தாய்ப் பாலைச் சுவைத்துப் பழகிய குழந்தையைத் தாயிடமிருந்து பிரிப்பதுபோல தன்னைப் போர்க்களத்திலிருந்து மாமன்னர் பிரித்துவிட்டதாக நினைத்தான் இளங்கோ. அவன் மனம் ஆத்திரப்பட்டது. வேதனையுற்றது.
போர்க்களத்தின் அநுபவங்கள் ஏற்படாதபோது ஈழத்துக்குச் செல்வதற்கு முன்பு அவன் இவ்வளவு தூரம் அதற்காக ஏங்கியதுமில்லை; துடித்ததுமில்லை. இப்போது அவன் பகைவரது இரத்தச்சுவை கண்டுவிட்ட கொடும்புலியாக விளங்கினான்.
கூண்டில் அடைப்பதுபோல் மாமன்னர் அவனைப் பழையாறைச் சோழ மாளிகைக்குள் அடைத்துவிட்டுப் போய்விட்டார். வாள் சுழற்றி வீர சாகசங்கள் புரிய வேண்டிய தருணத்தில், உட்பகையின் ஆணிவேர்களைக் களைந்தெறிவதற்காக இரத்த வெள்ளத்தில் நீந்தி மதக்கரிகளை மடக்க வேண்டிய சமயத்தில் சக்கரவர்த்தி அவனுக்குச் சிறைத் தண்டனை விதித்துவிட்டார்.
‘ஆம்; இந்த மாளிகை வாசம் வெஞ்சிறையை விடக் கொடுமையானது’ என்று எண்ணிப் புழுங்கினான், இளங்கோ. அவனைச் சுற்றிலும் ஒரே பெண்கள் கூட்டம். மகாராணி வீரமாதேவியார், பெரிய குந்தவையார், அருள்மொழி, அம்மங்கை, அவர்களது பணிப்பெண்கள், இப்படி எங்கு திரும்பினாலும் ஒரே பெண்கள்.
அலைமோதும் ஆண்களின் கூட்டத்தில் புயலெனப் புகுந்து தலையறுத்து விளையாட வேண்டிய வேளையில் இப்படி ஒரு சோம்பல் வாழ்வா? சே! இந்தப் பெண்களையாவது ஓரளவு பொறுத்துக் கொள்ளலாம். சிறைக் காவலரினும் கொடிய இந்தச் சித்த வைத்தியப் பெரியவரை எப்படிப் பொறுப்பது! போருக்குத் தகுதியற்றவன் என்று தன்னைச் சுட்டிக் காட்டுவதற்காகவே அவரும் உடன் வந்திருக்கிறாரா?
சக்கரவர்த்தியும் வல்லவரையரும் பழையாறையை விட்டுச் சென்ற பின்பு அருள்மொழி அருகில் வந்து நின்று கொண்டிருந்தபோது அவளிடம் முகம் கொடுத்துப் பேசுவதற்கே நாணமுற்றான் இளங்கோ. மேற்கண்டவாறு எண்ணக் குவியல் கிளர்த்தெழுந்து அவனை அலைக் கழித்தன.
அருள்மொழி அங்கு நின்றது கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கூண்டுக் கம்பிகளைப் பிய்த்தெறிந்து விட்டுப் பாய்ந்தோட விரும்பும் வேங்கையின் வெறி அவன் உடலெங்கும் பரவியது.
மெல்ல நகைத்தாள் அருள்மொழி. சிரிப்பொலி அவன் செவிகளில் விழவேண்டுமென்று நினைத்தவள் போல் இலேசாகச் சிரித்தாள்.
சட்டென்று திரும்பினான் இளங்கோ. சிரிப்பொலி வேறு யாருடையதாகவும் இருந்திருந்தால் அங்கு என்ன நடந்திருக்குமோ தெரியாது. அருள்மொழியின் முகத்தில் ஏளனமில்லை.
“நங்கையாரே, என் நிலைமை உங்களுக்கு நகைப்பைத் தருகிறது, நான் நகைப்புக்கிடமாகி விட்டேன்’’ என்று கலங்கும் குரலில் கூறினான் இளங்கோ.
