கோபம்
நம் மீது யாராவது கோபம்கொண்டால், நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் 'நம் மீது அவன் கோபம் அடைய, நாம் அவனுக்கு என்ன செய்தோம். அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்? மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!' என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள். அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக, 'நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன? உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்? நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை. உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். 'என்று நட்பாகக் கேட்கவும். உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.
''யாராவது உன் மேல் கோபம் கொண்டால், அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே. உடனே பதிலுக்கு சண்டை போடாதே. அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,'நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,'என்று கூறவும்.''குருட்ஜீவ் கூறுகிறார்,''இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லை என்பதனை உணர்ந்தேன். நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை. நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன். அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால், அவரிடம் சென்று நேரடியாக,'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,'என்று கூறுகிறேன். இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.''
000000000000000000000000000000
கடவுள் உங்களையும் தேடி வரலாம்
அன்று சங்கடகர சதுர்த்திதி விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு அமர்ந்திருந்தேன் நமது சிஷ்யர்கள் எல்லோருக்கும் அந்த நிகழ்வு அதிசயமாகப் பட்டிருக்க வேண்டும்
பொதுவாக எனக்கு இந்த பூஜை புனஸ்காரம் இவைகளிலெல்லாம் அவ்வளவாக நாட்டம் கிடையாது காரணம் பூஜை செய்பவர்களிடத்தில் எதற்காக செய்கிறீர்கள் எனக்கேட்டால் கடவுளிடம் பிராத்தனை வைக்கிறோம் என்பார்கள் அல்லது இறைவனை மகிழ்விக்க என்பர்கள்
என்னைக் கேட்டால் இவைகள் எல்லாமே முட்டாள்தனம் என்பேன் கடவுளிடம் எதற்காக பிராத்தனை செய்யவேண்டும் நாம் பிராத்தனை செய்தால்தான் நமக்கு என்ன வேண்டுமென அவனுக்குத் தெரியுமா அப்படித்தான் தெரியும் என்றால் எல்லாம் அறிந்தவன் என்ற பட்டம் அவனுக்கு எதற்கு மனிதற்களான நாம் நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொன்னால்தான் கடவுள் புரிந்துக் கொள்வானா அல்லது கடவுளுக்கே புத்தி சொல்லுகின்ற அளவுக்கு மனிதன் வளர்ந்து விட்டானா மனிதன் வளர்ந்துவிடவும் இல்லை கடவுள் அறியாமையிலும் இல்லை எல்லாம் அறிந்த கடவுளுக்கு நம் குறைகள் என்னவென்று தெரியாதா அதைவேறு நாம்பூஜை போட்டு சொல்லவேண்டுமா வேண்டுதலுக்காகவும் இல்லை கடவுளின் ஞானத்தை குறைவு படுத்துவதற்காகவும் இல்லை நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவனை மகிழ்விப்பதற்காகவும் பூஜைசெய்கிறேன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒருவன் நமக்கு எந்த உதவியும் செய்யவேண்டிய அவசியம் இல்லாத நிலையில் இருக்கிறான் அப்படி இருந்தும் நமது இயலாமையைக் கண்டு இறங்கி வந்து உதவுகிறான்
அப்படி செய்வதன் பெயர்தான் உதவி அதற்கு காட்டப்பட வேண்டியதுதான் நன்றி குழந்தைக்கு நடைவண்டி வேண்டும் பசியார உணவு வேண்டும் உடல் மறைக்க துணிமணி வேண்டும் என்றால் அதை தாய் தகப்பன் உடனடியாக செய்யவேண்டும் செய்தே ஆகவேண்டும் பாலூட்டியதற்காக அம்மாவுக்கு பாராட்டு விழாவா எடுக்க முடியும் எடுக்கத்தான் வேண்டுமா அதை எதிர்பார்ப்பவளா அம்மா தாயிலும் சாலப்பரிவுடையவன் அல்லவா இறைவன் அற்ப நன்றியை எதிர்பார்த்தா நம்மை படைத்திருப்பான் நமது பூஜைகளால் இறைவன் மகிழ்கிறானா நிச்சயமாக அதை சொல்ல முடியுமா தூபதீபம் காட்டுவதிலும் அபிஷேக ஆராதனைகள் புரிவதிலும் கடவுள் பூரித்துப் போகிறானா மேதைகளுக் கெல்லாம் மேதையாக இருப்பவன் கிலுகிலுப்பை சத்தத்திலும் தண்ணீரை அளைந்து விளையாடுவதிலுமா தன்னை மறக்கிறான் ஒருக்காலும் இருக்க முடியாது எதிர்பார்ப்பே இல்லாத இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்பது பேதமை அல்லவா உலகத்து ஆனந்தம் எல்லாம் அவனுக்குள் அடங்கி இருக்கிறது அப்படி இருக்க வெளியிலிருந்து எது அவனை சந்தோஷப் படுத்திவிட முடியும் எல்லாம் கொடுக்க வேண்டியவன் அவன் அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?
குயவன் பானை செய்கிறான் அந்த பானையையே அவனுக்கு பரிசாகக் கொடுத்தால் நன்றாகவா இருக்கும் அவனிடம் உள்ளதையே அவனுக்கு கொடுப்பதில் என்ன சிறப்பு உள்ளது அதேப் போல்தான் கடவுளிடம் எல்லாமே இருக்கிறது பிறகு எதை அவனுக்கு அர்ப்பணிப்பது அவனுக்கு அன்னியமாக இந்த உலகத்தில் ஒரு பொருள் இல்லையே பிறகு எப்படி நாம் கொடுப்பதினால் அவன் சந்தோஷப்பட முடியும் இந்த மாதிரி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்ற ஒருவன் திடீரென ஒருநாள் மடி ஆச்சாரத்தாடு பூஜை செய்வதைப் பார்த்தால் யாருக்குத்தான் வியப்பாக இருக்காது.
