பொன்னேரிக் கிராமத்தின் வயல்களின் நடுவே அகன்று விரிந்திருந்தது அந்தப் பொன்னேரி வாவி . பொன்னேரி என்றுமே வழங்கொளிக்கும் கிராமம் . எங்கும் பச்சைப்பசேல் என அந்தக்கிராமத்தைப் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும் . அந்தக் கிராமத்தின் விவாசயத்திற்கு தேவையான நீரை வழங்குவது இந்தப் பொன்னேரி வாவியே . அந்த வாவியில் தவளைகள் , மீன்கள் , ஆமைகள் என்று பல நீர்வாழ் உயினங்களும் வாழ்ந்து வந்தன . இதனால் எப்பொழுதும் அந்த வாவி கொக்குகளாலும் நாரைகளாலும் நிறைந்து காணப்படும் .
பொன்னேரிக் கிராமத்திற்கும் , வாவிக்கும் யார் கண்பட்டதோ தெரியவில்லை , கடந்த நான்கு வருடங்களாக பெய்ய வேண்டிய மழை பொய்த்துவிட்டது . படிப்படியாக பொன்னேரிக் கிராமமும் , வாவியும் வறட்சி என்னும் கோரப் பிடியில் சிக்கித் தவித்தன பொன்னேரிக் கிராமத்தின் பயிர்பச்சைகளும் வாவியும் பொய்த்த மழையினால் படிப்படியாக சோபையிழந்தன . ஆனாலும் வாவியில் தங்களுக்கு வாவியில் ஏதாவது இரை கிடைக்காதா என்ற ஆவலில் கொக்குகளும் நாரைகளும் தினமும் வந்து போய்க்கொண்டிருந்தன .
ஒருநாள் மாலைவேளை வாவியின் கரையில் கொக்குகளும் நாரைகளும் தங்களுக்கு இரை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் கவலையுடனும் உட்கார்ந்திருந்தன . இதே நேரம் வாவியின் அடியில் சேற்றில் ஒழிந்திருந்த கெளுத்தி மீன் ஒன்று மெதுவாகக் காற்று வாங்கும் நோக்குடன் நீர் மட்டத்திற்குப் புறப்பட்டது . வாவியின் கரையில் கருமமே கண்ணாயிருந்த ஒரு கொக்கின் கண்ணில் அந்தக் கெளுத்தி மீன் பட்டது . எல்லோரையும் முந்திக்கொண்டு அந்தக் கொக்கு வாவியில் மூழ்கி கெளுத்திமீனுடன் வானத்தில் ஜிவ் என்று பறந்தது .
பசியுடன் இருந்த மற்றைய கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் அந்தக் கொக்கின் செய்கை மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது . கெளுத்தி மீன் பிடித்த கொக்கையும், இரையை கைப்பற்றும் நோக்கிலும் எல்லாக் கொக்குகளும் நாரைகளும் கலைத்துக் கொண்டு பறந்தன . ஏதோ ஓர் உள்உணர்வு தாக்க கொக்கு தனது தலையைத் பின் பக்கமாகத் திருப்பிப் பார்த்தது . ஓர் படையே தன்னைப் பின்தொடர்ந்து வருவதை அது கண்டது . ஆனாலும் அந்தக் கொக்கு , எல்லாக் கொக்குகளுக்கும் , நாரைகளுக்கும் போக்குக் காட்டியவாறே மேலும் விரைவாகப் பறந்தது . ஆனாலும் கொக்கின் பின்னால் வந்த பெரும்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்ப அந்தக்கொக்கு மிகவும் கஸ்ரப்பட வேண்டியதாக இருந்தது .
அப்பொழுது அந்தக் கொக்கிற்கு ஓர் யோசனை தோன்றியது . " நான் இந்தக் கெளுத்தி மீனை வைத்திருப்பதால் தானே இந்தக் கொக்குகளும் நாரைகளும் என்னை விட்டுக் கலைக்கின்றன இதை விட்டுவிட்டால் என்ன ?? " என எண்ணியவாறே அது தனது அலகில் இருந்த கெளுத்தி மீனின் பிடியைத் தளர்த்தியது . கெளுத்தி மீனோ கொக்கின் பிடியில் இருந்து கீழே நோக்கி விழத்தொடங்கியது . அப்பொழுது அந்தக் கொக்கைப் பின்தொடர்ந்த கொக்குகளும் நாரைகளும் , தீடீரென கீழே விழும் கெளுத்திமீனைப் பிடிக்கப் பறந்தன . ஆனால் கெளுத்திமீனைப் பிடித்த அந்தக் கொக்கோ மனநின்மதியாகவும் , சந்தோசமாகவும் பறந்து சென்றது .
நன்றி : நவம்
July 16, 2013
Comments
Post a Comment