Skip to main content

நெருடியநெருஞ்சி -28




நாங்கள் இருவரும் வெளியை வந்து , சிறிது தூரம் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம் . அந்த அதிகாலையிலும் சூழலில் சூடு பரவியிருந்தது . இதமான குளிரும் கடல் காற்றின் உபையத்தால் இருந்து கொண்டுதான் இருந்தது . நாங்கள் சிறிது தூரம் நடந்து ஓர் ஓட்டோவை மறித்துப் போகவேண்டிய இடத்தை எனது மனைவி சிங்களத்தால் சொன்னா . நாங்கள் இருவரும் பயணப் பொதிகளை ஓட்டோவில் திணித்து விட்டு உள்ளே ஏறி இருந்து கொண்டோம். நான் வெளியே புதினம் பார்க்கும் சுவாரசியத்தில் இருந்தேன் . வழியெங்கும் இப்பொழுதும் வெற்றிக்களிப்பின் எச்சசொச்சங்கள் விளம்பரத்தட்டிகளாகத் தொங்கின . நடந்து முடிந்த வெசாக் பண்டிகைக்கு அதன் அலங்காரங்களும் அவைபாட்டிற்கு அணிவகுத்தன . சில வீடுகளில் வெளிச்சக்கூடுகள் காணப்பட்டாலும் , தமிழன்வாழ்வில் ஏற்பட்ட இருளை அவைகளால் போக்க முடியவில்லை . சீறிப்பாய்ந்த ஓட்டோ தனது வேகத்தை மட்டுப்படுத்தியது , எதிரே ஓர் ஊர்வலம் பலத்த பொலிஸ் காவலுடன் வந்து கொண்டிருந்தது . அதன் நடுவே பல தேரர்கள் வந்து கொண்டிருந்தனர் . நிலமையின் கனதியை உணர்ந்த சாரதி ஓட்டோவை ஓர் குறுக்கு ஒழுங்கையினால் திருப்பினான் . இலங்கையில் பௌத்தித்திற்கான உரிமைகள் காணாது என்று தேரர்கள் ஆர்பாட்டம் செய்து ஊர்வலம் போவதாக மனைவிக்கும் சாரதிக்கும் நடந்த பேச்சுக்களில் என்னால் ஊகிக்க முடிந்தது இப்படி ஒரு குருக்கள்மாரோ அல்லது பாதிரிமாரோ ஆர்பாட்ட ஊர்வலம் செய்யமுடியுமா இந்த நாட்டில் ?? நாங்கள் இப்பொழுது பம்பலப்பிட்டியை நெருங்கியிருந்தோம் . மனைவி போகவேண்டிய பாதையைச் சாரதிக்குக் கூறிக்கொண்டிருந்தா . சிறிது நேரத்தில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மாடித்தொடரில் ஓட்டோ வந்து நின்றது . காலை ஏழு மணியாகியிருந்ததால் சூரியன் சுள்ளிட்டது .ஆயினும் கடல்காத்து அதனை மட்டுப்படுத்தியது . மனைவியின் நண்பி வீட்டின் மாடியிலிருந்து எங்களை நோக்கி சந்தோசத்துடன் கையைக் காட்டினா . நான் ஓட்டோவிற்குக் காசைக் குடுத்து விட்டு மனைவியை உள்ளே போகும்படி சொல்லிவிட்டு சுற்றாடலை அவதானித்தேன் . நீண்டநேரம் இருந்து வந்ததால் கால்கள் இரண்டும் வீங்கியிருந்தன . தூரத்தே கடல் அலைகளிற்கும் , கரைக்கும் நடந்த முத்தமிடல் போட்டி தெளிவாகவே தெரிந்தது . அன்றும் அந்தக் கடல் பச்சை நிறத்திலேயே இருந்தது . நான் சிறிது நேரம் அதில் லயித்துவிட்டு வீட்டிற்கு மாடிப்படிகளில் ஏறத்தொடங்கினேன் . நான் மனைவியுடன் கலியாணம் செய்து முதல் தரம் வந்ததால் என்னவோ அவர்கள் தரப்பில் வரவேற்பு பலமாகவே இருந்தது . எனக்கு அவர்களின் அதீத கவனிப்பும் உபசரிப்பும் ஒருவித அன்னியத்தனத்தினை ஏற்படுத்தின . என் மனமோ தனிமையை நாடியது . நான் குளித்து முடிந்தவுடன் , மனைவியின் நண்பி ஒரு கோப்பை நிறையக் கோப்பி கொண்டு வந்து தந்தா . இது தான் சந்தர்பம் என்று பல்க்கணியை