இத்தனை நாட்கள் இவன் பேசியது பொய்யா அல்லது இப்போது நாம் காணுவது பொய்யா என்ற எண்ணம் கூட ஏற்படலாம் சிலர் பெரிய மனிதர்கள் என்றாலே பேச்சி ஒன்றும் செயல் ஒன்றுமாகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது என்ற முடிவுக்கும் வரக்கூடும் ஆனால் நம்ம மனுஷாளுக்கு அந்த மாதிரியான சிந்தனைகள் வந்ததாக சொல்ல முடியாது குருஜிசெய்வதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கும் அதுதான் எது என்று புரியவில்லை அது எதுவாக இருக்கும் என்றுதான் வியப்படைந்து இருக்கிறார்கள் என்பது அடுத்ததாக அவர்களிடமிருந்து வந்தக் கேள்வியிலேயே புரிந்தது பூஜைகளில் அதிக நாட்டம் இல்லாத நீங்கள் திடீரென பூஜையில் ஈடுபட்டதன் ரகஸியம் என்ன வென்று கேட்டார்கள் கேள்விகள் கேட்பதும் பதில்கள் பெறுவதிலும்தானே அறிவின் விரிவாக்கம் இருக்கிறது எவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் தன் செயலுக்கு யாரும் எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்கிறானோ அவன் தானும் சிதைந்து மற்றவர்களையும் சிதைக்கிறான் என நம்புகின்றவன் நான்
எனவே பதில் சொல்லலானேன் நிஜமான பூஜை என்பது என்ன? மலர்மாலை சாற்றுவதோ அர்ஜனை செய்வதோ அல்ல! சிலர் மணிக்கணக்காக பூஜை செய்கிறேன் ஜெபிக்கிறேன் என்று சொல்கிறார்கள் அப்படிப்பட்டவர்களில் பலர் கடவுள் சந்நிதானத்தில் உட்கார்துக் கொண்டு தங்கள் சொந்தக் குழப்பங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள்
இப்படிப் பட்டவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவகளையும் ஏமாற்றுகிறார்கள் எத்தனை நேரம் பூஜை செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு நேரம் நம் மனது கடவுளோடு ஐக்கியப்பட்டு இருக்கிறது என்பதுதான் முக்கியம் உண்மையில் பூஜை என்பது புறச்செயல் அல்ல அகச்செயல் அற்பணிப்பாகும் நம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படத்தலே பூஜை! உங்கள் நல்ல எண்ணங்களால் கடவுளுக்கு அபிஷேகம் செய்யுங்கள் நல்ல செயல் என்ற சந்தனத்தை எடுத்து அவன் திருவடிகளில் பூசுங்கள் கருணை என்ற ஊதுவத்தி ஏற்றி அன்பு என்ற சாம்பிரானிப் தூபத்தால் சமூகத்தை வாசனை மயமாக்குங்கள் அறமுரசு கொட்டி அஹிம்சை மணியொலி எழுப்பி ஒழுக்கம் என்ற சங்கநாதம் செய்து ஞான தீபம் ஏற்றி அன்றாட வாழ்வின் ஒவ்வொறு மணித் துளியிலும் பூஜை செய்யுங்கள் ! இதுதான் இதுமட்டும் தான் நிஜமான பூஜை! இத்தகைய வழிபாட்டை நினைவு படுத்துவதுதான் நித்திய பூஜையின் தத்துவம் நான் பூஜை செய்வது ஏன் தெரியுமா? அந்த நேரத்தில் அம்மாவின் மடியில் தனியாக தலைவைத்து படுத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்படுகிறது அதாவது என் நித்திய சொந்தக்காரனான கடவுளோடு தனித்திருப்பதாக உணர்கிறேன் என் நல்லதும் கெட்டதும் முழுமையக அறிந்த அவனோடு முழு உறவை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்ள நான் முயல்கிறேன் அந்த முயற்ச்சி எனக்கு நிறைவைத் தருகிறது ஆனந்தக் கடலில் என்னை தள்ளுகிறது எப்போதெல்லாம் தளர்ச்சியும் சோர்வும் எனக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பூஜை செய்கிறேன் புத்துணர்வைப் பெறுகிறேன் நீங்களும் இப்படி செய்து பாருங்கள் கடவுள் உங்களையும் தேடி வரலாம்
00000000000000000000000000000000000
நாகரீகத் தந்திரம்
பிறரிடம் மரியாதையாக இருப்பவர்கள்தான் அதிக தன் முனைப்புடையவர்களாக (EGOISTS)இருக்கிறார்கள். அவர்கள் நிற்கின்ற பாங்கு,பேசுகிற விதம்,பார்க்கின்ற பார்வை, நடை எல்லாவற்றையும் மரியாதையாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உள்ளே அவர்களின் தன்முனைப்புதான் அவர்களைக் கையாளுகிறது. மிகவும் பணிவாக இருப்பவர்கள் ''தாங்கள் ஒன்றுமே இல்லை,கால்தூசு போன்றவர்கள்'' என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் அப்போது அவர்கள் கண்களைப் பார்த்தால் அங்கு தன்முனைப்பு ஆட்சி செய்வது தெரியும். இதுமிக தந்திரமான தன்முனைப்பு ஆகும்.
மரியாதையாக இருப்பவர்கள் மிகவும் தந்திரக்காரர்கள். சிறந்த சாமர்த்தியசாலிகள். அவர்கள், 'நான் மிகச்சிறந்தவன்,' என்று சொன்னால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள் ஆகி விடுவார்கள். பிறகு போராட்டம் எழுகிறது. அவர்கள் தன்முனைப்பளர்கள் என்று முத்திரை குத்தப்படுவர். அப்புறம் மக்களைத் தங்களுக்கு வசதியாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள், 'நான் கால் தூசியைப் போன்றவன்' என்று சொன்னால், மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தங்கள் கதவைத் திறப்பார்கள். பிறகு அம்மக்களை அவர்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம். எல்லாவிதமான மரியாதைகளும் பண்பாடுகளும் ஒரு வகையான நாகரீகத் தந்திரத்தனமாகும்.
0000000000000000000000000
புத்திசாலித்தனம்
நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.
நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.
00000000000000000000000000000000
உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல
அலெக்சாண்டரின் மனம் நாலா புறமும் தறிக்கெட்டு ஓடும் குதிரைகளைப்போல் ஓடியது, அவனது சிந்தனையில் இந்தியாவை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும், அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஓடியது. ஆயினும் அதில் சில சிக்கல்களும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் மாறி மாறி தோன்றி அவனை அலைக்கழித்தது பாரதத்தை படை பலத்தால் வீழ்த்த வேண்டுமென்றால் மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை பலத்தையும் அழிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் சாணக்கியனின் மதி நுட்பத்தை மழுங்கடிக்க வேண்டும், அது இயலுமா? தன்னால் முடியுமா? சாணக்கியனின் மதிநுட்பத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்கிறார்களே அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே அந்த மகா மேதையின் அறிவு பலத்தின் முன்னால் தனது சேனையின் பலம் சின்னாபின்னமாகி விடாதா? என்றெல்லாம் யோசித்து குழம்பினான், எதற்குமே அஞ்சாத அவன் இதயம் கௌடில்யரின் அறிவாயுதத்தை நினைத்த போதே சற்று நடுங்கியது.
