Skip to main content

வேங்கையின் மைந்தன்-பாகம் 1-36-எங்கும் புலிக்கொடி

 

மன்னர் மகிந்தரும் வல்லவரையர் வந்தியத்தேவரும் தனித்தமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில் மாமன்னர் அங்கு வருவதாக வாயிற்காவலன் அவர்களிடம் வந்து செய்தி கூறினான். இதைக் கேள்வியுற்றவுடன் மகிந்தரின் முகம் வெளுத்தது. அதற்குள் ராஜேந்திரரே அங்கு வந்து சேர்ந்துவிட்டார்.

மாமன்னருக்கு முகமன் கூறி மகிந்தர் அவரை வாய்ச் சொல்லால் வரவேற்றாரே தவிர, அவரது மனம் வரவேற்புக்குச் சித்தமாக இல்லை என்பதை அவர் முகம் காட்டியது. புன்னகை பூத்துக்கொண்டே சக்கரவர்த்தி மகிந்தரின் முகத்தில் தம் விழிகளைப் பாய்ச்சினார். அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் மகிந்தர் தவித்த தவிப்பு மாமன்னரை வியப்புறச் செய்தது.

காவலனைக் கண்டுவிட்ட கள்வனைப்போல் மாமன்னரைக் கண்டு மகிந்தர் ஏன் மிரள்கிறார்? ‘நெஞ்சில் உரமற்ற கோழை! நேர் பார்வைகூடப் பார்க்காமல் ஏன் தவிக்கவேண்டும்?’ என்று நினைத்துக்கொண்டு வல்லவரையர் பக்கம் திரும்பினார் சக்கரவர்த்தி. உணர்ச்சியை உள்ளடக்கிய செப்புச்சிலையாகக் காணப்பட்டார் வந்தியத்தேவர்.

“மகிந்தர் அவர்களே! சோழ சாம்ராஜ்யத்தின் சாமந்த நாயகர் தங்களிடம் யாவற்றையும் தெளிவாக விளக்கியிருப்பாரென்று நம்புகிறேன்’’ என்று வெண்கலக்குரலில் தொடங்கினார் இராஜேந்திரர். “விளக்க வேண்டியவகையில் ஒன்றுமே புதிய செய்தி இல்லை; இன்றைக்கு நாம் எப்படியும் நல்லதொரு முடிவுக்கு வந்தாகவேண்டும்.’’

மகிந்தர் மௌனம் சாதித்தார். அந்த மௌனம் நீண்டுகொண்டேபோயிற்று.

பொறுமையிழந்த மாமன்னர், “என்ன மாமா, மகிந்தரின் கருத்தைத் தெரிந்துகொண்டுவிட்டீர்களா? அவர் என்ன கூறுகிறார்?’’ என்று வல்லவரையரிடம் திரும்பிக் கேட்டார். வல்லவரையர் அதற்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் மகிந்தரிடம்,

“மாமன்னருக்கு மறுமொழி கூறுங்களேன்’’ என்று கண்களால் தூண்டினார். “சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள், இதோ வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிப் பின்புறம் தொங்கிய திரையை விலக்கிக்கொண்டு உள்ளே சென்றார் மகிந்தர். திரைக்குப் பின் அமர்ந்திருந்த ரோகிணியும் அவரைப் பின்பற்றினாள்.

“என்ன அப்பா?’’

“ஒன்றுமில்லை; குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு.’’

குடித்துவிட்டுத் தமது முகத்தில் அரும்பிய வேர்வை முத்துக்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு அங்கேயே நின்றார். உள்ளே அவருக்கொன்றும் வேலை இல்லை. மாமன்னரிடம் முகம் கொடுத்துப் பேசுவதற்கு அவருக்குத் துணிவு தேவையாக இருந்தது. அதை வரவழைத்துக் கொள்ள முயன்றார்.

இராஜேந்திரர் வல்லவரையரிடம் “என்ன மாமா?’’ என்று மெல்லிய குரலில் வினவினார்.