“போர்க்களத்தில் பொங்கி எழ வேண்டிய சினம் இப்போது என் மீது திரும்பியிருக்கிறது. இதுவும் என் பாக்கியந்தான்’’ என்றாள் அருள்மொழி. பிறகு கனிந்த குரலில் “இளவரசே தங்களைப் போன்ற சுத்த வீரனின் துடிப்பை கண்டு நான் பெருமையுறுகிறேன். என்னுடைய பெருமையுணர்ச்சியை என்னால் மறைக்க முடியவில்லை. சிரித்து விட்டேன்; மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்றாள்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இளவரசி?’’
“உங்கள் வீர உணர்ச்சியைக் கண்டு கர்வம் கொள்ளுகிறேன். அது எப்படியெல்லாம் உங்களை ஆட்டிவைக்கிறது என்பதைக் கண்டு வியந்து கொண்டிருக்கிறேன்.’’
“ஈழத்துப் போர்க்களத்துக்கு நேரில் வந்து உங்கள் ஆற்றலைப் பார்க்க முடியாவிட்டாலும் அது எப்படி இருந்திருக்கும் என்று என்னால் இப்போது நினைக்க முடிகிறது.’’
சித்த வைத்தியர் வைத்துக் கட்டிய மருந்து இளங்கோவுக்கு எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் அருள்மொழியின் இன்மொழிகளோ அந்த எரிச்சலையும் தணித்து, அவன் மனக்கொதிப்பையும் ஆறவைத்தன.
மனதுக்கு மருந்தானாள் மாமன்னரின் மகள். அகமும் முகமும் மலர ஆனந்தப் புன்னகை செய்துவிட்டு ,
“இளவரசி! துரோகிகளின் தலைவரான சுந்தரபாண்டியரின் தலையைக் கொய்து வந்து சக்கரவர்த்திகளின்
திருவடிகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும் என்பது என் ஆவல்; அதை நிறைவேற்ற முடியவில்லையே என்றுதான் வருந்துகிறேன்’’ என்றான் இளங்கோ.
“எல்லாப் போர்க்களங்களுக்கும் நீங்களே சென்று எல்லாப் பெருமைகளையும் நீங்களே பெற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறீர்கள். ஏன், என் தமையனார் ராஜாதி ராஜருக்கு அதில் சிறிது விட்டுக் கொடுத்தால் என்ன வந்துவிடும்?’’
“சக்கரவர்த்திகள் அப்படிக் கூறவில்லையே!’’ என்று பதறினான் இளங்கோ. “என் கையைச் சுட்டிக் காட்டிவிட்டார்கள். ஆற்றலும் வீரமும் என் நெஞ்சில் இருக்கின்றன. இளவரசி! அது இந்தக் கையிலுமில்லை, கைபிடிக்கும் வாளிலும் வேலிலும் இல்லை.’’ இடது கையால் தனது நெஞ்சைத் தட்டிக் காட்டினான் அவன்.
“மெய்தான்! அந்த நெஞ்சு தனியாக இல்லை; உங்கள் உடலுடன் ஒன்றியிருக்கிறது’’ என்றாள் அருள்மொழி. “நெஞ்சும் வேண்டும், நெஞ்சோடு போர்க் கருவிகளும் வேண்டும். போர்க் கருவிகளை இயக்குவதற்கு வலிமை மிக்க கரங்களும் வேண்டும்’’ என்று கூறி மென்னகை புரிந்தாள்.
“நீங்கள் என்னை வென்று விட்டீர்கள்’’ என்று பெருமையோடு ஒப்புக்கொண்டான் இளங்கோ.
“அதெல்லாம் ஒன்றுமில்லை, பழையாறையின் அழகும் அமைதியும் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்தேன். எப்போதுமே சுறுசுறுப்பாயிருப்பவர்களுக்குச் சிறிது ஓய்வு வேண்டாமா? இதை உங்களுக்குக் கிடைத்த ஓய்வு என்று கருதினால், பொழுது எவ்வளவு இன்பமாகப் போகும். ஏன், எங்களுக்கும் நீங்கள் இங்கிருப்பது மகிழ்ச்சிதான்.’’
“பழையாறையில் உள்ளவரை இளவரசியின் கட்டளைப்படி நடக்கிறேன்.’’
இதைக் கேள்வியுற்றவுடன் இளவரசி அருள்மொழி நடந்து செல்லவில்லை. ஓடி மறைந்து விட்டாள்.