கூடாரமடித்து மதிய வெயிலுக்கு இளைப்பாறிக் கொண்டிருந்த படைவீரர்களையும் படுத்து புரண்டு கொண்டு இருந்த புறவிகளையும் மாறி மாறிப் பார்த்துவண்ணம் சிந்து நதிக் கரையோரம் நடந்து கொண்டு இருந்த அலெக்சாண்டருக்கு தூரத்தில் ஒரு மர நிழலில் ஒரு மனிதன் படுத்திருப்பது கண்ணில் பட்டது, அந்த மனிதனிடம் செல்லவேண்டும், அவனோடு பேசவேண்டும் என்ற அவா ஏனோ திடீரென ஏற்பட்டது, தனது நடையை துரிதப்படுத்தி அந்த மனிதன் அருகில் அலெக்சாண்டர் சென்றான்
அலெக்சாண்டர் வந்ததையோ தனது அருகில் ராஜ உடையில் ஒருவன்வந்து நிற்பதையோ அந்த மனிதன் சட்டை செய்யவே இல்லை, தன்பாட்டிற்கு கண்களை மூடுவதும் தனக்குள் எதையோ எண்ணி முறுவலிப்பதுமாக இருந்தான் அலெக்சாண்டர் அந்த மனிதனை உற்று கவனித்தான், திடகாத்திரமான தோள்களும் பரந்த மார்பும் அவனிடமிருந்து வெளிப்பட்ட ஒரு வித தேஜசும் மரியாதையை ஏற்படுத்தியது, ஆனாலும் அவனது அலட்சியம் தன்னை கவனித்தும் கவனிக்காது இருந்த போக்கும் மனதிற்குள் சிறிது சினத்தை மூட்டியது சினத்தை உள்ளுக்குள் மறைத்துவிட்டு அந்த மனிதனைப் பார்த்து “யார் நீங்கள்”? என்று கேட்டான், அலெக்சாண்டரின் கேள்வி பிறந்ததும் மின்னல் வெட்டியது போல் அவனைத் திரும்பிப் பார்த்த அந்த மனிதன் “ நீ யாரோ! அவனே தான் நான் ” என்றான், இந்த பதிலின் அர்த்தம் அலெக்சாண்டருக்குப் புரியவில்லை, ஆனாலும் தான் ஒரு மாமனிதன் முன் நிற்பதாக உணர்ந்தான், அந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டவுடன் மண்டியிட்டு அவனை வணங்கினான்,
“ ஐயா நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, உங்களது பதிலில் உள்ள ஆழமான பொருளால் நீங்கள் ஓர் மகாஞானியாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன், நெருப்பை வாரி இறைத்தது போல் சுற்றுப்புறமெல்லாம் சூரியனின் தகிப்பு பரந்து கிடக்கிறது, மரநிழலும் குளிர்ச்சியை தரவில்லை ஆயினும் நெடுநேரம் இதே இடத்தில் நீங்கள் இருப்பது போல் நான் உணர்கிறேன், வெயில் உங்களை சுடவில்லையா? நான் கிரேக்கச் சக்கரவர்த்தி என் உத்திரவுக்காக ஆயிரம் பேர் காத்து கிடக்கிறார்கள்
நான் திரும்பும் இடமெல்லாம் செல்வத்தையும் அழகிய வனிதையர்களையும் தவிர வேறு எதுவும் இல்லை, தாங்கத் தொட்டியில் பன்னீரில் குளிக்கவேண்டும் என்று நான் நினைத்த மறுகணமே அதைப் பெற முடியும், ஏன்? உலகில் எந்த மூலையில் நான் விரும்புவது இருந்தாலும் அதை பெற்றுவிடும் சூழல் எனக்கு உண்டு ஆனாலும் என் மனது குழம்புகிறது, அச்சப்படுகிறது, துயரத்தால் துடிக்கிறது, நீங்கள் பெற்று இருக்கும் முகத்தெளிவையும் உங்கள் குரலில் உள்ள உறுதியையும் என்னால் பெறமுடியவில்லை, எதுவுமே இல்லாமல் எப்படி நீங்கள் இந்த வரத்தை பெற்றீர்கள்?” என்று அலெக்சாண்டர் இன்னும் எவையவையோ பேசிக் கொண்டே சென்றான், எல்லா பேச்சுகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதன் அலெக்சாண்டரை பார்த்து மெதுவாக கேட்டான்
“ நீ படைநடத்தி எதை சாதிக்கப் போகிறாய்? ” என்று
“ என் நாட்டின் எல்லையை விரிவுபடுத்தப் போகிறேன்,”
“ அதன் மூலம் நீ பெறுவது என்ன, ”
“ சக்ரவர்த்தி என்ற பட்டம்! ”
“ சக்ரவர்த்தி பட்டம் உனக்கா? உன் உடலுக்கா? ”
இந்தக் கேள்வியில் அலெக்சாண்டர் மௌனமானான், அவனுக்குள் குதித்துக் கொண்டிருந்த சமுத்திர அலை இன்னும் அதிகமானது, ஒருபுறம் சாணக்கியனைப் பற்றிய எண்ணமும் மறுபுறம் இந்தக் கேள்வியின் தாக்கமும் அவனை ஆற்றில் விழுந்த காகிதப்படகு போல் அலைகழித்தது நீருக்குள் விழுந்தவன் மூச்சுக்கு துடிப்பது போல் தவித்தான்.
“ ஐயா சக்ரவர்த்தி பட்டம் உயிருக்கா உடலுக்கா என்பது எனக்குப் புரியவில்லை, ஆயினும் உடலும் உயிரும் வேறு வேறானது என்று நீங்கள் கூறுவது போல் உணர்கிறேன், உடலும் உயிரும் வேறு வேறு என்றால் உடல் இல்லாமல் உயிர் எப்படி தன்னை வெளிப்படுத்தும்? அல்லது உயிர் இல்லாமல் உடல் எப்படி இயங்கும்? அரிஸ்டாட்டிலின் உபதேசத்தில் இத்தகைய கேள்வியும் இல்லை, இதற்கு பதிலும் இல்லை அதனால்தான் எனக்கு எதுவும் விளங்கவும் இல்லை ” என்றான்
அந்த மனிதன் சிரித்தான், புறாக்கள் படபடவென சிறகடித்துப் பறப்பது போல் இருந்தது அவன் சிரிப்பு, அன்பு மகனே உடலை ஆதாரமாக வைத்து சிந்திக்கும் போதுதான் பந்தபாசமும் பற்றும் வருகிறது, எங்கு பற்று வந்து விடுகிறதோ அங்கே துன்பமும் துயரமும் தானே வந்து விடுகிறது, அந்த பற்றினால் தான் கிரேக்கத்திலிருந்து சிந்து நதிவரை நீ ஓடிவந்திருக்கிறாய், அதோ அங்கே உனது பாசறையில் ஓய்வெடுக்கும் வீரர்களையும் குதிரைகளையும் பார். குதிரைகளின் முகத்தில் உள்ள மலர்ச்சி உன் வீரர்களுக்கு இல்லை ஏன்? ஒரு நிமிடம் சிந்தித்துப் பார், குதிரைகளுக்கு மரண பயம் இல்லை, உன் வீரர்களுக்கு நடைபெற போகும் யுத்தத்தில் ஏற்படப்போகும் சாக்காட்டைப் பற்றிய பயம் முகத்தை வாட்டசெய்திருக்கிறது, குதிரைகளுக்கு இல்லாத மரண பயம் மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியாலா வருகிறது? இல்லை மகனே இல்லை, சரீரத்தின் மேல் கொண்ட பற்றுதலால் வருகிறது, சரீரங்களால் தான் வாழமுடியும என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால் தான் துயர வயப்படுகிறார்கள்,
“ நீ வெறும் சரீரமல்ல சரீரம் என்பது ரதம் போன்றது, அந்த ரதத்தை இழுத்துச் செல்லும் குதிரை ஆத்மாவாகும், குதிரை இழுக்கிறது, ரதம் செல்கிறது, ஆனாலும் ரதம் நினைத்துக் கொள்கிறது தன்னால் தான் குதிரை ஓடுகிறது என்று உண்மையில் குதிரைதான் ரதத்தை இழுக்கிறது, அதே போன்று தான் உனது உடலை உன் ஆத்மா இயக்குகிறது, நீ உடல் அல்ல ஆத்மா என்பதை அறிந்து கொள் ”
“ ஐயா ஆத்மா என்றால் என்ன? ”
“ சிலர் அதை உயிர் என்கிறார்கள், வேறு சிலர் அது உயிரை இயக்கும் சக்தி என்கிறார்கள், இது வாதம்தான் ஆனால் ஆத்மாவை உணர்ந்தவர்கள் அது விவரிக்க முடியாத மாபெரும் சக்தி என்கிறார்கள், ஆத்மாவால் உயிர் இயங்குகிறதா? அல்லது உயிரே தான் ஆத்மாவா? என்பதை அரிதியிட்டுக் கூற பலபேர் முயன்று வருகிறார்கள், ”
