அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது .
புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணியவான் விடியக்காலையில் உள்ளங்கையில் கண்முளித்தால் காசுபணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று தம்பையாவிற்கு பினாட்டு அடைந்திருந்தான் . அன்றில் இருந்து தம்பையா இப்படியே நித்திரையால் எழும்புவார் . அனால் செல்வலட்சுமி அக்காவோ ஒரளவுக்குதான் தம்பையாவுடன் கூட்டு வைத்திருந்தாள் . ஆனாலும் தம்பையா தனது பழக்கத்தை விடவில்லை.
தம்பையா நித்திரையால் எழும்பி நேராகக் கிணத்தடிக்குப் போய் இளஞ்சூட்டில் இருந்த கிணத்துத் தண்ணியில் குளித்து விட்டு வந்து சாமியறையில் இருந்த திருநூத்துக் குடுவையில் கையை விட்டு திருநீற்றை அள்ளி நெற்றியிலும் , கை , நெஞ்சு எங்கிலும் மூன்று குறிகளாக இழுத்துப் பூசி , நல்லூர் கந்தனே , சந்தியானே என்று யாழ்ப்பாணத்தில் உள்ள அத்தனை முருகனையும் கூபிட்டுத் தன்னையும் மனைவி பறுவதத்தையும் அருமைப் பெடிச்சி செவந்தியையும் காப்பாற்றச் சொல்லி மன்றாடிக் கொண்டே அன்று வந்திருந்த உதயன் பேப்பரை எடுத்துக்கொண்டு முன் வாசலுக்கு வந்து சாய்மனைக் கதிரையில் கால்களை அகட்டிபோட்டவாறே பேப்பரை படிக்கத் தொடங்கினார் .
தம்பையாவின் அசுமாத்தங்களைக் குறிப்பால் அறிந்து கொண்ட பறுவதம் , தான் காலையில் ஊர் மாட்டில் கறந்த பசும்பாலைக் கற்கண்டு போட்டு சுண்டக் காச்சி பழப் புளி போட்டு நன்றாகத் தேய்த்து மினுக்கிய மூக்குப் பேணியில் கொண்டு வந்து தம்பையாவிற்கு குடுத்தாள்.தம்பையாவும் வலு பக்குவமாக வாங்கி சொண்டு படாமல் அண்ணாந்து மெது மெதுவாக குடித்தார் அவ்வளவுக்கு தம்பையா ஆசாரசீலமானவர் . இந்தப் பால் விடையத்தில் கூட யாரோ ஒருவர் , கேப்பை மாட்டுப் பாலை விட ஊர் பசுப் பால் அதுவும் அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர் மாட்டுப் பால் தான் மூளையை மந்தம் பிடிக்காமல் வளரப் பண்ணும் எண்டு சொல்ல , தம்பையா வீட்டிலை நிண்ட கேப்பை மாடு போய் பத்தாயிரம் ரூபாய்க்கு ஊர் மாடு ஒன்று தம்பையா வீட்டிற்கு வந்தது . அன்றில் இருந்து தம்பையா அறுகம் புல்லுச் சாபிட்ட ஊர் மாட்டுப் பாலைத் தான் தொடர்ந்து குடித்துக் கொண்டு வருகின்றார் .
கண்ணாடியை பாத்து தனது தலைமயிரை செற் பண்ணிக்கொண்டு , பியூட்டிக்குறா பவுடரை நளினமாக முகத்தில் பட்டும் படாமல் தடவியவாறே கையில் ரெண்டு கொப்பியுடன் தனது அறையை விட்டு செவ்வந்தி வெளியே வர தம்பையாவின் குரல் எங்கை பிள்ளை போறாய் என்று தடுத்து நிறுத்தியது . தான் பக்கத்தி வீட்டு மாலதியுடன் சேர்ந்து படிக்கப் போறதாக செவ்வந்தி சொன்னாலும் தம்பையாவின் அறுகம்புல்லு பால் மூளை அலேட்டாகி , பாத்துப் பிள்ளை கவனமாக போ காலம் கெட்டுக்கிடக்கு என்று சொன்னது . செவ்வந்தியோ அவர் சொன்னதைக் காதில் விழுத்தாமல் தன் பாட்டிற்குச் சென்று கொண்டிருந்தாள் . தம்பையாவின் மனமோ அவளின் கலியாண விடையத்தை எண்ணியே வட்டமிட்டது . இன்று தம்பையாவிடம் புறோக்கர் சவரிமுத்து வருவதாகச் சொல்லியிருந்தான் .
