Skip to main content

நெருடியநெருஞ்சி -26




நாங்கள் புகையிரத நிலையத்தில் நுளைந்தபொழுது அதிக சனக்கூட்டம் இருக்கவில்லை . சின்னத்தான் புகையரதமேடை சீட்டு எடுக்கப்போய் விட்டார். நான் புகையரத நிலையச் சூழலை விடுப்புப் பார்க்கத்தொடங்கினேன். இப்பொழுதும் இராணுவ வாகனங்கள் படையனரை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தன ,அவர்கள் கிராமங்களுக்குப் போவற்கு. சீருடைகளின் பிரசன்னத்தால் ஒருவித இறுக்கமான சூழ்நிலை அங்கு பரவியிருந்தது . இப்பொழுது மக்கள் மெதுமெதுவாக புகையிரத நிலையத்திற்குக் கூட்டம் சேர்த்தார்கள் . நான் சின்னத்தானுடன் , நான் முன்பு தலையிடி போக்கின மூலைத் தேத்தண்ணிக் கடைக்குப் போனேன் . நாங்கள் இருவரும் பச்சைத் தேத்தண்ணியை எடுத்துக்கொண்டு ஆளுக்கு ஒவ்வொரு சிகரட்டின் முனையைச் சிவப்பாக்கினோம். நான் மீண்டும் என் கண்களால் சுற்றாடலைத் துளாவினேன்.

அந்தப்புகையிரத நிலையம் ஆகப்பெரிதாகவும் இல்லாது , சிறியதாகவும் இல்லாது அடக்கமாக இருந்தது . அங்கே , இப்பொழுதும் அதே வெள்ளைச் சீருடையில் , தலையில் தொப்பியுடன் புகையிரதநிலைய அதிகாரிகளைக் கண்டேன். எங்களை ஆண்ட வெள்ளைகள் தங்கள் நிலையை மாற்றி இரண்டு மூன்று தலைமுறை ஆனாலும் இவர்கள் மட்டும் மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்கள். என்னைச் சுற்றி இரண்டு மூன்று தேத்தண்ணிக்கடைகள் இருந்தன. அதில் எல்லோரும் தேத்தண்ணி குடிக்கும் மும்மரத்தில் இருந்தார்கள். கடைகளின் முன்னால் கதலி , இதரை வாழைக்குலைகளும் , அன்றைய பத்திரிகைகளும் தொங்கின . எனக்குப் பத்திரிகைகளில் மேய விசேடமாக ஒன்றும் இருக்கவில்லை . இறந்ததாகச் சொன்ன புலியை எப்போதும் உயிர்ப்பிக்கின்ற சாரம்சங்களே அதில் தெரிந்தன.அதிலும் உள்ளுக்கை இருந்து சரத் வேறு நல்ல பம்பல் அடிச்சுக் கொண்டிருந்தார். வெளியே இருந்து நெம்பிய சரத்தின் நிலமை இன்று கவலைக்கிடம்.......... இதை , நான் சிங்கள தேசிய இனவாதப் பூதத்தின் அதிஉயர் கோரப்பதிப்பாகவே உணர்ந்தேன். சிங்களக் கிறீஸ்தவ பரம்பரைகளால் ஆளப்பட்ட பௌத்தம் , பின்பு விச ஊசி அடித்துப் பூதமாகி இன்று இரண்டு இனத்தையும் விழுங்கிய நிலையையும் கண்டேன்.எனது விரல் நுனி சுட்ட எரிவினால் எனது சிந்தனை கலைந்தது.நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

மக்கள் கூட்டத்தால் புகையிரத நிலையம் முழி பிதுங்கியது. யாழ்தேவி வருவதற்கான அறிவிப்பு சிங்களத்தில் , தமிழர்கள் செறிந்து வாழும் இடத்தில் தொடங்கியது.எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்ன சொல்கின்றார்கள் ? என்பது போல் மனைவியைப் பார்த்தேன். அவா ஒர் குறுநகையுடன் யாழ்தேவி வரப்போவதாகச் சொன்னா. நாங்கள் எல்லோரும் புகையிரதமேடையில் போய் நின்று கொண்டோம்.எனக்கும் யாழ்தேவிக்குமான உறவு எண்பத்தி நாலுகளுடன் முற்றாகவே அறுந்து விட்டது. நான் இந்தியாவில் படித்த காலங்களில் , விடுமுறைக்கு வந்து யாழ்தேவியில் பயணப்பட்டேன்.அதன்பின்பு இது தான் முதல்தடவையாகையால் யாழ்தேவியைப் பற்றிய எதிர்பார்ப்பால் மண்டை சூடாகியது.

