Skip to main content

நெருடிய நெருஞ்சி- 18.





பாமினிக்கு உதவியது மனதிற்குச் சந்தோசமாக இருந்தாலும் , அவள் சொன்ன கதைகளின் தாக்கம் என்ன விட்டு , விட்டுச் சாட்டையால் அடித்தது . அவள் இந்தச் சிறுவயதில் எத்தனை கொடுமைகளை அனுபவித்து விட்டாள் . சிறுவயதில் எப்படியெல்லாம் கவலைகள் இல்லாது துள்ளலுடன் இருந்தோம். இப்போது காயடிக்கப்பட்ட மாடுகள் மாதிரியல்லவா போய்விட்டோம் . என் மனது கனமாகிக் கண்கள் செம்மை படர்ந்தன . வீட்டை அடைந்தபொழுது தங்கைச்சியும் , மனைவியும் முன் விறாந்தையில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் . எனது சிவந்த கண்களைப் பார்த தங்கைச்சி பதறியபடியே ,

"என்ன செய்தனி? என்ன நடந்தது"?

"அதொண்டுமில்லையடி , தரவைக்கை போனன் புழுதி அடிச்சுது , கண்ணைக் கசக்கிப் போட்டன்".

என்றவாறே நான் நேராக கிணத்தடிக்குப் போனேன்.உடம்பு வியர்வையால் கசகசத்தது.தொட்டியில் நிறைந்திருந்த தண்ணியை அள்ளி உடம்பில் ஊற்ரினேன் . என் மனதைப் போலவே தண்ணீரும் இளஞ்சூடாக இருந்தது . ஆசை தீர அள்ளி அள்ளி தண்ணீரை ஊற்ரினேன் . நான் அதிகம் குளித்தால் கொதித்த மனமும் உடலும் குளிர்ந்தன.உடலைத் துவட்டி உடுப்பை மாற்ரி வெளியே வர , தங்கைச்சி பிளேன் ரீயும் அச்சு முறுக்குடன் நின்றிருந்தாள் . நான் முறுக்கைத் தவிர்த்து பிளேன் ரீயை எடுத்துக் கொண்டேன்.

"முறுக்கையும் எடன்ரா".

"நான் முந்தின மாதிரி இப்ப சாப்பிடுறேல".

"நான் நீ வாறாய் எண்டு அக்கா சொல்லேக்கை , உனக்கெண்டு அவதிஅவதியா செய்தது".

என்று முகம் மாறியபடியே சொன்னாள் .

"சரி மூண்டு முறுக்கு எடுக்கிறன்".

என்றேன்,அவளின் முகம் மலர்ந்தது.

"இண்டைக்கு உனக்கு வெள்ளை அப்பமும், சம்பலும் செய்யப்போறன்".

"சரி உன்ர விருப்பப்படி செய்".

என்றவாறே,முன் கேற்ரடிக்கு ரீ கோப்பையுடன் நகர்ந்தேன் . இரவு மணி ஏழாகி இருட்டி இருந்தது . என்னுடன் வந்த வானரப்படைகள் நன்றாகக் களைத்துப்போய், அச்சு முறுக்கை ஆய்ந்து கொண்டிருந்தார்கள். பிளேன் ரீக்கு முறுக்கின் உறைப்பு நல்ல கூட்டாக இருந்தது.எங்கள் வீட்டு நாய் றொனியனின் ஞாபகம் திடீரென இப்பொழுது தான் வந்தது. நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில், மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன். ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது.மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது.தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன்.அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது,றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது. ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா.அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது.அவன் மண்ணிற நிறத்தில்,நெடிய உருவத்தில், அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான்.நான் தங்கைச்சியைக் கூப்பிட்டேன்.வந்தவளிடம் எடுத்த எடுப்பிலேயே,

"றொனியன் எங்கை"?

"உனக்குத் தெரியாதே? அம்மா போனகையோட அவன் வடிவாய் சாப்பிடுறேல. அங்கை கக்கூசுக்குப் பக்கத்திலை ஆள் படுத்திருக்கும், நீ பாக்கேலையே"?

"சும்மா நேரம் எண்டால் இப்ப நீ இங்கை உள்ளடேலாது".

"ஏன் சுகமில்லையே"?

