Skip to main content

Posts

Showing posts with the label அடுத்தவீட்டு வாசம்- புதினம்

வேங்கையின் மைந்தன்-பாகம் 2-18-பாசத்தின் பிடிப்பு

  மின்னலெனப் பாய்ந்து வந்து தமது இடது கரத்தில் தைத்து வீழ்ந்த கூரம்பை இராஜேந்திர மாமன்னர் ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அந்த அம்பு எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது அவருக்கு உடனே விளங்கிவிட்டது. அது தாங்கி வந்த நறுக்கோலையின் மீது தமது பாதத்தை ஊன்றி அதைக் காலின் கீழ் நன்றாக மறைத்துக் கொண்டார். அருகிலிருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அம்பு பாய்ந்ததுதான் தெரிந்தது. அது சுமந்து வந்த ஓலை தெரியவில்லை. ஆனால் சற்றுத் தொலைவில் இருந்தாலும் மகிந்தரின் கழுகுக் கண்கள் கவனித்து விட்டன. நொடிப் பொழுதுக்குள் சபை மண்டபமே கொதித்தெழுந்தது. நாலாபுறத்திலும் ஆவேசக் கூக்குரல்கள் கிளம்பின. மெய்க்காவலர் அம்பு வந்த திசை தெரியாது துடித்தனர். வேளைக்காரப் படையினரோ குமுறிக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் குற்றவாளியைத் தேடிப் பாய்ந்தனர். கூட்டத்திலிருந்த அனைவருமே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முற்பட்டனர். இந்த விநாடிப் பொழுதுக்குள், இராஜேந்திரர் கீழே குனிந்து அம்பில் கட்டியிருந்த ஓலையை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். பிறகு கூட்டத்தினரிடம் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்

வேங்கையின் மைந்தன்-பாகம் 2-17-முடி கொடுத்த சோழர்

  மூன்று பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த தென்பாண்டி நாடு ஒன்றாக இணைந்தது. பாண்டியர்களின் ஆட்சியில் பயத்தையும் பஞ்சத்தையுமே அநுபவித்துவந்த மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் பாண்டியர்கள் என்பதை மறக்கவில்லை. தங்களை ஆட்சி செய்யப் போகும் மன்னர் பாண்டியர் என்ற பெயரை ஏற்கவேண்டுமென்பதே அவர்களது விருப்பம். இராஜேந்திரரின் இளைய குமாரனான சுந்தரசோழன் பாண்டியர்களின் பட்டப் பெயர்களில் ஒன்றான சடையவர்மன் என்பதை ஏற்றுக் கொண்டு, சுந்தரசோழ பாண்டியனாக ஆட்சி செய்வான் என்பதைக் கேள்வியுற்ற பாண்டிய மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு அந்தச் செய்தியை வரவேற்றார்கள். “பரம்பரைப் பாண்டியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் பரம்பரையின் பெருமையைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் விட்டுவந்த மணிமுடிக்காக அவர்கள் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தவில்லை. நட்பினாலோ, பகையினாலோ அதை அவர்கள் பாண்டிய நாட்டுக்குக் கொண்டு வந்திருந்தால் அவர்களை நாம் போற்றியிருப்போம்!’’ என்று பேசிக்கொண்டனர். மணிமுடியைக் கொடுக்க விரும்பாத ரோகணத்திடமும் தமிழ்மண்ணில் இரத்தக்கறை பூச விரும்பிய மேலைச் ச