ஆறேழு தினங்கள் ஆனந்தமாக நகர்ந்து சென்றன. அரண்மனைப் படகுகள் ஆற்றில் மிதக்க, பூஞ்சோலைச் செடி கொடிகள் இளவரசியின் நடமாட்டத்தால் மெய்சிலிர்க்க, ஆடலும் பாடலுமாக அந்தப்புரம் ஒலி எழுப்ப ஒவ்வொரு தினமும் ஊர்ந்தது. இளங்கோவாலும் அங்கே தனித்திருக்க முடியவில்லை. அம்மங்கைதேவி அவனைப் பரிகாசத்துக்கு உள்ளாக்கிப் படாத பாடு படுத்தினாள்.
இளங்கோவுக்கு ஒரே ஒரு குறை. ரோகிணியையும் பழையாறைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவள் இருந்திருந்தால் பொழுது ஊர்ந்திருக்காது. நாள் நகர்ந்திருக்காது. ஏழு நாட்களும் ஏழு விநாடிகளாகப் பறந்திருக்கும். அவள் இல்லாத ஒவ்வொரு இடத்திலும் அவளை இருத்தி வைத்து இன்பம் காண நினைத்தான் இளங்கோ.
ஒருநாள் பிற்பகலில் இளங்கோவின் சோம்பல் மனம் வழக்கம்போல் ரோகிணியை அசைபோட்டுக் கொண்டிருந்தது. கையிலும் அதிகமான வலி இல்லை; எங்கிருந்தோ பரபரக்க ஓடி வந்தாள் அம்மங்கை; மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவன் அருகில் வந்து நின்றாள்.
“இளவரசே! ஒரு முக்கியமான செய்தி, எழுந்து என் பின்னால் வாருங்களேன் சொல்கிறேன்!’’
“மங்கையாரே! முதலில் சொல்லுங்கள். பிறகு வருகிறேன்.’’
“சொல்லக்கூடியது இல்லை! பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டியது’’ என்று அவசரப்பட்டாள் அம்மங்கை. அவளுடைய வட்ட விழிகளின் குறுகுறுப்பும் அவள் தோற்றத்தின் துடிதுடிப்பும் அவள் ஏதோ சிறு தொல்லை
கொடுக்கப் போகிறாள் என்பதை அவனிடம் சொல்லிவிட்டன.
“சொன்னால்தான் வருவேன்’’ என்றான் சிரித்துக் கொண்டே.
“பிறகு உங்கள் சித்தம்! நான்கைந்து நாட்களாகவே யாருக்கும் தெரியாமல் இது நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குத்தான் நானே கண்டுபிடித்தேன். என்னோடு வந்தால் நீங்களும் பார்க்கலாம், ஆனால் சந்தடி செய்யாமல் வர வேண்டும்!’’
இவ்வளவு தூண்டுதலுக்குப் பிறகு இளங்கோவால் அவள் அழைப்பை மறுக்க முடியவில்லை. எழுந்து சென்றான். இருவரும் பல கூடங்களைத் தாண்டி மாளிகையின் ஒதுக்குப்புறம் தனித்திருந்த ஒரு சிறு அறையை நெருங்கினார்கள். வாயை மூடிக் காட்டி அவனைப் பேச்சு மூச்சின்றிப் பின்பற்ற வைத்தாள் அம்மங்கை. ஓரமாக ஒதுங்கிக்கொண்டு அவனைச் சாளரத்தின் வழியே பார்க்கச் செய்தாள்.
சித்த வைத்தியருக்காக விடப்பட்டிருந்த சிறிய மருத்துவமனை அது. இலைகளும் வேர்களுமான பச்சை மூலிகைகள் ஒருபுறம் கிடந்தன. வைத்தியர் சித்த மூலிகை சிந்தாமணியாகிய ஏட்டுச் சுவடியில் சிறு பொழுது மூழ்கியிருந்தார். பிறகு அதைப் போட்டுவிட்டு மூலிகைகள் அரைக்கும் கலுவைக் கல்லிடம் வந்தார்.