"நீ போய்ப் பார்".

நான் அண்ணையின் மகனுடன் றொனியனைப் பார்க்கப் போனேன்.அங்கே எலும்பும் தோலுமாகப் றொனியன் படுத்திருந்தான்.நான் அருகே போய் அவனுடைய தலையைத் தடவினேன்.அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான், அவனுடைய வாய் திறந்து இருந்து.அதனால் துர்நாற்ரத்துடன் வீணீர் வடிந்து கொண்டிருந்தது.அவனது நிலமையை என்னால் துல்லியமாக உணர முடிந்தது . அண்ணையின் மகன் தான் இவனைக் குட்டியாகக் கொண்டு வந்தான் . நான் அவனிடம்,

"ஏன்ராப்பா இவனை டொக்ரரிட்டைக் காட்டேல"?

"நான் குட்டி மாமீட்டைச் சொன்னான் சித்தப்பா, அவாக்கு நேரமில்லையாம்".

அவனுடைய முகம் சோகத்தில் மூழ்கியது . எனக்குத் தங்கைச்சியில் கோபம் கோபமாக வந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? உயிர்கள் இவர்களுக்கு அவ்வளவு மலிவாகப்போய்விட்டதோ?

"சரி நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. நாளைக்கு இவனை டொக்ரரிட்டைக் கூட்டிக் கொண்டு போவம். நீயும் என்னோடை வா".

"சரி சித்தப்பா" .

அவனின் முகத்தில் மகிழச்சியின் ரேகை ஓடியது.இந்த நிலையில் இவனை தூக்கிக் கொண்டு டொக்ரரிடம் போகமுடியாது, அவரைத்தான் இங்கு வரப்பண்ணவேணும் என்று நினைத்தவாறே வீட்டிற்குள் நுளைந்தேன். தங்கைச்சியின் மகள் மாமா என்றவாறே ஓடியந்து காலைக் கட்டிக்கொண்டாள். அவளைத் தூக்கிக் கொண்டேன்.நேரம் 8 மணியைக் கடந்திருந்தது.நான் முற்ரத்தில் மாமரத்துக்குக் கீழ் கதிரையைப் போட்டு இருந்தேன். அண்ணை அண்ணி பிள்ளைகள் என்னைச் சுற்ரிவர இருந்தார்கள்.அண்ணை பழைய கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார். நானோ சுவாரசியமில்லாமல் "உம்" கொட்டிக்கொண்டிருந்தேன்.எனது மனமோ பாமனியையும், றொனியனையுமே சுற்ரிவட்டமிட்டது. எனது குற்ர உணர்வைப் பாமினியால் தீர்த்துக்கொண்டாலும்,பரந்தன் சந்தியில் சந்தித்த அக்காவிற்கு என்ன செய்தேன்? ஒரு வேளை உணவு அவாவிற்கும் பிள்ளைக்கும் போதுமா? என்னால் வடைப் பார்சல் தானே அவாவிற்குக் குடுக்க முடிந்தது?மனதைப் புளியம் விளார் கொண்டு அடித்தது போல் வலி ஏற்ப்பட்டது. இங்கு வந்ததே பிளையான வேலையோ? என் நினைவுகள் தவ்வித் தவ்வி அலைபாய்ந்தது. இடையில் அண்ணையை மறித்து,

"எங்கடை பாலசந்திரன் மச்சான் இப்பவும் இருபாலையிலை கிளினிக் வச்சிருக்கிறாரோ"?

"ஓம் வச்சிருக்கிறார்.அவர் இப்ப இளைப்பாறிவிட்டார். சனம் இப்ப அவருட்டை போறது குறைவு".

"ஏன் கேட்டனி"?

"இல்லை, இவன் றொனியனை ஒருக்கால் காட்டவேணும்.ஏன் அண்ணை இதுகளை நீ எல்லாம் பாக்கிறேலையே? நீ ஒரு பெரிய எழுத்தாளன், இயற்கை ஆர்வலன், உனுக்குமே எல்லாம் செத்துப்போச்சுது?"

என்று சாட்டை அடியாக வார்த்தையைத் துப்பினேன்.அண்ணை என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.