சிறுவயதில் கோண்டாவிலுக்கு அப்பாச்சி வீட்டிற்குப் போனால் , பின்னால் உள்ள தண்டவாளத்தில் காதை வைத்து யாழ்தேவியின் வருகையைக் கேட்டு , தண்டவாளத்தில் ரின்பால் பேணி அல்லது சில்லறைக் காசுக் குற்றியை வைத்து அதன்மேல் யாழ்தேவியை ஓடவிடுவது எங்களுக்கு முக்கியபொழுது போக்கு. அன்றய காலகட்டத்தில் யாழ்ப்பாண மேட்டுக்குடிகளின் அந்தஸ்து அடையாளமாக யாழ்தேவியும் தபால் , சேவையுமே பெரிய பங்கு வகித்தன. கோவில் திருவிழாக்களிற்கு வரும் கொழும்ப அரசசேவைக் கனவான்கள் இந்த இரண்டில் ஒன்றில் வந்ததாகப் பீற்றிக்கொள்வார்கள்.பின்பு இதே கனவான்கள் கப்பல்களிலும் , கிளாலியாலும் அல்லாடியது வேறுகதை.

தூரத்தே சிறிது இரைச்சலும் ஒளிப்பொட்டும் தெரிந்தன , மக்கள் திமிறினார்கள். புகையிரத என்ஜின் நிற்கப்போகும் இடத்திற்கு அருகாமையில் ஒரு அதிகாரி கையில் ஓர் ரெனிஸ் மட்டையப் போன்ற ஒரு வளையத்தை வைத்துக்கோண்டு நின்றார். யாழ் தேவி ஹோர்ணை அடித்துக்கொண்டு புகையிரத நிலையத்திற்குள் நுளைந்து கொண்டிருந்தது. அப்பொழுது கையில் வளையத்தை வைத்திருந்தவர் சாகசம் செய்பவர் போல் யாழ்தேவியுடன் ஓடி வளையத்தைக் கொடுத்து வளையத்தை வாங்கிக்கொண்டார். உண்மையில் எனக்கு இதைப்பார்க்க சிரிப்பாக இருந்து. இதுதான் வெள்ளை விசுவாசத்தின் உச்சக்கட்டமோ ? புகையிரதம் நின்றதும் மக்கள் சுழண்டு பொங்கியது எனக்கு எரிச்சலாக இருந்தது. நாங்கள் முற்பதிவு செய்ததால் ஓரமாக நின்று அவர்கள் ஏற வழிவிட்டேன். சின்னத்தான் எங்கள் பயணப்பொதிகளை உள்ளே ஏற்றினார். புகையிரதம் புறப்படத் தயாராக புகையிரத நிலைய அதிகாரி பச்சக் கொடி காட்ட விசில் சத்தம் கேட்டது. இதைப் பரம்பரைகள் கடந்தாலும் விடாப்படியாகச் சம்பிரதாயமாகவே வைத்திருந்தார்கள். நானும் மனைவியும் அத்தான்களிடம் விடைபெற்றுக்கொண்டு எமது இருக்கைகளைத் தேடிப் போனோம்.

அந்த முதல் வகுப்புப் பெட்டி ஓர் சிறய ரக விமானத்திற்குண்டான வசதிகளுடன் இருந்தது. விசாலமான நடைபாதையும் , வசதியான இருக்கைகளுமாக ஐரோப்பியப் புகையிரதங்களை எனக்கு நினைவுபடுத்தியது. மேலே பல மின்விசிறிகள் நாலாபக்கமும் சுழண்டடித்துக் காற்றைத் துப்பிக் கொண்டிருந்தன.எனது வியர்த்த உடம்புக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது. நாங்கள் எமது இருக்கைகளைத் தேடிப்பிடித்து வசதியாக இருந்துகொண்டோம்.