“வீணாகக் குழம்புகிறார்; தாமும் குழம்பி நம்மையும் குழப்பப் பார்க்கிறார். நமது பேச்சைப் புரிந்துகொள்ள அவர் விரும்பவில்லை. நம்மிடம் மழுப்பிவிட்டு, கூடுமானால் கீர்த்தியோடு சேர்ந்து கொள்ளலாம் என்று
நினைக்கிறார் போலும். நம்மிடமும் அவருக்கு அச்சம்; அமைச்சர் கீர்த்தியிடமும் அச்சம். நமது நட்பைவிட நமது அழிவே அவரது நோக்கம் என்று தெரிகிறது.’’

மாமன்னர் யோசனையில் ஆழ்ந்தார். மகிந்தர் மெல்லத் திரும்பி வந்து தமது ஆசனத்தில் மீண்டும் அமர்ந்தார்.

“உங்களுக்குத் தூதுவர்கள் வாயிலாக அனுப்பியிருந்த ஓலையில் இரண்டு விஷயங்கள் குறிப்பிட்டிருந்தேன். ஒன்று எங்களுடைய நாட்டு மணிமுடி; மற்றொன்று-’’ மாமன்னர் தமது பேச்சை முடிக்கு முன்பே மகிந்தர் குறுக்கிட்டார்.

“மணிமுடிதான் கிடைத்துவிட்டதே! இனித் தாங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லலாமே!’’ புதிய துணிவோடு பேசினார் மகிந்தர்.

“ஆமாம்; கிடைத்துவிட்டது. நம்முடைய இருவர் சார்பிலும் எண்ணற்ற கட்டிளங் காளையர்களைப் பலிகொடுத்த பிறகு, நமது பொருளையும் காலத்தையும் விரயம் செய்த பிறகு, நாம் ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்த்துக்கொண்ட பிறகு கிடைத்துவிட்டது. உண்மைதான்; நாங்கள் திரும்பிப்
போகத்தான் போகிறோம்...’’

சக்கரவர்த்தி திடீரென்று தமது பேச்சை நிறுத்திவிட்டு மகிந்தரின் பின்புறம் தொங்கிய திரைப்பக்கம் திரும்பினார். “ரோகிணி!’’ மகிந்தரது அரசுரிமைப் பொருள்களை இங்கே எடுத்துக்கொண்டு வா!’’

ரோகிணி திரையை விலக்கிக் கொண்டு வந்து பேழையை மாமன்னரின் முன்பாக வைத்தாள். பிறகு திரைக்குப்பின் மறைந்து போனாள்.

“மகிந்தர் அவர்களே! போகுமுன் தங்களுக்கு முடியையும் நாட்டையும் கொடுத்துவிட்டுத்தான் போக விரும்புகிறேன். நான் வயதில் முதிர்ந்தவன். நாட்டினர் முன்பாகத் தங்களுக்கு என் கரத்தாலேயே மீண்டும் இந்த முடியைச் சூட்டிப் பார்க்க வேண்டுமென்பதுதான் என்னுடைய ஆசை...’’

மகிந்தர் எதையும் நம்பாதவர்போல் தலையைக் குனிந்து கொண்டிருந்தார். மாமன்னர் தொடர்ந்து கூறலானார்:

“நேற்றுத் தாங்கள் அனுப்பிய தூதுவன் தாங்கள் என்னிடம் நட்புறவை நாடி வருவதாகத் தெரிவித்தான். நான் பெருமகிழ்ச்சியுற்றேன். போருக்கு முன்பு நான் ஓலையில் குறிப்பிட்டிருந்த இரண்டாவது விஷயம் நமது
நட்புறவைப் பற்றியதுதான். நான் தங்களிடம் நாட்டைத் திருப்பிக்கொடுக்க விரும்புவது நட்பைப் பெறுவதற்காக. அந்த நட்பு எனக்குக் கிடைக்குமா?’’

“தாங்களோ பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. தங்கள் பகையை நாங்கள் நாடுவோமா?’’ என்று அவரைத் திருப்பிக் கேட்டார் மகிந்தர்.

“பெரிய சாம்ராஜ்யத்துக்குத்தான் தொல்லைகள் மிகுதி. மனித உடலில் ஒரு சுண்டுவிரல் நோயுற்றாலும் அது முழுமனிதனையும் பாதிக்கிறது. பெரிய குடும்பத்தில் யாராவது ஒருவர் குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்படாவிட்டாலும் அது குடும்பத்தையே பாதிக்கிறது. சோழ சாம்ராஜ்யமாகிய பெரிய குடும்பத்துக்கு ஈழத்திலுள்ள ரோகணத்தைப் போன்ற சிறு நாடுகூடத் தொல்லை கொடுக்கலாம். ஆகவேதான் தங்கள் நட்பை நான் வலிந்து கேட்கிறேன்.’’