நோக்கி சிகரட்பெட்டியுடன் நகர்ந்தேன் . அவர்களுடைய கோப்பி ஒரு தினுசாகச் சுவையாக இருந்தது . காலை வெய்யில் கண்ணைக்கூசியது . பல்க்கணியின் இடதுபக்கமூலையில் எட்டிப்பார்த்த செவ்விளனியின் வட்டில் குரும்பட்டிகளும் புதிதாக ஒரு பாளையும் வெடித்துக் கிளம்பியிருந்தன . அதைச்சுற்றி வண்டுகள் சுற்றிக்கொண்டிருந்தன . இப்படித்தானே எம்மையும் பலவண்டுகள் சுற்றிச்சுழண்டன . கீழே வீதியில் கப்பாயங்கள் வேலைக்கு அணிவகுத்தன . அவர்களது ஒரு தினுசான உடை எனக்கு அதிசயமாக இருந்தது . எல்லோரது முகத்திலும் அதிக சந்தோசத்தையும் , பூரிப்பையும் கண்டேன் . ஒருவேளை எல்லாளர்களை மண்கவ்வச்செய்த தந்திர வெற்றியின் மமதையினால் வந்த பூரிப்பும் சந்தோசமாக இருக்குமோ ? என்று என்மனம் பலவாறாக அலைபாய்ந்தது . பல்கணியிலிருந்து வலதுபுறத்தில் கடலும் அதன் கரையும் தெளிவாகவே தெரிந்தன . கடற்கரைக்கு அருகே இருந்த புகையிரதப் பாதையில் புகையிரதம் பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை தனது இருப்பைப் பறைசாற்றியது . முன்பு தண்டவாளம் இருந்து இப்பொழுது தண்டவாளமே இல்லாத பிரதேசமும் இதே நாட்டில் தான் இருந்தது வேடிக்கை வினோதமாக எனக்குப் பட்டது . தூரத்தே கடலில் மூன்று சரக்குக்கப்பல்கள் அணிவகுத்துச் செல்வது மங்கலாகத் தெரிந்தது . நான்சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டேன் . நேரம் பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . மனைவி வந்து என்னுடன் நின்று வீதியைப் பிராக்குப் பாத்தா . நான் குடித்த கோப்பிக் கோப்பையை எடுத்துக்கொண்டே சாப்பிட வரச்சொன்னா . சாப்பாட்டு மேசையில் இடியப்பமும் , மல்லிச் சம்பலும் இருந்தன . எனக்குப் பிடிக்குமென்று உளுந்து வடை சுட்டிருந்தார்கள் . நான் அளவாக ரசித்துச் சாப்பிட்டேன் . நான் மீண்டும் எனது தவத்தைத் தொடர பல்க்கணியை நாடினேன் . இப்பொழுது வீதியில் ஓரளவு சனநடமாட்டம் குறைந்திருந்தது . ஓர் வினோதமான இரைச்சல் கடல் பக்கம் எனது பார்வையைத் திருப்பியது . ஓர் நடுத்தரமான போர்க்கப்பலும் ,அதனையொட்டி ஆறு மிதவைக்கப்பல்களும் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன . அதில் கடல்படையினர் அணிவகுத்து நின்றனர் . அன்றுதான் மிக அருகில் ஒரு போர்க்கப்பலைப் பார்த்ததால் மனைவியைக் கூப்பிட்டுக் காட்டினேன் . அவை அங்கு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதாக மனைவி சொன்னா . மக்களை எப்பொழுதும ஒருவித அச்சத்திலேயே வைத்திருப்பது இவர்களுக்குப் பலவழிகளில் வாய்ப்பாகவே இருந்தது . வெள்ளைவான் கடத்தல்களையும் இவ்வாறே என்னை சிந்திக்கத் தூண்டியது . கப்பல் படையணிகள் இப்பொழுது காலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது . புலியைக்காட்டித் தங்கள் இருப்பை நிறுத்தியவர்கள் , இன்று புலிப்புழுக்கையைத் தோண்டும் நிலைகண்டு என்மனம் மருகியது . என் நினைவலையை எனது மனைவியின் குரல் கலைத்தது .

