Skip to main content

வேங்கையின் மைந்தன் பாகம் 2 , 6. கூண்டுக் கிளியின் குரல்!

 

குளத்தின் மத்தியில் முளைத்தெழுந்த ஒளித் தீவான நடுவர் ஆலயத்தைப் பார்த்தவண்ணம் இளங்கோவும் ரோகிணியும் குளத்தங்கரைப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். சந்திப்பு நிகழ்ந்தவுடன் வெடித்துக் கிளம்பிய பேச்சு அப்படியே பாதியில் அறுந்துவிட்டது. அதை மீண்டும் ஒட்டவைத்து உரையாடலை முன்போலத் துவங்க வேண்டும். முதலில் யார் பேசுவது?

அவள் பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான், அவன் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள்.

ரோகிணிக்கு வாயைத் திறப்பதற்கு அச்சமாயிருந்தது. அவனுக்கோ அவளுடைய மௌனத்தின் காரணம் தெரியவில்லை. பேசக்கூடாதென்று அழுத்தம் செய்கிறாளா?

பொறுத்துப் பார்த்தான் இளங்கோ. ரோகிணியின் மௌனத்தை அவனால் மேலும் பொறுக்க முடியவில்லை. குளத்துக்குள் குனிந்து படியருகில் குவிந்திருந்த ஒரு தாமரையை வெடுக்கெனக் கிள்ளித் தண்ணீரில் வீசிவிட்டு, கோபத்துடன் எழுந்தான், திரும்பி நடந்தான்.

“எங்கே போகிறீர்கள்?’’ என்று கத்தினாள் ரோகிணி.

“என்னை விரும்புகிறவர்கள் யாரோ அவர்களிடம் போகிறேன். மாமன்னர் என்னை விரும்புகிறார்; வல்லவரையர் என்னை விரும்புகிறார்; இன்னும் இந்த நாட்டில் எனக்குத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களுமாக லட்சோப லட்சம் பேர்கள் என்னை விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது  என்னை விரும்பாதவளின் அருகில் நான் ஏன் இருக்க வேண்டும். என்னை வெறுப்பவளிடம் எனக்கு என்ன வேலை?’’

“மன்னித்து விடுங்கள்; உங்களுக்கு இரக்கமில்லையா?’’ என்று மன்றாடினாள் ரோகிணி.

இளங்கோ தயங்கி நின்றான்.

அவனுடைய தயக்கம் அவளுக்குச் சிறிது துணிவு தந்தது. மெல்லத் தனது வலதுகரம் நீட்டிப் பின்புறம் ஒதுங்கியிருந்த அவனுடைய வலக்கரத்தைப் பற்றினாள். இளங்கோவின் மெய் சிலிர்த்தது. ரோகிணியின் முகத்தை மெல்லத் திரும்பிப் பார்த்தான்.

“உங்களைச் சந்திக்க வேண்டுமென்பதற்காகத்தான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். வீரமல்லன் என்பவனிடம் உங்களை அழைத்து வருமாறு கூறினேன். அவன் மறுத்துவிட்டான். நானே அங்கு புறப்பட நினைத்த சமயத்தில் எதேச்சையாக நீங்களே வந்துவிட்டீர்கள். சற்று நேரம் இங்கு தங்கிச் செல்ல மாட்டீர்களா?’’

லட்சோப லட்சம் பேர் தன்னை விரும்புகிறார்கள் என்று ஒரு வினாடிக்குமுன்பு தற்பெருமை பேசிய இளங்கோவுக்கு இப்போது அந்த ஒருத்தியின் அன்பு மற்ற அத்தனை பேருடைய அன்பையெல்லாம் விடப் பெரிதாகத் தோன்றியது. வெறுப்புக்கொண்டவள் விரும்பிக் கரம் பற்றுவாளா?

“உன் வெறுப்பு இப்போது விருப்பமாக மாறியிருக்கிறது போலும்!’’ என்று தன் இளகிய மனத்தை இரும்பாக்கிக் கொண்டு கூறினான் இளங்கோ.

“மீண்டும் இது வெறுப்பாக மாறலாம் அல்லவா?’’

ரோகிணியின் அன்புப் பிடி அவன் கரத்திலிருந்து மெல்ல நழுவியது.

“நீங்களும்தான் என்னை வெறுப்பதாய்ச் சொன்னீர்கள். அந்த வெறுப்பு மெய்யானதாக இருந்தால் நான் உங்களை வற்புறுத்தவில்லை. இனி உங்கள் சித்தம். என்னைப் பொறுத்தவரையில் நான் ஆத்திரத்தில் அறிவிழந்து சொன்ன சொல் அது. இதை மெய்யென்று நம்பினால் நீங்கள் இங்கு தங்கலாம்; இல்லாவிட்டால் போகலாம். லட்சக்கணக்கானவர்களின் அன்புக்குப் பாத்திரமான வீரரை நான் எதற்குத் தடுக்க வேண்டும்?’’