“அதற்காக நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று கேட்டார் மகிந்தர்.

“நாம் நடத்தவிருக்கும் விழாவுக்கு அமைச்சர் கீர்த்தியையும் தங்கள் குமாரன் காசிபனையும் வரவழைக்க வேண்டும். எல்லோருமாக இருந்து ரோகணத்து மக்களின் முன்னிலையில் ஒற்றுமையுடன் வாழவேண்டுமென்று உறுதி செய்துகொள்வோம். வெளிநாட்டுப் படையெடுப்புகள் ஏதும் நேர்ந்தால் அதிலிருந்து ரோகணத்தைக் காக்க வேண்டியது சோழ சாம்ராஜ்யத்தின் பொறுப்பு. அதற்குக் கைம்மாறாக நாங்கள் தங்களிடமிருந்து மிகுதியாக ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை.’’

கீர்த்தியின் பெயரைக் கேட்டவுடன் மகிந்தரின் தலை சுழலத் தொடங்கியது. கைம்மாறு என்ற பேச்சு வந்தவுடன் திறை செலுத்தச் சொல்கிறாரோ என்று நினைத்தார்.

“என்ன கைம்மாறு?’’

“எங்களது பகைமையை விரும்புகிறவர்களிடம் ரோகணம் உறவு பூணுவதில்லை என்று வாக்களிப்பதுதான் அந்தக் கைம்மாறு!’’ என்றார் இராஜேந்திரர். “பாண்டியர்களிடமோ, மேலைச் சளுக்கர்களிடமோ, அல்லது அவர்களைப் போன்ற பிறரிடமோ உங்கள் நாடு தொடர்பு கொள்ளக்கூடாது.’’

“அது எங்கள் சொந்த விஷயமாயிற்றே?’’ என்றார் மகிந்தர்.

சுருக்கென்று மாமன்னரது மனத்தில் பாய்ந்தது மகிந்தரின் மறுமொழி. அவர் அலட்சியமாக நகைத்துவிட்டு மேலே கூறினார்:

“எது உங்கள் சொந்த விஷயம்? பாண்டியர்களை எங்களுக்கெதிராகத் தூண்டிவிடுவதா உங்கள் சொந்த விஷயம்! மேலைச் சளுக்கர்களையும் சோழ மண்டலத்தின் மீது ஏவி விடுவதா உங்கள் சொந்த விஷயம்? மகிந்தர் அவர்களே! உங்கள் அமைச்சரின் சதித்திட்டங்கள் அனைத்தும் எங்களிடம் இருக்கின்றன. அரசரின் உடன்பாடு இல்லாமலே அமைச்சர் தனித்து இயங்குவதாக இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போதுதான் தெரிகிறது, அமைச்சருக்கும் தங்களுக்கும் உள்ள உறவு!’’

விநாடிக்கு விநாடி வேகம் அதிகரித்தது இராஜேந்திரரிடம். மகிந்தருக்கு விளங்கக்கூடிய குரலில் விளங்கினார்: “அமைச்சரும் காசிபனும் இந்த அரண்மனைக்கு வந்தாக வேண்டும். எங்கிருந்தாலும் அவர்களை வந்து சேரச் சொல்லித் தாங்கள் ஓலை எழுதித்தாருங்கள். அந்த ஓலையின் செய்தியை நாங்கள் ஊர்தோறும் முரசறைவித்து மக்களிடையே பரப்புகிறோம். அவர்களாக வந்து சேராவிட்டாலும் அவர்களைத் தேடிக் கொணரும் முயற்சியில் எங்களுக்கு மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.’’

“அமைச்சர் ஒருபோதும் வரமாட்டார்’’ என்றார் மகிந்தர். “காசிபனையும் அனுப்ப மாட்டார்.’’

