Skip to main content

கறுப்பி .






அமாவாசையின் கரிய நிறம் அந்தக் கிராமத்தில் அட்டைக் கரியாக மண்டியிருந்தது . அவ்வப்பொழுது வவ்வால்களின் பட பட சிறகடிப்பும் , கூவைகளின் புறுபுறுப்பும் , சில்வண்டுகளின் சில்லெடுப்பும் , ஒரு சில கட்டாக்காலி நாய்களின் ஊளையும் அந்தக் கிராமத்தின் அமைதிக்கு உலை வைத்துக்கொண்டிருந்தன . கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கந்தப்புவின் மனதுக்கு இந்த முன்னெடுப்புகள் எதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தியது . கந்தப்பு மெதுவாகக் கயிற்றுக் கட்டிலில் இருந்து எழுந்து சென்று தனது கொட்டிலின் மூலையில் இருந்த சாமி படத்தின் முன்னால் இருந்த திருநீற்றுக் குடுவையினுள் கையை விட்டு நெற்றி நிறைய திருநீற்றை அள்ளிப் பூசி வாயிலும் சிறிது போட்டுக்கொண்டு மீண்டும் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டார் . அமைதியாக இருந்த அவர் வாழ்வில் இப்பொழுதுதான் புயல் ஒன்று வீசி ஓய்ந்திருந்தது. அந்தக் கிராமத்தின் இறுதியில் இருந்த கந்தப்புவின் கொட்டிலில் இருந்து தூரத்தே தெரிந்த கைதடியில் அங்காங்கே ஒளிப் பொட்டுகள் மின்னி முழித்தது அந்த அமாவாசை இருட்டில் நன்றாகவே கந்தப்புவுக்கு தெரிந்தது . கடந்த மூன்று வருடங்ளுக்கு முன்பு நடந்த செல்லடியில் மனைவி பறுவதத்தைப் பறி கொடுத்த கந்தப்புவுக்கு சொல்லிக்கொள்ள பெரிதாக உறவுகள் ஒன்றும் இல்லை. ஊரின் கடைசியில் இருந்த கந்தப்புவுக்கு அந்தக் கொட்டிலும் அருகே இருந்த பிள்ளையார் கோவிலும் போதுமானதாகவே இருந்தது . கந்தப்பு வாழ்க்கையில் பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று விட்டேந்தியாக இருந்த கந்தப்புவின் வாழ்கையில் சீலன் கறுப்பியின் வருகை , வாரிசுகளே இல்லாத கந்தப்புவுக்கு பாலைவனத்துப் பொட்டல் வெளியில் தோன்றிய ஈச்சை மரமும் அதனுடன் இணைந்த கிணறும் போல ஓர் புது வசந்ததையே கொண்டு வந்தது . ஒரு நாள் காலைப்பொழுதில் கந்தப்பு தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுக்கு களை புடுங்கி கொண்டிருந்த பொழுது சீலன் கறுப்பியினது அறிமுகம் அவருக்கு கிடைத்தது. தாங்கள் விசுவமடுவில் இருந்து வருவதாகவும் அண்மையில்தான் கலியாணம் செய்தவர்கள் என்றும் தங்களுக்கு இருப்பதற்கு இடம் தரமுடியுமா என்ற கோரிக்கையில் , கந்தப்புவுக்கும் அவர்களுக்குமான உறவு துளிர்விடத் தொடங்கியது . கறுப்பியின் பெயர்தான் கறுப்பியே தவிர பிரம்மன் அவளில் எதுவித கஞ்சத்தனத்தையும் காட்டவில்லை . கனங்கரேலென்ற முழங்காலைத் தொடும் நீண்ட தலை முடியும் , வட்ட வடிவ முகத்தில் செதுக்கி எடுத்த அழவான மூக்கும் , வில்லாக வளைந்த கண் இமைகளும் , தொய்வே இல்லாத எடுப்பான மார்பகங்களும் , அகன்ற பின்புறமும் , திரட்சியான கெண்டைகால்களும் கறுப்பியை பேரழகியாகவே காட்டின .சீலன் அவளைவிட சிறிது நிறம் குறைந்தாலும் வன்னியின் கடுமையான உடல் உழைப்பு அவனை ஓர் குத்துச்சண்டை வீரனைப் போலவே வைத்திருந்திருந்தது . பறுவதத்தை தொலைத்த கந்தப்புவின் வாழ்வில் மீண்டும் வசந்தத்தின் மொக்கு மெதுமெதுவாக அரும்பத் தொடங்கியது. சீலன் அவரின் வீட்டுக்கு முதுகெலும்பாகவும் கறுப்பி வீட்டைத் தாங்குபவளாகவும் இருந்தாள். பொதுவாகவே நல்ல உள்ளங்களின் வாழ்வு காலம் என்ற கடவுளுக்குப் பிடிப்பதில்லைப் போலும். அது கந்தப்புவின் வாழ்விலும் விளையாடத் தொடங்கியது.

