அதிசயம்
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.
ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார்.
‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை.
‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.
’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’
‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’
அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’
‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய்.
‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’
‘அதென்ன?’
அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’
0000000000000000000000000000000000
ஓடிவிடு
ஜென் துறவி ஒருவர். மிகவும் வயது முதிர்ந்தவர். பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. ஆகவே, அவர் தனது சிஷ்யர்களை அழைத்தார். ‘எனக்குப்பின் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்று தீர்மானிக்கவேண்டும்’ என்றார். அதற்கு ஒரு போட்டியும் அறிவித்தார்.
போட்டி இதுதான்: சிஷ்யர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கவிதை எழுதித் தரவேண்டும், அதில் சிறந்த கவிதை எதுவோ அதை எழுதியவர்தான் ஆசிரமத்தின் புதிய தலைவர்.
உடனடியாக, சிஷ்யர்கள் கவிதை எழுத உட்கார்ந்தார்கள். சிறந்த சொற்கள், அற்புதமான கருத்துகள், பிரமாதமான சிந்தனைகளைக் கொட்டி நிரப்பிய பல கவிதைகளை அவர்கள் எழுதிச் சமர்ப்பித்தார்கள்.
அந்தத் துறவி எல்லாக் கவிதைகளையும் படித்தார். கடைசியாக அவர் தேர்ந்தெடுத்தது, ஒரு சமையல்காரனின் கவிதையை!
‘என்னது? இந்தச் சமையல்காரனா எங்களுக்கெல்லாம் குரு?’ மற்ற சிஷ்யர்கள் அதிர்ந்துபோனார்கள். ‘இதை நாங்கள் ஏற்கமுடியாது!’
‘நான் வைத்த போட்டியில் அவனுடைய கவிதைதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்தான் அடுத்த குருநாதர்’ என்றார் துறவி. சிஷ்யர்கள் எத்தனை முரண்டு பிடித்தபோதும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் எரிச்சலடைந்த சிஷ்யர்கள் அந்தச் சமையல்காரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட துறவி அவரை ரகசியமாக அழைத்தார். தன்னுடைய மேலாடை மற்றும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து வாழ்த்தினார்.
அன்று இரவு, அந்தச் சமையல்காரர் ஆசிரமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். வேறோர் கிராமத்தில் சென்று தங்கிக்கொண்டு தியானமும் கல்வியுமாக நேரம் செலவிட்டு ஞானம் பெற்றார், பெரிய ஜென் மாஸ்டரானார்!
0000000000000000000000000000000000000
நன்றி சொல்ல ஒருவன்
ஷிசிரி கோஜுன் என்ற ஜென் துறவி. அவருடைய ஆசிரமத்துக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.இதைப் பார்த்த திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட பொருள்களையெல்லாம் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.
அவன் புறப்படும் நேரம், ஷிசிரி கோஜுன் அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’
‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’
‘அதெல்லாம் இல்லை. என்கிட்டேயிருந்து இத்தனை பொருள் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு நன்றி சொல்லமாட்டியா?’
‘சொல்லிட்டாப் போச்சு. ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். ஓடி மறைந்துவிட்டான்.
சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல ஷிசிரி கோஜுனை அழைத்தார்கள். அவரும் வந்தார். நீதிபதிமுன் நின்றார்.
‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.
‘என்னங்க சொல்றீங்க? எல்லாரும் இவனைத் திருடன்னுதானே சொல்றாங்க?’
‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’
000000000000000000000000000000000
ஒரே அடி
ஒரு சிஷ்யன் தியானத்தில் அமர்ந்திருந்தான். அப்போது அவனுடைய குருநாதர் அந்த வழியாக வந்தார்.
‘குருவே, ஒரு விஷயம்’ என்றான் சிஷ்யன்.
‘என்ன?’
‘நீங்கள் சொன்ன ஜென் அம்சங்களை நான் முழுவதுமாகப் புரிந்துகொண்டுவிட்டேன் என்று உணர்கிறேன்’ என்றான் அவன்.
‘எப்படிச் சொல்கிறாய்?’
‘இதோ, என்னைப் பாருங்கள், தியானத்தில் உட்கார்கிறபோது ‘நான்’ என்கிற அந்த உணர்வு கரைந்து இல்லாமல் போய்விடுகிறது. எனக்குள் முழு வெறுமைதான் நிரம்பியிருக்கிறது!’
அவன் பேசிக்கொண்டே போக, குருநாதர் பக்கத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்தார். அவன் முதுகில் ஓங்கி அடித்தார்.
