தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாசாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச்சம் தான் வருகின்றது . ஒப்பாரியைப் பற்றிய இந்தக் கட்டுரையினது நோக்கம் வாசகர் மனதில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே .
ஒப்பாரிப் பாடல்களைச் செத்த வீட்டிலே படிப்பின் வாசம் அறியாத ஆச்சிகள் தங்களுடைய சோக எண்ணங்களைக் கவிதை வடிவில் பாடுவார்கள் . இதன்பொழுது அந்தக் குடும்பத்தில் நடந்த நல்ல விடயங்களோ அல்லது கெட்ட விடயங்களோ இந்த ஒப்பாரி மூலம் பூடகமாக வருவது ஓர் சிறப்பான விடையமாகும் . அந்த படிப்பின் வாசம் அறியாப் பெண்களின் கவி நயத்தையும் சொல் ஆட்சியையும் பார்த்து வியந்து போனவர்கள் பலர் . ஒப்பாரியை எமது மக்கள் அன்றைய காலங்களில் செத்த வீடுகளில் ஓர் கிராமியக் கலையாகவே பயன்படுத்தி வந்தனர் . அன்றைய கால கட்டத்தில் ஒப்பாரிக்கு பெயர் பெற்றவர்களாக வடமராட்சியைச் சேர்ந்தவர்களே இருந்து வந்துள்ளனர்.
இந்த ஆச்சிகள் தங்களது உணர்வுகளையும் துயரங்களையும் ஒரு விதமான இசைக் கட்டமைப்புடன் இழுத்துப் பாடி , செத்தவீட்டில் அழாதவர்களையும் அழ வைப்பதில் திறமை வாய்ந்தவர்கள் . ஒப்பாரி பாடும் ஆச்சிகள் செத்தவரை மிகவும் உரிமையுடன் " என்ரை மோனை , ராசா , ராசாத்தி , ஆத்தை " என்று அழைத்து மிகவும் உருக்கமாக தங்களின் சோகத்தை வெளிபடுத்துவார்கள் . இந்த ஒப்பாரி அன்றைய கால கட்டத்தில் பரம்பரை பரம்பரையாகவே ஆச்சிகளிடம் கடத்தப்பட்டு வந்தது .
நிலவோ நிலவுதவி என்ரை ராசா
எனக்கு
நிலவுபட்டால் ஆருதவி ........
பொழுதோ போழுதுதவி என்ரை ராசா
எனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........
இந்த ஒப்பாரியில் கவித்திறனும் சொல்லாட்சியும் மலைக்க வைக்கின்றன . இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் பின்பு நாட்டுக் கூத்திலும் இடம் பெற்றதாக அறியக் கூடியதாக இருந்தது.
எங்களிடையே ஆச்சிகளால் பாடப்பட்ட ஒப்பாரிப் பாடல்கள் கூடிய அளவு உறவு முறைகளையும் சமூகப் பண்பாடுகளையும் உள்ளடக்கியே பாடப்பட்டன .
கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ
எனக்கொரு
கொள்ளி வைச்சால் காணுமடா
பார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்
என்ரை நீல நையினார் நீ எனக்குப்
பால் வார்த்தால் காணுமடா .......
நான் பெத்தேன் பிலாப் பழத்தை
இப்ப
பிச்சு வைச்சேன் சந்தியிலை .....
பள்ளிக்கூடம் தூரமெண்டு
என்ரை ராசாவை
நான் பக்கத்தே வைச்சிருந்தேன்
தோட்டம் தொலை தூரமெண்டு
என்ரை ராசாவை நான்
தொட்டிலிலை வைச்சிருந்தேன்
தகவல் : சின்னம்மா கரவெட்டி வயது 80
இந்த ஒப்பாரிப் பாடலிலே அந்தத் தாயானவள் தனது மகனது நிறத்தையும் தனக்குக் கொள்ளி வைக்கவேண்டிய அவன் தனக்கு முதலே மரணமாகி விட்டானே என்று எம்மிடையே வந்த பாண்பாட்டு முறைகளைத் தனது ஒப்பாரியிலே சொல்லி அழுகின்றாள் .
இன்னுமொரு தாயோ தனது குடும்பத்தையே பொருளாதார ரீதியில்க் கட்டிக் காத்து வந்த மகளைப் பறிகொடுத்த சோகத்தில் பின்வருமாறு பாடுகின்றாள்,
என்ரை ஆத்தை
நீ
வாரி வரத் திண்டிருந்தன்
என்ரை வண்ண வண்டி வாடுதணை
என்ரை ஆத்தை
நீ
கோலிவரத் திண்டிருந்தன்
என்ரை கோலவண்டி வாடுதணை
தகவல் : செல்லம்மா கரவெட்டி வயது 67
பொதுவாகவே இந்த வகையான ஒப்பாரிப் பாடல்களில் என்ரை ஆத்தை என்ற விழிப்பில் சந்தர்பத்தற்கு ஏற்றவாறு என்ரை ராசா , மோனை , அப்பு என்று உரிமையுடன் விழித்து ஆச்சிகள் தங்கள் சோகத்தினை வெளிபடுதுவதைக் காணலாம் .
ஒரு ஊரிலே வாழ்ந்த ஒருவர் வேறு ஒரு இடத்திலே கலியாணம் செய்கின்றார் . அவர்களது குடும்பத்திலே பிரச்சனைகள் வந்து கணவனும் மனைவியும் பிரிகின்றார்கள் . இந்தநிலையில் அந்தக் கணவன் ஒருநாள் செத்துவிட்டார் . அந்தச் செத்த வீட்டுக்கு பிடிவாதக்கார மனைவியோ வரவில்லை . அபொழுது அந்தக் கணவனின் குடும்பத்தில் உள்ள சொந்தக்காறப் பெண் இப்படி ஒப்பாரி சொல்லித் தனது வேதனையை வெளிப் படுத்துகின்றார்,
ஊரெல்லாம் பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
ஊர்விட்டுப் போனாயோ .....
பக்கத்தே பெண்ணிருக்க
என்ரை ராசா நீ
பரதேசம் போனாயே.........
பாழ்படுவாள் வாசலிலே
என்ரை ராசா நீ
பவுணாக்குவிச்சாயோ .............
தகவல்: மீனாட்சி துன்னாலை வயது 78
தமிழர் வாழ்வின் இறுகிய வாழ்வியல் கட்டமைப்புக்குள் தாய் வழி உறவுகளிலேயே கலியாணம் செயிகின்ற பண்பாட்டு முறை அன்றைய காலகட்டங்களிலே இருந்து வந்துள்ளது . மேலே வந்து விழுந்த ஒப்பாரிப் பாடலானது இதையே காட்டி நிற்கின்றது. இதனையொட்டி வழங்குகின்ற பல சொலவடைகளையும் நாம் காணலாம் . தங்கள் குடும்பங்ககளிலே ஏற்றபட்ட பிரச்சனைகளையும் , ஒருதலைக் காதல்களால் முறிந்த திருமணபந்தக்களையும் செத்தவர் மீது ஒப்பாரி மூலம் சொல்லி அழுகின்ற வழமை அந்தக் காலப் பெண்களிடம் இருந்து வந்துள்ளது .
தங்கள் குடும்பத்திலே பெண் சகோதரங்களிடையே நீண்டகாலமாக ஏற்றபட்ட பகை உணர்சிகளை ஓர் பெரியம்மா செத்தபொழுது , ஒரு ஆச்சி இவ்வாறு பாடுகின்றார் ,
என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
சீனத் துவக்கெடுத்து என்னைச்
சிதற வெடிக்க வைக்கினமே ..........
என்ரை ராசாத்தி
நீ பெத்தவை
பாரத் துவக்கெடுத்து என்னைப்
பதற வெடி வைக்கினமே .......
இன்னுமொரு பாடல் ஒருத்தி தான் தனது குடும்பத்தவரால் புறக்கணிக்கப் படுவதை எண்ணிப் பெருங் குரலேடுத்துப் பாடுகின்றாள் ,
படலையிலே ஆமணக்கு
என்ரை ராசாத்தி ........
நீ பெத்தவைக்கு
நான்
பாவக்காய் ஆகினனே .............
வேலியிலை ஆமணக்கு
என்ரை ராசாத்தி ..........
நீ பெத்தவைக்கு
வேப்பங்காய் ஆகினனே ...........
அன்றைய காலகட்டங்களிலே செத்த வீட்டிலே ஒப்பாரி சொல்லி வாய் விட்டு அழுவது தமிழர் வாழ்வியலில் ஓர் சிறந்த உளவியல் மருத்துவ முறையாகவே இருந்து வந்துள்ளது . ஏனெனில் உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் வாய் விட்டு அழுதாலே அவர்களது மனப்பாரமும் துயரமும் குறைவடையும். அனால் இன்றைய காலகட்டத்திலோ வாய் விட்டு அழுவது நாகரீகக் குறைச்சல் என்று எம்மவர்கள் எண்ணுகின்றார்கள் .
000000000000000000000000000000000000
தனது குடும்பத்துடன் ஒரு சொந்தம் கதைக்காமல் இருந்து விட்டுச் செத்த வீட்டிலே வந்து நாட்டாமை செய்வதைப் பொறுக்க மாட்டாத குடுபதுப் பெண் இவ்வாறு பாடுகின்றாள்,
சொருகி வைச்ச எப்பை எல்லாம்
இப்ப
சோறள்ள வந்த தெணை ..........
பொட்டுடைச்ச கோழி முட்டை
இப்ப
போர்ச் சாவல் ஆச்சுதணை .............
இப்படியான ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம் குடும்பத்திலே ஏற்பட்ட பிரச்சனைகளைச் சொல்லி அழுகின்ற பாடல்களாகவும் , இன்னும் சில பல வருடங்களுக்கு முதலே செத்த உறவுகளை நினைத்து வேறு செத்த வீடுகளில் ஒப்பாரி வைப்பதையும் காணலாம் ,
என்ரை அப்பு
நீ போய் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை
சோகத்தாலை வாடயில்லை
உங்கடை
சோகத்தாலை வாடுதெண்டு ...........
என்ரை அப்பு நீ போய்ச் சொல்லணை
நீங்கள் பெத்தவள்
இஞ்சை காசாலை வாடயில்லை
உங்கடை
கவலையினால் வாடுதெண்டு...........
செத்த வீட்டிலே தனது கணவனைப் பறிகொடுத்த மனைவியானவள் தமக்குள் இருக்கும் நெருக்கத்தையும் சில வேளைகளில் ஒப்பாரியாக பாடுவாள் . அப்போது அதன் சோகமானது மற்றவர்களையும் கலங்க வைக்கும் ,
முத்துப் பதித்த முகம்
என்ரை ராசா
நீ
முழு நிலவாய் நின்ற முகம்
நினைப்பேன் திடுக்கிடுவேன்
என்ரை ராசா
உன்ரை நினைவு வந்த நேரமெல்லாம்
போகக் கால் ஏவினதோ என்ரை ராசா
இந்தப் பொல்லாதவள் தன்னை விட்டு
நாகரீகம் பேசுகினம் ...........
மூக்குப் படைச்சவையள்
இனி
முளிவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி இவள்
மூதேசி என்பினமே ................
0000000000000000000000000000000000000
அன்றைய காலகட்டங்களில் மதமாற்றம் என்பது எமது சமூகதில் நடைபெற்றது . அதில் பல கலப்புக் கலியாணங்களும் நடைபெற்றது இருக்கின்றன . இறுகிய கட்டமைப்பைக் கொண்ட எமது சமூகமோ ஆரம்பத்தில் இந்தக் கலப்புக் கலியாணங்களுக்கு முரண்டு பிடித்தனர் . ஒரு செத்த வீட்டில் ஒரு ஆண் கிறீஸ்தவ பெண்ணைக் கலியாணம் செய்திருந்தார் ; அவள் ஒரு நாள் செத்து போய் விட்டாள் . பொதுவாக கிறீஸ்தவர்கள் செத்தால் அழுவது குறைவானதே . அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவருமே அழவில்லை . அபொழுது அந்தப் ஆணின் உறவுப் பெண் ஒருவர் பின்வருமாறு தனது சோகத்தை ஒப்பாரியாக வெளிப் படுத்துகின்றார் ,
என்ரை ஆத்தை , நீ வேத சமயமென
இவை
விரும்பி அழமாட்டினமாம் ...
நாங்கள் சைவ சமைய மெணை
உன்னோடை சருவி அழ மாட்டினமாமம்
ஊர் தேசம் விட்டாய்
என்ரை ராசாத்தி
உறவுகளைதான் மறந்தாய் ...
மேபிள் துரைச்சியென்று
இஞ்சை
மேட்டிமைகள் பேசுகினம்
ஊரும் அழவில்லையென என்ரை ராசாத்தி
உன்றை உறவும் அழவில்லையெணை
000000000000000000000000000000000
ஏறதாள 1980 கள் வரை இந்த ஒப்பாரிப் பாடல்கள் வழக்கில் இருந்து வந்துள்ளன . அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த விடுதலைப் போராட்டத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி,
நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ........
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைப் பெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா.......
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்
மகனே நீ
இருந்த இடத்தைப் பார்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்தாலும்
பயம் பயமாய் தோன்றுதடா.......
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே.............
இவ்வாறு எமது வாழ்விலும் பாரம்பரியத்திலும் ஊறிவிடிருந்த இந்த ஒப்பாரி , இன்று அழிந்து போகும் நிலையில் உள்ளது . பொதுவாகவே சோகமான இசை வடிவங்களை நாங்கள் விரும்புவது இல்லை . இந்த ஒப்பாரி அழிவதற்கு அதுவுங் காரணமாக இருக்கலாம் . அத்துடன் நாகரீகம் என்ற போர்வையில் எமது வாழ்கையை கூட்டுப்புழு வாழ்க்கை முறைக்கு மாற்றிக் கொண்டதும் ஒரு காரணமாக இருக்கிறது . கால ஓட்டத்தில் நாம் பலதைத் தொலைத்து விட்டோம் , அதில் இந்த ஒப்பாரியும் ஒன்று . இந்த ஒப்பாரி சொல்லும் வழக்கை யார் முன்னெடுத்துச் செல்லப் போகின்றோம் ?
உச்சாந்துணை :
01 . அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52
September 21, 2013
Comments
Post a Comment