வேங்கையின் மைந்தன்-பாகம் 2- 16- வீழ்ந்துபோன வீரமல்லன்

வைகை நதியில் தண்ணீர் ஓடவில்லை. செந்நீர் ஓடியது. வீரர்களின் கைகளும் கால்களும் சடலங்களும் ஆங்காங்கே நீருக்குள் மிதந்து சென்றன. கரைகளில் சில புரவிகள் ஒதுங்கிக் கிடக்க நீருக்குள் கரிய நிறப் பாறைகள் போன்று யானைகள் இரண்டு வீழ்ந்து கிடந்தன. பிணம் தின்னும் கழுகுகளுக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை. யானைகளின் மீதும் குதிரைகளின் மீதும் கூடிக்கொண்டு நிணவிருந்தைப் பகிர்ந்து கொண்டன. அருவருப்பு நிறைந்த இந்தப் பயங்கரக் காட்சிகளைக் காணச் சகிக்காத மாலைச் சூரியன் மலைவாய்க்குள் விழுந்து விட்டான். தமிழ் இனத்துக்குள்ளே இருந்த இந்த ஒற்றுமைக் குலைவை அவன் காலங்காலமாகக் கண்டு வந்தவன். மூவேந்தர்களும் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொண்டு இரத்தம் சிந்திய சோகக் காட்சிகள் அவனுக்கு ஒன்றும் புதுமையானவையல்ல. வெறுப்பின் சின்னமான படுகளத்தை இருட்போர்வையால் மூடி மறைத்துவிட்டு அவன் அவ்விடத்தை விட்டு விலகிக் கொண்டான். கொடும்பாளூர் பெரியவேளார் வைகை நதிப்பெருக்கில் தமது உடைவாளையும் கை கால்களையும் கழுவிக் கொண்டு மணல் வெளியில் திரும்பி நடந்தார். நதிப் பெருக்கே இரத்தமாக மாறியிருந்ததால், கழுவிக்கொண்டது போதாமல் துணியால் கறைகளைத் துடைத்த

வேங்கையின் மைந்தன்-பாகம் 2-15-தெய்வத் திருப்பணியாள்

  தாய்ப் பாலைச் சுவைத்துப் பழகிய குழந்தையைத் தாயிடமிருந்து பிரிப்பதுபோல தன்னைப் போர்க்களத்திலிருந்து மாமன்னர் பிரித்துவிட்டதாக நினைத்தான் இளங்கோ. அவன் மனம் ஆத்திரப்பட்டது. வேதனையுற்றது. போர்க்களத்தின் அநுபவங்கள் ஏற்படாதபோது ஈழத்துக்குச் செல்வதற்கு முன்பு அவன் இவ்வளவு தூரம் அதற்காக ஏங்கியதுமில்லை; துடித்ததுமில்லை. இப்போது அவன் பகைவரது இரத்தச்சுவை கண்டுவிட்ட கொடும்புலியாக விளங்கினான். கூண்டில் அடைப்பதுபோல் மாமன்னர் அவனைப் பழையாறைச் சோழ மாளிகைக்குள் அடைத்துவிட்டுப் போய்விட்டார். வாள் சுழற்றி வீர சாகசங்கள் புரிய வேண்டிய தருணத்தில், உட்பகையின் ஆணிவேர்களைக் களைந்தெறிவதற்காக இரத்த வெள்ளத்தில் நீந்தி மதக்கரிகளை மடக்க வேண்டிய சமயத்தில் சக்கரவர்த்தி அவனுக்குச் சிறைத் தண்டனை விதித்துவிட்டார். ‘ஆம்; இந்த மாளிகை வாசம் வெஞ்சிறையை விடக் கொடுமையானது’ என்று எண்ணிப் புழுங்கினான், இளங்கோ. அவனைச் சுற்றிலும் ஒரே பெண்கள் கூட்டம். மகாராணி வீரமாதேவியார், பெரிய குந்தவையார், அருள்மொழி, அம்மங்கை, அவர்களது பணிப்பெண்கள், இப்படி எங்கு திரும்பினாலும் ஒரே பெண்கள். அலைமோதும் ஆண்களின் கூட்டத்தில் புயலெனப் புகுந்து தலைய

வேங்கையின் மைந்தன்-பாகம் 2-14-ரகசியத் தொடர்பு

தஞ்சை அரண்மனைக்குள் மகிந்தரது மாளிகைத் தோட்டத்தின் சிறிய செய்குளம் மேல்வானத்தின் நீலத்தைப் பிரதிபலித்துக்கொண்டு, மெருகேறிய செப்புத் தகடு போல சலனமற்றுக் காட்சியளித்தது. அதன் விளிம்பில் நின்ற வீரமல்லன் தன் முகத்தைத் தண்ணீரில் எட்டிப்பார்த்தபடி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கன்றிக் கறுத்திருந்த முகத்தில் பதிந்திருந்த விழிகளிரண்டும் கலங்கிச் சிவப்பேறியிருந்தன.  அவனுடைய முகத்தின் தோற்றம் அவனுக்கே அருவருப்பைத் தந்தது. விகாரமும் குரூரமும் கொண்ட மற்றொரு மனிதன் அவனைத் தண்ணீருக்குள் தலைகீழாய் நின்றுகொண்டு பரிகாசம் செய்தான். ‘வீரமல்லா! உன் வீரமெல்லாம் அப்போது எங்கே போய்விட்டது? ஏன் நீ உன் கைகளைக் கட்டிக்கொண்டு பேசாதிருந்தாய்? இளங்கோவுக்குத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டுமடா!’ தன் வெறுப்பையெல்லாம் ஒன்றாய்த் திரட்டிச் சேர்த்து அந்தத் தண்ணீரில் காரி உமிழ்ந்தான் வீரமல்லன்; காலால் அதை எட்டி உதைத்தான். சேறாய்க் கலக்கிக் குழப்பினான். “இளங்கோ! இனி நீதான் என் முதற்பகைவன்!’’ என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன. உடனே “நண்பா’’ என்ற குரல் அவனுக்குப் பின்னாலிருந்து ஒலித்தது. அதைத் தொடர்ந்து கரமொன்ற