‘ஆ!’ என்று அலறியபடி எழுந்தான் அவன். ‘ஏன் என்னை அடித்தீர்கள்?’ என்று கோபப்பட்டான்.
‘நான் முழுவதும் வெறுமையால் நிரம்பிவிட்டேன் என்றாயே’ என்று புன்னகை செய்தார் குருநாதர். ‘அப்படியானால் இப்போது இந்தக் கோபம் எங்கிருந்து வந்தது? அந்த வெறுமையிலிருந்தா?’
00000000000000000000000000000000000000
இரண்டு கண்கள்
ஒரு ஜென் மாஸ்டர். அவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் வந்தான். வணக்கம் சொன்னான். ‘ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்’ என்றான்.
‘என்ன சந்தேகம்?’
‘எனக்குப் பெரிய வாள் வீரனாகவேண்டும் என்று ஆசை’ என்றான் அந்த இளைஞன். ‘அரசரின் கையால் பரிசும் பாராட்டும் வாங்கவேண்டும், அப்புறம் நான் அவருடைய படையில் சேரவேண்டும், பல போர்களில் ஜெயித்துச் சரித்திரத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறேன். தப்பா?’
‘தப்பில்லை’ என்றார் ஜென் மாஸ்டர். ‘ஆனால், உனக்கு வாள்வீச்சு எந்த அளவு தெரியும்?’
‘இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!’
‘ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய இலக்கைக் கற்பனை செய்து சந்தோஷப்படுவது இயல்புதான்’ என்றார் அந்த ஜென் குரு.
‘ஆனால் ஒரு விஷயம் புரிந்துகொள், உனக்கு உள்ளது இரண்டே கண்கள், அதில் ஒன்றை இலக்கின்மீது வைத்துவிட்டால், பாதையில் கவனம் பாதியாகிவிடும். அதற்குப் பதில் இரண்டு கண்களையும் இங்கே திருப்பினால், நீ விரும்பும் இலக்கைச் சீக்கிரம் சென்று அடையலாம், புரிகிறதா?’
00000000000000000000000000000
கண்ணாடி தத்துவம்
அந்தக் கால ஜப்பானில் ஒரு துறவி. அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துப்போவார். இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். ‘நம்ம குருநாதருக்குத் தான் பெரிய அழகன்னு நெனப்புடா. எப்பப்பார் கண்ணாடியில தன் மூஞ்சைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கார்!’
சிஷ்யர்கள் இப்படிப் பேசுவது குருநாதருக்கும் தெரியும். ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தான். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம்.
‘ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர். ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்கமுடியவில்லையா?’ என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.
துறவி சிரித்தார். ‘அரசனே, எனக்கு ஏதாவது பிரச்னை வந்தால், அந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முழுமுதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்!’
‘அப்புறம், அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டாமா? அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன், மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன். அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன்.’
‘எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால், என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை. நீ எப்படி?’
00000000000000000000000000000000
வார்த்தைகள்
சுவாங் ட்ஸு என்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன மேதை. ஜென் மாஸ்டர்.
ஒருமுறை அவருடைய சிஷ்யர் ஒருவர் கேட்டார், ‘குருவே, நீங்கள் எத்தனையோ பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களில் உங்களுடைய மனத்தைக் கவர்ந்தவர் யார்?’
சுவாங் ட்ஸு சிரித்தார். ‘என்னுடைய மனத்தைக் கவர்ந்த அந்த மனிதரை நான் இன்னும் சந்திக்கவில்லை.’
‘அப்படியா? யார் அவர்?’
‘வார்த்தைகளை மறந்த ஒருவர்!’
‘புரியவில்லையே!’
சுவாங் ட்ஸு விளக்கத் தொடங்கினார். ‘நீங்கள் வலை வீசி மீன் பிடிக்கிறீர்கள். மீன் கிடைத்தவுடன் வலையை என்ன செய்வீர்கள்?’
’தூர வீசிவிடுவோம்!’
’ஆக, வலை தூர வீசப்படும்வரை, உங்களுக்கு மீன் இன்னும் கிடைக்கவில்லை என்று அர்த்தம். இல்லையா?’
‘ஆமாம் குருவே!’
‘அதேபோல், முயலைப் பொறி வைத்துப் பிடிக்கிறோம். முயல் கிடைத்தவுடன் பொறியைத் தூர வீசிவிடுகிறோம். இல்லையா?’
’உண்மைதான். அதற்கென்ன?’