சவரிமுத்து , அந்தச் சுத்துப்பட்டி ஏரியாவுக்கு எல்லாமே அவன்தான் புறோக்கர் . சவரிமுத்துவாலை கரையேறின குமருகள் எக்கச்சக்கம் . கலியாணப்பேச்சில சவரிமுத்து ஒரு விச்சுளியன் . சிலவேளைகளில் முரண்டுபிடிக்கின்ற பகுதிகளைத் தனது பேச்சாலேயே வெட்டியாடிக் கலியாணங்களை ஒப்பேற்றுவதில் சவரிமுத்துவை அடிக்க அந்த இடத்தில் யாரும் இல்லை . எக்காரணம் கொண்டும் பொய்பேசாது சாமர்த்தியமாகத் தனது கொமிசனையும் எடுத்து கலியாணங்களை ஒப்பேற்றுக்கின்ற விண்ணாதி விண்ணனான சவரமுத்துவையே தம்பையா தனது மகள் செவ்வந்தி விடையத்திலும் தெரிவு செய்திருந்தார் .
செவ்வந்தி வளர்ந்து பெரியவள் ஆனதும் தம்பையா தனது வீட்டுக் கிடுகு வேலிகளையெல்லாம் அச்சறுக்கையாக உயர்த்திக்கட்டியிருந்தார் . பறுவதமும் குறிபறிந்து அவரை ஏன் ஏது என்று கேட்கவில்லை . அவளைப் பொறுத்தவரையில் தம்பையா காரணகாரியம் ஏதுமின்றி எதுவும் செய்ய மாட்டார் என்ற எண்ணப்பாடு அவளின் மனதிலே ஆளமாகவே வேரோடி இருந்தது . இது அவளது பரம்பரையில் வாழையடி வாழையாகவே ஊட்டப்பட்டு வந்திருந்தது . ஆனாலும் தம்பையாவுக்கு தனது பேரைச்சொல்ல ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற கவலையும் இல்லாமல் இல்லை . எல்லாவற்றையுமே வெண்ட தம்பையாவுக்கு இதில் மட்டும் ஒரு சறுக்கல் வந்தது . தம்பையா கடவுள் அருளால் தனக்குக் கிடைத்த மரிக்கொழுந்தை கண்ணுக்குள் எண்ணை ஊற்றியே வளர்த்தார் . அறுகம்புல்லுப் பாலைக் குடித்து முடித்த தம்பையா பறுவதத்திடம் மூக்குப்பேணியைக் கொடுத்வாறே , புறோக்கர் சவரிமுத்து இன்றைக்கு வரும் விடயத்தை அவிட்டு விட்டார் . பறுவதமும் செவ்வந்தியின் கலியாணமே முடிந்த மாதிரி சந்தோசப்ட்டு மகளின் சாதக்கட்டைக் கைகாவலாக எடுத்து வைத்தாள் .
வீட்டு முன்வாசலில் இருந்த தம்பையாவின் கண்களில் ஒழுங்கை மூட்டில் புறோக்கர் சவரிமுத்து சைக்கிளை வலித்துக்கொண்டு வருவது தெரிந்தது . தம்பையா மீண்டும் மனதிற்குள் யாழ்ப்பாணத்து முருகன்களையெல்லாம் உச்சாடனம் செய்யத் தொடங்கி விட்டார் . சவரிமுத்து வீட்டு வாசலில் தனது சைக்கிளை நிப்பாட்டி விட்டு தலையால் வடியும் வியர்வையைத் தனது சால்வாயால் துடைத்தவாறே தம்பையாவின் முன்பு பௌவியமாக உட்கார்ந்தார் . பறுவதமோ சவரிமுத்துவுக்கு எலுமிச்சம்பழச் சாறு கொண்டுவந்து கொடுத்தாள் . சவரிமுத்துவோ வாயெல்லாம் பல்லாகி பறுவதம் கொடுத்த எலுமிச்சம்பழச் சாறை வாங்கிக் கொண்டு தனது தொண்டையைக் கனைத்தவாறே தம்பையாவைப் பாத்து சொல்லத் தொடங்கினார் ,
ஐயா ஒரு திறமான இடம் வந்திருக்கு . பெடி பிறான்ஸ்சிலை சொந்தமாய் கடை போட்டு வைச்சிருக்கிறான் . தாய்தேப்பனுக்கு ஒரேயொரு பெடி .அதோடை ஃபிறென்ஜ் நாஷனாலிற்றி காறன் . சீதனமும் ஒண்டும் வேண்டாம் நல்ல குடும்ப பிள்ளையாய் இருந்தால் சரி எண்டு தாய்தேப்பன் சொல்லீச்சினம் . சாதிசனத்திலை அவை உங்கடைபகுதிதான் . யாழ்ப்பாண ரவுணுக்கை இருக்கினம் . பெடி நல்ல சங்கையானபெடி . பேசிமுடிப்பமோ ??