வேங்கையின் மைந்தன் புதினம் -பாகம் 2 -13

பழையாறை மாநகர் இதற்கு முன்பும் இவ்வளவு கூட்டத்தைக் கண்டதில்லை; இதற்குப் பிறகும் காணப் போவதில்லை.  வடதளியான சிவன்கோயில் கீழ்வாசலுக்கு முன்னால் மக்கள் கடல் பொங்கி எழுந்து அலை மோதிக் கொண்டிருந்தது. கண் கவரும் முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த பெரியதொரு மேடையின்மீது நின்று மாமன்னர் முழங்கலானார்.  “என் அருமை மக்களே! ஈழத்துப்போரில் உயிர் துறந்த அத்தனை  வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக! அவர்களது உற்றார் உறவினரின் கண்ணீரைத் துடைக்க என்னுடைய இருகரங்களும் போதாது. ஆனால் ஒன்றுமட்டும் கூறுகிறேன்; அவர்கள் என்னுள்ளே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதுவரையில் கண்ணீர் சிந்திய தாய்மார்கள் என்னைத் தங்களது மகனாக ஏற்றுக் கொண்டு, பெண்மணிகள் என்னைத் தமையனாக ஏற்றுக் கொண்டு, அவரவர்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள்- கண்ணீர் விடுகிறவர்கள் இனிமேல் இந்த நாட்டில் வாழ முடியாது.  “அவர்களுக்கு நான் வீரக்கல் நாட்டப் போவதில்லை. அவர்களின் நினைவாகத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு மாபெரும் கோயில் சோழபுரத்தில் எழுப்பப் போகிறேன். ஒரு நூற்றாண்டுக்காலமாகத் திரும்பாதிருந்த முடியை அவர்கள் நமக்குத் திருப்பித்

வேங்கையின் மைந்தன் -புதினம் பாகம் 2 -12

  ரோகிணி அனைவரும் புறப்படும் சமயத்தில் அவர்களுடன் இருந்து அனுப்பி வைத்தாள். அவளுடைய முகத்தில் களை இல்லை; நடையில் உற்சாகம் இல்லை; தன்னை விரும்புவதாக அவள் கூறாததால் இளங்கோவும் ஓரளவு அலட்சியப்படுத்தி வருவது அவளுக்கு நன்றாகப் புலப்பட வேண்டும் என்பதும் அவனுடைய எண்ணம். இளங்கோ மட்டிலும் தனியாகப் பழையாறைக்குக் கிளம்பியிருந்தால் ரோகிணி அதை எப்படி எடுத்துக் கொண்டிப்பாளோ தெரியாது. பெரியவர்களும் தனியே செல்லும் அதே இடத்துக்கு அருள்மொழி நங்கையும் அம்மங்கை தேவியும் உடன் செல்லுகிறார்கள். வீரமல்லன் தன்னிடம் கூறிய செய்திகளையும் இந்தப் பிரயாணத்தையும் இணைத்து வைத்துப் பார்த்தாள் ரோகிணி. அவளை அறியாமலே அவள் மனம் கலக்கமுற்றது என்றாலும் அதை மறைத்துக்கொண்டு அம்மங்கையோடு சிரித்துச் சிரித்துப் பேசினாள். அருள்மொழிக்கு ஆடை அணிகள் எடுத்துக்கொடுத்து அவள் அலங்கரித்துக் கொள்வதற்குச் சிறு உதவிகள் செய்தாள். அவளுடைய முகவாட்டத்தைக் கண்டவுடன் தனக்குள் சிரித்துக் கொண்டான் இளங்கோ. கிளம்புகிற அவசரத்தில் அங்குமிங்கும் செல்வது போல் அவன் அலைந்து கொண்டிருந்தானே தவிர ரோகிணியுடன் பேசவில்லை. கடைசியில் அவளாக அவனை நெருங்கி வந்து, “எப்

