கொண்டக்ரர் எங்களுக்குக் கிட்ட வந்தார்.
" தம்பி எங்கை போகவேணும்?"
" கோப்பாய் தபால்பெட்டியடிக்கு ரிக்கற் குடுங்கோ". என்னை வினோதமாகப் பார்த்தார் கொண்டக்ரர். "தபால்பெட்டியடியோ?"
" ஓம் பூதர்மடம் கழியவாற நிறுத்தம்".
"அங்கை தபால் பெட்டி ஒண்டும் இல்லையே",
அவரின் வாயில் நமுட்டுச் சிரிப்புத் தெரிந்தது.
"இல்லையண்ணை அதுக்குப்பேர் தபால்பெட்டியடி".
பஸ் ஒரு உறுமலுடன் பஸ்ராண்ட்டில் இருந்து புறப்பட்டது. பஸ்ராண்டிலிருந்து முதலாம் கட்டை சந்திவரை பஸ் மெதுவாகவே சென்றது. வீதி அவ்வளவு சின்னதாக இருந்தது. இரண்டுபக்கமும் காயப்பட்ட சிகிச்சை அளிக்காத கட்டிடங்களே காணப்பட்டன. ஒரு சோதனை சாவடி வந்தது. பஸ் வழக்கம்போல வேகத்தைக் குறைத்தது. ஒரு சிப்பாய் இரவுப் பணி முடிந்து ஏறிக்கொண்டான். எனது மனமோ இதில் லயிக்கவில்லை கோப்பாயைச் சுற்றியே வட்டமிட்டது. எனது மன ஓட்டத்திற்கு பஸ் ஓட்டம் குறைவாகவே இருந்தது. முதலாம் கட்டைச் சந்தி தாண்டியதும் பஸ் தனது வேகத்தைக் கூட்டியது. பயணிகளை ஏற்ற பஸ் தன்னை கண்ட இடத்தில் எல்லாம் நிறுத்தி ஏற்றிக்கொண்டது. பயணிகளைக் கவர இப்பட ஒரு திட்டம் என்று கொண்டக்ரர் சொன்னார். எனக்கு எரிச்சலாக வந்தது. ஒழுங்கு முறைக்கும் இவர்களுக்கும் வெகுதூரமோ? எனக்கு இதனால் பதட்டமாக இருந்தது. மனைவி தங்கையின் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தா. அவாக்கு இந்தப் பயணம் பழகியது. எனக்குத் தானே எல்லாம் புதிதாக இருந்தன. பஸ் மந்திகைச் சந்தியையும் தாண்டி வேகமெடுத்தது. வீதியின் இரண்டு பக்கமும் ஏழ்மையும் பணமும் மாறிமாறி வந்தன. எமது இரக்ககுணத்தை எப்படி சொந்த ரத்தங்கள் வளப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை, இரண்டு பக்கமும் வந்த ஒரு சில வீடுகள் கட்டியம் கூறின. எனக்கு மனம் கனத்தது. இதில் யார் பேயர்கள்? சொப்பிங் பையுடன் புலம் பெயர்ந்த நாங்களா? அல்லது எமது மனவலிகளை உணர்ந்தும் உணராமல் எம்முடன் கூடப்பிறந்த உறவுகளா? இதிலேயே இரண்டு பகுதிக்குமான இடைவெளி ஆரம்பமாகிவிட்டதா? எனது மனம்பெரிய போராட்டத்தையே நடத்தியது. இந்தப் பாழாய்ப் போன பணம் எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிடுமா? குடிமனைகள் குறைந்து தூரத்தே வல்லைவெளி வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. பஸ் ட்றைவர் ஒருகையை ஸ்ரெயறிங்கிலும் மற்றக் கையை கியறிலுமாக பஸ்சை லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். பஸ் இப்போழுது பயணிகளால் நிரம்பியிருந்தது. வல்லைவெளி அண்மித்து விட்டிருந்தது சேற்று மணமும் உவர் காற்றும் மூக்கில் அடித்தன . காற்றை ஆழமாக உள்ளே இழுத்து விட்டேன், எனது தாய் மண்ணின் காற்று அல்லவா? வீதியின் இரண்டுபக்கமும் திருத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன. பல சாதனைகளையும் வெற்றிகளையும் கண்ட வெளி. எங்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த வெளி. இன்று, அன்னியன் பிடியில் பொலிவிழந்து நின்ற காட்சி என்னை விசும்பச்செய்து. முகத்தை மறைக்க சூரியக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டேன். தூரத்தே வெண்மையாக உப்புப் படிந்தும், சில இடங்களில் இறால் வளர்க்கவும், தடுப்புகள் கட்டியிருந்தார்கள். வீதியின் ஒருபுறம் செங்கால் நாரைகள் ஒற்ரைக்காலில் உறுமீன் வரும் வரைக்கும் மோனத்தவம் செய்து கொண்டிருந்தன. எங்கள் நிலமையும் இப்படித்தானோ??????? பஸ்சின் இரைச்சலால் அவைகள் தவங்கலைந்து