Skip to main content

வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 - 33



சிறு பொழுதுக்கு முன்பு படிகம்போல் தெளிந்திருந்த மலைச் சுனையின்நீர்ப்பரப்பில் இப்போது பெரிய பெரிய அலைகள் எழும்பிக் கொண்டிருந்தன.கதிரொளி பெற்றதால் கருப்பஞ்சாற்றுத் தெளிவின் நிறத்திலிருந்தது அது. இப்போது முதலையின் குறுதிபடிந்த செந்நீராக மாறிக்கொண்டிருந்தது. நீர்மட்டத்துக்குக் கீழே இருந்த கரு நீலப் பாறைகள் செம்பவளப் பாறைகளாகத்தோற்றம் அளிக்கத் தொடங்கின. முதலையின் சாம்ராஜ்யத்துக்குள்ளே புகுந்து, மனிதன் தன் வீரத்தையும் உயிரையும் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்தான்.

கரையில் இருந்தவாறே அம்பெய்து முதலையைக் கொல்ல முடியுமா என்று யோசித்தான் இளங்கோ. முதலையின் முதுகுச் செதில்களை அம்புகள் ஊடுருவக்கூடுமென்று தோன்றவில்லை. முதலையோ குகைக்குள் மறைந்து கொண்டிருந்தது. நீரில் குதிப்பது ஒன்றுதான் வழி.

மரத்திலிருந்த வில்லையும் அம்புக் கூட்டையும் எடுத்து மண்டிக்கிடந்த மலைப்புல்லிடையே மறைத்தான். கை வேலுடன் தண்ணீரில் இறங்கிக்குகையை நோக்கிச் சென்றான்.

செத்த பாம்பை விழுங்கித் தீர்த்துவிட்ட முதலை உயிர் மனிதன் தன்னிடம் வருவதைக் கண்டவுடன் தன் வாயை அகலத் திறந்து கொண்டே அவன் மேல் பாய்ந்தது. தன் பலமனைத்தும் சேர்த்துக் கைவேலை அதன் தொண்டையில் பாய்ச்சினான் இளங்கோ. வேலின் அடிப்புறத்தை இறுகப் பற்றிக் கொண்டான்.

முதலை வெகுண்டு துள்ளியது. தொண்டைக்குள் பாய்ந்திருந்த வேலையும், அதைப் பற்றியிருந்தவனையும் ஒன்றாய் நீரில் கவிழ்க்கப்பார்த்தது. நீரை அடித்துப் பிளந்துகொண்டே அவனை நாலா பக்கமும்இழுக்கடித்து கீழும் மேலும் பக்கவாட்டிலும் அவனைப் பம்பரமாகச் சுழலவைத்தது.

இளங்கோவைக் களைப்படையச் செய்து நீரில் மூழ்கடிக்க வேண்டுமென்று முதலை நினைத்தது போலும்; இளங்கோ அதன் போக்கில் விட்டுப்பிறகு அதைக் கவிழ்க்க விரும்பினான். நீருக்குமேல் முதலை எழும்பித் திமிறியடித்தபோது, இளங்கோவும் நீருக்குமேல் வந்தான். அது அடித்தளத்துக்குச் சென்றபோது அவனும் போனான். பாறைகளில் அது அவனை மோதிக் கொல்லப் பார்த்தது. அவனும் பாறைகளின் இடுக்கில் அதை அழுத்தி வேல்முனையை உள்ளே ஆழச்செலுத்தப் பார்த்தான். வேல் முனை உள்ளே போகப் போக முதலையின் உக்கிரத்தாக்குதலும் மிகுதியாகியது. ‘குபுகுபு’ வென்று பீச்சிட்ட அதன் செங்குருதி அவன் முகத்தில் படிந்தது. அதன் வாய்க்குள் தன் தலையைக் கொடுக்கப் போகிறவன் போல் அவன் துணிந்து நெருங்கிச் சென்றான்.