வேங்கையின் மைந்தன் - பாகம் 2 -11

காலை இளம் வெய்யிலில் சோழநாட்டு நெடுஞ்சாலையில் புரவிகள் பூட்டிய ரதங்கள் சில பழையாறையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. ரதங்களுக்கு முன்னும் பின்னும் குதிரை வீரர்கள் வேல்முனைகள் பளபளக்க விரைந்தேகிச் சென்றனர். ரதங்களின் சக்கரங்கள் இன்னிசை பாட குதிரைகளின் குளம்பொலி அதற்குத் தாளமாக அமைந்தது. இடையில் சென்ற ரதமொன்றில் சோம்பலுடன் இளங்கோ சாய்ந்திருந்தான். அரண்மனை வைத்தியர் அவனுக்கு எதிரில் அமர்ந்து ஏட்டுச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். தன்னைக் கட்டாயமாகச் சிறைபடுத்தி மாமன்னர் பழையாறைக்கு அழைத்துச் செல்வது போல் தோன்றியது இளங்கோவுக்கு. வைத்தியர்தான் அவனுக்குச் சிறைக்காவலர். சிறிது நேரம் சித்த வைத்தியத்தின் அருமை பெருமைகளை அவனிடம் விளக்கிக் கொண்டு வந்தார் அரண்மனை மருத்துவர். அவனுடைய சித்தம் சித்த வைத்தியத்தில் லயிக்கவில்லை என்பதைக் கண்டபிறகு அவன் போக்கில் அவனை விட்டுவிட்டுத் தமது சித்தத்தை ஏட்டுச் சுவடிகளுக்குக் கொண்டு வந்தார். இளங்கோவின் சித்தம் சிட்டுக்குருவியாக மாறிச் சிறகடித்துப் பறந்து சென்று கொண்டிருந்தது. ரதத்துக்கு இருபுறங்களிலும் தெரிந்த இயற்கைக் காட்சிகள் அவனைக்கிறங்க வைத்தன. இரண்டு

வேங்கையின் மைந்தன்- புதினம் -பாகம் 2 -10

  சோழ சாம்ராஜ்யத்தின் ஒன்பது மண்டலங்களிலும் வெற்றி விழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கிராமங்கள், கூற்றங்கள், நாடுகள், வளநாடுகள் இப்படித் தன்னகத்தே பல சிறிய பெரிய எல்லைகள் வகுத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மண்டலமும் விழாவில் முதன்மை பெறுவதற்காக முயன்று கொண்டிருந்தன. தென்பாண்டி மண்டலத்தில் மட்டும் ஒரு பக்கம் உற்சாகமும் மறுபக்கம் புகைச்சலும் காணப்பட்டன.  தஞ்சை அரண்மனை ஆலோசனை மண்டபத்தில் மாமன்னர் பெரியதோர் ஆசனத்தில் சாய்ந்தவாறு வீற்றிருந்தார். அவர் அருகில் கொடும்பாளூர் பெரிய வேளார் பணிவோடு அமர்ந்து விழாச் செய்திகளை விவரிக்கத் தொடங்கினார். சாம்ராஜ்யம் முழுவதும் கோலாகலமாக வெற்றி விழாவைக் கொண்டாடுவதற்கான திட்டங்கள் உருப்பெற்றிருந்தன.  “ஆமாம்! ஒருநாள் கூத்தாக இது போய்விடக்கூடாது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத எண்ணங்களை நாம் அந்த ஒரு நாளில் ஊன்றிவிட வேண்டும்’’ என்றார் மாமன்னர்.  “சக்கரவர்த்திகள் அளித்துள்ள செய்தியை ஒவ்வொரு கிராமத் தலைவருக்கும் அனுப்பச் செய்திருக்கிறேன். விழாவுக்கான திட்டங்களும் அவர்களை எட்டியிருக்கின்றன’’ என்றார் பெரிய வேளார்.  “இந்த விழா நம்மு