“ரோகிணி! உன்னை நான் மனதார விரும்புகிறேன். ரோகிணி!’’ என்று உணர்ச்சிவயப்பட்டுக் கூறிக்கொண்டே அவள் அருகில் நெங்கினான், இளங்கோ. “முதல் முறை உன்னைக் கண்டதிலிருந்து உன்னை நான் மனமார விரும்புகிறேன்.’’

ரோகிணியின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாணம் படர்ந்தது.

“ஓ! நீங்கள் சொல்வது மெய்தானா?’’ என்று பரிகாசக் குரலில் கேட்டாள்.

“உங்களுடைய விருப்பம் அதிகமாகும்போது நீங்கள் என்னைக் கடலுக்குள் தூக்கி எறிந்து விடுவீர்கள் போலிருக்கிறது! நாள்கணக்கில் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்போல் இருக்கிறது. மாமன்னருடன் யானைமேல் போனபோது ஒருமுறைகூடப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் சென்றீர்களே, இதற்கெல்லாம் காரணம், என்னிடம் விருப்பம் மிகுதியானதுதானா?’’

“நீதான் என்னை நெருப்பாகப் பற்றி எரியச் செய்து விட்டாயே!’’ என்றான் இளங்கோ. “அந்த நெருப்பில் நானும் வெந்துபோய் வீணாக உன்னையும் வாட்டிவிட்டேன்.’’

“அப்படியானால் உங்கள் தாத்தா சொன்னதெல்லாம் மெய்தான்.’’

“என்ன சொன்னார் அவர்?’’

“நெருப்போடு பழகுவதுபோல் உங்களிடம் பழக வேண்டுமென்றார். இருங்கள், சற்று உங்களிடமிருந்து விலகி உட்கார்ந்து கொள்கிறேன். நெருப்பிடம் நெருங்கினால் அது என்னைப் பொசுக்கிவிடுமல்லவா?’’

வேண்டுமென்றே சிறிது ஒதுங்கிக்கொண்டு கலகலவென்று சிரித்தாள் ரோகிணி. மங்கலான அந்த ஒளியில் கூட அவளுடைய முத்துப் பல்வரிசை மின்னலெனப் பளிச்சிட்டது.

“இவ்வளவு அழகாகச் சிரிக்கத் தெரிந்த நீதானா அன்று அப்படி என்மீது சீறி விழுந்தாய்? என்ன காரணத்துக்காக நீ என்னைச் சினந்து கொண்டாய்? சொல்ல மாட்டாயா ரோகிணி?’’

ரோகிணியின் முகம் உடனே வாட்டம் கண்டது. “இந்த வேளையில் அதை ஏன் கிளறிவிடுகிறீர்கள்? உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேனே, அது போதாதா உங்களுக்கு?’’

“போதாது; எனக்குக் காரணம் தெரிந்தாகவேண்டும். அப்போதுதான் என் மனம் அமைதி பெறும்’’ என்றான் அந்தப் பிடிவாதக்காரன்.

“உங்கள் மன அமைதிக்காக என் மனத்தின் அமைதியை இழக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் சொல்கிறேன்’’ என்று துயரம் நிறைந்த குரலில் கூறினாள் ரோகிணி. சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.

“அப்படியானால், அதைச் சொல்ல வேண்டாம் ரோகிணி, விட்டுவிடு’’ என்றான் இளங்கோ.

“இல்லை; அதில் ஒன்றும் ரகசியமில்லை, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்’’ என்றாள் ரோகிணி. 

“நான் அளவுக்கதிகமாக என்னுடைய நாட்டின் மீது பற்றுதலும் பக்தியும் வைத்திருக்கிறேன். என் தந்தையாரிடமும் தம்பியிடமும் ஆழ்ந்த பாசம் வைத்திருக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் உங்கள் சோழநாட்டுக் கப்பல் என் உடலைத்தான் இங்கே சுமந்து கொண்டு வந்திருக்கிறது. என்னுடைய உயிரில் பாதி கப்பகல்லகம் அரண்மனைக்குள் ரோகணத்துக் காட்டுக்குள் என் தம்பியைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறது. நான் என்ன செய்வேன்? விதி என்னை இரு கூறாய்ப் பிய்த்தெடுத்து வேடிக்கை பார்க்கிறது.’’

கண்களைத் துடைத்துக்கொண்டு மேலே கூறினாள் ரோகிணி. “கூண்டில் அடைப்பட்ட கிளியாக நான் கப்பலில் நின்று துடித்துக்கொண்டிருந்த வேளையில் நீங்கள் எதிர்ப்பட்டு வந்தீர்கள். விதியின்மேல் பொங்கி எழுந்து கொண்டிருந்த வெறுப்பு உங்கள்மீது திரும்பியது. நான் விதியை வெறுத்தேன்; என்னை நொந்து கொண்டேன், உங்களை வெறுக்கவில்லை.’’