தண்ணீருக்குள்ளே சென்று முதலையைக் கொல்ல நினைப்பது விவேகமற்ற செயல்தானா? பிடி தளர, இளங்கோவின் கரங்களிலிருந்து வேல் நழுவிவிடும் போல் தோன்றியது. வாய், மூக்கு, செவிகள் எங்குமே தண்ணீர் பாய்ந்தது. திக்குமுக்காடித் திணறினான் அவன்.

காவல் வீரன் திரும்பி வருவதற்குள் அவன் தான் வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும். நீரில் எழுந்த சத்தத்தைக் கேட்டு எல்லா வீரர்களுமே ஓடி வந்தாலும் அது வியப்பில்லை. நொடிக்கொரு முறை பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டான் இளங்கோ.

அவன் அயர்ந்திருந்த மின்வெட்டு நேரத்தில், அவனை மேலே தூக்கி எறிந்து பந்தாடப் பார்த்தது முதலை. ஒரு சாண் அளவுக்கு நீருக்கு மேலேதாவி, அவனையும் தூக்கி எறிந்தது. அவன் தன் கைவேலை விடவில்லை.அப்படியே வேலைச் சுழற்றி முதலையை ஒரு திருப்புத் திருப்பிப்புரட்டினான்.

முதலையின் அடிவயிற்றைக் கிழித்துக்கொண்டு அதைத் தலைக்குப்புறமிதக்கவிட்டு, இளங்கோவின் கையோடு வந்தது வேல். முதலையின் உயிர்த்துடிப்பும் இரத்தப்பெருக்கும் சிறிது சிறிதாக நின்றன. அதைக் காணவிரும்பாதவன்போல் கரைப் பக்கம் திரும்பித் தன் வேலைக் கரையில் எறிந்தான். குகையைக் குறிவைத்து வேகமாக நீந்தினான்.

குகை அப்படியொன்றும் ஆழ்ந்து சென்ற குடைவரையாக இல்லை.நீண்ட சதுரத்தில் பெரியதொரு பிறைபோலத் தோன்றியது. துழாவிப்பார்த்தான் இளங்கோ. ஏதோ ஒரு கல்லுருவம் அவன் கைகளுக்குத் தட்டுப்பட்டது. புத்தர் பிரானின் திரு உருவமாகவோ அல்லது வேறு ஏதோ ஒரு விக்கிரகமாகவோ இருக்க வேண்டும்.

அதன் முதுக்குப் புறத்தில், பெரிய பாறாங்கல்லுக்கு அடியில், ஒரு பேழை இருப்பதைக் கண்டான். அதைக் கண்டவுடன் அவனுக்குக் களைப்பும் சோர்வும் எங்கோ பறந்துவிட்டன. உள்ளத்தில் உற்சாகம் பெருக்கெடுத்தது.

பேழையின் மேலிருந்த கல்லைக் கீழே உருட்டித் தள்ளிவிட்டு, அதைத் தன் இடதுபக்க விலாப்புறம் இடுக்கிக் கொண்டான். அவனுடைய மார்ப்புக் கூட்டுக்குள் துடித்துக் கொண்டிருந்த இதயம் அந்தப் பேழைக்குள் புகுந்து கொள்ளப்பார்த்தது. தன் இருதயத்தின் அடித்தளத்திலிருந்த ஓர் இன்னிசைப்பாடல் பிறந்து, பற்பல அபூர்வ ராகங்களாக அது உடலின் நாடி நரம்புகளில் பரவுவதை அவன் உணர்ந்தான்.

சின்னஞ்சிறு தங்க மீன் குஞ்சுபோல் அவன் நீரைக் கிழித்துக்கொண்டு அதன் சிற்றலைகளைக் கண்டு சிரித்துக் கொண்டு சுனையின் கரைக்கு வந்துசேர்ந்தான். நெற்றியில் படிந்த கேசத்தை ஒதுக்கிவிட்டபடியே புல் புதரை நெருங்கினான்.