’வலை, பொறிபோலதான் நாம் பேசும் வார்த்தைகளும். அவை உயர்ந்த கருத்துகளைக் கொண்டுசெல்லும் வாகனங்கள். நாம் அந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், வார்த்தைகள் மறந்துபோகும்’ என்றார் சுவாங் ட்ஸு. ‘ஆனால் நான் சந்தித்த எவரும் வார்த்தைகளை இன்னும் மறக்கவில்லை. தொடர்ந்து அவற்றோடுதான் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள், அப்படியானால் உலகப் பேருண்மைகளை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்?’
000000000000000000000000000000000000
ஊதுபத்தி தத்துவம்
ஜென் மாஸ்டர் ஒருவர். ஊர் ஊராகச் சென்று போதனை செய்வார். மக்கள் தருகிற உணவைச் சாப்பிடுவார். என்றைக்காவது சாப்பிட ஏதும் கிடைக்காவிட்டால் பட்டினியாகப் படுத்துவிடுவார்.
ஒருநாள், பெரிய பணக்காரர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ‘ஐயா, உங்களைமாதிரி பெரிய ஞானி ஏன் இப்படி நாடோடிமாதிரி அலையவேண்டும்?’ என்றார். ‘உங்களுக்கு நான் ஒரு பிரமாதமான ஆசிரமம் அமைத்துத் தருகிறேன். நீங்கள் அங்கேயே தங்கியிருந்து உங்களுடிய தியானங்களைத் தொடரலாம். நாடுமுழுவதிலும் இருந்து மக்கள் உங்களைத் தேடி வந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். என்ன சொல்கிறீர்கள்?’
ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘அது எனக்குச் சரிப்படாது. மன்னித்துவிடுங்கள்’ என்றார்.
’ஏன் ஐயா அப்படிச் சொல்கிறீர்கள்? நான் கேட்டதில் ஏதாவது தவறா? உங்களுடைய புகழ் நாடுமுழுவதும் பரவவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’
‘உங்கள் எண்ணத்தில் தவறில்லை. ஓர் ஊதுபத்தியை ஏற்றிவைத்தால் அறைமுழுவதும் நறுமணம் கமழ்கிறது. ஆனால் கொஞ்சநேரம் கழித்து அந்த ஊதுபத்தியே காணாமல் போய்விடுகிறது. அப்படிச் சுயத்தை இழந்து புகழ் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?’ என்றார் அந்த மாஸ்டர். ‘பணம், புகழ், பதவி, மரியாதை போன்ற விஷயங்கள் கத்தியை நக்கித் தேன் குடிப்பதுபோல, அந்த ருசிக்கு ஆசைப்பட்டால், நாக்கு போய்விடும்! எனக்கு ஆற்றில் ஏந்திக் குடிக்கிற பச்சைத் தண்ணீர் போதும்.
0000000000000000000000000000000000
நல்ல சட்டை , கூலிங் கிளாஸ்.
ஜென் துறவி ஒருவர் சொற் பொழிவாற்றிக் கொண்டிருந்தார். ‘நீங்கள் உங்கள் மனத்தை உணரவேண்டும். அதுதான் உண்மையான ஜென் நிலை!’
முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து நின்றார். ‘நீங்க சொல்றது பொய்’ என்றார்.
துறவி கோபப்படவில்லை. ‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்று கேட்டார்.
‘மனம்-ன்னு ஒண்ணு நிஜமாவே இருக்கா?’
‘ஆமா, அதில் என்ன சந்தேகம்?’
அப்படி ஒரு விஷயம் உண்மையில இருந்தா, நம்மால அதைப் பார்க்கமுடியணுமில்லையா? அதைப் பார்க்காதவரைக்கும் அப்படி ஒண்ணு இருக்குன்னு நான் ஒத்துக்கமாட்டேன்’ என்றார் அந்த நபர். ‘மனம் இருக்கு-ன்னு எனக்கு நிரூபிச்சுக் காட்டவேண்டியது உங்க பொறுப்பு. இல்லாட்டி நீங்க சொல்றது பொய்ன்னுதான் நான் நம்புவேன்!’
துறவி சிரித்தார். ‘தம்பி, இப்போ இந்தக் கூட்டத்தில நீலக் கலர் சட்டை போட்டுக் கூலிங்க்ளாஸ் மாட்டின மீசைக்காரர் ஒருத்தர் இருக்கார், தெரியுமா?’ என்றார்.
அந்த நபர் சுற்றிலும் பார்த்தார். ‘எனக்குத் தெரியலையே!’ என்றார்.