“மன்னர் சொல்லுக்கு மதியமைச்சர் மதிப்பளிக்க மாட்டார்! தந்தை சொல்லுக்குத் தனயன் செவி சாய்க்க மாட்டான்! விந்தையாக இருக்கிறது மகிந்தரே?’’ இடிச் சிரிப்புச் சிரித்தார் இராஜேந்திரர். 

“அவர்கள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தாங்கள் தங்களது அந்தரங்க சுத்தியை வெளிப்படுத்துவதற்காக எங்களிடம் ஓலை எழுதித் தாருங்கள்.’’ 

மேலும் கீழும் பார்த்துவிட்டு, “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்; என்னால் ஓலை ஏதும் எழுதித் தர முடியாது’’ என்றார் மகிந்தர்.

“உங்களை இப்போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார் சக்கரவர்த்தி, “நீங்கள் நாட்டின் நலன் கருதி அரசாளும் மன்னரல்லர். அமைச்சருக்கு அஞ்சி நடப்பவர். அவரால் ஆட்டுவிக்கப்படும் ஒரு துரும்பு.’’

முதல் நாள் மகிந்தரிடமிருந்து ரகசியமாகக் கைப்பற்றிய ஓலையை எடுத்து அவர் முன்பு வீசி எறிந்தார் மாமன்னர், “கீர்த்தி எழுதிய ஓலையைக் கண்ட பிறகு நீங்கள் மனம் மாறி விட்டீர்கள். இது உண்மைதானே? நண்பராக வந்த உங்களை, கீர்த்தி எழுதிய இந்த ஓலை பகைவராக மாற்றிவிட்டது.’’

மறுமொழி கூறாது, அந்த ஓலையை எடுத்து வைத்துக் கொண்டார் மகிந்தர். ‘இது எப்படி மாமன்னருக்குக் கிடைத்தது?’ இந்தக் கேள்வியால் எழுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அவர் தமக்குள் அடக்கிக் கொண்டார்.

“இந்தாருங்கள். நீங்கள் படித்துப் பார்க்க வேண்டிய மற்றொரு ஓலை!’’ என்று தஞ்சைத் தலைநகரிலிருந்து மதுராந்தக வேளார் தமக்கு அனுப்பியிருந்த ஓலையை அவரிடம் நீட்டினார் மாமன்னர்.

வல்லவரையர் இதைக் கண்டு திடுக்கிடவே, மாமன்னரின் கண்கள் அவரை நோக்கிப் புன்னகை புரிந்தன. ‘நமக்கு வந்த ரகசியச் செய்தியைப் பகைவரின் பார்வைக்கு அனுப்புகிறேன் என்கிறீர்களா? தக்க காரணத்துடன்தான் அப்படிச் செய்கிறேன்’ என்று கூறாமல் கூறினார் சக்கரவர்த்தி.

அந்த ஓலையை மகிந்தர் படிக்கத் தொடங்கியவுடன் அவரது முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அணு அணுவாகக் கவனித்து வந்தார்கள் இருவரும். மகிந்தரின் முகத்தில் சிறிது சிறிதாக மலர்ச்சி ஏற்பட்டது. அதை அவர் மறைக்க எவ்வளவோ முயன்று பார்த்தார்; முடியவில்லை.

மாமன்னரின் விழிகள் மகிந்தரின் மனத்தையே ஊடுருவி உண்மையைக் கண்டுபிடித்துவிட்டன.

மதுராந்தகர் எழுதிய ஓலையில் இருந்த செய்தியின் சுருக்கம் இதுதான்:

“கீர்த்தியின் தூண்டுதலால் பாண்டியர்கள் உரம் பெற்றிருக்கிறார்கள். எந்த விநாடியிலும் மதுரையில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுமாளிகை தகர்த்தெறியப் படலாம். ரோகணத்து வீரர்கள் பலர் பாண்டியக் கடற்கரை வழியாகத் தமிழ்நாட்டில் வந்து இறங்கியிருக்கிறார்கள். பாண்டிய மக்களிடையே வெறுப்பு உணர்ச்சி தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது. உடனடியாகச் சக்கரவர்த்திகள் அங்கு திரும்பி வரவேண்டும். படைவீரர்களுடன் வருவது நல்லது.’’