வானில் எம்பிப் பாய்ந்தன. காலை வேளை இவைகளைப் பார்த்தது மனம் மீண்டும் பழைய உற்சாக நிலைக்கு வந்தது. பஸ் இப்பொழுது நெல்லியடி சென்றல் கல்லூரியை தாண்டி வேகமெடுத்தது. சிங்கத்தின் நாக்கை இழுத்துப்போட்டு அறுத்த இடமல்லவா இந்த இடம். சிங்கம் மட்டுமா முழிபிதுங்கியது? அதன் அடிபொடிகளுக்கும் தானே வயிற்றால் போனது. எமது போர்மரபினை மாற்றியமைத்த இடமல்லவா இந்த இடம். மில்லரின் சிலை உடைத்தெறியப்பட்டிருந்தது. உங்களால் மில்லரின் சிலையை மட்டும் தான் உடைக்கமுடியும் . எங்கள் மனதில் இருந்த அவனின் சிலையை உடைக்கமுடிந்ததா? பஸ் அச்சுவேலியையும் கடந்து சிறிய விவசாயக் கிராமங்களினூடாக வேகமெடுத்தது. நேரம் 8 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் செம்மையான மண்ணை , யாழின் மன்னர்களான தோட்டக்காறர்கள் பச்சையாக்கிக் கொண்டிருந்தார்கள். புகையிலையும், மிளகாயும், வாழையும், போட்டிபோட்டுக் கொண்டு மதாளித்து நின்றன. அவைக்குத் தெளித்த மலத்தியனின் நெடி மூக்கைத் தாக்கியது. சில இடங்களில் மாடுகளையும் ஆடுகளையும் பட்டி கட்டி இருந்தார்கள். இன்றைய காலத்திலும் இயற்கை முறையை இந்த மைந்தர்கள் விடவில்லை. பஸ் சிறுப்பிட்டி புத்தூரையும் கடந்து முன்னேறியது. இரண்டு பக்கமும் வாழைத்தோட்டங்கள் நிரைகட்டி நின்றன. எத்தனை தடைகள் இளப்புகள் வந்தாலும் எமது உழைப்பை உங்களால் தடைசெய்யமுடியாது என்று சொல்லாமல் சொல்லி நின்றன சிறுதோட்டப் பயிர்கள். பஸ் நீர்வேலிக்கந்தசுவாமி கோவிலை நெருங்கியது. எனக்குப் பதட்டமும் கூடவே நெருக்கியது. இன்னும் ஓரிரு நிறுத்தங்கள் கழிய வீடு வந்துவிடும், அழுகையும் வியர்வையும் முகத்தில் போட்டி போட்டன. கைத்துவாயால் முகத்தை அழுத்தத் துடைத்தேன். வியர்வை துடைத்தே துவாய் ஊத்தையாக இருந்தது. அதைப்பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது. பஸ்சின் இடதுபக்கத்தால் கோப்பாய் சம்புப்புல் தரவை ஓடிவந்து என்னை நலமா என்று கேட்டது. சூரியக்கண்ணாடி எனது முகமாற்றத்தை வெளியில் காட்டவில்லை. நேரம் 8.15 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ் வில்லுமதவடியை நெருங்கியது. இந்த இடம் என்னால் மறக்கமுடியாதது, சிறுவயதில் 7ஆம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்தபொழுது நடந்த முதல் அரசியல் படுகொலை இங்கேதான் ஈனப்பிறவிகளால் அரங்கேறியது. 77 பொதுத்தேர்தல் நடந்த காலகட்டமது இளைஞர்பேரவையும், தமிழர்விடுதலைக்கூட்டணியும் தேன்னிலவு கொண்டாடிய நேரம். கோப்பாய் தொகுதியில் போட்டியிட்ட கதிரவேற்பிள்ளைக்கு, இறுதிப் பிரச்சாரங்களை தேர்தலுக்கு முதல் நாள் முடித்து விட்டு வந்த பரமேஸ்வரனை இலங்கையின் பொலிஸ் நாய்கள் கைது செய்து இதே இடத்தில் சுட்டு வீசிஎறிந்தது. இதை இன்ஸ்பெக்டர் பத்மநாதனே முன்நின்று நடத்தினார். பின்பு அவர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் படுகொலைசெய்யப்பட்டார். அடுத்தநாள் காலை மரண ஓலமாக கோப்பாய்க்கு விடியல் விடிந்தது. அந்தநேரத்தில் ஒரு கொலை என்பது பரபரப்புச் சரித்திரம். எனது அறியா வயதிலும் வயல்வெளிக்கால், ஓடிவந்து இதேபோல் ஒரு காலைப்பொழுதில் அவரது உடலத்தைப் பார்த்தேன். அவர் விழுந்து கடந்த நிலை இப்போதும் கண்ணுக்குள் நிழலாடியது. எனது முகம் பலவித உணர்சிக் கலவையில் மூழ்கிக் காணப்பட்டது. பஸ் தபால்பெட்டியடியில் எங்களை இறக்கியது. கொண்டுவந்த பயணப் பொதிகளை சரிபார்த்தவாறே ஒழுங்கை வாசலில் நின்றோம்.
தொடரும்
Comments
Post a Comment