"வாங்கோ சாப்பிட ரெண்டு மூண்டு பேரிட்டையல்லோ போகவேணும் "?

"எனக்குப் பசிக்கேல ". 

"சும்மா விளையாடாதையுங்கோ அங்கை பாத்துக்கொண்டிருக்கினம் ". 

நான் எரிச்சலுடன் மனைவியைப் பார்த்தேன் . மனைவியோ தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினா . நேரம் இரண்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது . என்னால் அவர்களுக்குச் சங்கடங்கள் வருவதை விரும்பாத நான் சாப்பாட்டு மேசையை நோக்கி வந்தேன் . அங்கே அவர்களின் எங்கள் மீதுள்ள அன்பு சாப்பாடில் பொங்கிவழிந்தது . நான் பெயருக்குக் கொறித்துக் கொண்டிருந்தேன் . எனது சிந்தனையோ பின்னேரம் சந்திக்கப்போகும் உறவுகளைச் சுற்றியே வட்டமிட்டது . 25 வருடகாலத்து அன்னியத்தனத்தால் வந்த புதிய வாரிசுகளைச் சந்திக்கப் போகின்றேன் . எனது மச்சாள்மாருக்கு வேண்டுமானால் என்னைக் காண்பது சந்தோசமாக இருக்கலாம் . ஆனால் , அவர்களது பிள்ளைகளுக்கு மச்சாள்மாரின் காலத்திற்குப் பிறகு அவர்களுக்கும் நான் அன்னியன்தானே ? யுத்தத்தின் பாலபாடம் இங்குதான் ஆரம்பமாகின்றதோ ? என்மனங் கனத்தது . நான் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் இருந்து விட்டு படுக்கப்போய்விட்டேன் . பயணக்களை என்னைச் சிரமம் கொடுக்காது நித்திரைக்குள் கலக்கப் பண்ணியது . மாலை நான்கு மணிபோல் மனைவி தேத்தண்ணியுடன் என்னை எழுப்பினா . மாலை வெய்யில் மனைவியின் முகத்தில் கோலம் போட்டது . நான் தேத்தண்ணியைக் குடித்துவிட்டு குளித்து வெளிக்கிட்டேன் . இருவரும் வெளியே போவதற்காக நான் மீண்டும் கையில் சிகரட்டுடன் பல்கணிக்கு வந்தேன் . தூரத்தே கடல்முகம் சூரியனைப் பிரியும் கவலையில் அழுது சிவந்து போய் இருந்தது . அந்த வேளை எனது சொர்ந்து போன மனதிற்குப் புத்துணர்ச்சியைக் கொண்டு வந்தது .நாம் இருவரும் இறங்கி கடற்கரையை நோக்கி நடந்தோம் . என் மனைவியின் கைகள் அவளையறியாது எனது கைகளைத் தேடின . நான் வலுவாக அவளது பஞ்சுக்கைகளைப் பற்றிக்கொண்டே நடந்தேன் . அதில் ஓர் இனம் புரியாத உணர்வும் இழையோடியது . நாங்கள் புகையிரப் பாதையைக் கடந்து கடற்கரையை அண்மித்தோம் . எம்மிடையே கடல் பல கதைகள் பேசியது . தூரத்தே காலிமுகத்திடலும் , இலங்கை வங்கிக் கட்டிடங்களும் மங்கலாகத் தெரிந்தன . தமிழனின் இருப்பிற்கான பாலபாடம் அரங்கேறிய காலிமுகத்திடலை என்னால் ரசிக்க முடியவில்லை . என்மனம் போலக் கடலும் மங்கிய சூரியனால் சிவந்து போய் இருந்தது . மனைவியின் கைகளை மெதுவாக அழுத்தினேன் .குறிப்பறிந்த மனைவி என்னுடன் மச்சாள் வீட்டை நோக்கி நடக்கத் தயாரானாள். இருவரும் ஒருவித உற்சாக மனநிலையிலேயே இருந்தாலும் , எனது மனமோ நாளை அதிகாலை பயணத்தை நோக்கியே வட்டமிட்டுக்கொண்டிருந்தது .





தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...