"உனக்கு இங்கதையான் நிலமை விளங்குதில்லை.என்ரை வேலை அப்பிடி, விதானையார் எண்டால் சும்மாவே? எனக்கு ஒண்டில்லை 3 அதிகாரங்களிட்டை வேலை செய்ய வேண்டிக்கிடக்கு.எனக்கு 24 மணித்தியாலமும் காணுதில்லை".

"அப்ப அண்ணை,நானும் என்ர மனிசியும் பிரான்ஸ்சில என்ன களவுக்கே போறம்".

நானும் பதிலுக்கு எகிறினேன்.சாப்பாட்டை முடித்து விட்டு வந்த தங்கைச்சி முகத்தில் கலவரத்துடன், என்ன உங்கை ரெண்டுபேரும் புடுங்குப்பாடு?,சாப்பிட வாங்கோ என்று வாய்க்கால் வெட்டினாள்.நான் சிரித்தபடி வா அண்ணை சாப்பிடுவம் என்றபடியே, பிள்ளைகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு சாப்பாட்டு அறைக்குப் போனேன்.அங்கு மேசையில் தங்கைச்சியும் மனைவியும் வெள்ளை அப்பத்தையும் பச்சைமிழகாய் சம்பலையும் வைத்திருந்தார்கள்.மனைவி எனக்கு 4 அப்பத்தை எடுத்து வைத்து, சம்பலையும் போட்டா.அண்ணை எனக்கு நேர் எதிரே இருந்தார்.பக்கத்தில் பிள்ளைகள் நெருக்கியடித்துக் கொண்டிருந்தார்கள்.நான் அப்பத்தை விண்டு வாயில் வைத்தேன். அம்மா ஓரளவு தங்கைச்சியை முன்னேற்ரியிருந்தா.ஆனாலும் மனைவி அப்பம் சுடுவது போல இல்லை.

சாப்பிடும்பொழுது நான் ஒன்றும் பேசவில்லை.முன்பு என்றால் அப்பாவுடன் நாங்கள் ஆறு பேரும் சாப்பிடும் பொழுது, சாப்பாட்டு மேசை எவ்வளவு கலகலப்பாக இருக்கும்? ஆனால் இப்பொழுது சிரிப்பைக் கடன் கேட்கின்றோம். பாழாய்ப்போன யுத்தமும் ஒவ்வொருவர் தனி வாழ்கை முறைகளை புரட்டியடித்ததைக் கண்கூடாகவே கண்டேன்.வீடியோ பிளேயரில் உள்ளது போல் றீப்பிளே பட்டன் இருந்தால் ஒருவேளை வாழ்க்கை நல்ல சுவாரசியமாக இருந்திருக்குமோ? நான் விரைவாக சாப்பாடை முடித்து விட்டு, சிகரட்டுடன் தனிமையை நாடினேன்.அந்த இருட்டில் சிகரட்டின் முனையே வெளிச்சமாக இருந்தது. இருட்டில் வௌவ்வால்கள் கூடிக் கும்மாளமிட்டன.கோப்பாயும் பாழடைந்து விட்டதோ?நாங்கள் எல்லோருமே படுத்து விட்டோம்.வெக்கையைப் போக்க மின்வசிறி பெரும் சத்தத்துடன் காற்ரை வாரியடித்தது. மனைவி படுத்தவேகத்திலேயே என்னை அணைத்தவறு உறங்கிப்போனா. எனக்கு மட்டும் கடவுள் சயனசுகத்தைத் தருவதில் கஞ்சத்தனம் காட்டகின்றார்.மனைவியின் கையை மெதுவாக எடுத்து வைத்துவிட்டு, கட்டிலில் எழுந்து இருந்து அம்மாவின் படத்தை உற்ருப் பாத்துக்கொண்டிருந்தேன். நேரம் 12 மணயைக் கடந்து விட்டிருந்தது. திடீரென முழித்த மனைவி,

"ஏன் நித்திரை கொள்ளேல"?

"வருகுதில்லை".

"ஏன்"?

நான் பமினியின் கதையைச் சொல்லி , பிள்ளையாருக்கு குடுக்க இருந்த காசை அவளிற்குக் குடுத்ததைச் சொன்னேன்.

