முப்பாட்டன் பெயர் : நாகலிங்கம்
பாட்டன் பெயர் : இளையதம்பி
தொழில் : இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் மலாயா ( மலாயன் பெஞ்சனியர் )
தகப்பன் பெயர் : ஆழ்வார்க்கு அடியான்.
பெயர் : சின்னதம்பி.
சாதி :வீரசைவ வேளாளர்.
பொழுது போக்கு : தவறணையும் வெண்டிறேசனும்.
000000000000000000
எனக்கு சந்திரவதனா அக்காவை இப்பொழுதும் நன்றாக நினைவு இருக்கின்றது . எனது சிறுவயது பிராயம் பெரும்பாலும் அக்காவுடனேயே கழிந்திருக்கின்றது . அத்துடன் சிறுவயதில் அக்காவிடம் டியூசனும் படித்திருக்கின்றேன் . பெயருக்கு ஏற்றவாறு சந்திரவதனா அக்கா மிகவும் அழகாக இருப்பா . வெள்ளையும் கறுப்பும் இல்லாத நடு நிறத்தில் உயரமான தோற்றமும் , அகன்ற மார்புகளும் , பெரிய அகன்ற விழிகளும் , அளவான முன்புறங்களும் , சின்னஞ் சிறிய இடுப்பும் , என்று சந்திர வதனா அக்காவை சினிமா ஸ்டார் மட்டத்துக்கு உயர்த்தி இருந்தன . அப்பொழுது எங்கள் ஊர் ரோமியோக்களில் இருந்து சுற்று வட்டார ரோமியோக்கள் எல்லோருமே சந்திரவதனா அக்காவை யார் விழுத்துவது என்பதில் போட்டியே இருந்தது. இதனால் அவா எங்கு போனாலும் என்னை தன்னுடன் கூட்டிக்கொண்டு செல்வா . நானும் அக்காவின் கையை பிடித்துக் கொண்டு பெரிய புழுகத்துடன் அவாவுடன் செல்வேன் . சந்திர வதனா அக்கா ஒரு புத்தக பூச்சி . எப்பொழுதும் பெரிய பெரிய நாவல்களை தனது வீட்டு முன் விறாந்தையில் வாசித்துக்கொண்டிருப்பா . காலை ஒன்றின் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு , சிறிய கால் ஆட்டலுடன் ஒரு கை அவாவின் நீண்ட தலை மயிரை மெதுமெதுவாக தடவிக்கொண்டிருக்க சந்திரவதனா அக்கா புத்தகம் வாசிக்கும் அழகே அழகு .
00000000000000000000000000000000000
சினத்தம்பியரை எங்கள் ஊரில் தெரியாதவர்கள் இல்லை. பரம்பரை பணக்கரதனமும் கொழுத்த சாதி தடிப்பும் அவரை படங்களில் வரும் ஊர் நாட்டாமை மட்டத்தில் வைத்திருந்தன .சினதம்பியர் எப்பொழுதும் எட்டு முழவேட்டியுடன் கழுத்தில் புலிநகம் வைச்ச இரட்டை பட்டு சங்கிலி போட்டிருப்பார் .அதை வெளியே காட்டவேண்டும் என்பதற்காகவே சின்னத்தம்பியர் ஒருபோதும் மேலே உடுப்பு போடுவதில்லை .ஏதாவது விசேடங்கள் என்றால் மட்டும் நாசனல் அணிவார். சின்னதம்பியருக்கு எப்பொழுதும் மற்றவர்களை மட்டம் தட்டி தனது குலப் பெருமைகளை அவிட்டுவிடுவதில் அலாதி பெருமை . இதனால் நாங்கள் எப்பொழுதும் அவரை செல்லமாக " வெண்டிறேசன் சின்னதம்பி " என்றே கூப்பிடுவோம். சின்னதம்பியருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. யாழ்பாணத்து இயற்கை தந்த கள்ளை குடிப்பதில் அவர் ஒரு பெருங்குடிமகன். அதிலும் சின்னகுட்டியின் தவறணைக்குப் போய் சின்னக்குட்டியின் விசேட தயாரிப்பில் வந்த கள்ளை மணலில் குந்தி இருந்து பனை ஓலைப் பிளாவில் குடித்தால் தான் அவருக்கு குடித்த கள்ளு பத்தியப்படும். இந்த இடத்தில் மட்டும் சின்னத்தம்பியர் தனது சாதித் தடிப்பை தளர்த்தி இருந்தார். அவர் தவறணைக்குப் போனாலே அங்கு இருப்பவர்களின் தோள்களில் இருந்த துண்டுகள் தானாகவே கமக்கட்டுக்குள் போய் விடும்.
