சோதனைச்சாவடியில் நான் நேற்று பார்தவர்கள் இருக்கவில்லை. இந்த சோதனைச்சாவடி உண்மையில் புலிகளால் உருவாக்கப்படதாகும். பகல்வேளையில் பார்கும்போது எங்கள் கைவண்ணம் நன்றாகவே தெரிந்தது. இவர்கழுடைய உண்மையான சோதனைச்சாவடி முகமாலையிலேயே இருந்ததாக மனைவி சொன்னா. முன்பு ஓமந்தைக்கு முன்னே படையினரால் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு மூட்டைமுடிச்சுகளுடன் கால்நடையாக இங்கு வந்து புலிகளின் பரிசோதனை முடித்து, அவர்களது பயணிகள் வண்டியலேயே முகமாலைவரை செல்லவேண்டியிருந்தது. அங்கு படையினரின் கெடுபிடிகளை முடித்து, இ.போ.சா பஸ்சில் மீண்டும் பயணத்தை தொடரவேண்டும். இப்பொழுது எங்கள் இடத்தை பிடித்துக் கொண்டு இருக்குதுகள் இந்த ஒட்டகங்கள். கொண்டக்ரரிடம் விசாரனையை நடந்துகொண்டிருந்தான் ஒரு படைவீரன். கடமையிலிருக்கும் ஒரு அரசாங்க உத்தியோகத்தரை இன்னுமொரு அரசாங்க உத்தியோகத்தன் பாதுகாப்பு என்ற போர்வையில் கெடுபிடி செய்யும் வினோதம் அங்கே நடை பெற்றுக் கொண்டருந்தது. காரணம் அவன் பிறப்பால்த் தமிழன். நான் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டு நின்றேன். மனைவி தனது கடவச்சீட்டையும் எம் . ஓ .டி ஐயும் குடுத்தா. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தள் அந்தப்பெண் சிப்பாய். எனக்கு ஏனோ எரிச்சலாக வந்தது. பிரான்ஸ் கடவுச்சீட்டில் சூனியம் செய்துவிட்டார்களோ? அந்தச் சோதனைச் சாவடி உண்மையில் மிகவும் திட்டமிட்டு நுணுக்கமாக எங்களால் கட்டப்பட்டிருந்தது. பயணிகளுக்கான சகல வசதிகளும் அதில் இருந்தது. என்னை வருமாறு ஒரு சிப்பாய் அழைத்தான். உள்ளர உதறலுடன் போனேன். எனது கடவுச்சீட்டையும் எம்.ஓ.டி.ஐயும் கொடுத்தேன். சரிபார்த்து பதிந்து விட்டு பவ்வியமாக திருப்பித் தந்ததுடன், ஒரு விசர்க் கேள்வி ஒன்று கேட்டான்.
"எங்கள் சேவை உங்களுக்குத் திருப்தி அளித்ததா என்று"?.
என்னுள் உருவான மாற்றத்தை அடக்கியவாறே ஒரு புன்சிரிப்பை அவனுக்கு வழங்கினேன். நாங்கள் மூவரும் பஸ்சை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
"அண்ணை உங்களிட்டை ஒண்டு கேட்டால் குறை இனைப்பியளோ"?
"குறை இனைக்காத மாதிரிக் கேளுமென்".
"இல்லை உங்களுக்கு இப்ப வேலை செய்யிறது கஸ்ரமாயில்லையோ"?
"கஸ்ரம் தான் தம்பி, இடத்துக்கேற்ற மாதிரி மாறவேண்டியதா போச்சுது". "
அதுசரி இப்பதான் நீர் வெளிநாட்டிலை இருந்து வாறீரோ"?
"ஏன் கேட்டனியள்"?
"நான் நினைச்சன் வவுனியாவிலை இருந்து வாறிங்களாக்கும் எண்டு".
"இல்லை அண்ணை 25 வருசத்துக்குப் பிறகு இப்ப தான் வாறன்".
"என்ர கடவுளே!!!! அப்ப நீர் இடத்துக்கு தவ்வல், பஸ்சுக்குள்ளை இப்பிடி என்னோட கதச்சுப்போடதையும்"
"சரி அண்ணை".
