Skip to main content

நெருடிய நெருஞ்சி-21






ஏழாலை தொட்டதெல்லாம் பொன்கொழிக்கும் சிவந்தபூமி அரசபதவிகளில் பலர் இருந்தாலும் அவர்களது பக்கவருமானம் தோட்டமே முக்கியமாக சிறுதோட்டப்பயிர்களே அவர்களது முயற்சியாகும். அண்ணையும் இதற்கு விலக்கு இல்லை. நாங்கள் வீட்டை அடந்தபொழுது அந்தச்சூழல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரது வீடு எங்கும் பசுமை போர்த்தி மனதிற்கு இதமாக இருந்தது. பலாவும், மாவும் ,கமுகுவும், அழகான பூக்கண்டுகளும் அணிவகுத்தன. ஒரு பலாவில் பழம் பழுத்ததால் அதன் வாசம் எங்கும் பரவியிருந்தது. கமுகுவில் பாழை பிளந்து அழகாக இருந்தது .நான் வீட்டிற்க்குள் போகமல் வளவைச்சுற்ரி வந்து கொண்டிருந்தேன். பிலாமரத்துக்கு அடியில் ஒரு கூட்டிலே, இரண்டு அடுக்கு வசதிகளுடன் பத்துப் பதினைந்து முயல்கள் துள்ளி விழையாடின .அவைகளில் பலவிதமான தரங்களில் புல்லுகளை மேய்ந்து கொண்டிருந்தன. கூட்டுக்குள் அவை இருந்தாலும், அம்மா, அப்பா, அக்கா, அண்ணை, தங்கைச்சி, என்று உறவுகளுடன் சந்தோசமாகத் துள்ளி விழையாடின .எனக்கு இல்லாத ஒன்றை அந்த முயல்கள் பெற்றதை நினைக்கும்பொழுது, மனதில் முள் ஒன்று ஆழமாகக் கோடுபோட்டு இழுத்தது. எனது சிந்தனையை அண்ணையின் குரல் கலைத்தது,

"இங்கை என்னடாப்பா செய்யிறாய் ? "

"உனக்கு என்னம் சின்னப்பிள்ளைக் குணம் விட்டுப்போகேல".

என்றவாறே கோப்பியைத் தந்தார்.

நான் வலிந்து சிரித்தேன் எனது முகமாற்ரத்தை உணர்ந்த அண்ணை,

"என்னடாப்பா நானும் நீ வந்தநேரம் தொட்டு பாக்கிறன் நீ சந்தோசமாய் இல்லை . என்ன பிரச்சனை ? அண்ணைதானே சொல்லு ".

"இல்லை அண்ணை எனக்கு எதிலையும் இங்கை ஒட்டுதில்லை ".

ஏன் அப்பிடி சொல்லுறாய் ? நாங்கள் உன்னை வித்தயாசமாய்ப் பாக்கேலையே?

"எனக்கும் உங்கள் எல்லாரோடையும் நேரடி தொடர்பு விட்ட காலம் கூட அண்ணை அதால எல்லாமே இயந்திரத்தனமாக் கிடக்கு " .

" நீ தேவையில்லாமல் குளம்புறாய் . கதையோட கதையா நான் என்ர இலக்கிய கூட்டுகள் கொஞ்சப்பேரை நீ வந்திருக்கிறாய் எண்டு வரச்சசொல்லியிருக்கிறன் அவையும் வாறதாய் சொல்லீச்சினம் ".

" ஏன் அண்ணை ? நான் ஒண்டும் எழுதிப் பெரிசாய் வெட்டிக்கிளிக்கேல .

"அவை வாறதாய் சொல்லியிருக்கினம். நீயும் அவையளோட நாலு கதையளைக் கதைச்சால் தானே உனக்கும் இங்கைத்தையான் நிலமையள் விளங்கும் ".

"சரி அண்ணை அவையைச் சந்திப்பம்"

அண்ணையின் பிள்ளைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டார்கள் . எல்லோரும் என்னைப்பற்ரி நன்றாகக் கற்பனை பண்ணி வைத்திருந்தார்கள் . எனது நிஜம் அவர்களுக்கு ஒரளவு ஏமாற்ரத்தையே தந்திருந்தது . அவர்கள் என்னை ஒரு வெள்ளையாக , நெடியவனாக , உருவகப்படுத்தியிருந்தார்கள் . அவர்களது சிறிய மனதின் கற்பனை அப்படி!!! . நான் அவர்களது கற்பனையைக் கேலி பண்ணிக்கொண்டு இருந்தேன் .நேரம் 11 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . அண்ணையின் கூட்டுகள் ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தார்கள் . வீட்டின் பிலாமரத்தின் கீழ் அரட்டை தொடங்கியது . நான் அண்ணைக்கு வாங்கியந்த ஜே பி யும் , மெண்டிஸ் ஸ்பெசலும் ஒரு சிறிய மேசையில் நடுநாயகமாக இருந்தன . பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு தொடங்கியது எங்களது அரட்டை .