சந்திரவதனா அக்கா இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டா. சின்னதம்பியரிடம் புறோக்கர் கனகசபை குடுக்காத சாதக்குறிப்புகள் இல்லை. சின்னத்தம்பியர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வரு கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார். கனகசபையும் சின்னதம்பியரை விடுவதாக இல்லை .இப்பொழுது எல்லாம் சந்திரவதனா அக்கா முன்பு போல வெளியே வருவதில்லை. வீட்டினுள் இருந்த பூந்தோட்டமே அவாவின் உலகமாக இருந்தது. காலம் தனது கடமையை விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய அவாவின் கன்னக்கதுப்புகளில் இலேசாக இள நரை எட்டிப்பார்க்கத் தொடங்கியது. எனக்கு இப்பொழுது சந்திர வதனா அக்காவைப் பற்றி ஒரே கவலையாக இருந்தது. சின்னதம்பியரில் அளவு கடந்த வெறுப்பே எனக்கு மிஞ்சி இருந்தது. சந்திரவதனாக்கா இப்பொழுது முதிர்கன்னியாகவே வந்துவிட்டா. யாருடனும் பெரிதளவில் கதைக்காது ஒருவித உறைநிலையில் சந்திரவதானாக்கா நடமாடிக்கொண்டு இருந்தா. நான் ஒரு நாள் பொறுக்காமல் அக்காவிடம் , " அப்பாவை நம்பினால் உங்களுக்கு கலியாணம் நடவாது . நான் உங்களை கலியாணம் செய்யிறன் அக்கா . வாங்கோ நாங்கள் விசுவமடு பக்கம் போய் இருப்பம் " . என்று சொல்ல , சந்திரவதனா அக்கா , " முளைச்சு மூண்டு இலை விடலை அதுக்குள்ளை கதையளை பார் . போய் ஒழுங்காய் படிக்கிற வேலையளை பார் . இனிமேல் பட்டு இப்படியான எண்ணங்களோடை இங்கை கால் அடி வைக்காதை". எண்டு செப்பல் பேச்சு பேசிவிட்டா . எனக்கு அக்காவில் கோபத்திற்குப் பதிலாக கழிவிரக்கமே தோன்றியது .
அந்த நிகழ்வுக்குப் பின்பு நான் சந்திரவதனாக்காவை சந்தித்து மாதங்கள் இரண்டுக்கும் மேலாகி விட்டன. ஒருநாள் மாலை நான் ரியூசன் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் இருந்த தவறணைக்கு முன்னால் சின்னதம்பியரும் புறோக்கர் கனகசபையும் கட்டிப்பிரண்டு கொண்டிருந்தார்கள். சின்னத்தம்பியர் வேட்டி அவிழ்வது தெரியாமல் நிறை வெறியில் கனகசபையை அடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயில் இருந்து தூசணம் துவள் பறந்தது. நான் சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரையும் பிடித்து விலக்கி விட்டேன். என்னைக் கண்டவுடன் சின்னதம்பியரிடம் வெண்டிறேசன் கதையள் கூடி விட்டன. « தம்பி……. இவன் கனகசபையன் என்ன துணிவிலை என்னட்டை ஐஞ்சு குடியாரிட்டை என்ரை மோளை குடு எண்டு கேட்டு வரலாம் ?? எங்கடை சாதி சனம் எங்கை அவங்கள் எங்கை ?? » என்று சின்னதம்பியரின் குரல் எகிறிப் பாய்ந்தது. நான் இருவரையும் சமாதானப்படுத்தி சின்னதம்பியரை எனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு போனேன். சந்திரவதனாக்காவுக்கு கதை முதலே போய் வாசலில் பத்திரகாளியாக நின்றிருந்தா. என்னை கண்டவுடன் அக்காவிற்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சின்னத்தம்பியர் தங்கள் குடும்ப மானத்தை வித்துதள்ளுவதாக மூக்கை சிந்தினா. என்னால் எந்தப்பதிலையும் சொல்ல முடியாமல் இருந்தது. அவாவை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.
00000000000000000000000000000000000000
ஒருநாள் உலக அதிசயமாக கனகசபை மூலம் சின்னத்தம்பியர் ஒரு சம்பந்ததை சந்திரவதனாக்கவுக்கு முற்றாகி இருந்தார். மாப்பிள்ளை கனடாவில் இருந்து வந்ததாய் ஊரில் கதை அடிபட்டது. சந்திரவதனா அக்கா நீண்டகாலத்துக்கு பின்னர் முகமலர்ச்சியுடன் வளைய வந்து கொண்டிருந்தா. இதுதான் கலியாணக்களையோ என்று மனதில் எண்ணி கொண்டேன். என்றுமே கடவுளை கும்பிடாத நான் அன்று மட்டும் சந்திரவதனாக்கா. இனியாவது சந்தோசமாக வாழ வேண்டும் என்று கும்பிட்டேன். சின்னத்தம்பியர் ஊரே மூக்கில் கை வைக்கும் படி கலியாண வீட்டை நடாத்தினார். அதில் அவரின் குடும்ப பெருமையே தூக்கலாக இருந்தது. காலம் என்ற கடவுளை நாங்கள் எங்கள் விருப்பத்துக்கு எதிர்பார்க்க காலத்தின் தீர்ப்போ எங்களுக்கு மாறாகவே சிலவேளைகளில் நடந்து விடுகின்றது. சந்திரவதனாக்காவின் வாழ்விலும் வஞ்சகத் தீர்ப்பே நடந்தது. யார்கண் பட்டதோ தெரியவில்லை கலியாணம் நடந்தஅன்று இரவே மாப்பிள்ளை யாரிடமும் சொல்லாமல் ஓடிவிட்டார். சந்திதிரவதனாக்கா இடிந்து போய் விட்டா. காலப்போக்கில் இதையே நினைத்து சின்னதம்பியரும் போய் சேர்ந்துவிட தனித்து விடப்பட்ட சந்திரவதனாக்கவை பின்பு ஒரு நாள் நகைகளுக்காக ஒருசிலர் கோடாலியால் கொத்தி கொலை செயப்பட்டது தனிக்கதை .
July 16, 2014
ஆக்காட்டி
03 வைகாசி 2014
Comments
Post a Comment