“ ஆனாலும் இன்னும் முடிவுக்கு யாரும் வந்தபாடில்லை, இனிமேலும் யாரும வரமுடியாது என்றே நான் கருதுகிறேன், என்னைப் பொருத்தமட்டில் ஆத்மா உயிராகவும் இருக்கிறது உயிரை இயக்குவதாகவும் இருக்கிறது, அதனால் தான் ஆத்மாவை நான் கடவுள் என்கிறேன், காணும் பொருள் எல்லாம்-மரம் செடி புழு பூச்சி இந்த மணல் அந்த ஆறு அங்கு நிற்கும் குதிரைகள் நீ நான் எல்லாமே கடவுள் என்ற பேரத்மாவின் சிறு அம்சங்களே என்றே நான் உணருகிறேன், ”
“ அதாவது கடவுளின் தன்மை உனக்குள்ளும் உள்ளது எனக்குள்ளும் உள்ளது மற்ற எல்லா உயிரினங்களிலும் அந்த தன்மை உறைந்து மறைந்து கிடக்கிறது, அதை உணர வேண்டும், வைக்கோல் பொதிக்குள் ஊசியைக் தேடுவது போல் சரீரத்திற்குள் சென்று ஆத்மாவை தேடுவது, தேடி அதை அடைவது சற்று சிரமமான காரியந்தான், ஆனாலும் முடியாத காரியம் இல்லை, நீ வெற்றிகளை மட்டுமே இதுவரை கண்டு இருக்கிறாய், சரீர சுகத்திற்கான காரணங்கள் மட்டுமே உனக்கு காட்டப்பட்டு இருக்கிறது, நாடும் நகரமும் அதிகாரமும் பதவியும் மட்டுமே அறிந்தவனாக இருக்கிறாய்,”
“ உன்னைவிட சிறந்தவன் உன்னைவிட பராக்கிரமசாலி யாருமே இல்லை என்று உனக்கு கற்பிக்கப்பட்டு இருக்கிறது, அதனால் தான் உன்னை விட மேலானவனைப் பற்றி கேள்விப்படும் போது அச்சப்படுகிறாய், அதனால் துயரம் ஏற்படுகிறது, ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள், உனக்கு மேலானவர் எவரும் இல்லை கீழாகவும் யாரும் இல்லை வானத்திற்கு கீழே பூமிக்கு மேலே எல்லாமே சமமானது, எவருமே சரி நிகர் சமமானவர்கள், இந்த சமநோக்கு உனக்கு வரவேண்டுமென்றால் உள்நோக்கு என்பது முதலில் வரவேண்டும், உன் ஆசைகளை உற்றுப் பார் உன் அழுகைகளை ஆழமாக நோக்கு உன் அறிவை பகிர்ந்துபார், அப்போது புரியும் அவை எல்லாமே அர்த்தமற்ற ஒரு நாடகம் என்று,”
“ நீனும் நானும் மற்ற எல்லா மனிதர்களும் இத்தகைய அர்த்தமற்ற நாடகத்தைதான் நடத்திக் கொண்டு இருக்கிறோம் அல்லது நடித்துக் கொண்டு இருக்கிறோம்,” இப்போது அலெக்சாண்டர் கேட்டான், “ வாழ்க்கை என்பது நாடகம் தானா? நாம் வெறும் நடிகர்கள் தானா? அப்படி என்றால் இந்த நாடகத்தில் கதாசிரியன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருப்பான்? ”
ஞானி மீண்டும் சிரித்தான், “நான் முதலிலேயே சொன்னேன் பெரும் ஆத்மாவின் சிறு துளிதான் நாம் என்று அந்த பெரும் ஆத்மாதான் நாடக ஆசிரியன் அப்படி என்றால் நீனும் நானும் கூட கதாசிரியன் தான், பரமாத்மா பாத்திரங்களை உருவாக்கித் தருகிறான், நாம் பாத்திரத்தின் இயல்பறிந்து அதற்கு தகுந்தாற்போல் பாவனை செய்கிறோம், இந்த மரம் மரமாக நடிக்கிறது, நீ மன்னனாக நடிக்கிறாய், நான் ஞானியாக நடிக்கிறேன், மரம். மன்னன். ஞானி என்று பெயர்கள் வேறுபட்டாலும் அடிப்படையில் எல்லாம் ஒன்றுதான்,
“அதாவது சரீர சம்பந்தம் இருப்பதனால் எல்லாமே ஜீவாத்மாக்கள் தான், இதைப் புரிந்து கொள், இப்போது புரிந்ததை விட இன்னும் ஆழமாக தனிமையில் புரிந்து கொள், அப்போது ஞானம் பிறக்கும், அந்த ஞானம் இன்பம் துன்பம் வெற்றி தோல்வி காதல் மோதல் எல்லாமே ஒன்றுதான் என்பது விளங்கும், அப்படி விளக்கும் போது நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் ஏன் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வர ஆரம்பிக்கும், அவஸ்த்தைகள் என்பது உடம்புக்குத்தான் நமக்கு இல்லை என்ற புத்தி தெளிவு ஏற்படும் போது வெய்யில் உன்னை சுடாது பனி உன்னை குளிர்விக்காது எந்த மாற்றமும் இல்லாத சமுத்திரத்தைப் போல் எப்போதும் நீ ஆழமாக இருப்பாய் ஆனந்தமாகவும் இருப்பாய்,”
“நான் மெலிந்தவன் என்று எண்ணும் போது வலிமையை கண்டு பயம் வரும், வலிவும் மெலிவும் ஒன்றுதான் என்ற ஞானம் வரும்போது துயரமும் துன்பமும் ஓடிப்போகும் உன் உடம்பிற்குள் இருந்து நீ வெளியில் வா அப்போதுதான் சாணக்கியனும் சாமான்யனும் ஒன்றாகப்படுவார்கள்,”
சந்திரனை மறைத்துக் கொண்டிருந்த மேகத்திரை விலகி குளிர்ந்த கதிர்கள் பரவுவதைப் போல் அலெக்சாண்டரின் மனக்குழப்பம் விலகியது, சாம்ராஜ்ய பெரும் கனவும் சாணக்கியனின் பேரச்சமும் ஓடி மறைந்தது, ஞானியிடம் அலெக்சாண்டர் முடிவாக கேட்டான், ஐயா தாங்கள் யார் ஞானி சொன்னான் நான் சாணக்கியனின் உதவாக்கரை சீடன் இப்போது அலெக்சாண்டருக்கு முற்றிலுமாக குழப்பம் நீங்கியது, சரீரபற்று விலகினால் துயரம் விலகும் என்பதை முழுமையாக நம்பினான்
''அனைத்தையும் சமமாக நோக்குவதால் என்ன லாபம்?"" மன்னனின் கேள்வி இது சாது சொன்னான் "" நாடாளும் மன்னன் நீ நிற்கின்றாய் ஒரு மண் ஓடு கூட சொந்தம் என்றிராத நான் படுத்திருந்து பதில் பேசுகிறேன் இதுதான் உனக்கும் எனக்கும் உள்ள வேற்றுமை '' சாதுவின் பதிலில் இருந்த உறுதி வீர சூரியனை சுட்டது''
00000000000000000000000000000000
கடவுளைப்பற்றி
புத்தரிடம் ஒரு கற்றறிந்த பிராமணர் கடவுளைப்பற்றிக் கேட்டார். புத்தர் பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். இதைப் பார்த்த அவர் சீடர் ஆனந்தனுக்கு ஏமாற்றம். ஏனெனில் அந்த பிராமணருக்கு சீடர்களின் எண்ணிக்கை அதிகம். அவர் மட்டும் பௌத்த மதத்திற்கு மாறி விட்டால் அவரைப் பின்பற்றி ஆயிரக் கணக்கானோர் பௌத்த மதத்திற்கு மாறி விடுவார்கள். ஆனால் புத்தர் மௌனமாகவே இருந்தார். சிறிது நேரம் கழித்து அந்த பிராமணர் புத்தரை வணங்கி நன்றி தெரிவித்து விட்டு போய் விட்டார். அவர் போனபின் ஆனந்தன் புத்தரிடம் நல்ல ஒரு வாய்ப்பை இழந்து விட்டதாகக் கூறி வருத்தப்பட்டார். புத்தர் சொன்னார்,
''ஒரு நல்ல குதிரைக்கு சாட்டையின் நிழலே போதுமானது. அந்தக் குதிரையை சாட்டையினால் அடிக்க வேண்டியதில்லை. அவர் மன மாற்றம் அடைந்துவிட்டார்.''
