மிகவும் நீண்ட காலத்திற்குப் பின்பு இ.போ.சா பஸ்சில் பயணம செய்வதால் ஒரு இனம்புரியாத குறுகுறுப்புக்குள் உள்ளானேன். பஸ்சில் பெரிய மாற்றங்களை என்னால் காணமுடியவில்லை. வவுனியா பஸ்நிலையம் அந்தக்காலை வேளையிலும் பரபரப்புகுப் பஞ்சமில்லாமல் இருந்தது. டறைவர் பஸ்சின் ஹோர்னை அடித்துப் புறப்படுவதை அறிவித்துக் கொண்டிருந்தார். வெளியே ரீ குடிச்சுக் கொண்டு நிண்ட கொண்டக்டர் பஸ்சில் ஏறி விசில் அடிக்க பஸ் வவுனியா பஸ்நிலையத்தில் இருந்து வெளிக்கிட்டது. கொண்டக்ரறைப் பார்க்கும் பொழுது எனக்கு பரித்தித்துறை 750 லைனில் எட்வேர்ட் (செல்லப்பேர் மீசை) உடன் வேலை செய்தவரின் ஞாபகம் வந்தது(பெயர் ஞாபகம் இல்லை இங்கு சார்செயில் நகரில் அவரை ஒருமுறை சந்தித்தேன்). எண்ணை தோய்ந்த சுருட்டைத் தலைமயிர், நக்கல் நளினமான கதைகள் என்று பஸ்சைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். தூரத்தே வவுனியா மெல்லமெல்ல மறைந்து கொண்டிருந்தது. பஸ் ஏ9 பாதையில் வேகமெடுத்தது. பஸ் டறைவர் அடிக்கடி காட்டு விலங்குகளைக் கலைக்கப் பாவிக்கும் ஹோர்னை அடித்து கொண்டு பஸ்சை ஓட்டியது எனக்கு ஒருவித எரிச்சலைக் கொண்டு வந்தது. இவர்கள் சுற்றுப்புறச் சூழல் கெடுவதைக் கவனிக்க மாட்டார்களோ? ஆனால் இ.போ.சா பஸ்சில் எனக்குப் பிடித்தது அவர்கள் போடும் பாடல்கள்தான். எப்பொழுதும் 80களில் வந்த பாடல்களைத்தான் போடுவார்கள். இதை முதன்முறையாக 79களில் பரித்தித்துறை 750 லைனில் பஸ்சிற்கு " வசந்தமாளிகை " என்று பெயரிட்டு ஒடினார்கள்." வசந்தமாளிகை " பெயரைப்போல செமி லக்ஸசறி பஸ்சாக ஓடியது. இதைக் கூடுதலாக ஓட்டியவர் எட்வேர்ட் தான். இந்த பஸ்சுக்கென்றே அப்போது ரசிகர் பட்டாளம் இருந்தது. பகல்ப் பொழுதில் ஏ9 பாதையைப் பார்பதால் இரண்டு பக்கமும் தலயைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே வந்தேன். பஸ் தாண்டிக்குளத்தை நெருங்கிக்கண்டிருந்து. பஸ் டைறவர் வலு விண்ணன் தான். ஒற்றைவழிப் பாதையான ஏ9 இல் எதிரே வரும் வாகனங்களுக்கு வேகத்தைக் குறைக்காமலே விலத்திச் சென்றது எனக்கு வியப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது. சிங்கத்தின் கோரப்பற்களின் வடுக்கள் இருபக்கமும் ஆளப்பதிந்து நிலங்களை விகாரப்படுத்தியிருந்தன. பாதையின் இரண்டு பக்கமும் பல அகண்ட குழிகழும் கருகி மொட்டையான மரங்களும, அன்னியப் படைகள் எமது மண்ணைக் கற்பழித்ததிற்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. பஸ் இடிக்கிடையே நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டது. அது உத்தியோகத்திற்கப் போவோர்களாலும் பள்ளி மாணவர்களலும் நிறைந்தது. பள்ளிமாணவர்களைப் பார்கும் பொழுது