0000000000000000000000

இலங்கை என்ற மாம்பழத் தீவில் காலத்தின் குரூரம் சிறிது சிறிதாக முளைவிடத் தொடங்கிய காலகட்டம் அது . அது பௌத்த இனவாதம் என்ற பேயை சிங்களத்தில் ஏவி விட்டு தமிழர் வாழ்வில் மெதுமெதுவாக ஒரு ஊழித்தாண்டவத்துக்கான ஒத்திகையை ஆரம்பிபதற்காக தனது கால்களை அகலப் பரத்தியது. பௌத்த இனவாதப் பேயை ஓட்ட பல பூசாரிகள் வந்து போனார்கள். சிங்களத்தின் அரசியல், இனவாதப் பேயால் உண்டு கொழுத்தது. தமிழர்களும் இந்தப் பேயை ஓட்ட பல ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் இருந்தார்கள். தமிழர்களின் முன்னெடுப்புகளைப் பார்த்து அனைத்து நாடுகளுமே பீதி அடையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஒரு தீவினுள் இரண்டு நாடுகள் என்ற நிலையில் தமிழர் முன்னெடுப்புகள் இருந்தன.பௌத்த இனவாதப் பேயும் ஓவ்வரு சிங்கள இரத்தத்திலும் அணு அணுவாக ஊறி மூர்க்கமாக தமிழர் மேல் பாய்ந்தது. போதாக்குறைக்கு தன்னையொத்த கூட்டாளிப் பேய்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டது பௌத்த இனவாதப் பேய் . ஒரு சிறு குழந்தையின் பாலுக்காக அழுத அழுகுரலை , காலம் என்கின்ற கடவுள் மனித உருவில் வந்து போக்கியதாக தமிழர் வாழ்வில் வரலாறு என்கின்ற வடிவில் பதிந்தது . ஆனால் , அதே காலம் என்கின்ற கடவுள் மிலேனியத்தில் தமிழர்கள் பெருங்குரலெடுத்து கதறி அழுத பொழுது அவர்களை திரும்பியும் பார்க்கவில்லை என்கின்ற காலப் பிறழ்வும் தமிழர் வாழ்வில் நடந்து தான் இருந்தது. ஒரு நாள் அதிகாலை கந்தப்புவின் அழகிய கிராமம் இந்தப் பேய்களால் சிதைக்கப்படபோவது தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது . ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள் தங்கள் எஜமானர்களைக் காப்பதற்காக அரை உறக்கத்தில்தான் எப்பொழுதும் இருப்பவை . அதில் நாய்களின் பங்கு அளப்பரியது. தூரத்தே கைதடிப் பக்கமாகவும் செம்மணிப் பக்கவாகவும் கந்தப்புவின் கிராமம் நோக்கி நகரத் தொடங்கிய பேய்களின் அசுமாத்தத்தினை , இந்த நாய்கள் தங்கள் நுண்ணிய புலன் உணர்வால் உணர்ந்து “குரைப்பு” என்கின்ற எச்சரிக்கை மணி மூலம் அந்தக் கிராம மக்களை தட்டி எழுப்பிய பொழுது பேய்கள் அந்தக் கிராமத்தை நெருங்கியிருந்தன. எச்சரிக்கை மணி அடித்த நாய்களின் குரல்கள் துப்பாக்கிக் குண்டுகளின் கைங்கரியத்தால் பரலோக சமாதி அடைந்து கொண்டிருந்தன. தூரத்தில் இருந்தே எண்ணையின் துர்வாசத்தை அந்தக் கிராமத்து மக்கள் உணரத் தொடக்கி விட்டனர். அவர்கள் கண் மூடி முழிப்பதற்குள் தடதடத்த சப்பாத்துக் கால்கள் அந்த கிராமத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தன. எங்கும் தாடிகளும் தலைப்பாகைகளுமே நிரம்பி