குவம் :
உழுத்தம் பருப்பை 2 மணி நேரம் உறவைத்துப் பின் வடித்துக் கொள்ளுங்கோ. கோதுமை மாவை அரித்து அதனுள் உப்பைச் சேர்த்து நன்றாகக் கையால் சேருங்கோ. கறிவேப்பிலையை சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கோ. கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெ.சீரகம் மூன்றையும் மாவுடன் சேர்த்து நன்றாகக் கலவுங்கோ. பின்பு உழுத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கலவுங்கோ. ரொட்டிப் பதம் வரும்வரை அடித்துக் குழையுங்கோ. அதன்பின்பு லட்டு உருண்டையளவு உருட்டி ஒரு தட்டில் போடுங்கோ. பூவரசம் இலையின்******** மேல் துளி எண்ணை பூசி , உருண்டையை வைத்து இரு கைப் பெருவிரல்களால் தட்டையாக வட்டமாகத் தட்டுங்கோ. நீங்கள் தட்டையாகத் தட்டுகின்ற வேளை விரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டிய பூவரசம் இலைகளுடன் கூடிய வடைகளை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வையுங்கோ. முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும்.இப்ப பருத்தித் துறை வடை தயார்.
**** பூவரசம் இலையில் வைத்துத் தட்டினாலே வடையின் உண்மையான சுவை வெளிப்படும் . ஆனால் பூவரசம் இலை இங்கு கிடைக்காத படியால் , கடையில் ஓயில் பேபர் வாங்கி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டி வையுங்கோ . ஒரு ரின்பால் பேணியின் அடிப்பக்கத்தில் ஓயில் பேப்பரை வைத்து , அதன் மேல் உருண்டையை வைத்து ரின்பால் பேணி விட்டம்வரை வட்டமாகத் தட்டுங்கோ .
***** உழுத்தம்பருப்பு அளவில் தவறு ஏற்பட்டதால் திருத்தியுள்ளேன் .
படிமானம் :
இதை சூடு ஆறினவுடன் ஒரு கிளாஸ் வைன் அல்லது விஸ்கி அல்லது பிளேன் ரீ யோடை சாப்பிட்டுக்கொண்டு முகநூலை விடுப்பு பார்க்கலாம் .
January 28, 2013
Comments
Post a Comment