Skip to main content

மழைக்காலப் பொழுதில் எனக்கு வந்த மயக்கிய சந்திப்பு - பத்தி.




இன்று பின்னேரம் அலுத்துக்களைத்து வீடு திரும்புகின்றேன் . சாப்பிட்டு விட்டு கணனியின் முன்னால் நித்திரை தியக்கத்துடன் இருக்கின்றேன் . எனது கைத்தொலைப்பேசி ஒலிக்கின்றது.அடிப்பவரின் பெயர் இல்லை. யாராய் இருக்கும் என்று ஒருவித எரிச்சலுடன் கைத்தொலைபேசியை எடுக்கின்றேன் . மறுமுனையில் கொழுவன் குரல் கேட்டது . "அண்ணை உங்களோடை ஒருத்தர் பேசப்போகின்றாராம் " என்று தொலைபேசி மாற்றப்பட்டது. மீண்டும் மறுமுனையில் , " வணக்கம் கோ !! நான் சயந்தன் பேசிறன் . நான் இப்ப லாச்சப்பலில் நிக்கிறன் . உங்களை நான் ஒருக்கால் கட்டாயம் சந்திக்க வேணும் ". என்ற கோரிக்கையுடன் சயந்தன் நின்றார் . எனக்கு களைப்பாக இருந்தாலும் சயந்தனை முகம் முறிக்க மனம் வரவில்லை . நான் இன்னும் அரை மணியில் அங்கு இருப்பதாக சொல்லி விட்டு புகையிரத நிலையம் நோக்கி சென்றேன் .

பாரிஸ் செல்ல வேண்டிய புகையிரதம் பாரிசை நோக்கி விரைந்து கொண்டிருந்தது . இடையில் எனது கைத்தொலைபேசி திரையில் சோபாசக்தியின் பெயர் தெரிந்தது. திரையை தொட்டு விட்டு " சொல்லுங்கோ " என்றேன் . " அண்ணை நான் சாயந்தன்ரை செக்குத்தடி பேசிறன் (கிழிஞ்சுது போ ) . சயந்தன்ரை பாதுகாப்பு பிரச்னைக்காக இப்ப நாங்கள் லாச்சப்பலிலை இருந்து மார்க்கடே பொசினியர் க்கு இடத்தை மாத்திறம் . நீங்கள் அங்கை வாங்கோ " என்று சொல்லி கைத்தொலைபேசி தொடர்பை துண்டித்தது . அஹா இவர் வேறயா ?? " கோமகா கவனமா இருந்துக்கோ " என்று உள் மனம் மின்னி மின்னி பேசியது . நான் கார் டு நோர்ட் புகையிரத நிலையத்தில் இறங்கி மார்க்கடே பொசினியருக்கு மெட்றோ எடுத்தேன் . நான்கு நிமிடத்தில் மார்க்கடே பொசினியர் மெட்றோவில் இறங்கி வெளியே வந்தேன் . ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த இடம் , ஆட்சி மாறி கறுப்பர்களின் கைக்கு போய்விட்டிருந்தது . மெட்றோ வாசலில் ஹாண்ட் பாக்குகளுடன் அம்மணிகள் " சவா செரி " என்றார்கள் . அஹா முழுவியளமே திறமாய் இருக்கே என்று நினைத்தவாறே சோ அன்னா பா வன்னா சொன்ன கபே பாரை நோக்கி நடந்தேன். அங்கு ஒரு சிறிய பட்டாளமே இருந்தது. சயந்தன் , சோபா சக்தி , ஸ்டெல்லா சகுந்தலா ( மானிடவியலாளர் பேராசிரியர் அமெரிக்கா ) , கொழுவன் , மைக்கல் என்ற சதாபிரவணன் , ஆக்காட்டி பிரபா என்று நான் எதிர்பாராத கோஸ்டிகள் எல்லோரும் இருந்தார்கள் . என்னை கண்டதில் சயந்தனுக்கு பெரிய புழுகம் . மைக்கேலையும் பிரபாவையும் கொழுவனின் கவிதைவெளியீட்டு விழாவில் சந்தித்தாலும் இப்பொழுதே அதிகம் பேச முடிந்ததது. நான் போகும் பொழுது 2 சிங்க லாகர்கள் சயந்தன் சோபாவுக்கு முன்னால் வீற்றிருந்தன. எனக்கும் லாகர்களுக்கும் எட்டிலை வியாழன் . நான் இதை கண்டதும் உள்ளுக்குள் கலவரப்பட்டு போனேன் . எனக்கு ஒரு பிளேன் டீ சீனி இல்லாமல் எடுத்தேன் . பலதரப்பட்ட கதைகள் பம்பலாக போய்க்கொண்டிருந்த பொழுது , இந்தப்பக்கம் லாகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருந்ததது . இப்பொழுது சிங்கத்தின் துணையால் சிங்கம் சிலிர்க்கத் தொடக்கி விட்டது . சூடான விவாதங்கள் சுழன்றடித்தன . அதில் எனது தலையும் உருண்டது . அதிக சத்தம் எனக்கு தலையிடியை கொண்டுவந்ததது . மெதுவாக வெளியில் இறங்கி சிகரட்டை பற்றவைத்தேன் . நான் மீண்டும் திரும்பிய பொழுது " தென்கிழக்கு சீமையிலே " வடக்கு தெற்காக கிழிந்து கொண்டிருந்ததது . முதலில் குற்றவாளி கூண்டில் இருந்த எனது இடம் இப்பொழுது சயந்தனுக்கு மாறியிருந்தது . நேரம் பம்பலாகப் போய் இரவு 9 மணியாகி விட்டிருந்தது. புதிதாக நான்கு ஐந்து பேர்கள் ஜோதியில் ஐக்கியமாக வந்திருந்தார்கள். இடையில் கணவாய் பொரியல் டேஸ்டுக்கு வந்தது . நானும் இவர்களை கிளப்பி ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்தேன். நன்றாக இருட்டி விட்டது. இந்த இடம் வில்லங்கமான இடம். இரவு பத்தரையாகி விட்டிருந்தது. லாகர்களின் எண்ணிக்கை கூடியதே இவர்கள் கிளம்புவதாக இல்லை . நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எல்லோரிடமும் விடை பெற்றேன். வீட்டிற்கு வர மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்ததது. பறப்பின் மத்தியிலும் இப்படியான சந்திப்புகளே எங்களை உயிர்ப்பிக்கின்றன .





June 10, 2014

Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...