எனக்கு என்னையறியமலேயே எனது கல்லூரி காலம் ஞாபகம் வந்தது. அவர்களின் பாடப்புத்தகங்களை யூனிசெப் புத்தகப் பை நிறைத்திருந்தது. அவர்களின் தோற்றத்தில் பெரிதான மாற்றங்களை காணமுடியவில்லை. நான் கல்லூரிக்குப் போன மாதிரியே, படிய இழுத்த தலைமையிரும் இடையில் திருநீத்துக்குறியமாக இருந்தார்கள். ஒருசிலர் தமது புத்தகப்பைகளை இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் கொடுத்து விட்டு "கெத்தாக" நின்றதையும் காணக்கூடியதாக இருந்தது . நாங்கள் விட்ட அதே விளையாட்டு, எனக்கு சிரிப்பாக இருந்தது. பஸ் கொண்டக்ரர் எங்களுக்கு அருகில் பயணச்சீட்டுப் போட வந்தார். எனது மனவி வாயெடுத்த என்னை சுரண்டிவிட்டு
"இரண்டு பரித்தித்துறை " என்றா.
எங்களை நிமிர்ந்து பாத்தவர்,
"கோவிக்க கூடாது எனக்கு தெரிஞ்சு ஒரு பரித்தித்தறை தான் இருக்கு "
எனக்குச் சிரிப்பை அடக்கமுடியவில்லை. எவ்வளவுதான் சோகங்கள் ரணவலிகள் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களால் தான் உலகம் உருளுகின்றது. சிரிப்பைத் தொலைத்த புலத்து மக்கள் நாங்கள் எங்கே? இவர்கள் எங்கே? பஸ் வேகத்தைக் குறைத்தது முன்னும் பின்னும் படைச் சிப்பாய்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களும் காவல் பாத்துக் களைத்து படைமுகாமக்குத் திரும்புகின்றார்கள். இல்லாத புலிக்குக் காவல் காக்கும் மோடையர்கள். பாதையில் பல இடங்களில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பஸ் பயணிக்க சிரமப்பட்டது. பாதையில் இருபக்கமும் ஒரு கி.மீ க்கு ஒன்றாக பங்கர் சென்றிகளைக் கண்டேன். முதல் முறையாக பங்கரைப் பார்த்த ஆள் நானாகத் தான் இருப்பேன். சதுரமாக தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு மரக்குற்றிகளை வெட்டி அடக்கி , அதில் ஒரு சிறிய சதுர ஓட்டையின் மூலம் வெளிச்சுற்றாடல்களை அவதானித்துக் கொண்டிருந்தான் ஒரு படைவீரன். இந்த வெய்யிலிலும் சீருடையுடன் எப்படி இவர்களால் இந்தக் கிடங்கினுள் பொட்டல் வெளியில் இருக்கமுடிகின்றது? இவர்களும் மனிதர்கள் தானே ? யுத்தம் முடிந்தாலும் இயல்பு வாழ்க்கையை தொடரும் உரிமை மறுக்கப்பட்ட பிறவிகள். பாக்கப் பாவமாக இருந்தாலும் இவர்களது கோரமுகம் கண்டு என்மனம் இறுகியது. பஸ் ஓமந்தையை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தே சோதனைச்சாவடி தெரிந்தது. பஸ் மெதுவாகச் சோதனைச் சாவடியில் போய் நின்றது. இந்தமுறை பயமில்லாமல் மனைவியுடன் இறங்கினேன். கொண்டக்ரரும் தன்னைப் பதிய இறங்கினார். நாங்கள் மூவரும் சோதனைச்சாவடி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
June 19, 2011
தொடரும்
தொடரும்
Comments
Post a Comment