இருந்தன. அந்தக் கிராமத்தின் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக அனேகமாக எல்லோருமே முழங்காலில் இருத்தி வைக்கப்படிருந்தனர். தனது தோட்டத்தில் மிளகாய் கண்டுகளுக்கு தண்ணி மாறிக் கொண்டிருந்த கந்தப்புவும் நிறுத்தப்பட்டிருந்தார். ஒருபகுதி இவர்களை மேய்த்துக்கொண்டிருக்க மறுபகுதியோ தனது வேட்டையை ஆரம்பித்தது. பருத்தித்துறை வீதியில் இருந்து கேணியடிப்பக்கமாக நகர்ந்த பேய்கள் ,ஒவ்வரு வீட்டின் வேலிகள் பொட்டுகள் என்று பிரித்து வெளியாக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. அந்தப் பேய்களின் அந்த வேலி பிரிப்பிலும் பொட்டுப்பிரிப்பிலும் தங்கள் வாகனத் தொடரணியின் கண்ணிவெடித் தாக்குதலின் வெறியே மேலோங்கி இருந்தது . அவர்கள் தேடிவந்தவர்கள் அந்த இடத்தில் இல்லாததும் அவர்கள் வெறியை மேலும் அதிகப்படுத்தியது. அவைகள் கறுப்பியின் கொட்டிலை நெருங்கிய பொழுது சீலன் கொட்டிலின் பின்பக்கமாக தனது ஆடுகளுக்கு இப்பிலிப்பில் குழைகளைப் பறித்துக் கொண்டிருந்தான். கறுப்பியோ தோட்டத்துக்குப் போன கந்தப்புவுக்கும் ,சீலனுக்கும் சமைத்துக்கொண்டிருந்தாள். பின்புறமாக நுழைந்து கொண்டவர்களுக்கு சீலனே முதலில் கண்ணில் பட்டான். சீலனின் உடல்வாகு தங்கள் தொடரணியை தகர்த்த ஆட்களில் ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளறி விட, சீலனை அருகே இருந்த தென்னை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கத் தொடங்கின அந்தப் பேய்கள். சீலனது அலறலில் கொட்டிலுக்குள் இருந்து கலவரப்பட்டு ஓடிவந்த கறுப்பியைக் கண்ட அந்தப் பேய்கள் கள்ளுக் குடித்த குரங்குகளாயின. இருவரை சீலனுக்கு காவல் காக்க விட்டு விட்டு கறுப்பியை சுற்றிவளைத்தன அந்தப் பேய்கள். அங்கே தனது சொந்த மண்ணில் அன்னியப் பேய்களினால் கறுப்பியின் கற்பு மூர்க்கத்தனமாக கரைந்துகொண்டிருந்தது. கறுப்பி …………..என்று குளறிக்கொண்டிருந்த சீலனது தொண்டையை நோக்கி ஒரு குண்டு சீறித் துளைத்தது. ஆள் மாறி ஆள் மாறிக் கறுப்பி மீது படர்ந்த இறுதிப் பேய் ஒன்று, அவளது பிறப்புறுபினுள் தன் கையில் இருந்த கிறனைட்டின் கிளிப்பை விலத்திக் கிறனைட்டை நுழைத்து வீட்டு ஓடியது. சீலன் ……… என்ற அலறலுடன் கறுப்பி சிதறினாள் . அதன் பின்பு சரியாக இரண்டு மாதங்கள் கழித்து அந்தக் கிராமத்து சம்பு புல்லுத் தரவைப் பக்கம் நடுநிசியில் கறுப்பீ…………… என்ற சீலனின் அலறலும் , சீலன்…………. சீலன்…………… என்ற கறுப்பியின் தீனமான அலறலும் அவ்வப்பொழுது நடு நிசியை குலைத்து, கந்தப்புவையும் அந்தக் கிராம மக்களினது நித்திரைக்கு வேட்டு வைத்துக்கொண்டிருந்தது.





March 23, 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...