Skip to main content

நெருடிய நெருஞ்சி-22






கடைவாசலில் கடல் காத்துத் தென்றலாக வீசியது , நடந்து வந்த வியர்வைக்கு இதமாக இருந்தது . ஆவிபறக்கும் தேத்தண்ணியையும்,றோல்ஸ்சையும் உள்ளே தள்ளினோம் .வெளியே சிறிது தூரத்தில் பஸ்ராண்ட் தனது பரபரப்புகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டிருந்தது.குடிமகன்கள் தங்கள்பாட்டிற்கு தமிழை வளர்த்துக் கொண்டு கடைவீதியால் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஒருசிலரில் இன்றைய சூழ்நிலையின் மனவெக்கை போதையினூடாக வாயால் வெளிவந்துகொண்டிருந்தன. அவர்களைப் பார்கும்பொழுது பாவமாக இருந்தாலும் , கிடைக்கின்ற சிறிய வருமானத்தை இப்பிடி அனியாயமாக்கின்றார்களே என்று கோபம் கோபமாக வந்தது . ஆனால் எனது மனமோ என்னிடம் சண்டை பிடித்தது .

" நீ என்ன பெரிய திறமா ? நீயும் கடையில வந்து ரீயும் றோல்ஸ்சும் சாப்பிடுறாய்தானே " என்றது.

நானும் அதனுடன் சமரசம் செய்துகொண்டிருந்தேன் . எனது சிந்தனையை கடைப் பெடியனின் குரல் கலைத்தது.

"என்ன அண்ணை யோசினை? எப்ப போறியள் "?

நான் சிரித்தேன் .

"உங்களிட்டை ஒண்டு கேக்கவேணும் எண்டு இருந்தனான் ".

"சொல்லும்".

"இல்லையண்ணை வெளீல வந்தால் நல்லாய் உளைக்கலாமே"?

"ஏன் இப்ப உமக்கு என்ன பிரச்சனை? கடை நல்லாத்தானே போகுது"?

"போகுதுதான் அண்ணை காசு மிச்சம் பிடிக்கேலாமல் இருக்கு".

"தம்பி சொன்னால் கோபிக்கக் கூடாது இருக்கிறதை விட்டுட்டு இல்லாததிற்கு பறக்கக் கூடாது . இங்கை உமக்கு வருமானம் கொஞ்சமாய் இருந்தாலும் , நீர் நல்ல சந்தோசமாய் உம்மடை ஆக்களோட இருக்கிறீர். இதுகளைக் கெடுக்காதையும் , இந்தக் கடையை இன்னம் கொஞ்சம் திருத்தும்,மாமாவோடையும் கதையும் ,நான் முடிஞ்ச உதவியை செய்யிறன் ".

"அண்ணை என்னம் ஒரு ரீயும், றோல்ஸ் உம் எடுங்கோ".

"நான் காசு தருவன் ஓசி தீன் எனக்கு வேண்டாம்".

"சரி அண்ணை".