என்றவாறு தம்பையாவிடம் மாப்பிள்ளையின் படத்தைக் குடுத்தான் சவரிமுத்து . தம்பையா படத்தை வாங்கிக்கொண்டே , எல்லாஞ்சரி பகுதி வெளிநாடெல்லோ ?? யோசனையாக்கிடக்கடாப்பா , பிள்ள்ளையை வெளிநாட்டிலை விட்டுப்போட்டு நாங்கள் என்ன செய்யிறது ?? என்று தம்பையா சொல்லி முடிப்பதற்குள் சவரிமுத்து தம்பையாவை இடைவெட்டினான் . ஐயா உங்களுக்கு இப்பத்தையான் நாட்டு நடப்புகள் தெரியாமல் இல்லை . பெண்பிரசுகளுக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு தெரியாது .பேந்து ஒருகாலத்தில நீங்களும் மகளோடை பிரான்சிலை போய் இருக்கலாம்தானே என்று தம்பையாவை உருவேத்தினான் . சவரிமுத்துவுக்கு தனது புறோக்கர் கொமிசன் போய் விடுமே என்று பதகளிப்பு வேறு தொற்றிக்கொண்டது . தம்பையா ஒரு முடிவுக்கு வந்தவராக சரியடாப்பா இதை பேசிமுடிப்பம் என்றார் .
தம்பையாவின் வீட்டுக்கு முன்வீட்டில் பறுவதத்தின் அண்ணை வினாசிதம்பியரின் வீடு இருந்தது . இரண்டு குடும்பமுமே மாத்துச்சம்பதத்தால் இணைந்தது . இதனால் தம்பையாவுக்கு வினாசித்தம்பியில் நல்ல பட்சம் . வினாசித்தம்பிக்கும் செவ்வந்தியின் வயது ஒத்த மாதங்கி என்ற மகள் இருந்தாள் . வினாசித்தம்பியர் தனது வீட்டு வேலியை அடைக்கின்றேன் பேர்வளி என்று தம்பையாவீட்டின் குசுகுசுப்புகளை அறியத் தனது காதுகளை எறிந்து விட்டு தான் வேலி அடைப்பதாக பாவனை செய்து கொண்டிருந்தார் . வினாசித்தம்பியரின் மனதிலோ ஒரு சிறியபொறி சன்னதம் ஆடத் தொடங்கிக் கொண்டிருந்தது . பேச்சுக்கால்களை முடித்துக்கொண்டு வெற்றிக்களிப்புடன் சைக்களை வலித்துக்கொண்டிருந்த சவரிமுத்துவை சரியாகத் தவறணையடியில் வினாசித்தம்பியின் சைக்கிள் குறுக்கி வெட்டியது .ஒரு போத்தில் கள்ளுடனேயே சவரிமுத்து எல்லாக் கதைகளையும் வினாசித்தம்பியரிடம் துப்பி விட்டான் .
அன்று மாலை வினாசி தம்பியர் ஒரு அரைப்போத்தல் கள்ளை உள்ளே இறக்கிவிட்டு ஓய்... தம்பையா!!!!!! ஓய் ........தம்பையா!!!!!!!! உமக்கு வினாசிதம்பியன் எண்ட மச்சான் இருக்கிறான் இருக்கிறதை மறந்து போனீரோ ?? உமக்கு எங்டை சாதி எங்கடை சாதிசனம் ஒண்டும் வேண்டாமோ ?? என்று தம்பையாவீட்டு வாசலில் சன்னதம் ஆடத்தொடங்கினார் . பறுவதமோ என்னவோ ஏதோ என்று பதறியவளாய் , உள்ளுக்கை வா அண்ணை ஏன் வாசலுக்கை நிண்டு சத்தம்போடுறாய் ?? என்று பதமாகச் சொன்னாள் . தம்பையாவும் தனது பங்கிற்குச் சேர்ந்து கொண்டார் . நான் இங்கை ஒண்டும் உங்களோடை கொஞ்சுப்பட வரேலை . என்ரை மருமோளுக்கு கலியாணம் பேசுறியள் எண்டு அறிஞ்சன் . நான் ஒரு தாய்மாமன் இருக்குறதை தம்பையா நீர் எனக்கு கூட சொல்லேலை . பேந்தென்ன மசிருக்கு நான் இங்க இருப்பான் ?? என்று வினாசித்தம்பி எகிற , தம்பையா இடைவெட்டி , சீச்சீ..... நான் அப்படியெல்லாம் செய்வனே ?? எல்லாம் முடிய சொல்ல இருந்தனான் என்று சொல்லி வினாசித்தம்பியை சமாதானப்படுத்த முயன்றாலும் , வினாசித்தம்பிக்கு உள்ளே போன கள்ளு அதனது குணத்தைக் காட்டத்தொடங்கியிருந்தது .