இப்பொழுது யாழ்தேவி வந்ததிசையிலேயே நகரத்தொடங்கயது. நான் சந்தேகத்துடன் மனைவியை நோக்கினேன்.எனது பார்வையைப் புரிந்து கொண்ட மனைவி , ஓமந்தைக்கு பாதைமாறி வருவதற்காகப் போகின்றது என்று சொன்னா.இப்பொழுது யாழ்தேவி ஆடி அசைந்து ஓமந்தை நோக்கி நகர்ந்தது.அருகே இருந்த வீடுகளின் லைற் வெளிச்சங்கள் பொட்டுக்களாகத் தெரிந்தன.எனக்கு ஓமந்தை என்றவுடன் மீண்டும் வியர்த்தது. ஆமியின் தொல்லைகள் இங்கும் இருக்குமோ ? என்று மனம் பலவாறாக அலைபாய்ந்தது. ஓமந்தையை அடைந்த யாழ்தேவி அங்கேயே நின்று சில நிமிடங்களை விழுங்கித் துப்பியது. தூரத்தே படைகள் ஏறுவதும் , இறங்குவதும் மங்கிய ஒளியில் தெரிந்தது. நான் யன்னலினூடக விடுப்புப் பாத்துக்கொண்டிருந்தேன். மீண்டும் யாழ்தேவி மெதுவாக நகர்ந்து வேகமெடுத்தது. வவுனியா மெதுவாக என்னிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது.






தொடரும் 



Comments

Popular posts from this blog

பரிசுகெட்ட ஊரிலை பரபரப்பு சந்திப்பு-பத்தி

நேற்று இரவு கொஞ்சம் வெள்ளன படுக்கவேணும் எண்டு யோசிச்சன். அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. இண்டைக்கு. பாரிசுக்கு போற புறநகர் கோச்சி எல்லாம் ஸ்ட்ரைக் செய்யிறாங்கள். அதோடை இப்ப ரெண்டு கிழமைக்குமேலை எயார் பிரான்ஸ் காறங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு கொண்டிருக்கிறாங்கள். வெள்ளன படுத்தால்தான் காத்தாலை எழும்பி முதல் கோச்சியை பிடிச்சு வேலைக்கு போகலாம். என்ரை யோசினையிலை மண் விழுந்த மாதிரி பக்கத்திலை இருந்த கைத்தொலை பேசி அடிச்சுது. மெதுவாய் ஒரு கள்ளக் குணத்திலை அதை எட்டி பாத்தன். சோபா சக்தியின்ரை பேர் மின்னீச்சுது. இந்த நேரத்திலை இவர் ஏன் எடுக்கிறார்?? “கோமகா… அவதானமாய் நடந்துக்கோ ராசா” எண்டு என்ரை மனம் ஸ்ட்ரிக் ராய் ஓர்டர் போட்டுது. நான் ரெலிபோனை எடுக்க , மற்றப்பக்கம் “அண்ணை நான் சோபாசக்தி கதைக்கிறன்.நாளைக்கு நீங்கள் வேலைமுடிய ஒருக்கால் லாச்சப்பலுக்கு வாங்கோ. உங்களுக்கு ஒராளை அறிமுகப்படுதவேணும்” எண்டுபோட்டு என்ரை அபிபிராயத்தை நான் சொல்ல முதல் அண்ணாத்தை டெலிபோனை கட் பண்ணிபோட்டார். எனக்கு பண்டிவிசர் வந்திது. நான் மாற்றாரை விடிய பாக்கலாம் எண்டு படுக்கப்போனன். நான் காத்தாலை மூண்டு மணிக்கே எழும்பி ப...

அறத்துப்பால்-இல்லறவியல்-புகழ்- Renown- La gloire- 231 - 240

  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 231 வறியவர்க்குப் பொருள் ஈதல் வேண்டும் . அதனால் புகழுண்டாக வாழ வேண்டும் . அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியம் பயன் வேறு யாதும் இல்லை. எனது கருத்து: மனிசனாய் பிறந்தால் தன்னாலை நாலுபேருக்க உதவியா இருக்கவேணும். அதுவும் கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்கு உதவியா இருக்கவேணும். அப்பதான் அவன் செத்தாலும் சனங்களின்ரை மனசில வாழுவான்.  See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain. Donnez! vivez avec gloire! Il n’y a pas de profit plus grand à l’homme que celui-là. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 232 இவ்வுலகில் பேசுவோர் சிறப்பாகப் பேசுவன எல்லாம் தம்மிடம் வந்து யாசிப்வர்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவோரிடம் நிற்பதாகிய புகழையேயாகும். எனது கருத்து: அந்தக்காலத்திலை பாத்தியள் எண்டால் இந்தப்புலவர்மாருக்கு வேலையே அரசன்மாரை ஏத்தி ஏத்தி கவிதையள் எழுதிறது தான். ஏனெண்டு நினைக்கிறியள் ?அப்பிடி அரசன்ரை புகழுகளை சொன்னால் அவரும் ஏழைஎழியதுகளுக்கு குடுப்பரெல...

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையை தேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் து...