ஆனால் ஆனந்தனுக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் மறுநாள் காலை அந்த பிராமணர் ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்தரிடம் வருவதைப் பார்த்த ஆனந்தனால் நம்ப முடியவில்லை. அவர் அன்று இரவு புத்தரிடம்,
''இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? நீங்கள் கண்களை மூடி மௌனமாக இருந்தது அவரை அவமதிப்பதுபோல நான் உணர்ந்தேன். ஏனென்றால் அவர் முக்கியமான கேள்வி கேட்டு நீங்கள் சரியான பதில் சொல்ல மறுத்து விட்டீர்களே?''என்று கேட்டார். புத்தர் சொன்னார்,
'இந்த மௌனம் ஒரு சூட்சுமமான பதில் ஆகும். அது அவருக்குத் தெரியும். கடவுளைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது. நான் ஏதாவது சொல்லியிருந்தால் என் மீது நம்பிக்கை இல்லாது அவர் போயிருப்பார். ஏனென்றால் நான் சொல்லும் கடவுள்,கடவுளே அல்ல என்பதையே காட்டியிருக்கும். அதனால்தான் நான் என் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தேன். கண்களைத் திறந்திருந்தால் கூட கண்களின் மூலம் நான் எதுவோ சொல்ல வருகிறேன் என்று அவர் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும். எனவே என் மௌனம்தான் சரியான பதில்.அதை அவரும் ஏற்றுக் கொண்டார்.''
00000000000000000000000000000000000
உற்று கவனியுங்கள், உங்களை சிந்தனையை
சோர்வு, பயம், அருவருப்பு இதெல்லாம் நமக்குள்ளே எங்கே உண்டாகிறது ? நமது கையிலோ, காலிலோ, நுரையிரலிலோ, மூச்சுக் குழாயிலோ உண்டாவதில்லை. நமது எண்ணங்களில் மட்டுமே நிகழ்கிறது. அப்படியென்றால், எண்ணம் என்பது என்ன ?
யோசித்துப் பாருங்கள்! உதட்டையும் நாக்கையும் அசைக்காமல் நமக்குள்ளேயே வார்த்தைகளை ஓடவிடும்போதுதான் எண்ணங்கள் உருப்பெறுகின்றன. வார்த்தைகளும், வாக்கியங்களும் இல்லாமல் நம்மால் சிந்திக்க முடியாது (ஒலிகளாலும் வண்ணங்களாலும் சிந்திக்கும் இசைக் கலைஞர்கள், ஓவியங்கள், படைப்பாளிகள் போன்றவர்களை நினைத்து இந்த நேரத்தில் குழப்பிக்கொள்ள வேண்டாம்).
ஒருவர் வியாபாரம் செய்ய வேண்டும் என்று ஒரு கடை வைக்கிறார். நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. உடனே அவர், நான் வியாபாரம் செய்வதற்கே லாயக்கு இல்லாதவன். அந்த நெளிவு சுளிவுகள் எனக்குப் போதாது என்று வருத்தப்பட ஆரம்பித்தால்.. . தன்னை நொந்து கொள்வதற்காக மனதுக்குள் இவர் அமைத்த வாக்கியமே.. அவரைத் தாழ்வு மனப்பான்மை உடையவராக ஆக்கிவிடும். அதே நபர், விபாபாரத்தில் லாபமும் நஷ்டமும் சகஜம்தான். இதில் வருத்தப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டால்.. . அவர் தேந்தெடுத்த அந்தச் சொற்களே அவரை உற்சாகம் இழக்காமல் பார்த்துக்கொள்ளும்.
இரண்டாம் உலகப்போரின் போது நடந்த உண்மை நிகழ்ச்சி இது: தாங்கள் சிறைப்பிடித்த யூதக் கைதிகளை வைத்து ஜெர்மானியர்கள் பல கொடுமையான பரிசோதனைகள் நடத்தியது நமக்குத் தெரியும்...
அதில் ஒரு பரிசோதனை.. . உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம். உடம்பிலிருந்து எல்லா ரத்தத்தையும் வெளியேற்றினால் நீங்கள் எப்படி துடிதுடித்துச் சாவீர்கள் என்று பார்க்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, சாம்பிளுக்கு இரண்டு கைதிகளைப் படுக்கையில் படுக்க வைத்து ரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். ஜெர்மானிய படைவீரர்கள்!
கைதிகளின் உடம்பிலிருந்து வெளியேறிய ரத்தம் பக்கத்திலிருந்த பாட்டிலில் டப் டப் என்ற ஒலியுடன் விழ ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த இரண்டு கைதிகளின் கண்களையும் படைவீரர்கள் கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். அதில் ஒரு கைதியின் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறுவதையும் நிறுத்தி விட்டார்கள். ஆனால், பாட்டிலில் டப் டப் என்று விழும் ஓசை கேட்கும்படி மாற்று ஏற்பாடு செய்தார்கள். இந்த டப் டப் சத்தத்திலேயே பீதி அடைந்த அந்தக் கைதி, ஐயோ உடம்பிலிருந்து ரத்தம் போய்க்கொண்டே இருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரத்தம் வற்றிச் சாகப் போகிறோம் என்று பயத்தில் நடுங்க ஆரம்பித்தான்.
பரிசோதனையின் முடிவில், உண்மையிலேயே ரத்தம் வெளியேற்றப்பட்ட கைதியும் இறந்துபோனான். தன் உடம்பிலிருந்து ரத்தம்வெளியேறுகிறது என்ற பிரமையில் இருந்த கைதியும் இறந்துபோனான்.