ஓலையை மகிந்தரிடமிருந்து வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார் மாமன்னர். “மகிந்தரே! உங்கள் அகத்தின் மலர்ச்சி முகத்தில் தெரிகிறது. சோழ சாம்ராஜ்யம் ஆட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறதென்றும், அதை அப்படி ஆட்டுவிப்பவர் உங்களை ஆட்டி வைக்கும் அமைச்சர் என்றும் நீங்கள் நினைக்கிறீர்களல்லவா?’’

மகிந்தர் திடுக்கிட்டார்.

“ஆமாம், தங்களிடம் நான் எவ்வளவுக்கெவ்வளவு விட்டுக் கொடுத்துப் பேசினேனோ, அதற்கெல்லாம் காரணம் சோழ சாம்ராஜ்யத்தின் பலவீனம் என்பது உங்கள் கருத்து. உண்மையில் அது எங்கள் ஆற்றலின் பலவீனமல்ல;
அன்பின் பலவீனம், நேர்மையின் பலவீனம். இந்த விநாடியிலிருந்து நீங்கள் அவற்றின் வலிமையைக் காண்பீர்கள்.’’

கரங்களைச் சேர்த்துத் தட்டி ஒலி எழுப்பினார் சக்கரவர்த்தி. காவலர்கள் இருவர் ஓடோடி வந்தனர்.

“இந்தப் பேழையை எடுத்துக்கொண்டுபோய் என்னுடைய மாளிகையில் வைத்துவிடுங்கள்.’’

மகிந்தரின் அரசுரிமைப் பேழையைக் காவலர்கள் தூக்கிச் சென்றவுடன் ரோகிணி திரையை விலக்கிக் கொண்டு வேகமாக வெளியில் ஓடிவந்தாள். மகிந்தரையும் மாமன்னரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“மகிந்தரே! எங்கள் துன்பத்தில் இன்பங் காணும் ஒருவருக்கு நாங்கள் வென்ற நாட்டைத் திருப்பித்தர முடியாது. உங்களை இனி இந்நாட்டில் விட்டு வைக்கவும் கூடாது.’’

வல்லவரையரை உற்றுப் பார்த்தார் சக்கரவர்த்தி. அவர் கட்டளையை எதிர்பார்த்து வல்லவரையரும் சித்தமாக எழுந்து நின்றார்.

“சாமந்த நாயகர் அவர்களே! மகிந்தரை என் மாளிகைக்கு அழைத்துச் சென்று தனி அறையில் காவலில் வையுங்கள். சோழ நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் முதற்கப்பலில் இவரும் நம்முடன் தஞ்சைத் தலைநகருக்கு வருவார். இன்றிலிருந்து மன்னர் மகிந்தர் நமது விருந்தினர்.’’

“அக்கிரமம்!’’ “அநீதி!’’ என்று பதறிக்கொண்டெழுந்தார் மகிந்தர்.

அதைச் செவியுறாதவர்போல் மாமன்னர், “ரோகணத்தை உள்ளடக்கிய ஈழ மண்டலம் முழுவதிலும் இனி நமது புலிக்கொடி பறக்கும்’’ என்று முழங்கினார். தயங்கி நின்ற வல்லவரையரிடம், “அழைத்துச் செல்லுங்கள்
இவரை’’ என்று கர்ஜித்தார்.

வல்லவரையரின் கரம் மகிந்தரின் கரத்தைப் பற்றியவுடன், “அப்பா!’’ என்று அலறிக்கொண்டே அவர்களுக்குக் குறுக்கே வந்த விழுந்தாள் ரோகிணி.

“ரோகிணி! இங்கு வா அம்மா!’’ என்று இராஜேந்திரர் கனிவுடன் கூறி,அவளைத் தம்மிடம் அழைத்தார். ரோகிணி தன் அலறலை நிறுத்தவில்லை; அழுகையை அடக்கவில்லை. மகிந்தரை விட்டுவிட்டு அவள் மாமன்னரின்
கரங்களைப் பற்றிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“பொருகடல் ஈழத்து அரசர்தம் முடியும்
ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
முன்னவர் பக்கம் தென்னவர் வைத்த
சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
தென்திரை ஈழ மண்டல முழுவதும்
கொண்டார் கோப்பர கேசரி வன்மர்.’’

- இராஜேந்திர சோழர் மெய்க்கீர்த்தி. 


முதலாம்பாகம் முற்றியது



Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம