விடிய 2மணிக்கு வேலையால வந்தவுடன உடுப்பை மாத்தாமல் குசினிக்குள்ளை பாஞ்சன். குஞ்சன் கோழிக்கறியும் கீரையும் மஞ்சள் சோறும் போட்டு வைச்சிருந்தான் . நான் இருந்த பசியில பரதேசி போட்ட உப்பு சுள்ளிட்டாலும் அது எனக்கு ருசியாத்தான் இருந்தது. மணி இனித் தான் வருவான். குஞ்சன் தண்ணியை போட்டிட்டு கவுண்டிட்டான். நான் மணிக்கு எல்லாம் எடுத்து வைச்சுபோட்டு றெஸ்ரோரண்டில செய்த வேலையை வீட்டை செய்தன் . நான் போட்ட சத்தத்தில குஞ்சனின்ரை வாயால தூசணம் துவள் பறந்திது. நானும் அவன்ர றேன்ஞ்சில இறங்கி குடுத்த மறுத்தானால அடங்கிப்போனான் . ஆனால் இடக்கிடை தண்ணி புசத்திக்கொண்டிருந்தது. நான் என்ரை அறைக்கை போய் உடுப்பை மாத்திப்போட்டு படுக்கைல கவிண்டன் . உடனை நித்திரையாப்போட்டன் ஏனெண்டால் அவ்வளவு வேலைக்களைப்பு.
இடையில தமன்னா வந்து என்னோட டான்ஸ் ஆடத்தோடங்க , பக்கத்தில இருந்த ரெலிபோன் அடிச்சு தமன்னாவை கலைச்சது எனக்கு பண்டிவிசராய் கிடந்திது. நான் கண்ணை திறக்காமலே ரெலிபோனை எடுத்து கலோ சொன்னன் . மற்றப்பக்கத்தில அப்பூ………… எண்டு அம்மாவின்ரை குரல் வந்திது . அம்மான்ரை குரலை கேட்ட உடனை தமன்னா என்னைவிட்டு பத்துக்கட்டைக்கு போட்டாள்.
"என்னம்மா இந்த நேரத்தில . இப்பத்தான் வேலையால வந்து படுத்தனான்.திரும்ப விடிய ஐஞ்சுமணிக்கு எழும்ப வேணும்".இது நான். அம்மா சொன்னா,
"அப்பிடியே மோனை எனக்கு கொஞ்ச காசு அனுப்பிவிடு".
எனக்கு பத்தி கொண்டு வந்திது.
"என்னம்மா போன மாசம் தானே அனுப்பின்னான்.அதுக்குள்ளை முடிஞ்சு போச்சே"?
"அடேயப்பா உனக்கு இங்கத்தையான் விலைதலையள் தெரியுமே ? ஒரு றாத்தல் பாணே 60 ரூபாய் விக்கிது . அதோட எங்கட கோயில் திருவிழா வருது . அப்பாவும் போட்டார் நாங்கள்தானே செய்யவேணும்" .
"என்னம்மா உவ்வளவு காசுக்கு நான் இப்ப எங்கை போறது"?
"உதுகளை எல்லாம் கேக்காமல் கொப்பர் போட்டார். நான் கேக்கவேண்டியதாய் கிடக்கு"எண்டு அம்மா அழத்தொடங்கினா.
எனக்கு அம்மா அழுதது ஒருமாதிரியா போச்சுது . பாவம் மனிசி எண்டு யோசிச்சு கொண்டிருந்தன்.
"என்னப்பு ஒரு சத்தத்தையும் காணேல"?
"சரியம்மா எவ்வளவு வேணும்"?
"ஒரு 3 ஐ போட்டுவிடன்".
எனக்கு தலை சுத்தீச்சிது.அம்மான்ரை டிக்சனறியில 3 எண்டால் பின்னால ஐஞ்சு சைபர் போடவேணும்.
"என்னது மூண்டு லச்சமோ"??
எனக்கு கோபத்தில கைகாலெல்லாம் உதறத்தொடங்கீட்டிது.
"என்னம்மா நான் இப்ப உவ்வளவு காசுக்கு எங்கை போறது? சரி அனுப்பிறன். இனி கொஞ்சநாளைக்கு கேக்கப்படாதுé .
"என்னப்பு நீதானே எங்களுக்கு கருவேப்பிலை மாதிரி ஒரேயொரு ஆம்பிளை. உன்னால ரெண்டு கொக்காக்களையும் கரைசேத்துப்போட்டன் . உன்ரை தங்கச்சிக்கும் ஒரு வழி பண்ணினால் நான் நிம்மதியா கண்ணை மூடுவன் அப்பு" .