எல்லோரும் எனது பார்வையில் இன்றய நிலமையை அறியவே ஆர்வம் காட்டினார்கள் . என்னுடன் சில இடங்களில் உடன்பட்டாலும் , பலதிற்கு அவர்கள் தங்களது வியாக்கியானங்களையே தந்தார்கள் . அவர்களின் வாதங்களில் இருந்து அவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே தெரிந்தது .போரின் அவலங்களும் வன்னிப்பேரவலமும் அவர்களிடம் ஆறாவலியாக கீறிக் கிழித்திருந்தது.எனது கேள்வியான இளையசமூகத்தின் கலாச்சார சீர்கேட்டிற்கான அவர்களது பதில் ஏற்ருக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது . அதாவது ,< ஓர் இறுக்கமான சூழலில் வளர்ந்த இந்த இளையவர்கள் அபரீதமான தொடர்பாடலின் வளரச்சியில் இவர்கள் அள்ளுப்படுவது தவிர்க முடியாததே . ஆனால் , இவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை இதில் தெளிவுடன் இருக்கும்> என்றார்கள் . அத்துடன் புலம்பெயர் சமூகத்தையும் அவர்கள் ஒரு பிடி பிடிக்கத்தவறவில்லை .< புலம் பெயர் சமூகத்தின் அளவில்லாத காசு இவர்களை அடைவதும் ஒருகாரணம் என்று குறிப்பிட்ட அவர்கள் , வடக்கு கிழக்கு மக்களை ஒரு இரக்கத்துக்குரிய நபர்களாகப் பார்பதும் , அதைக் காரணங்காட்டி அந்த மக்களுக்குப் பணத்தை வாரியிறைப்பதாலும் , இந்த இளயசமூகம் திசைமாறுவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்று குமுறினார்கள் >. ஆனால் , எனக்கு அவர்களது வாதம் இறுதியில் இரசிக்கும்படியாக இருக்கவில்லை . இவர்களுக்கு இன்னல்கள் வரும்பொழுது கைகொடுக்கின்ற எங்களுக்கு ,அவர்களிடம் கேள்வி கேட்கின்ற உரிமைகளை அவர்கள் மறுத்தது எனக்கு வலியை ஏற்படுத்தியது . எம்முடன் உள்ள தொடர்புகள் பணத்தின் அடிப்படையில் தானா உருவானது ? அப்போ நாங்கள் இவர்களின் இரத்த உறவுகள் இல்லையா ? எனது மனம் இரத்தம் வழிந்து உறைந்தது .நான் அமைதியாக இருந்ததை பார்த்த அண்ணை என்னை நிஜத்திற்குக் கொண்டு வந்தார்.

"அப்ப எல்லாரும் சாப்பிடுவமே"?

" ஓம் அண்ணை எனக்கும் பசிக்கிது".

எல்லோரும் சாப்பிட இருந்தோம் . அண்ணியின் சமையல் கைப்பக்குவம் ஏனோ அம்மாவை நினைவிற்குக் கொண்டு வந்தது. அன்று இரவு அங்கேயே நின்று அடுத்த நாள் காலை பரித்தித்துறைக்கு வெளிக்கிடத் தயாரானோம். இந்தமுறை அண்ணை எங்களை பஸ் எடுக்கவிடவில்லை. நண்டுபிடித்து நின்று தனக்கு தெரிந்தவரின் ஓட்டோவைப் பிடித்து விட்டு, எங்களிடம் காசு கேட்கக் கூடாது என்று அவரிடம் சொல்லிவிட்டார். எங்களை ஏற்ரிக்கொண்டு ஓட்டோ அந்தக் காலை வேளையில் பரித்தித்துறைக்கு வெளிக்கிட்டது. ஓட்டோ உள்ள ஊரி சந்து பொந்துக்களில் எல்லாம் புகுந்து போனது. எல்லா இடமும் தோட்டங்கள் பசுமை போத்தியிருந்தன. தோட்டத்திற்கு அடித்த மலத்தியனின் நெடி மூக்கை அடைத்தது. ஒழுங்கைகளின் இருபக்கமும் ஏழ்மையும் பணக்காரத்தனமும் போட்டி போட்டு வீடுகளில் அணிவகுத்தன. சில மணி நேர ஓட்டத்திற்குப் பின்பு பரித்தித்துறையை வந்தடைந்தோம்.நாங்கள் மீண்டும் கொழும்பு போகின்ற நாள் நெருங்குகிறதால் மாமி பரித்திதுறை வடை மாலுக்குள் சுட்டுக்கொண்டிருந்தா .அன்ரி வடகம் காயப்போட்டுக்கொண்டிருந்தா .மாமா சாய்மனைக்கதிரையில் இருந்து கொண்டு இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் .

நேரம் மதியத்தை நெருங்கிக்கொண்டிருந்தது .வெக்கை அனல் பறத்தியது. நான் மாமரத்தடியில் கதிரையைப் போட்டுவிட்டு , வரும் வழியில் வாங்கி வந்த உதயன் பத்திரிகையை மேய்ந்தேன். எனக்கு வந்த களைப்பால் நித்திரை எட்டிப்பார்தது. அப்படியே நித்திரையாகி விட்ட என்னை மனைவி எழுப்பினா. நான் எழும்பி சாப்பிட்டுவிட்டுத் திரும்பவும் படுத்து விட்டேன்.நான் மீண்டும் நித்திரையால் எழும்பியபொழுது பின்நேரம் 4 மணியாகியிருந்தது ஓரளவு வெக்கை அடங்கிக் கடல் காத்து வீசியது நான் கிணற்ரடியில் போய் வாளியால் அள்ளிக் குளித்தேன்.குளித்து வெளிக்கிட்டு நானும் மச்சானும் பஸ்ராண்டுக்கு வெளிக்கிட்டோம் எமது வழமையான பாதையால் நடக்கத்தொடங்கினோம் நாங்கள் பஸ்ராண்டை அடைந்தபொழுது வழமையான பரபரப்பில் அது அமிழ்ந்து போய்இருந்தது. நாங்கள் பஸ்ரண்டில் வவுனியா போவதிற்கு முற்பதிவு செய்தோம்பின்பு பிளேன் ரீ அடிக்க மீன்சந்தைக்குப் பக்கத்திலுள்ள ரீகடைக்குள் உள்ளட்டோம் பிளேன் ரீயையும் றோல்ஸை யும் எடுத்துக்கொண்டு கடைவாசலுக்கு வந்து நின்று கொண்டோம்.


 





October 10, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...