"நல்ல விசயம் தானே பிள்ளையாருக்கு எத்தினை தரம் அம்மாவாலை குடுத்தனிங்கள்.அது ஒண்டுமில்லை உங்களுக்கு எல்லாம் புதுசு. நீங்கள் படுங்கோ".

நான் கண்ண இறுக்க மூடிக்கொண்டு வராத நித்திரையை வரச்செய்யத் தாக்குதல் நடத்தினேன். அதிகாலை பிள்ளையார் கோயில் மணியோசை என்னைக் கலைத்தது . ஒருவரும் எழுந்திருக்கவில்லை, ஞாயிற்று கிழமையின் சோம்பேறித்தனம் அவர்களுக்கு.நேரம் ஆறுமணியைத் தொட்டுக்கொண்டிருந்தது.மனைவி எழுந்து தனக்கும் எனக்கும் கோப்பி போட்டுக்கொண்டிருந்தா. நான் கையில் உமிக்கரியுடன் றொனியனைப் பர்க்கப் போனேன்.அவனது நிலை மோசமாக இருந்தது அவனால் எழும்பிக்கூட நிற்கமுடியவல்லை. என்னை அவன் பரிதாபமாகப் பார்த்தான். எனக்கு அம்மா என்னைப் பார்ப்பது போல் இருந்தது. நான் அவசரமாகக் கரியால் பல்லை மினுக்கிக், கிணற்ரில் இருந்து வாழியால் அள்ளி அள்ளிக் குளித்தேன்.சூரியன் மெதுவாக ஏறத் தடங்கி வெளிச்சம் வரத்தொடங்கியது.நான் உடுப்புகளை மாற்ரிக் கொண்டு வந்ததும் மனைவி கோப்பியை நீட்டினா.கோப்பியை வாங்கியவாறே முன் கேற்ருக்கு நகர்ந்தேன். மனவியும் தனது கோப்பியுடன் என்னுடன் வந்தா.

"இண்டைக்கு றொனியனுக்கு ஒரு முடிவு கட்டவேணும்ப்பா".

"ஏன்"?

"நீங்கள் அவனைப் பாத்தனிங்கள் தானே, அவனைப் பாக்க எனக்கு அம்மான்ர ஞாபகம் வருது".

"இப்ப என்ன செய்யப்போறியள்? பாலச்சந்திரன் மச்சானைக் கூப்பிட்டுக் காட்டுவம் . பின்னேரம் பரித்தித்துறைக்குப் போவம். நீங்களும் அவரைப் பாக்கேலத்தானே. சரி போட்டுக் கெதீல வாங்கோ".

ஒழுங்கையால் மாடுகளும், ஆடுகளும் மேச்சலுக்கு வரிசை கட்டிப் போய்க்கொண்டிருந்தன.பிறந்த கன்றுக் குட்டிகள் தாய் மாட்டுக்குப் பின்னால் பால்குடித்த வாயால் நுரை தள்ளத் தளிர் நடை போட்டன. நான் குடித்த கோப்பையை மனைவியிடம் கொடுத்து விட்டு, மச்சானைப் பார்க்கப் பெறாமகனின் சைக்கிளில் வெளிக்கிட்டேன். நான் ஒருவாறு தட்டத்தடுமாறி சைக்கிளில் ஏறி உழக்கினேன்.

கனகாலம் சைக்கிள் ஒடாததால் சைக்கிள் தண்ணி அடித்தமாதிரி ஓடியது . நான் றோட்டிற்கு வந்ததும் சைக்கிள் பலன்ஸ்சைச் சரியாக எடுத்தேன்.நெரிசல் குறைந்த றோட்டில் சைக்கிளை எட்டி மிதித்தேன். எனக்குப் பாலச்சந்திரன் மச்சானில் சின்னவயதில் இருந்தே ஒரு பிடிப்பு. இலங்கையின் மிகச் சிறந்த மிருகவைத்தியர், பல பதவிகள் அவரது திறமையால் தேடிவந்தன.பல மகாநாடுகளுக்கு அரசசார்பில் ஐரோப்பா முழுவதும் வருவார். ஒரு முறை 90 களில் பிரான்சில் என்னைச் சந்தித்தார்.இறுதியாக கால்நடைவளர்புப் பணிப்பாளராக இருந்தார் கோப்பாயை விட்டு நீங்காதவர்களில் அவரும் ஒருவர்.அவரை எந்த இடப்பெயர்வும் பாதிக்கவில்லை . ஓய்வெடுக்கும் வரை தனது நாட்டுமக்களுக்காகச் சேவையாற்ரிய ஒரு உதாரணமகன்.

