Skip to main content

என்ரை தீபாவளி.





சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் நல்லாய் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசணத்தாலை பேசும் . எங்களுக்கு அந்த நேரத்திலை உதெல்லாம் காதிக்கை ஏறாது . 

அடுத்தநாள் விடியப்பறமே அம்மா எங்களை எழுப்பாமல் எழும்பீடுவம் . நல்லபிள்ளையளாய் உமிக்கரி எடுத்துக் கொண்டுபோய் , அண்டைக்கெண்டு பாத்து தேய் தேய் எண்டு தேய்ப்பம் . அம்மாச்சி அண்டைக்கெண்டு எங்களுக்கு வில்லியாய் நிக்கும் . சுடவைச்ச நல்லெண்ணையை தலையிலை வைச்சு கண் எரிய எரிய நல்லாய் தேச்சு மசாஜ் பண்ணிவிடும் . அதோடை இலுப்பை அரப்பை வைச்சு தேச்சு விட்டு எங்களைப் படாதபாடு படுத்தும் . நாங்கள் கண்எரிவிலை கத்தினாலும் மனிசி முன்னுக்கு வைச்சகாலை பின்னுக்கு வைக்காது . பக்கத்திலை அண்டாவிலை சுடுதண்ணி கொதிச்சு கொண்டு இருக்கும் . மனுசி கிணத்து தண்ணியை வாளியாலை கிள்ளி அண்டாவிலை விளாவும் . நல்ல இதமான சுடுதண்ணியாலை குளிப்பாட்ட தொடங்கத்தான் எங்களுக்கு போன உயிர் திரும்பிவரும் . இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டு குளிச்சுமுடிச்சு அம்மா தைச்ச உடுப்புகளை போடுவம் . 

அந்த நேரம் எல்லா வீட்டிலையும் குறைஞ்சது ஐஞ்சு ரிக்கற்றுகளுக்கு மேலை . சிலவீட்டில பன்ரெண்டு ரிக்கற்றுகளும் பாத்திருக்கிறன் . இவ்வளவுபேருக்கும் உடுப்புகள் எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை . அந்த நேரம் எங்கடை அப்பாமார் சீத்தை துணியள்தான் வண்ணம் வண்ணமாய் வாங்குவினம். அப்ப லக்ஸசல சீத்தையும் , பூகொட சீத்தையும் தான் பேமஸ் . லைற்றான மண்ணெண்ணை வாசம் அடிச்சாலும் , நாங்கள் அதுகளின்ரை டிசைனுகளிலை மருண்டிடுவம் . நாங்கள் எல்லாரும் உடுப்புகளை போட்டுக்கொண்டு விடயப்பறமே கோயிலுக்கு ஓடிப்போவம் . அங்கை எங்களுக்கு வேலை ஆரார் என்ன உடுப்புகள் போட்டு வந்தவை எண்டு பாக்கிறது . கோயில் மணிக்கூட்டு கோபுரத்திலை காண்டாமணியை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறது எண்டு ஏகப்பட்ட சோலியள் . பேந்து கோயிலாலை வந்த எங்களுக்கு அம்மாச்சி எல்லாருக்கும் பலகாரங்கள் பங்கிட்டு தரும். அதோடை சொந்தக்காறர் வீட்டுக்கும் பலகாரம் குடுக்கச்சொல்லி தரும் . 

எனக்கு ஐஞ்சாறு மச்சாளவை இருந்தவை . ஆனால் எல்லாரும் என்னைவிட வயசு கூடினவை. அவைக்கு குட்டிமச்சான் எண்டு என்னிலை செரியான பட்சம் . எல்லாரும் என்னை தங்கடை மடியிலை தூக்கி வைச்சு தாங்கள் சுட்ட பலகாரங்களை தருவினம் . நான் நல்ல புழுகமாய் சாப்பிடுவன் . பேந்து எல்லாரும் விளையாடுவம் . அப்ப கீ அடிக்கிறது , கிட்டி புள்ளு , ஒப்பு , கிளித்தட்டு இப்பிடியான விளையாட்டுகள்தான் பேமஸ் . கிளித்தட்டிலை பெட்டையள் அளாப்புவாளவை . சிலநேரம் அடிபாடுகள் முத்தி முகத்திலை காயங்கள் வந்து ரணகளமாய் போடும் . அம்மாச்சி எங்கடை அசுமாத்தங்களை கேட்டு ஓடியந்து எல்லோருக்கும் முதுகிலை நல்ல போடு போட்டு வீட்டை கூட்டிக் கொண்டு போவா . நாங்கள் அங்கை போனால் நல்ல மரக்கறியோடை ஆட்டுப்பங்கு கறியும் சேத்து , சோத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள்ளை போட்டு குழைச்சு , அம்மாச்சி எல்லாருக்கும் பூவரசம் இலையிலை வைச்சு தருவா . நாங்கள் அப்பவும் விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவம் . பேந்து கொஞ்ச நேரம் எல்லாரும் நித்திரை கொண்டுபோட்டு , திரும்பவும் கிட்டி புள்ளு விளையாடப் போவம் . இந்தக் கூத்துகள் சின்னவயசிலை .

பேந்து வெடிவால் முளைக்க , நியூமார்கற் நானா ரெயிலரிட்டை தைச்ச பெல்பொட்டமும் , உடம்பை இறுக்கின சேர்ட்டும் போட்டுக்கொண்டு ரவுணுக்கு, தீபாவளியளுக்கு வந்த படங்களை பாக்கப் போவம் . அப்ப வின்ஸர் தியேட்டரும் , ரீகல் தியேட்டரும் தான் எங்கடை முதல் தெரிவு. இதிலை ரிக்கற் கிடைக்காட்டில்தான் ராஜா தியேட்டருக்கும் , ராணி தியேட்டருக்கும் போவம் . இதுக்குள்ளை அவனவன் தங்கடை சரக்குகளையும் விக்னா ரியூட்டரியிலை ஸ்பெசல் கிளாஸ் எண்டு வீட்டிலை டிமிக்கி குடு​த்துப்போட்டு கூட்டியருவாங்கள் . இப்பிடியெல்லாம் எங்கடை தீபாவளி கொண்டாட்டங்கள் அப்ப போச்சுது . ஆனால் இப்ப இந்த தேன் கூடுகள் இல்லை . எல்லாம் திக்குதிக்காய் கலைஞ்சு போச்சுது. என்ரை அம்மாச்சியும் போய்சேந்திட்டா . எந்தக்காலத்திலையும் எங்கடை அனுபவங்களை இப்பத்தையான் குஞ்சுகுருமனுகள் எடுக்கப்போறேலை . கிட்டிபுள்ளு , கிளித்தட்டு எண்டால் இப்பத்தையான் யாழ்ப்பாணத்து பிள்ளையளுக்கு தெரியுதில்லை .......... சிலநேரம் நாங்கள் தான் லூசுகளோ???





November 12, 2012

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...