மலைப்புல் அவனைச் சாமரம் வீசி வரவேற்றது. சுனைக் காற்று அவனுக்கு வாழ்த்துப் பண் பாடியது. ரோகணத்தின் மலைப் பாறைகள் அவன் மன உறுதி கண்டு மௌனம் சாதித்தன. இந்த வெற்றிப் பெருமிதத்தை இளங்கோ விநாடிப் பொழுதுகூட அநுபவித்து மகிழவில்லை.

“போய்விட்டது! போய்விட்டது!” என்று அடித் தொண்டைக் கூக்குரல் திடீரென்று எழுந்தது.

திடுக்கிட்டுக் குரல் வந்த திக்கில் திரும்பினான் இளங்கோ. மரத்துக்கு அருகே நின்ற வட்டப்பாறைக்குப் பின் பிதுங்கும் விழிகள் தெரிந்தன. “சோழநாட்டான்! சோழநாட்டான்!” என்று கத்திக்கொண்டே ஒருவன் பேயைக்கண்டவன் போல் அலறியடித்துக்கொண்டு ஓடினான்.

இளங்கோவுக்கு யோசிப்பதற்கு நேரமும் இல்லை; தப்பிச் செல்வதற்கு வழியும் இல்லை. வந்த வழியே பேழையுடன் இறங்க முடியாது.

புதருக்குள் பேழையை வைத்துவிட்டு, அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மரத்தடிக்கு ஓடினான். வேலும் வாளும் இருந்தன. வில்லும் அம்புகளும் இருந்தன. முன்புறம் பாறையையும் பின்புறம் மரத்தையும் மதில்களாக வைத்துக்கொண்டு போராட்டத்தைத் துவக்கினான்.

பாறை முகட்டுக்கு மேல் இளங்கோவின் பார்வை சென்றபோது, காவலர்கள் அனைவருமே ஒன்று திரண்டு வருவது தெரிந்தது. அம்பெடுத்து நாணேற்றி வில் வளைத்தான். அதற்குள் அவன் தலைக்குமேல் ரோகணத்து வேல்களும் அம்புகளும் பறந்துவர முற்பட்டன.

எதிர்ப்போரின் சரக்கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு சென்றன இளங்கோவின் அம்புகள். விநாடிக்கொருமுறை மரண ஓலம் ஒன்றன்பின்ஒன்றாக எழும்பிக் கொண்டிருந்தது. எனினும் அவர்களது எதிர்ப்பும், முன்னேற்றமும் அறவே தடைப்படவில்லை. எஞ்சி நின்ற நான்கைந்து வீரர்களும் அணுஅணுவாக அவனை நெருங்கி வந்து வளைத்துக் கொள்ளப்பார்த்தனர்.

இளங்கோவின் அம்புக்கூடு வெற்றுக் கூடாகியது. வில்லை வீசியெறிந்துவிட்டுக் கையில் வேலெடுத்தான். எதிர்ப்பவர்களோ கொக்கரித்துக் கொண்டே கூரம்புகளை ஏவி விட்டனர். கைவேலால் அம்புகளை மட்டுமே அவனால் தடுக்க முடிந்தது. அவர்கள் நெருங்கி வருவதைத் தடுக்க முடியவில்லை. நான்கு பேர்கள் இருந்தார்கள். இப்போது நால்வரிடமும் அம்புகள் இருந்தன. அவர்கள் அவனை அணுகிக் கொண்டிருந்தார்கள்.

