Skip to main content

நெருடிய நெருஞ்சி – 03



"எதற்கும் பயப்பிடாமல் துணிவாய் வாங்கோ நான் இருக்கிறன்".

எனக்கோ கைகால் வேர்த்தது. பார்தீபனுக்குப் பின் மாலையுடன் செல்லும் வடிவேலு போல மனைவியைப் பின்தொடர்ந்தேன் குடிவரவுப் பகுதியில் நாங்கள் நின்றோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னால் நின்றேன். எங்கள் முறை வந்தது. மனைவி கடவுச்சீட்டை நீட்டினா. மேலும் கீழும் பார்த்துவிட்டு வருகைக்கு முத்திரையை அடித்துக் கொடுத்தார் அந்த அதிகாரி. எனது முறை எனது கடவுச்சீட்டை நீட்டினேன். காலைவணக்கம் சொன்னார், பதிலுக்கு நானும் சொல்லி வைத்தேன். வடிவாகப் பார்த்துவிட்டு,

"முதன் முறையாக இலங்கை வருகின்றீர்களா"?

"ஆம்".

"இலங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களை வரவேற்பதில் மகிழ்சி அடைகின்றோம்".

என்னை என்னால் நம்பமுடியவில்லை. நான் காணுவது கனவா இதன்பின்னால் ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?. ஒரு புன்னகையை அவரிற்கு பொதுவாக வளங்கினேன். வருகையைப் பதிந்து புன்னகையுடன் எனது கடவுச்சீட்டைத் திருப்பித் தந்தார் அந்த அதிகாரி. இனித்தானே அடுத்த கண்டம், மனைவி சொல்படி அவாவைப் பின்தொடர்ந்தேன்.

"நான் எதிர்பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை, இந்தமுறை ஒருத்தரையும் காணேல அதிசயமாய் கிடக்கு"

மனைவி சிரிப்புடன் என்னுடன் சேர்ந்து நடந்தா.

"என்ன காணேல"?

"குற்றப்புலனாய்வுத்துறையும் தலையாட்டியும் தான்". "என்னெண்டு உமக்குத் தெரியும்"?

"அது ரெக்னிக் உங்களுக்குத் தெரியாது".

மனைவி தன்னுடைய பதவியைக் காட்டத் தொடங்கி விட்டா. அந்தக் காலை வேளை எங்களைச் சுமந்து பம்பலப்பிட்டி நோக்கி விரைந்தது ரக்சி.

000000000000000000000

கொழும்பு நிறையவே மாறியிருந்தது. ஏர்ரெல் விளம்பரத் தட்டிகளும், போரின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் விளம்பரத் தட்டிகளும் அதில் மகிந்தரின் ட்றகுல்லாச் சிரிப்பும் மனதைப் பிசைந்தன. ஏதும் அறியா அப்பாவிகளில் தூசி விளாது போரை எதிர்கொண்ட நாங்கள் எங்கே? இந்த ஐந்தறிவு மகிந்தா எங்கே? 25க்கும் அதிகமான கூட்டாளிகளுன் சேர்ந்து பத்துடன் பதினொன்றாக இருந்த மகிந்தா குலைப்பது தான் கலிகாலமோ? ரக்சி களனிப் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டருந்தது. களனி அமதியாக ஓடிக் கொண்டிருந்தது. உன்னில் தானே ஜேவிபி இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் மிதந்தார்கள். நாற்காலி இனபேதம் பார்பதில்லையோ? எல்லோரும் தானே இந்த உழுத்த நாட்டின் தலைவிதியை மாற்ற போராடினோம். ரோகண விஜயவேரவின் காலத்துடன் ஜேவிபி எலும்புத்துண்டுகளுக்குத் தாளம் போட நாங்கள் தானே முழுமூச்சாக நின்றோம். ஏன் எங்கள் நியாயத்தைபுரிகின்றார்கள் இல்லை?

ரக்சி மனைவியின் நண்பி வீட்டின் முன்பு நின்றது. நண்பிகளின் கலகலப்பான உரையாடல்களில் மனம் ஒட்டாது தனிமையை நாடியது. சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டு பல்கனிக்கு வந்தேன். காலை வேளை இளஞ் சூரியன் சுட்டது. எதிரே இந்து சமுத்திரம் அமைதியாக விரிந்து கிடந்தது. தேமாப்பூவும் வண்ணக் குரோட்டன்களும் அலரிப்பூக்களும், துள்ளித் திரிந்த அணில் பிள்ளைகளும் மனதை வருடின. மனைவியின் நண்பி கோப்பி சுடச்சுடக் கொண்டுவந்து தந்தா. கோப்பியைக் குடித்தவாறே சிகரட்டைப் பற்றவைத்து புகையை ஆழ இழுத்தேன். பலர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது தெளிவாகத் தெரிந்தது. கடலில் தூரத்தே சரக்குக் கப்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கரையில் கால்வாசி பச்சை நிறமாக இருந்தது. இதேபோல ஒரு காலையில் தானே கடல் தாண்டவம் ஆடியது. எவ்வளவு இளப்புகள்? அதிலும் கிழக்கில் மனிதத்தைத் தானே காட்டினோம்? மனிதம் இவர்களுக்குப் புரியாதோ? சிங்க வம்சத்திடம் மனிதத்தை எதிர்பார்த்தது எங்கள் பிளையோ?

வீதியில் பெண்கள் கப்பாயம் கட்டி அலவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். வெசாக் பண்டிகையின் வெளிச்சக் கூடுகள் வரிசை கட்டி நின்றன. எனக்கு பிரான்ஸில் அரபுக்களின் நிலைப்பாடும் சார்க்கோசியின் நடவடிக்கைகளும் நினைவுக்கு வந்தன. இவைகள் மற்றயவர்களின் மனதைப் புண்படுத்துமே ஒழிய வளப்படுத்தாது.

இரவு 6 மணியாகியது மனைவி யாழ்பாணத்திற்கு போக சொகுசு பஸ்சில் பதிவு செய்து வைத்திருந்தா. நாங்கள் யாழ்ப்பணத்தை நோக்கி புறப்பட தயாரானோம்.






தொடரும்

June 01, 2011

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...