இரண்டாம் கைதியின் மரணத்துக்கு அவனது சிந்தனையும் சிந்தனை செய்ய அவன் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும்தான் காரணம்.
இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயம் எளிமையானது.
"ஒரே போரடிக்குது.. ."
"ரொம்ப டயர்டா இருக்கு"
"உடம்பே சரியில்லை"
"சனியன் புள்ளையா இது. .. பிசாசு"
இது மாதிரியான ரெடிமேட் நெகடிவ் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். பேசும்போது மட்டும் அல்ல - உங்களுக்குள் சிந்திக்கும் போதுகூட!
நான் பல்வேறு வார்த்தைகளில் சொன்னதையே Languaging என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிட முடியும்.
நல்லதோ கெட்டதோ.. . உங்கள் சிந்தனைகளை நீங்கள் எடுத்த எடுப்பிலேயே கட்டுப்படுத்தத் தேவையில்லை. நினைப்பை அதன்போக்கில் ஓட விடுங்கள். எப்படிப்பட்ட வார்த்தைகளை மனதில் ஓட்டிச் சிந்திக்கிறீர்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். அதாவது உங்களை நீங்கள் உற்றுக் கவனியுங்கள். வேறொருவராக விலகி நின்று கவனியுங்கள்.
ஒருவகையில் தியானம் செய்வதற்கான அடிப்படைத் தகுதியும் இதுதான். இதைத் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்தால், ரெடிமேடான சோர்வு தரும் - உங்களை நீங்களே தளர்த்திக் கொள்ளும் - எரிச்சலூட்டும் நெகடிவ் வார்த்தைகளிலிருந்து விடுபட்டால், சுதந்திரமான, உற்சாகச் சிந்தனை உங்களுக்கு சரளமாக உருவாகும். நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கோபப்படும் வார்த்தைகளைப் பேசினால் என்ன செய்வது ?
சொல்கிறேன்.. .
கோபத்தை தூண்டிவிடும் வார்த்தைகளைப் பிறர் நம்மீது வீசினால் என்ன செய்வது? எதிராளி நம்மை மட்டம் தட்டிப்பேசினால் அதை எப்படி எதிர்கொள்வது? இது போன்ற கேள்விக்கான விடை, கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியில் இருக்கிறது,
ஒருமுறை புத்தர் தனது பிரதான சீடரான ஆனந்தாவுடன் சென்று ஒரு வீட்டில் பிச்சை கேட்டார்.
புத்தரை பார்த்து அந்த வீட்டில் இருந்த பெண்மணி, "சோம்பேறியே கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட உனக்கு என்ன கேடு?" என்று திட்டி விரட்டினாள், ஒரு பெண், தனது குருவை இப்படித் திட்டிவிட்டாளே, என்று சீடரின் மனம் எரிமைலையாக குமுறிக்கொண்டிருந்தது.
"தயவு செய்து எனக்கு உத்தரவு கொடுங்கள். உங்களைத் திட்டிய அந்தப் பெண்ணுக்குச் சரியான பாடம் புகட்டிவிட்டு வருகிறேன்" என்று ஆனந்தா புத்தரிடம் அனுமதி கேட்டார். அவர் ஒன்றும் சொல்லாமல் நடக்கத் துவங்கினார். மண்டையைப் பிளக்கும் வெயில் அடிக்கத் துவங்கியது. தன் கையிலிருந்த கமண்டலத்தை ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டு, புத்தர் சிறிது நேரம் ஓய்வெடுத்ததார், மாலை நேரமானது. புத்தர் தனது சீடருடன் மீண்டும் பயணத்தை தொடர்ந்தார், அப்போது வழியில் சீடரின் கையிலிருந்த கமண்டலத்தைப் பார்த்த புத்தர். இது யாருடையது? என்று கேட்டார். அதற்கு ஆனந்தா, சுவாமி இது உங்களுடையது என்றார்.
உடனே புத்தர், அந்தக் கமண்டலத்தை வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு "இல்லை, இதை உனக்கு அப்போதே பரிசாகக் கொடுத்துவிட்டேன், அது உன்னுடையதுதான்" என்று திரும்பவும் ஆனந்தாவிடம் கொடுத்துவிட்டார்.
இரவு வந்தது, புத்தர், ஆனந்தாவின் கையிலிருந்த அதே கமண்டலத்தைச் சுட்டிக் காட்டி, இந்தக் கமண்டலம் யாருடையது? என்று மீண்டும் கேட்டார், இதற்கு ஆனந்தா, ஸ்வாமி இது என்னுடையது என்றார், இதைக் கேட்ட புத்தர் சிரித்து விட்டார்.
"இன்று மாலை உன்னிடம் இதே கேள்வியை கேட்டேன், இது உங்களுடையது என்றாய், இப்போதோ, இது என்னுடையது என்கிறாய். ஒரே கமண்டலம் எப்படி உன்னுடையதாகவும், அதே வேளையில் என்னுடையதாகவும் இருக்க முடியும்...?"
புத்தரின் கேள்வியில் சற்றே தடுமாறினாலும் ஆனந்தா நிதானமாக இப்படிப் பதில் சொன்னார்.
"சுவாமி. கமண்டலத்தைத் தாங்கள் எனக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டதாகச் சொன்னீர்கள், நானும் அதை ஏற்றுக் கொண்டேன். அதனால் கமண்டலம் என்னுடையது என்றேன், ஆனால், முதல் முறை நீங்கள் கமண்டலத்தை கொடுத்தபோது அதை நான் என்னுடையதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னிடம் நீங்கள் கமண்டலத்தைக் கொடுத்திருந்தீர்கள் என்றாலும், உண்மையில் அது அப்போது உங்களுடையதுதான்"
புன்னகையுடன் ஆனந்தாவைப் பார்த்துப் பேசினார் புத்தர்.
"இதுபோல்தான் அந்தப் பெண்மணி என்னைப் பார்துச் சொன்ன வார்த்தைகளை நான் என்னுடையதாக எண்ணி எடுத்துக் கொள்ளவில்லை எனவே, என்னைப் பார்த்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்த வார்த்தைகள் அந்தப் பெண்மணிக்கே சொந்தம். அதனால் அந்தப் பெண்மணிக்கு நீ பாடம் புகட்டப் போகத் தேவையில்லை என்றேன்."
புத்தர் தனது சீடருக்குச் சொன்ன அறிவுரை உணர்த்துகிற உண்மை எளிமையானது.
யாராவது நம்மைப் பார்த்துச் சோம்பேறி என்று திட்டினால், அந்த வார்த்தையை நாம் நம்முடையது என்று ஏற்றுக் கொள்ளும் போதுதான் நாம் பாதிக்கப்படுகிறோம்.
நான் சோம்பேறி கிடையாது என்று நமக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் நன்கு தெரிந்தால், எதிராளி நம்மைப் பார்த்துச் சொன்ன சோம்பேறி என்ற வார்த்தை வெறும் பிதற்றல் பிதற்றல் ஒரு போதும் நம்மைப் பாதிக்காது இன்னும் கேட்டால் பிதற்றுகிறவனை நாம் ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ள மாட்டோம்.