இடையில் என்னை வெட்டிக் கொண்டு போன மச்சான் கையில் கிங்பிக்ஷர் உடன் வந்தார் . நாங்கள் காசைக் குடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறினோம். நன்றாக இருட்டி விட்டிருந்தது . அன்று அம்மன் கோயில் திருவிழா கடைசி நாள் ஆனபடியால் அம்மன் றோட்டால் வீதிவலம் வந்து கொண்டிருந்தா. 3 கூட்டம் மேளச்சமா நடந்து கொண்டிருந்தது . நாதஸ்வரம் வாசிப்பவர்கள் குறையொன்றும் இல்லைக் கண்ணாவை உருக்கிக் கொண்டிருந்தார்கள் . நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மேளச்சமாவைப் பார்த்ததால் சுவாரசியமாக நின்று பார்த்தேன் . சிறு வயதில் பத்மநாதனின் நாதஸ்வரக்கச்சேரி முன்வரிசையில் சப்பாணிகட்டிக்கொண்டு இருந்து பாத்தது ஞாபகம் வந்தது . இரவு குறூப் பாட்டுக்காறர் வரும் வரைக்கும் இந்தக் கச்சேரிகள் தான் நடக்கும் .ஆனால் எனக்கு இதுகள்தான் விருப்பம் . குறூப் மேடை ஏற முதல் மைக் ரெஸ்ரிங் எண்டு ஒருமணித்தியாலத்துக்குக் கிட்ட அலப்பரை பண்ணுவினம் . இதுக்குள்ளை ஊரில கொஞ்சம் பெரியாக்கள் எண்ட சொல்லுறவை மேடையில போய் வயர் எடுத்துக் குடுப்பினம் . மைக்கை நேராய் பிடிச்சு வைப்பினம் . நோக்கம் என்னவெண்டால் ஆரும் பொம்பிளையள் தங்களைப் பாக்கினமோ எண்டதுதான். இந்த அலப்பலுகளில்லை எங்களுக்கு நித்திரை வந்துவிடும் . இருந்தால்போல அமுதன்அண்ணாமலை  "முருகனைக் காண " எண்டு தொடங்க நாங்கள் நித்திரை முறிஞ்சு எழும்புவம் . அவைகள் எனக்கு தூரத்தே தொலைந்த கனாக்காலமாகவே போய்விட்டன . நாங்கள் சனத்துக்குள்ளாலை முண்டியடித்துக் கொண்டு அம்மனுக்கு முன்னால் போனோம் . அங்கே பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினார்கள் , பார்க்க சுவாரசியமாக இருந்தது . மரணத்தின் எல்லையை ருசித்து வாழ்ந்திருந்தாலும் , கிராமியக்கலைகளை ஊக்கிவிப்பது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விடயம் . என்றுமில்லாதவாறு நான் அம்மனைக் கையெடுத்துக் கும்பிட்டேன் . மச்சான் நமுட்டுச்சிரிப்புச் சிரித்தார் . அம்மன் கல்லூரிவீதியில் திரும்பியதும் , நாங்கள் ஒடக்கரை ஒழுங்கையால் நடையைக் கட்டினோம் . நாங்கள் வீட்டை அடைந்தபொழுது மாமா வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது . நான் யாராய் இருக்கும் என்று அங்கு நேரடியாகப்போனேன் . அங்கே அன்று வந்த மாமி மாமாவுடன் வெத்திலை போட்டுக்கொண்டு கதைத்துக் கொண்டிருந்தா . என்னைக் கண்டதும் ,

"வாங்கோ தம்பி உங்களைப் பாப்பம் எண்டு ஒரு எட்டு எட்டிப்பாத்தன் ".

"சாப்பிட்டியளோ மாமி ? அதெல்லாம் சாப்பிடலாம் , இந்தாங்கோ தம்பி நீங்கள் கேட்ட மூடுபெட்டி கொட்டப்பெட்டி ".