பாறையின் அடிப்புறத்தில் வேலைக் கொடுத்தான் இளங்கோ. புரட்டித் தள்ள முடியாதுபோல் தோன்றியது. பாறை புரண்டால் அவனும் அதோடு உருண்டு மடியவேண்டியதுதான். பின்பக்கம் திரும்பி மரத்தின் வேரைப் பற்றிக்கொண்டான். வேலின்அ டிப்புறம் தன் முதுகைக் கொடுத்தான்; கண்கள்கொ ப்பளித்தன; கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்தன. மூச்சடக்கிக்கொண்டு முதுகுத்தண்டால் வேலைத் தள்ளிவிட்டான். மறுகணம் பயங்கரமானதொரு கோடை இடிஇடித்து அந்த மலைப்பிரதேசத்தையே அதிர வைத்தது; கிடுகிடுக்கச் செய்தது; வேலும் முறிந்தது. பாறையும்-புரண்டது; எதிர்த்து வந்தோர் நால்வரும் ஒன்றாகத் தங்கள் கடைசிக் குரலை எழுப்பினார்கள்.

பேழையைத் தூக்கிக்கொண்டு அவசரம் அவசரமாகக் குகையின் பின் வாயிலை நாடி வந்தான் இளங்கோ. வழியில் அங்கங்கே கிடந்த காவல் வீரர்களின் சடலங்களைப் பார்ப்பதற்கு அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
எண்ணிப் பார்க்கவில்லை. எல்லோருமே மடிந்திருப்பார்கள்என்று தனக்குள் நினைத்துக்கொண்டான்.

குகையின் பிறைவாயிலில் இறங்குவது கிணற்றுக்குள் இறங்குவது போலிருந்தது; குறுக்கும் நெடுக்குமாக நீட்டிக் கொண்டிருந்த பாறைகள் படிகளாக உதவின. சிறிது தூரம் சென்றவுடன் வெளி வாயிலின் ஒளி தெரிந்தது. அதைக் கடந்து குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்த மலையடிவாரத்துக்கு வந்தான்.

இளங்கோவுக்கு வியப்பொருபுறம்; அச்சம் ஒரு புறம். இரண்டு குதிரைகள் கட்டியிருந்த அந்த இடத்தில் இப்போது ஒரே ஒரு குதிரைமட்டுமே மேய்ந்து கொண்டிருந்தது.

மற்றொரு குதிரை எங்கே? மனிதனின் காலடிகளும் குதிரையின் குளம்புச் சுவடும் தரையில் பதிந்திருந்தன. திரும்பிப் போய் இறந்தவர்களின் சடலங்களை எண்ணிப் பார்க்க நினைத்தான். பிறகு அந்த யோசனையை மாற்றிக் கொண்டு எஞ்சியிருந்த குதிரையின்மேல் பேழையை வைத்துவிட்டுத்தானும் ஏறி உட்கார்ந்து கொண்டான். புரவியின் கடிவாளத்தைச் சுண்டினான். வீரர்களில் ஒருவன் தப்பி வந்து மகிந்தரின் குகையை நோக்கிப்பறந்தது இளங்கோவுக்குத் தெரியாது.

குகையிலிருந்து மகிந்தரும் அவரது வீரர்களும் கப்பகல்லகத்துக்குப் புறப்பட்டுவிட்ட செய்தி அந்த வீரனுக்கே தெரியாது. குகையைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியவன், குளம்பொலி கேட்டவுடன் பாதையோரம்
அடர்ந்திருந்த புதருக்குப் பின் பதுங்கிக் கொண்டான். ஒளி நெருங்கி வந்தது. குதிரையின் மேலிருப்பவன்இ ளங்கோவென்பதையும், அனிடம் பேழை இருப்பதையும் கண்டுகொண்டான். நேரடியாகச் சென்று எதிர்ப்பதற்கு நெஞ்சில் உரமில்லை.

குதிரை அவனைத் தாண்டிச் செல்லும் நேரத்தில் இளங்கோவின் கழுத்துக்குக் குறி வைத்து வேலெறிந்தான். மயிரிழை தப்பிவிட்ட கூர்வேல் இளங்கோவின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.

