புத்தாடை கட்டி ஊரில்
புதுப்பானை வைத்து
கோலம் போட்டு
மாவிலை கட்டி
திருச்சி வானொலியை திருகிவிட்டு
கவியரங்கம் கேட்டு
அப்பா அம்மா அம்மாச்சி
சின்னன் பொன்னன் ஆளடுக்கு
புடை சூழப்
பொங்கலோ பொங்கல் என்று
பொங்கிய காலமும் உண்டு......
இடையில்,
கதிரவனுடன் என்வானில்
புதிதாய் எட்டிபார்த்த
இயந்திரப்பறைவைகள் பறந்து
வட்டமிட்டு என் பொங்கலை
வேவு பார்த்து எச்சங்களாய்
உலோகக் குண்டுகளை
உமிழ்ந்து விட
பொங்கலோ பொங்கல்
என்றிருந்த என்வாழ்வும்
மங்கலாகிப் போனதும் உண்டு......
இன்று ,
விடிந்தும் விடியாத
பனிப் புகாரில் என்
நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட
வேலைக்குப் போகும் அவதியில்
என் உதடு பொங்கலோ பொங்கல் என்று
இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்
January 12, 2013
Comments
Post a Comment