அக்கா அம்மா இல்லாத இடத்தில் இருந்து கதைத்தது என் கண்ணில் நீர் கட்டியது . நான் தொலைபேசியை மனைவிடம் கொடுத்தேன் . என்மனமோ அக்காவை , அவாவின் இறுதிக் காலத்தில் என்னுடனயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவாகவே முடிவு செய்தது . நான் வெளிக்கிடுவதற்கு குளிக்க ஆரம்பித்தேன் . தண்ணியில் குளோரின் நெடி மூக்கைத் துளைத்தது .அதில் சவர்காரம் நுரையாகப் பொங்கியது . நான் ஆனந்தக் குளியல் முடித்து வெளிக்கிட்டேன் . மனைவியும் நண்பியும் எமது பயணப்பொதிகளை வரவேற்பறையில் வைத்திருந்தார்கள் . நேரம் பத்துமணியை நெருங்கிக் கொண்டிருந்தது .நண்பியின் தம்பி தனது நண்பர்களது வானைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் நிப்பாட்டினான் . அதில் அவனும் அவனது நண்பர்கள் இருவரும் இருந்தனர் . மனைவி வெளிக்கிடுவதற்குப் போய்விட்டா . நானும் தம்பியும் பயணப்பொதிகளைக் கீழே இறக்கி வானில் அடுக்கினோம் . நான் மேலே ஏறிப்போய் நண்பியிடம் விடைபெறச் சென்றேன் . எமது பிரிவு அவர்கள் முகத்தில் அப்பட்டமாகவே ஒட்டியிருந்தது . தோழிகள் இருவரும் கண்ணீருடன் இறுக்கியணைத்து முத்தமிட்டனர் . நாங்கள் வானில் ஏறியிருக்க வான் புறப்பட்டது .கொழும்பு சாலைகளில் வாகனநெரிசல்கள் இல்லாததால் , வான் சீறிப் பாய்ந்தது . மனைவி தம்பியுன் குடும்பக் கதைகள் கதைத்துக்கொண்டு வந்தா . வான் இப்பொழுது களனிப்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த்து . எனக்கோ களனியாறின் தண்ணி சிவப்பாகவே தெரிந்தது . எவ்வளவு அப்பாவிகளை உள்வாங்கிய புண்ணிய ஆறு ? இப்பொழுது வான் விமான நிலயத்தை நெருங்கிவிட்டிருந்தது . நுளைவாயிலில் இராணுவப் பரிசோதனைகள் நடப்பது தூரத்தே தெரிந்தது . போர்முடிந்தாலும் இவர்களது பசிக்குத் தொடர்ந்து தீனி கிடைத்துக் கொண்டுதான் இருந்தது . அதுவும் நாட்டின் சர்வதேச விமானநிலயத்தில் . எமது வான் வேகத்தைக் குறைத்தது . எனது மனைவி இருவரது கடவுச்சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டா . சோதனைச்சாவடியை நெருங்கியதும் எமது கடவுச்சீட்டுகளை மந்திகள் குடைந்தன . என்னை உத்துஉத்துப் பார்த்தன . எனக்கு வெறுப்பு மண்டியது . பிரான்ஸ் காவல்துறை கூட என்னை இவ்வளவுக்கு நோண்டியதில்லையே ? எவ்வளவு பண்பாகக் கதைப்பார்கள் . எனக்கு இங்கு வாழ நினைத்த எண்ணம் மெதுவாக மங்கத் தொடங்கியது . எமது வான் அவர்களைக் கடந்து விமானநிலயத்தில் நுளைந்து நின்றது . நாங்கள் பயணப்பொதிகளை இறக்கிக்கொண்டே தம்பிக்கு விடைகொடுத்தோம் .அவர்களது பாதுகாப்புக் காரணங்களால் அவர்களை நாங்கள் நிற்பதற்கு அனுமதிக்கவில்லை .எமக்கு விடிய ஐந்துமணிக்கு விமானம் ஆகையால் நேரம் அதிகம் இருந்தது .நாங்கள் இருவரும் எச்சரிக்கையுடனேயே நேரத்தைக் கடத்தினோம் . நான் கோப்பி சிகரட் பத்துவதானாலும் மனைவி கூடவே வந்தாள் . நேரம் ஒரு மணியைக்கடந்திருந்தது . அவர்கள் பாதுகாப்புச் சோதனைகளை ஆரம்பித்தார்கள் . நாங்கள் பயணப்பொதிகளைப் போட்டுவிட்டு . குடியகல்வுப்பகுதிக்குப் போனோம் .எனது முகமோ இறுகிப்போயிருந்தது .எம்முடன் கதைத்தவாறே அந்த அதிகாரி கடவுச்சீட்டில் முத்திரையை ஓங்கி அடித்தான் . அதில் அவனது வெறுப்புத் தெரிந்தது .ஆனாலும் சிரிப்பு மாறாது என்னை இலங்கை பிடித்திருக்கின்றதா என்று கேணைத்தனமாகக் கேட்டான் . என்னால் புன்முறுவலைத் தான் பரிசாகக் கொடுக்கமுடிந்தது . என்மனமோ இதுதான் உங்கள் நாட்டிற்கு எனது இறுதி வருகை . அடுத்த வருகை எனது ஈழநாட்டிற்கு , ஈழம்ஏயார்வேஸ்சில் , பலாலி சர்வதேசவிமான நிலயத்திலேயே இறங்குவேன் . என்று கறுவிக்கொண்டது . எனது காலத்தில் இது நடக்கவேண்டும் என என்மனம் கடவுளை வேண்டிக்கொண்டது . நாங்கள் இருவரும் பயணிகள் கூடத்தில் போய் இருந்து கொண்டோம் . நேரம் மூன்று அரையாகியிருந்தது . இப்போது அங்கு கூட்டம் சேர்ந்ததால் அமைதி விடைபெற்றது .எமது விமானச் சீட்டுகளைச் சரிபார்க்க குவைத் விமானநிறுவன ஊளியர்கள் வந்திருந்தனர் . நாங்கள் இருவரும் விமனத்தில் உள்ளே போய் இருக்கைகளைப் பார்த்து இருந்து கொண்டோம் .எனதுமுகம் என்னவொ சந்தோசத்தைத் துலைத்திருந்தது .மனைவி என்னுடன் எதுவுமே கதைக்கவில்லை .நேரம் காலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது .விமானத்தின் கதவுகள் பூட்டப்பட்டு மெதுவாக ஓடுபாதையில் உருண்டோடித் தன்னை நிலைப்படுத்தி , வேகமாக ஓடுபாதையில் ஓடி விண்ணில் பாய்ந்தது குவைத் எயார்வேஸ் .என்மனதில் முட்டிக்குத்திய நெருஞ்சிமுள்ளின் வலி கண்களில் பொளக்கென வழிந்தது .
முற்றும்.
Comments
Post a Comment