‘உங்கமேல தப்பில்லை. ஏன்னா, நீங்க கீழே உட்கார்ந்திருக்கீங்க, நான் மேலே மேடையில இருக்கேன். அதனால, என்னால முழுக் கூட்டத்தையும், பார்வையாளர்களையும் கவனிக்கமுடியுது, நீலச் சட்டை, கூலிங்க்ளாஸ் மீசைக்காரரும் என் பார்வைக்குத் தெரியறார்!’ என்றார் துறவி. ‘அவர் உங்க பார்வைக்குத் தெரியலைங்கறதால, அப்படி ஒருத்தர் இல்லவே இல்லை-ன்னு சொல்லமுடியுமா?’
‘இல்லைங்க. அது முடியாது!’ அவர் ஒப்புக்கொண்டார்.
’நம்ம மனசும் அப்படிதான். வெளியே நிக்கறவங்களுக்குத் தெரியாது, உள்ளே போய்ப் பார்த்தவங்களுக்குத் தெரியும். அவங்க எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் ஆதாரங்களைக் காட்டினாலும் வெளியே நிக்கற ஒருத்தருக்கு அது புரியாது. உள்ளே வந்து பாருங்க, நான் எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியமே இல்லை, உங்க மனசு உங்களுக்குப் புரிஞ்சுடும்.’
000000000000000000000000000000
ஓவியம் செய்வோம்
ஓர் ஓவியன். பலநாள் உழைத்து ஓர் அருமையான ஓவியத்தைத் தீட்டி முடித்தான். அதை மக்களின் பார்வைக்கு வைத்தான். ஆனால் அவன் எதிர்பார்த்ததுபோல் யாரும் அந்த ஓவியத்தைப் பாராட்டவில்லை. மாறாக ஏதேதோ குறைகளைச் சொல்லி விமர்சித்தார்கள். அந்த ஓவியன் நொந்துபோனான். சோர்வாக ஒரு நதிக்கரையில் அமர்ந்திருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு ஜென் குருநாதர் சென்றுகொண்டிருந்தார். அவர் இவனைப் பார்த்துவிட்டு விசாரித்தார்.
’என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கே?’
அவன் வேதனையோடு தன் கதையைச் சொன்னான். ’இதனால எனக்கே என் திறமைமேலே சந்தேகம் வந்துடுச்சு சாமி. நான் இப்ப என்ன செய்யறது?’
ஜென் துறவி சிரித்தார். ’இது ஒரு சாதாரணமான பிரச்னை. இதைப் பத்தி நீ இவ்ளோ தூரம் கவலைப்படறது ரொம்பத் தப்பு’ என்றார். ’நான் சொல்றபடி செய். எல்லாப் பிரச்னையும் தானாத் தீர்ந்துடும்.’
அடுத்த நாள். அந்த ஓவியன் மறுபடி ஊர் மக்களை அழைத்தான். தன்னுடைய அதே பழைய ஓவியத்தை அவர்களுக்குக் காட்டினான். ’நண்பர்களே, நீங்கள் சொன்னபடி இந்த ஓவியத்தில் மாற்றங்கள் செய்துவிட்டேன். எப்படி இருக்கிறது?’
உடனே மக்கள் சளசளவென்று பேச ஆரம்பித்தார்கள். ’கொஞ்சம் பொறுங்க’ என்றான் இவன். ’என்னோட ஓவியம் மிகச் சிறப்பா இருக்கணும்ங்கறதில நீங்க காட்டற அக்கறை எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா நீங்க சொல்றதையெல்லாம் புரிஞ்சுகிட்டு ஓவியத்தை மாத்தி அமைக்கற திறமை எனக்கு இல்லை!’
அதனால், இந்த ஓவியத்தை எப்படியெல்லாம் மெருகேத்தனும்ன்னு நீங்க நினைக்கறேங்களோ, அதையெல்லாம் நீங்களே முன்வந்து செய்யலாம். தூரிகைகள், வண்ணங்கள் இதோ இருக்கு!’
அடுத்த சில நிமிடங்கள் அங்கே யாரும் வாய் திறக்கவில்லை. பின்னர் எல்லோரும் ஒரே நேரத்தில் அந்த ஓவியத்தைப் பாராட்டிப் பேச ஆரம்பித்தார்கள். ‘இதில் குறை சொல்ல எதுவுமே இல்லை. மிக உன்னதமான படைப்பு இது!’
February 22, 2013
Comments
Post a Comment