நான் ஆச்சரியத்தடன் அவற்ரைப் பாத்தேன். மிகவும் கலைநயத்துடன் பின்னியிருந்தா மாமி.எனக்கு நெகிழ்சியாக இருந்தது .நான் போக்கடி போக்காகச் சொன்னதை , சிரத்தையுடன் பின்னி எனக்குத் தந்த அந்த மாமி உண்மையிலேயே என்மனதில் உயர்ந்து நின்றா . அன்ரி எல்லோருக்கும் கல்லு றொட்டியும் இடிச்ச சம்பலும் செய்திருந்தா . நாங்கள் எல்லோரும் முற்ரத்தில் இருந்து நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டோம். மறுநாள் காலை வல்லிபுரக் கோயிலுக்குப் போக முடிவு செய்ததால் வெள்ளனப் படுத்து விட்டோம் . நான் வழமைபோல நாலுமணிக்கே எழுந்து விட்டேன் . விடிய 6 மணிக்கு வல்லிபுரக்கோயிலுக்கு பஸ் பிடிக்க நாங்கள் பஸ்ஸ்ராண்டை அடைந்தோம் . பஸ்ரண்டில் அரைமணிக்கொரு தரம் பொற்பதி பஸ் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் என்று சொன்னார்கள். நாங்கள் நேரம் இருந்ததால் அங்கேயே நின்று பஸ்ராண்டை வேடிக்கை பார்த்தோம் . கொழும்பில் இருந்து ஒரு பஸ் இரைச்சலுடன் அங்கே நுளைந்தது . பஸ்ராண்ட் காலை நேரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது . கடல் காத்து மெதுவாக ஈரலிப்புடன் வீசிக்கொண்டிருந்து . தூரத்தே பொற்பதி செல்லும் பஸ் வந்து கொண்டிருந்தது . அன்று ஞாயிற்ருக்கிழமை என்பதனால் வல்லிபுரத்தானுக்குக் கூட்டம் நிறையவே இருந்தது . பஸ்நின்றதும் நாங்கள் ஏறி வசதியான இடத்தில் இருந்து கொண்டோம் . ஒடுங்கிய வீதியால் பஸ் வல்லிபுரக்கோயிலை நோக்கி ஓடியது . நான் சிறு வயதில் பள்ளிக்கூடச் சுற்ருலாவில் வந்ததிற்குப்பின்பு இங்கு வரவல்லை . நீண்டகாலம் பாதுகாப்பு வலயத்திற்குள் வல்லிபுரத்தான் இருந்து இப்பொழுதுதான் அந்த மாயவனும் மக்களைச் சந்திக்கின்றான் . பஸ் குடந்தனை , தும்பளை எல்லாவற்ரையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது பஸ்சினுள் கூட்டம் சேர்ந்திருந்தது அனேகமானோர் கோயிலுக்கே பயணமாகிக் கொண்டிருந்தனர். பஸ் பொட்டல் வெளிகளைத் தாண்டி கோயிலை அண்மித்ததிற்கு அடையாளமாக , தூரத்தே ராஜகோபுரம் நிமிர்ந்து நின்றது. எங்களை வல்லிபுரக் கோயில் முன்றலில் இறக்கிவிட்டு பஸ் அதன் பயணத்தைத் தொடர்ந்தது . நான் கோயிலின் சுற்ராடலை நன்றாக அவதானித்தேன் . அந்த அதிகாலைவேளையில் வல்லிபுரத்தான் அமைதியாக இருந்தான் . தூரத்தே அலையோசை தாலாட்டியது மனதுக்கு இதமாக இருந்தது . நாங்கள் எல்லோரும் செருப்புகளை கடையில் வைத்து விட்டு கேணியில் கால் கழுவப் போனோம் . பின்பு பிள்ளையார் கோயிலுக்குள் நுளைந்து விட்டு, வல்லிபுரத்தானைத் தரிசிக்க ராஜகோபுரத்தினூடாக உள்ளே நுளைந்தோம். உள்வீதியில் முருகதாஸ் அலைபாயுதே கண்ணாவை மெதுவா குரலில் உருக்கினார். கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுப் புதுப்பொலிவுடன் கம்பீரமாக இருந்தது. உள்ளே கோயில் விதிப்படி வெறும் உடம்புடன நின்றது எனக்குச் செரியான வெட்கமாக இருந்தது . நான் முன்பு பார்த்த அதே அமைதியுடன் வல்லிபுரத்தான் அனந்தசயனம் கொண்டு கொண்டிருந்தான் . நாங்கள் உள்வீதி சுத்திவரும் பொழுது பல புராணக்கதைகள் சித்திரங்களாக உயிர்த்துக் கதை பேசின. நான் அவற்ரில் லயித்துக் கொண்டு வந்தேன் . நாங்கள் கும்பிட்டு விட்டு வெளியே வரமுதல் எனது மனைவி எனக்குத் தெரியாமல் கோயில் உண்டியலுக்குள் காசு போடுவதை கண்டும் காணமல் வந்தேன் . கோயிலை விட்டு வெளியில் நடந்தபொழுது கீழே இருந்த குருமண்ணினால் கால்கள் குறுகுறுத்தன . இப்பொழுது நன்றாக நிலம் வெளித்திருந்தது . எங்களுக்கு அருகே ஒரு வயதுபோன முதியவர் இரண்டு கால்களும் இல்லாத நிலையில் என்னைப்பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். அவர் பிச்சைக்காறர்களுக்கு உரிய தோற்ரத்தில் இல்லாவிட்டாலும் , போரின் ரணத்தின் வலி அவரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது . அவரின் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது . ஒரு நிமிடம் எனது இதயம் நின்று ஓடியது . எனது கை தானாகவே பொக்கற்ரைத் தேடியது . எனது கையில் அகப்பட்ட தாள்களை அவரின் கையில் திணித்தேன் . அவரின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை . வல்லிபுரத்தான் என்னைக் கட்டாயம் மன்னிப்பான் என்று எனக்குத் தெரியும் .நான் கனத்த மனதுடன் நடக்கத் தொடங்கியபொழுது , ஒரு ஆச்சி எனது கண்ணில் பட்டா . ஆச்சி ஒரு கையில் அலுமீனியத்தட்டை ஏந்திக்குலுக்கியவாறே , யாருடனோ கைத்தொலைபேசியில் நன்றாக கடலை போட்டுக்கொண்டிருந்தா . நான் அவாவைக் கடந்தபொழுது ,