நான் அவரது வீட்டு வாசலில் சைக்கிளைக் கொண்டுபோய் நிப்பாட்டினேன்.என்னைக் கண்டதும் வாய்கொள்ளாச் சிரிப்புடன்,

"வாடாப்பா எப்ப வந்தனி"?

"ஒருகிழமை மச்சான்".

"எனக்கு ஒரு உதவி உங்களாலை வேணும் ".

"சொல்லு".

"எங்கட றொனியனுக்குச் சுகமில்லை. ஒருக்கா வீட்டை வங்கோவன் மச்சான்.என்ர மனிசியும் உங்களைப் பாக்கவேணும் எண்டு ஆசைப்படுறா".

"ஏன் அவனுக்கு என்ன நடந்தது? இரு வெளிக்கிட்டுக் கொண்டு வாறன்".

நான் அவரின் வரவேற்பு அறையை நோட்டமிட்டேன். ஒரு புறத்தே மீன் தொட்டியில் மீன்கள் துள்ளி விளையாடின. ஒரு கூட்டில் இரண்டு சோடி காதல் பறவைகள் கிலுகிலுத்தன.வெளிக்கிட்டு வெளியே வந்தவர் கையில் ஒரு மெடிக்கல் கிட் இருந்தது.இருவரும் சைக்கிளில் வீட்டிற்குப் போனோம்.மச்சான் றொனியனை வடிவாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அவரைச்சுற்ரி எல்லாச் சின்னப்பட்டாளமும் நின்றனர் . மச்சான் சோதித்து விட்டு என்னைப் பார்த்தார்.றொனியனும் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான் .

"என்ன மச்சான் ஏதவது சொல்லவேணுமே"?

"இவங்களைப் போகச்சொல்லடாப்பா".

பிள்ளையள் குட்டிமாமி வரட்டாம் என்று மனைவி கூப்பிட்டா .

"சொல்லுங்கோ மச்சான்.கண்ணன் இவனைக் காப்பாத்தேலாது.ஆள் கனகாலம் இருக்காது. தொண்டைலை கான்ஸ்சர் வந்திருக்குது. வெள்ளனக் கூட்டியந்திருந்தால் ஆளை ஏதாவது செய்திருக்கலாம்".

"இப்ப என்ன செய்வம் மச்சான்".

"உனக்கு ஓம் எண்டால் சொல்லு. ஒரு ஊசி போட்டுவிடுறன் கருணைக்கொலைக்கு".

நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன் . பின்பு ஒரு முடிவுக்கு வந்தவனாக,

"சரி மச்சான் அப்பிடியே செய்வம்."

மச்சான் தனது கிட்டில் இருந்து ஊசியை எடுத்துச் சரி பார்த்து விட்டு,றொனியனின் முதுகில் ஊசியை ஏற்ரினார்.சிறிது நேரத்தில் அவனது உடல் சிறு துடிப்புடன் அடங்கியது. அண்ணையின் மகன் அழத்தொடங்கி விட்டான்.அவனை,வேறொரு நாய்க்குட்டி வாங்கித்தருவதாகச் சொல்லிச் சமாதானப் படுத்தினேன்.உள்ளே மச்சான் தங்கைச்சியைப் பேசுவது காதில் விழுந்தது.

நான் மச்சானைச் சாப்பிட்டு விட்டுப்போகும்படி சொல்லியிருந்தேன்.நான் எனது மனதைத் தேற்ரியவாறு மல்கோவா மா மரத்தடியில் றொனியனுக்கு கிடங்கு வெட்டினேன்.அவனை அதில் வடிவாகக் கிடத்தி விட்டு மண்ணை அள்ளி மூடினேன். அதில் ஒரு வேப்ப மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்ரினேன்.மத்தியானம் ஒப்புக்கு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்க மனம் பிடிக்காமல், பருத்தித்துறைக்கு இ போ சா பஸ்சில் கனத்த மனத்துடன் ஏறினேன் .







தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...