சரி அதெல்லாம் கிடக்கட்டும் தம்பையா உமக்கு எங்கடை சாதிசனம் வேணுமோ வேண்டாமோ ?? தெரியாமல்தான் கேக்கிறன் . மாப்பிளைபகுதி ஆர் எவர் எண்டு விசாரிச்சியளோ ?? என்ற வினாசித்தம்பியை இடைவெட்டிய தம்பையா , நான் நல்லாய்த்தான் விசாரிச்சனான் . என்று சொல்ல , நீ கிளிச்சாய்............. அவங்கள் ஐஞ்சு குடியார் . எங்கடை சாதிசனம் அவங்களிட்டை கையே நனைக்கிறேலை . நான் எல்லம் தறோவாய் விசாரிச்சுப் போட்டுத்தான் ஐசே உம்மோடை கதைக்கிறன் . உமக்கு மண்டை கிண்டை களண்டு போச்சுதோ ??? என்று வானத்துக்கும் பூமிக்கும் எகிறிப்பாய , தம்பையாவுக்கு அப்பொழுதுதான் சவரிமுத்து தனக்குப் பினாட்டு அடைய வெளிக்கிட்டது நினைவில் வந்தது . பொறுத்த நேரத்தில் மச்சான் வினாசித்தம்பி வந்து தடுக்காதிருந்தால் தான் பரிசுகெட்டிருப்பேன் என்று தனக்குள் மருகினார் .
வினாசித்தம்பியரின் மனதில் தனது தங்கைச்சி பறுவதமும் மச்சான் தம்பையாவும் மெதுமெதுவாக மறையத் தொடங்கினார்கள் . இப்பொழுது வினாசித்தம்பியரின் பொழுதுகள் அதிகமாக சவரிமுத்துவுடனேயே தவறணையிலேயே கழிந்தன . யாழ்பாணத்தின் இயற்கையான தெனங்கள்ளு இருவரையுமே நல்ல கூட்டாளியாக்கி இருந்தது . வினாசித்தம்பியரோ எப்படிப்பட்டாவது மாதங்கிக்கு அந்த பிரான்ஸ் சம்பந்தத்தை முடித்துவிடவேண்டும் என்று ஆறாத் தாகத்துடன் இருந்தார் . இதற்காக அவர் இழக்க வேண்டியதெல்லாம் இழக்கவே தயாராக இருந்தார் . வினாசித்தம்பியரின் தொடர்சியான தென்னங்கள்ளு உபயத்தால் சவரிமுத்து மூலம் மாப்பிள்ளை பகுதி முதலில் சீதனமே வேண்டாம் என்றவர்கள் , எண்பதுலட்சம் சீதனமும் பத்துப்பரப்பு , செம்பாட்டுத் தோட்டக்காணியும் சீதனமாய் பேசப்பட்டு கலியாணம் ஒப்பேறியது . சவரிமுத்துவுக்கு கொழுத்த ஆடு அடித்து விருந்துவைத்தார் வினாசித்தம்பியர் . இது நடந்து மூன்று மாதங்களின் பின்பு வினாசித்தம்பியர் மகள் மாதங்கியுடன் தனது பிரான்ஸ் மருமகனை வரவேற்க கொம்படிப் பாதையூடாக ஊடறத்துக் கொழும்புக்குப் பயணமானது அறுகம் புல்லு சாப்பிட்ட ஊர்மாட்டுப் பாலைக் குடித்த தம்பையாவுக்குத் தெரிய நியாயமில்லைத்தான்............
August 23, 2013
Comments
Post a Comment