ஆனால், சோம்பேறி என்று ஒருவர் இன்னொருவரைத் திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால், திட்டப்பட்டவர் உண்மையிலேயே சோம்பேறி என்றுதான் அர்த்தம் ஆகிவிடும்.
யாராவது சோம்பேறி என்று இதுபோன்றவர்களைத் திட்டினால் சோம்பேறி என்ற வார்த்தையினால் ஏற்படும் அவமானத்தைவிட நாம் சோம்பேறி என்பது உண்மைதான். இந்த உண்மை மாற்றானுக்கும் தெரிந்துவிட்டதே.. என்று நினைக்கும் போதுதான் பாதிக்கப்படுகிறார், பதிலுக்குக் கோபப்படுகிறார், அவர் இரத்த அழுத்தம் கூடுகிறது. கண்கள் சிவக்கின்றன.
சரி, ஒருவர் உண்மையிலேயே சோம்பேறிதான். அவர் திருந்தவே முடியாதா? முடியும் உதாரணத்துக்கு இந்தக் கதையைப் படியுங்கள்.
அவர் ஒரு பெரிய பிஸினஸ்மேன். வசதிக்கும் குறைச்சலேயில்லை, எதிர்பாராதவிதமாக, அவருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று புயலில் அகப்பட்டு முழ்கிவிடுகிறது. இன்னொருபுறம் தொழிலாளர் பிரச்சனையால் ஃபாக்டரியும் முடப்பட்டு விடுகிறது. கடன் தலைக்குமேல் போய்விடுகிறது.
அவர் வீடு வாசலை எல்லாம் இழநதுவிட்டு நடுவீதிக்கு வந்துவிடுகிறார், ஐந்தே ஆண்டுகள் அவர் கடுமையாக உழைக்கிறார், இழந்த தொழிற்சாலையைவிட்ப பெரிய தொழிற்சாலையைக் கட்டுகிறார், ஒன்றுக்கு இரண்டாகக் கப்பல்கள் வாங்குகிறார், முன்பு இருந்ததைவிடப் பலமடங்கு பெரிய செல்வந்தராக மாறிவிட்டார்.
அவரிடம் நிருபர்கள் உங்களுடைய இவ் வெற்றியின் இரகசியம என்ன? என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவர், "முன்பு நான் தோல்வி அடைந்தது உண்மை. ஆனால் நான் தோல்வி அடைந்துவிட்டேன், வியாபாரத்தில் தோறறுவிட்டேன் என்ற ரகசியத்ததை எனக்கு நான் சொல்லவே இல்லை" அதுதான் என் இந்த வெற்றிக்கு காரணம் என்றாராம்.
பலருடைய கண்களைத் திறக்கக் கூடிய கதை இது. உண்மையிலேயே உங்களுக்குச் சோம்பல் வரலாம், வேலை செய்வதில் ஈடுபாடில்லாமல் சோம்பேறியாக இருக்கத் தோன்றலாம். ஆனால், நான் சோம்பேறி.... எதற்கும் லாயக்கில்லாதவன் என்று உங்கள் மீதே நீங்கள் முத்திரை குத்திக்கொள்ளாதீர்கள, அப்படி செய்தால்; நாமே நமக்கு எதிரியாக இருந்து செயல்படுவது மாதிரி ஆகி விடும்;
சரி..., நாம் என்னதான் செய்ய வேண்டும்...,?
நான் சோம்பேறி கிடையாது என்று உங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பினர் சொல்வார்கள். இதற்கு பாஸிட்டிவ் திங்கிங்(Positive Thinking) என்று பெயரும் கொடுத்திருக்கிறார்கள், நான் சொல்லப்போவது உங்களுக்குக் கொஞ்சம் அதிர்சியாகக் கூட இருக்கலாம். உண்மையில், இந்த பாஸிட்டிவ் திங்கிங் நீண்ட நாளைக்குப் பயன்படாது.
மனதில் சோர்வு. தாழ்வு மனப்பான்மை போன்றவை தலைதூக்கும் போதெல்லாம் அதை மறைக்க "நான் ஜெயிக்கப் பிறந்தவன் நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று நமக்கு நாமே சொல்லி உற்சாகப் படுத்திக் கொள்வது அப்போதைக்குப் பலன் கொடுக்கலாம்., ஆனால் இந்தபாஸிட்டிவ் திங்கிங் அதிக நாளைக்கு உதவாது.
தீய எண்ணங்கள் எழும்போது ராமா... ராமா... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் என்று ஒரு சிலர் யோசனை சொல்வார்கள். பாஸிட்டிவ் திங்கிங் என்பது ஏறக்குறைய இதே அடிப்படைதான்.
மனதில் சபலம் வரும்போது, அதை அடக்கத் தெய்வத்தின் மீது சிந்தனையைத் திருப்புவது அந்தச் சமயம் பலன் தரும், ஆனால், அதே தீ எண்ணம் அடுத்த நாளோ, அடுத்த வாரமோ மீண்டும் தலைதூக்குமே... ? அப்போதும் கடவுள் பேரைச் சொல்லித்தான் சபலத்தை அடக்க வேண்டுமா...?
வீடு முழுதும் துர்நாற்றம். வீட்டின் ஒரு முலையில் எலி ஒன்று செத்துக் கிடக்கிறது. அது எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து எடுத்து வெளியே தூக்கிப் போட நமக்குப் பொறுமை இல்லை. ஆனால், துர்நாற்றத்தை மறைக்கக் கட்டுக்கட்டாக ஊதுவத்தி கொளுத்தி வைக்கிறோம். கொஞ்ச நேரத்துக்கு வேண்டுமானால் செத்த எலியின் நாற்றத்தை அது மறைத்து விடும். ஆனால், வத்தி எரிந்து முடிந்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாற்றம் மீண்டும் குடலைப் பிடுங்கத் துவங்கிவிடும். பாஸிட்டிவ் திங்கிங்கும் இது மாதிரி தான்.
சரி... பாஸிட்டிவ் திங்கிங்குக்கு மாற்று இருக்கிறதா... ? இருக்கிறது. அதற்குப் பெயர்தான் Authentic thinking.
நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
"ஐயையோ நான்படும் துன்பத்தைச் சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே... என்று வெறுப்படைந்து, இல்லை, நான் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன்" என்று பாஸிட்டிவ் திங்கிங் என்ற சித்தாந்தத்தின் படி மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால் மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும், அதற்குப் பதிலாக, உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று கவனிக்க ஆரம்பியுங்கள்.
இது கெட்ட சிந்தனை , இது நல்ல சிந்தனை என்பது மாதிரி சிந்தனைக்கு லேபிள் குத்தாமல், உங்களின் சிந்தனை மீதே வெறுப்புக் காட்டாமல் நடுநிலையோடு கவனியுங்கள். துக்கமான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ அல்லது மகிழ்ச்சியான சிந்தனையோ... அதை நீங்களே விலகி நின்று பார்க்கும் போது, உங்களுக்குள்ளே புரிந்து கொள்ளுதல் நடக்கும் இது போன்ற மனநிலையை எய்திவிட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்றுதான்.
மகிழ்ச்சி எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே.