கலுவத்தில் பச்சை இலைகளைப் போட்டுத் தன் இருகரங்களாலும் அதன் குழவியைப் பற்றி மருந்து அரைத்துக் கொண்டிருந்தாள் அருள்மொழி. முத்து முத்தாக அவள் முகத்தில் வேர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. அவற்றைக் கூடத் துடைக்காமல் தனது வேலையில் அவள் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
கைவளைகள் கலகலவெனத் தாளம் இசைத்தன. கரங்கள் இரண்டும் நடன பாவம் காட்டின. கூந்தலில் சூடியிருந்த மலர் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. இளவரசி அருள்மொழிதானா இது, விரல் அசைப்பில் நொடிப் பொழுதில் அவளுக்காக நூறு பெண்கள் பணிசெய்யக் காத்திருக்கும் பேறு பெற்றவள்தானா இவள்!
இளங்கோ வாயடைத்துப் போய்விட்டான். பனித்துளிகளின் மென்திரை அவன் விழிகளில் படர்ந்தது. தெய்வத் திருவாசகத்தின் சில வரிகள் அவன் நினைவுக்கு வந்தன.
“வாள் தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைத் திலங்க...
ஆடப் பொற்சுண்ண மிடித்து நாமே!’’
எம்பெருமானுக்குப் பெண்கள் பொற்சுண்ணமிடித்து மகிழ்ந்த காட்சியை மாணிக்கவாசகர் பாடியிருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட இளங்கோவுக்கு அந்தப் பாடலைத் தவிர வேறு எதுவுமே நினைக்கத் தோன்றவில்லை. விரைந்து உள்ளே சென்றவன் ஒருகணம் பேச நா எழாது நின்றுவிட்டு,
“நங்கையாரே!’’ என்று தடுமாறினான்.
சித்த வைத்தியருக்குச் சித்தமே கலங்கிவிட்டது. ஏதோ குற்றம் புரிந்தவளைப்போல் தலை குனிந்து கொண்டாள் அருள்மொழி. ஆனால் அரைப்பதை நிறுத்தவில்லை. அம்மங்கை மெல்ல அங்கு தலை நீட்டவே அவளைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தாள்.
“கூடாது, நங்கையாரே!’’ என்று தடுத்தான் இளங்கோ.
தொடர்பில்லாமல் எதை எதையோ பேசத் தொடங்கினார் அரண்மனை மருத்தவர். “நானும் எவ்வளவோ வேண்டிக் கொண்டேன்; தடுத்துப் பார்த்தேன்; இளவரசியார் என்னைச் சினந்து கொண்டார்கள்.’’
“எத்தனை தினங்களாக இப்படி...’’
“இங்கு வந்ததிலிருந்து இவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்’’ என்றார் வைத்தியர்.
அருள்மொழி வாய் திறந்தாள்: “பொழுது போகவில்லை; சோம்பல் தவிர்ப்பதற்காக...’’
“அதெல்லாம் ஒன்றுமில்லை’’ என்று கைகொட்டிச் சிரித்தாள் அம்மங்கை தேவி, “மருத்துவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தமக்கையாருக்கு ஆசை. ஒவ்வொரு முறையும் இளவரசர் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்போதும் அவருக்கு உதவி செய்யலாம் அல்லவா?’’
எதிரில் நின்ற மூவரும் சேர்ந்து தடுத்த பிறகும்கூட அருள்மொழி தன் பிடிவாதத்தை விடவில்லை. மாவைப் போல் குழைவாக மருந்தை அரைத்த பிறகுதான், தன் வியர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டாள். அவளுடைய உருவம் இளங்கோவின் மனத்துக்குள் கணத்திற்குக் கணம் உயர்ந்து வளரத் தொடங்கியது. அந்த விநாடிப் பொழுதை என்றுமே மறக்க முடியாதபடி அவன் சிறைப்படுத்திக் கொண்டான்.
அன்றைக்குப் பொழுது சாயும் வேளையில் மதுரையிலிருந்து பழையாறைக்குச் செய்தி கொண்டுவந்திருந்தான் மாங்குடிமல்லன். பாண்டிய நாட்டுப் போரைப் பற்றியும் குறிப்பாக வீரமல்லனைப் பற்றியும் மாங்குடிமாறன் கூறிய செய்திகள் இளங்கோவுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தன. மல்லனைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று போர்க்களம் பற்றிய செய்திகளை விவரமாகச் சொல்லும்படிக் கேட்டான்.
தொடரும்
Comments
Post a Comment