எனக்கு அண்டங்கிண்டமெல்லாம் பத்தீச்சுது.எனக்கு 37 வயசாகி தலையில அரைவாசி வெளிச்சுப்போச்சு.நான் நெடுக மற்றவைய பாத்து கொட்டாவியே விடிறது எண்டு எந்தநாளும் எனக்கு விறாண்டல்.அம்மா ஏதாவது வத்தலோ தொத்தலோ பாப்பா எண்ட நம்பிக்கையும் எனக்கு கழண்டு போட்டுது.மனிசி என்ன நினைக்குது பாப்பம் எண்டு நானும்,
"அம்மா என்ரை தலைமயிரெல்லாம் கொட்டுண்டுது ஏனம்மா"? எண்டு அப்பாவியா கேட்டன் .
அம்மா அதுக்கு மேலால எனக்கு பினாட்டு தீத்திறா .
"உனக்கு ஆயிரந்தடவை சொல்லுறனான் சுடுதண்ணியில குளியாதை, கண்டகிண்ட சம்பூவை வைக்காதையெண்டு.நீ எங்கை என்ரை சொல்வழி கேக்கிறாய்? எண்டு என்ரை அம்மா என்னில எகிறி பாஞ்சா".எனக்கு அழுகை அழுகையா வந்திது. மனுசி இப்போதைக்கு எனக்கு கலியாணம் செய்து வைக்காது.நானும் எவ்வளவு நாளைக்கெண்டு அடையளிட்டையும் கறுப்பியளிட்டையும் போய் நான் சுத்த ஆம்பிளைதனோ எண்டு ரெஸ்ற் பண்ணிறது? இவன் குஞ்சன் வேறை நான் கலியாணம் கட்டாத கோபத்தில கறியளுக்கை உப்பை அள்ளி போடுறான்.
எனக்கு அம்மான்ரை போக்கு ஒண்டுமாய் விளங்கேல.இந்த வரியம் ஆடியோட ஆவணியா 37 வயசு முடியப்போகுது. எப்பிடியும் இந்த வரியம் கலியாணம் செய்து போட்டுத்தான் முதல் வேலை எண்டு யோசிச்சுக்கொண்டு, ஓடின தமன்னாவை தேடினன்.கொஞ்சநேரத்தல தமன்னா எனக்கு கிஸ் தர போட்ட காச்சட்டை நனைஞ்சு போச்சுது . எனக்குப் பெரிய விசராப்போச்சுது கோதாரிவிழுந்த தமன்னாவிலையும் கோபம் கோபமாய் வந்திது .
விடிய காலமை 5 மணிக்கு மணியின் சத்தத்தில நானும் முழிச்சிட்டன் . எழும்பி முகம் கழுவி வெளிக்கிட்டு குசினியுக்கை வந்தன்.மணி எனக்கும் சேத்து தேத்தண்ணி போட்டு தானும் எடுத்துக்கொண்டு பல்கணியில சிகரட் பத்தவைச்சான். நானும் போய் அவனோட நிண்டு தேத்தண்ணியை குடிச்சுக் கொண்டு என்ர சிகரட் ஒண்டை எடுத்து பத்த வைச்சன்.என்ரை காலமை ரசனையை மணி கலைச்சான் ,
"ஆற்ராப்பா சாமத்தில உனக்கு போன் பண்ணினது? ஏதாவது அரையண்டங்களோ"?
"ஓமடாப்பா அம்மா ராத்திரி போன்பண்ணினவா.தனக்கு மூண்டு லச்சம்அனுப்பட்டாம்.எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல மச்சான்".
"உன்ரை கொம்மாக்கும் வேற வேலையில்லை. நீயும் திருந்தமாட்டாய். ஏன்ராப்பா உன்ரை கஸ்ர நஸ்ரங்களை கொம்மாக்கு சொல்லுறதுதானே"?
"இஞ்சை எனக்கு விடியக்காத்தால கிளப்பாதை.எத்தினை முறை மனிசிக்கு சொல்லிப்போட்டன்.மனிசி உலுத்து தனமாய் விளங்காத மாதிரிக் கதைக்கிது.நானும் எவ்வளவு காலத்துக்கு இந்த சீவியம் சீவிக்கிறது"?