ஆனால், மனதிலே அமைதியும் தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு மகிழ்ச்சிகூடச் சோகமானதாக போய்விடும்
அவர் நடுத்தரப் பிரிவைச் சேர்ந்தவர், அவருக்கு ஆறு பெண்கள் எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவர்கள். ஆறு பெண்களுக்கும் எப்படி திருமணம் செய்து வைப்பது? என்று கவலைப்பட்டுக் கவலைபட்டே அவருக்கு ஒரு நாள் மாரடைப்பு வந்து விடுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அந்த நேரம் பார்த்து, அவர் வாங்கி வைத்திருந்த ஒரு பரிசுச் சீட்டுக்குப் பத்து லட்ச ருபாய் விழுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரிடம் சொன்னால், அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்துவிடுமோ?...... என்று பயந்த மனைவி, டாக்டரைவிட்டே இந்தச் செய்தியைத் தன் கணவரிடம் பதமாகச் சொல்லச் சொல்கிறாள்.
டாக்டர் மனோதத்துவ முறையில் காஷுவலாக அவளது கவணவரிடம் பேச்சை ஆரம்பிக்கிறார்.
உங்களுக்கு லாட்டரியில் ஒரு லட்சம் பரிசு விழுந்தால் என்ன செய்வீர்கள்.....?
நான் என் முத்த பெண்ணுக்குத் திருமணம் செய்து விடுவேன்....
சரி, இரண்டு லட்சம் விழுந்தால்.. ?
இரண்டாவது பெண்ணுக்கும் கல்யாணம் முடித்து விடுவேன்.
சரி... பத்து லட்சம் விழுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்
எனக்கெல்லாம் எங்கே டாக்டர் பத்து லட்சம் விழும் ? அப்படி ஒரு வேளை விழுந்தால், சத்தியமாக உங்களுக்கு இரண்டு லட்சம் தந்து விடுவேன்.
எதிர் பாராத இந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார்.
மகிழ்ச்சி எப்படி ஒரு சுவையோ, அதே மாதிரி துயரமும் ஒரு சுவை. இந்தச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்வது கஷ்டமாகக்கூட இருக்கலாம் நான் சிறுவனாக இருந்தபோது என் அம்மா பாகற்காயை விரும்பிச் சாப்பிடுவார்.
அப்போது, கசப்பான ஒரு பொருளை அம்மா எப்படி ரசித்துச் சாப்பிடுகிறார் என்று எனக்கு ஒரே குழப்பம்.
ஆனால், மனதுக்குப் பிடித்துவிட்டால் இனிப்பு என்பது எப்படி சுவையோ, அதே போல கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.
சிறுபிள்ளையாக இருக்கும் போது, இனிப்பு ஒன்றுதான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை, என்று நமக்கு நாமே முடிவெடுத்துக் கொண்டு சிந்தனையின் கதவுகளை மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் எப்படி மூடிவிடுகிறோமோ அதே மாதிரிதான் இந்த விஷயமும்.
மகிழ்ச்சி மட்டும்தான் நல்ல உணர்ச்சி மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி, வாழ்க்கையில் நாம் அநேக உணர்ச்சிகளுக்குக் கதவைத் திறப்பதில்லை.
இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல் தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது, மனது தானாகவே அமைதி அடையும், திரைகள் விலகும், உண்மைகள் புரியும், வாழ்க்கை அழகாக. அற்புதமானதாக- ஒரு மலரைப் போல மௌனமாக, மென்மையாக விரியும்.
000000000000000000000
ஒத்திப் போடுதல்
வெற்றிகள் எல்லாம் எப்போதும் வெகுமானமாக அமைந்து விடுவதில்லை. தோல்விகள் எல்லாம் எப்போதும் அவமானம் தருபவையாக இருந்து விடுவதில்லை. பல சமயம் வெற்றிகள் போதை ஊட்டுவதாக இருக்கின்றன. பல சமயம் தோல்விகள் பாதை காட்டுபவையாக அமைந்து விடுகின்றன. சில சமயம் சில செயல்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்யும் போது தேவைக்கு அதிகமாக நேரத்தை அதில் செலவழித்து விடுகிறோம். அதனால் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய இதர பணிகளை ஒத்திப் போடுகிறோம். மேலும் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே சில வேலைகளைத் துவங்காமலேயே விட்டு விடுகிறோம். எதையும் எந்தக் குறையும் இன்றி செய்வேன் என்று சொல்லும் பலர் எந்த ஒன்றையும் செய்யாமலே இருந்து விடுவதை நாம் காண்கின்றோம் . இதற்கு முன் இதை நான் செய்ததில்லை , முதல் முறையாக செய்ய வேண்டியிருக்கிறது, அதில் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்று எண்ணுவதால் காரியங்களை ஒத்திப் போடுவதும் உண்டு. அதுவே பின்னர் பெரும் பிரச்சினை ஆகி விடுகிறது. சில சமயம் பிறருக்கு உதவி செய்கிறோம் என்று கூறிக் கொண்டு அடுத்தவர் வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துவிட்டு, தனது காரியங்களை ஒத்திப் போடுவதுண்டு. உரிய நேரத்தில் உடனுக்குடன் பணிகளை செய்து முடிக்கும் பழக்கம் இல்லாமையும் ஒத்திப் போடுவதற்கு ஒரு காரணம். காலத்தை திட்டமிட்டு நிர்வகிப்பதன் மூலமாக மட்டும் இத்தீய ஒத்திப் போடுதலை ஒத்திப் போட்டு விட முடியாது. பின் என்ன செய்ய வேண்டும்? நமது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளுதல் தான் அதற்கு ஒரே வழி.
000000000000000000000000000000
சம்பிரதாயம்
மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர். திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார். இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர். அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார். மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லை என்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார். போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார். மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர். பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார். அந்த சகோதரர்கள் ,
'நாங்கள் எங்கள் தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.''என்றனர்.
இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார். அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர். பல முறை சொல்லிக் கொடுத்தும் அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை. அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார். கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்போதகர். அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார். அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர். கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,
''ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது. தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,''என்றனர்.
போதகர் சொன்னார்,''என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள். நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள். கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது . உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,'' என்றார். அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.
000000000000000000000000
நிலையானது
எப்போது ஒரு மனிதனுக்கு 'நிச்சயமான இறப்பு'பற்றிய உணர்வு பிரக்ஞையாக மேலே எழும்புகிறதோ, அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச உணர்வு குறைகிறது. வேறு விதமாகச் சொன்னால், நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் காரணமாகிறது. நாம் எப்போது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ, அப்போது நாம் தொடர்ந்து இறப்பை மறக்கவே முயல்கிறோம். ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும் இறக்க மாட்டார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.
00000000000000
அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு, அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள் ஆகும். நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை. ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள். அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.
000000000000000000000
முதன் முதலில் நம்மை நாமே சார்ந்து எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் துக்கமே ஏற்படுகிறது. விரக்தி மேலிடுகிறது. ஆனால் நம் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்,மெல்ல மெல்ல ஆனந்தம் நம்மிடையே மலருகிறது. அதற்கு மாறாக அடுத்தவரை முதலில் நீங்கள் சார்ந்து நின்றால் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தோன்றலாம். ஆனால் முடிவில் நீங்கள் துக்கத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும்.
September 05, 2013
Comments
Post a Comment