நிதானம்
எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்! அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்! ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை. எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள், சில பேர். வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி. ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.
உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும். பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன. அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.
பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும் அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும். இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை, காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள். இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
தோன்றியதைச் செய்துவிடுவோம், அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது. நிதானத்தை இழக்காதவர்கள், மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.
000000000000000000000000000000000
அடக்கம்
கோயில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்ததாம். ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம். யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம்,
“பார்த்தாயா, அந்த யானை என்னைக்கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை,
“அப்படியா! நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோயில்யானை கீழ்க்கண்டவாறுபதில்சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன், பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சம்மாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
0000000000000000000000000000000000
கழுதையை முட்டாள் என யார் சொன்னது?
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.
அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.
தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.
நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.
April 24, 2013
Comments
Post a Comment