எண்டு மணியோட ஏறினன்.அவன் சிரிச்சு கொண்டு, " என்னட்டை கனகாசு இப்ப இல்லையடா.ஒரு முன்னூறு யூறோ தாறன் மிச்சத்தை நீ போடு . வாற மாசம் எனக்கு தா. நான் மனுசிய எடுக்கிற அலுவலாய் திரியிறன் தெரியும் தானே"?
எண்டான்.எனக்கு அந்த நேரத்தில அவன் சொன்னது பெரிய ஆறதலாய் இருந்திது.மிச்சத்துக்கு பாங்கில ஓடி அடிக்க வேண்டியது தான் வேறை வழியில்லை எண்டு யோசிச்சுக்கொண்டு கிளீனிங் வேலைக்கு மெற்றோ பிடிக்க ஓடினன்.நாலு மணித்தியாலம் இதை செய்துபோட்டு பத்து மணிக்கு ரெஸரோறண்ட் வேலைக்கு ஓட வேணும்.ஆருக்கு விழங்கிது என்ரை நாய் பிழைப்பு? அம்மாக்கு நான் காசு அனுப்பினா சரி. திண்டனோ வருத்தம் துன்பம் வந்திதோ அதுகளை பத்தி அக்கறை இல்லை.என்ன மனிசரப்பா? எண்டு என்ர மனம் அலைபாஞ்சிது.நான் வேலையளை கடகடவண்டு செய்து போட்டு பெல்வீலில போய் குசனிட்ட இறைச்சியும், பக்கத்தில மாலா கடையடியில வீரகேசரியும் வாங்கிக் கொண்டு வீட்டை போகேக்கை,அதில நிண்ட எனக்கு பழக்கமான லைலா« சல்யூ செரி » எண்டு கிட்ட வந்தாள்.நான் கண்டும் காணாத மாதிரி மெட்றோவுக்குள்ளை இறங்கீட்டன்.இனி பாங்கில போய் காசு ஓடியில அடிச்சுக்கொண்டு மார்கடே பொசினியரில இருக்கிற குமார் சொப்புக்கு உண்டியலில காசு போட போகவேணும்.எல்லாத்தையும் முடிச்சு திரும்பவும் வேலைக்கு போய், இரவு பஸ்சில வீட்டை திரும்ப உடம்பெல்லாம் பிஞ்சுபோய் நொந்திது. பத்து பதினைஞ்சு வரியமாய் இந்தபட்டை அடி அடிச்சு எனக்கொண்டு ஐஞ்சு சதமும் இல்லை.எனக்கு என்ரை அப்ரையும் நாட்டு பிரச்சனையளையும் நினைக்க அண்டம் கிண்டமெல்லாம் பத்தீச்சுது . என்ரை வாய் என்னையறயாமலே தூசணத்தால பேசீச்சுது .
நான் வீட்டை போய் சாப்பிட பிடிக்காமல் படுத்திட்டன். இப்பிடியே ஒரு மூண்டு வரியம் பறந்து போட்டிது.ஒரு நாள் அம்மா போன் பண்ணினா. எனக்கு ரெண்டு மூண்டு பகுதி கேட்டு வந்திதாம்.தான் அறுபது லட்சம் சீதனமும், முப்பது பவுண் நகையும், வீடுவளவும் இருந்தால் கதையுங்கோ எண்டு சொன்னவாவாம். எனக்கு ஒண்டு மட்டும் கிளியறாய் விளங்கீச்சிது . எனக்கு சீவியத்தில மனிசி கலியாணம் செய்து வைக்காது எண்டு. நானும் ஒரு முடிவோடை,
"அம்மா சொல்லிறனெண்டு கோவிக்கப்படாது.எனக்கு இப்ப நாப்பது வயசு ஆயிட்டிது.நான் இனி கலியாணம் செய்யிறதாய் அபிப்பிராயம் இல்லை".
"ஏன் அப்பு எங்களுக்காக நீ எவ்வளவை செய்தனி.நான் சொல்லுறதை கேள் அப்பு.நான் கண்ணை மூட முதல் என்ரை பேரப்பிள்ளையை பாக்க வேணும்.ஏன் அப்பு உனக்கு கலியாணம் வேண்டாம்"?
" ஏனோ !!!!!!!!!! ஏனெண்டால் நீங்கள் என்னை வேள்விக் கிடாயா வளத்துப்போட்டியள்.இந்தக்கிடாய்க்கு கலியாணமெல்லாம் வேண்டாம்".
13 ஆவணி 2012
Comments
Post a Comment