“விதி என்கிற சொல்லில் எனக்கும் பங்கு உண்டல்லவோ? நீ இந்த நிலைக்கு வருவதற்கு நானுந்தானே ஒரு காரணம்’’ என்றான் இளங்கோ.

“காரண காரியங்களை இப்போது ஆராய்ந்து பயனில்லை. முதன் முதலில் உங்கள் சக்கரவர்த்தி தூது அனுப்பியபோது என் தந்தையார் அதை ஒப்புக்கொண்டிருக்கலாம். அமைச்சரின் உருவில் விதி குறுக்கே நின்று தடுத்துவிட்டது. அடுத்தாற்போல், அது எங்களுக்குப் போரில் தோல்வியைத் தந்தது. அதையும் அடுத்து என் தம்பியைப் பிரித்தது. பிறகு என் உருவத்திலே போய் என் தந்தையைக் காட்டிக் கொடுத்தது; மணிமுடியை
உங்களுக்கு மீட்டுக் கொடுத்தது. எங்களை அடிமைகளாய்க் கப்பலேற வைத்தது.’’

குலுங்கிக் குலுங்கி அழுதாள் ரோகிணி. அவளை எப்படித் தேற்றுவது என்று இளங்கோவுக்குத் தெரியவில்லை. அன்பான மொழிகள் பல சொல்லிப் பார்த்தான். ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல் அளிக்க முயன்றான். எளிதில் அவளால் தன்னைத் தேற்றிக்கொள்ள இயலவில்லை.

“இளவரசே! நாங்கள் நாடு இழந்து, வீடிழந்து வந்திருக்கும் அநாதைகள். தஞ்சைத் தலைநகருக்குப் போன பிறகு எங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்குமோ என்னவோ தெரியாது. அரண்மனையில் இருப்பவர்கள் எங்களை எப்படி நடத்துவார்களோ அது புத்த பகவானுக்குத்தான் தெரியும் இதுவரை உங்களிடம் மட்டுமே ஓரளவு நெருங்கிப் பழகியிருக்கிறேன். பழகிய அந்த ஒரே மனிதரின் மனத்தையும் புண்படுத்திவிட்டேன். அதற்காக ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவே உங்களைச் சந்திக்க விரும்பினேன். என்னை மன்னிப்பீர்களா?’’

“போதும் ரோகிணி!’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் இளங்கோ.

“தஞ்சைக்குப் போய்விட்டால் இனி உங்களைச் சந்திப்பது கடினம்; நீங்கள் ஆண்பிள்ளை, அதிலும் ஒரு நாட்டின் இளவரசர்! தஞ்சையிலிருந்து சொந்த ஊருக்குப் போனாலும் போவீர்கள் அல்லது இன்னும் எத்தனையோ போர்க்களங்கள் உங்களுக்குக் காத்திருக்கலாம். அப்படியே நீங்கள் தஞ்சையில் தங்கினாலும் மீண்டும் உங்களைப் பார்க்க முடியுமோ முடியாதோ? பெரும்பாலும் இதுவே நம்முடைய கடைசிச் சந்திப்பாக இருந்தாலும் இருக்கும். அதனால்தான் இன்று பிரியும்போது மனக்கசப்புடன் பிரியக்கூடாதல்லவா?
நான் உங்களை வெறுக்கவில்லை; இதை நீங்கள் தெரிந்து கொண்டால் போதும் போய் வாருங்கள்.’’

கரம் கூப்பிவிட்டுச் சரேலென்று எழுந்து சென்றாள் ரோகிணி.

“ரோகிணி!’’ என்று பதறினான் இளங்கோ. “நில்! ஒரே ஒரு கணம் நின்றுவிட்டுப் போ!’’

“என்ன?’’

“நீ நினைப்பதுபோல் இது நம் கடைசிச் சந்திப்பாக இருக்காது.’’

“எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்று துக்கத்துடன் கூறினாள் அவள்.

“நீ என்னை வெறுக்கவில்லை என்று மட்டும்தானே சொன்னாய்? விரும்புவதாகச் சொல்லவில்லையே?’’

ரோகிணி பதில் அளிக்கவில்லை.

“சொல் ரோகிணி! நீ என்னை விரும்புகிறாயா!’’ மீண்டும் கேட்டான் இளங்கோவேள்.

மௌனமாக அடுத்த அடி எடுத்து வைத்தாள் ரோகிணி.

“சொல்லிவிட்டுப் போ’ என்று வெடுக்கென்று அவள் கரத்தைப் பற்றி இழுத்தான் இளங்கோ.

“தயவு செய்து இப்போது எனக்குத் துன்பம் தராதீர்கள். நான் போய் என் தந்தையாரைப் பார்க்க விரும்புகிறேன்.’’

இளங்கோவின் கைப்பிடி நழுவியது. ரோகிணியும் அவன் பார்வையிலிருந்து நழுவினாள். அவன் எழுப்பிய வினாவுக்கு விடை கொடுக்க வேண்டிய அவளது உருவம் இருளில் மறைந்து சென்று கொண்டிருந்தது.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...