எனக்கு மனது வலித்தது. ஒருவருடன் கதைக்கக்கூடப் பயப்படுகின்றார்களே என்று. மீண்டும் பஸ் ஏ9 பாதையில் தொடரந்தது தனது பயணத்தை. நேரம் காலை 8 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. வெய்யில் மூசியடித்தது. பாதையின் இரண்டு பக்கத்திலும் கந்தகமண்ணை வளமாக்கும் ஓர்மத்துடன் வயலுடன் போராடிக்கொண்டிருந்தார்கள் வன்னியின் மைந்தர்கள். நெல்லுகள் நாற்று நடத்தாயாராகிக் கொண்டிருந்தன. என்னதன் எம்மைப் பாடாய் படுத்தினாலும் எங்கள் குணத்தை உங்களால் வெல்லமுடியாது என்பதை செய்கையில் காட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த வன்னியின் மைந்தர்கள். பஸ் மாங்குளத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மாங்குளம் படைத்தளம் கண்முன்னே விரிந்து கிடந்தது. இந்த இடத்தில் மட்டும் ஏ9 பாதை அவர்களுக்கு வசதியாக வழுவழுப்பாக இருந்தது. ஓமந்தையிலிருந்து பஸ் மெதுவாகவே ஓடவேண்டி இருந்தது. இந்தப் பாதையைப் போல் நான் பார்க்கவே இல்லை. பஸ்சில் ஒரு சிலவும் இல்லாமல் நன்றாக ஜிம் செய்தேன். ஆனால் ஐரோப்பாவில் தவழ்ந்த பஸ்சில் கிடைக்காத திருப்தியும் சந்தோசமும் எனக்கு இந்தக் குலுக்கு பஸ்சில் கிடைத்தது. ஆனாலும் இந்த பஸ்சுக்கும் இந்தப் பாதைக்கும் நான் அன்னியன்தானே என்ற நினைவு என்னை வாட்டியது. அறியாப் பிராயத்தில் என்னை இடம் பெயரச்செய்தது, நான்செய்த முற்பிறப்புப் பாவமோ? பலவிதமான உணர்சிக் கலவைக்கு உள்ளானேன்.சில இடங்களில் எருமைகளை பட்டி கட்டி இருந்தார்கள். முன்பு இந்த இடங்களை பாலையும் முதிரையும் நிறைத்து பச்சை பசேல் என்று இருக்கும். இப்பொழுது பொட்டல் வெளியாக வெறுமை காட்டி இருந்தன. ஆனாலும் எங்கடை ஆக்கள் வலு விண்ணர், எங்களுக்கே உணவு தந்த இடங்களையும் அந்த மக்களையும் தாங்கள் வகித்த பதவிகள் மூலம் தகிடுதத்தங்கள் செய்து பின்தங்கிய பிரதேசங்கள் ஆக்கி தங்கடை சந்ததியை இந்தமண்ணில் உயர்கல்வியை படிக்க விட்டு பின்தங்கிய பிரதேசக் கோட்டா மூலம் இலகுவாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்கச் செய்தார்கள். ஆனால் எங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு தமிழனை சிங்களவன் படிக்க விடுறான் இல்லை தரப்படுத்தல் செய்கின்றான் என்று விசம் ஏத்தினாரகள். உண்மையில் எனக்கு ஐரோப்பா வந்ததின் பின்பு தான் தரப்படுத்தலின் தார்ப்பரியம் புரிந்தது. நேரம் 9மணியை நெருங்கிக் கொண்டருந்தது. எனக்குப் பசியும் ஒண்டுக்கு போகவேண்டும் என்ற உணர்வும் வாட்டின.பயணிகள் இறங்கி ஏறிக் கொண்டிருந்தார்கள்.பக்கத்தில் வந்த கொண்டக்ரரிடம்
"அண்ணை பசிக்குது எப்ப நிப்பாட்டுவியள்"?
"எனக்கும் தான் பசிக்குது , கிளிநொச்சி கழிய நிப்பாட்டுவம்".
இந்த ஒபீஸ் சனம் கிளிநொச்சியோடை சரி பேந்து நங்கள் தானே" என்றார்.
June 23, 2011
தொடரும்
தொடரும்
Comments
Post a Comment