“ஆ!” என்ற வேதனைக் குரலோடு குதிரையிலிருந்து பேழையுடன் கீழே சாய்ந்து தரையில் உருண்டான் இளங்கோ. பாய்ந்த இடத்திலிருந்த வேலும் தரையில் விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு வேல் பாய்ந்துவந்த திசையை நோக்கினான். செடிப்புதர்கள் அசைவது தெரிந்தது. காயம்பட்ட அதே தோளை உயர்த்தி, அதே வேலைத் திருப்பி எறிந்தான். மறுகணத்தில் மிரண்டுபோய் வெளியே தாவிய குதிரையிலிருந்து ஒரு மனித உடல் தரையில் சுருண்டுவிழுந்து அசைவற்றுக் கிடப்பது அவனுக்குத் தெரிந்தது.

இளங்கோவால் திரும்பவும் நடந்து போய் சற்றுத் தூரத்தில் நின்ற குதிரையில் மேல் ஏற முடியவில்லை; தள்ளாடி நடந்து சென்றான். வலது தோள்பட்டையிலிருந்து கரம் தனியே துண்டித்துத் தொங்குவதுபோல் தோன்றியது. இரத்தப் பெருக்கும் நிற்கவில்லை. இடுப்பிலிருந்த ஈரத்துணியைக் காயத்தில் பிழிந்துவிட்டுக் கொண்டு மெதுவாகக் குதிரையின் முதுகைப் பற்றிக்கொண்டு தொத்தினான். பேழை அவனுக்கொரு சுமையாகத் தோன்றவில்லை. உடலைச் சுமப்பதுதான் அவனுக்குச் சோர்வு தந்தது.

நல்லவேளையாக நாற்சந்திச் சாவடிக்கருகே அவன் விட்டு வந்த அவனுடைய குதிரையை யாரும் அவிழ்த்துச் செல்லவில்லை. சுற்றிலும் மண்டிக்கிடந்த பசும்புல்லைக்கூட அது சரியாக மேயாமல் தன் தலைவனை எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. மெல்லப் பேழையை அதன் முதுகில் வைத்துக் கயிற்றைச் சுற்றினான். தானும் ஏறிக் களைப்பு மிகுதியால் பேழையில் தலையைச் சாய்த்தபடி குப்புறப் படுத்துக் கொண்டான்.

குதிரையால் வாய்விட்டுப் புலம்ப முடிந்தால் அது தன்த லைவனுக்காகப் புலம்பிக் கண்ணீர் வடித்திருக்கும். எப்படியாவது அவனைக் கொண்டுபோய் சேர்த்தால் போதுமென்று தன் களைப்பையும் மறந்து நடந்தது.

இளங்கோவுக்கு நினைவு தடுமாறத் தொடங்கியது. என்னென்னவோ காட்சிகள் அவன் மனக்குகைக்குள் உருப்பெற்றன. அருள்மொழி நங்கை அவனுக்கு வெற்றித் திலகமிட்டு அனுப்புகிறாள். ரோகிணி அவன் காதருகில் தன் இதழ்களை வைத்து மணிமுடியின் இருப்பிடத்தைச் சொல்கிறாள். இந்த இரண்டு பெண்களுமே அவன் வெற்றி பெற்றதைக் கண்டு பூரிப்படைகிறார்கள். வீரசுவர்க்கம் புகுந்ததைக் கேட்டு வெம்பித் தவிக்கிறார்கள்.

வெற்றி அல்லது வீரமரணம் என்று கட்டளையிட்ட அவன் தந்தை, வெற்றிக்குப் பின் அவன் வீர மரணமடைந்ததால் அவனுக்காக ஒரே ஒருசொட்டுக் கண்ணீர் உதிர்க்கிறார். அடடா! முத்துப் போன்ற தந்தையின் கண்ணீர் சுவர்க்க லோகத்துக்கே அல்லவா அவனைத் தேடிக் கொண்டு வருகிறது.
இளங்கோவின் குதிரை அவனை எங்கோ சுமந்து சென்றது.

தொடரும்


Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...