"தம்பி என்னையும் கவனியுங்கோவன் ".

நான் காதில் விழுத்தாத மாதிரி மனைவியுடன் கதைத்தவாறே நடந்தேன் . என்மனமோ கொதிகலனாகியது . என்ன மனிதர்கள் இவர்கள் . "அறம் என்பது விரும்பி இடுவது அதை வலியுறத்திக்கேட்பது அடாவடித்தனம் " என்று எனது மனம் என்னுடன் தத்துவவிசாரணை செய்தது . நாங்கள் பஸ்சுக்காக காத்திருந்தோம் . எனக்கோ நடந்த நிகழ்சிகள் தலை இடியைத் தந்தன .ஒரு இஞ்சி தேத்தண்ணி அடித்தால் நன்றாக இருக்கும் என்று மனம் உணர்தவே , பக்கத்தில் இருந்த தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணியம் வடையையும் வாங்கிக்கொண்டேன் . வடையும் தேத்தண்ணியும் நன்றாக இருந்தது . பொக்கற்ரில் இருந்து சிகரட் ஒன்றைப் பற்ர வைத்துக்கொண்டேன் . சிகரட் புகையினூடாக எனது கண்ணும் காரணமின்றி முட்டியது . அம்மாவின் பிரிவை மறைக்க வேறுவழிகளை நாடுகின்றேனோ ? ஏன் இப்படி இருக்கின்றேன் ? ஒருவேளை அம்மாவிற்குப் நான் பக்கத்தில் இருந்திருந்தால், அம்மாவின் பிரிவுக்கான புரிதல் கூடதலாக எனக்கு இருந்திருக்குமோ ? அதனால் தானோ தங்கைச்சி என்னைக் கண்டவுடன் குளறி அழுதாளோ ? எனது மனம்பலவாறாக அலைபாய்ந்த பொழுது , பஸ் வந்து நின்றது . நாங்கள் எல்லோரும் ஏறிக்கொண்டோம் . இந்தமுறை பஸ் தனது பாதையை மாற்ரிக்கொண்டு போனது எனக்குத் தெரிந்தது. எங்களது பஸ் ஆனைவிழுந்தான் சந்தியால் திரும்பி பரித்தித்துறையை நோக்கி விரைந்தது. இந்த ஆனைவிழுந்தான் சந்தியில் வைத்துத்தான் , அப்பொழுது பரபரப்பாகப் பேசப்பட்ட கமலம் கொலை வழக்கில் கமலம் கொலைசெய்யப்படார் . நாங்கள் இந்தக்கொலை வழக்கை ஒவ்வொரு நாளும் மித்திரன் பேப்பரில் அடிச்சுப்பிடிச்சுப் படிப்போம் . பரித்திதுறைக்கோட்டில் நடந்த வழக்கைப் பாக்கவே சனம் அப்ப அள்ளுப்பட்டுது . ஒரு கொலைக்காக அந்த நாளில் பரபரப்பான மக்கள் , இன்று கொலைகளே நித்திய வாழ்கையானது அவர்களுக்குப் பழகி உறை நிலைக்குப் போய்விட்டர்கள் . பஸ் இப்பொழுது சிவன்கோயலடியால் திரும்பி வேகமெடுத்து , பரித்தித்துறை பஸ்ராண்டில் தன்னை நிலைப்படுத்தியது .






October 20, 2011 

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம