அரச அன்னம் ஒன்று தனது பரிவாரங்கள் புடைசூழக் கம்பீரமாக மிதந்து வருவதுபோல் மாமன்னர் இராஜேந்திர உடையாரது மரக்கலம் கடல்நீரை இரு கூறாகக் கிழித்த வண்ணம் நாகைத் துறைமுகத்தை நாடிப்
பாய்மரச் சிறகடித்து விரைந்தது.
கரை காண்பதற்காக மரக்கலத்திலிருந்தவர்களது இருதயம் துடித்த துடிப்பை தும்பைப் பூ நிறத்திலான அதன் பாய்மரச் சேலைகள் வெளியிட்டுக்கொண்டிருந்தன.
மரக்கலத்தின் மையத்தில் நின்றதோர் உயர்ந்த கம்பத்தின் உச்சியில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது.
கப்பல்கள் மிதந்துவந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி. இராஜேந்திரபூபதியின் முதற்கப்பல் கரையோரமாக நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்த நேரத்தில், கடைசிக் கப்பல் அடிவானத்தின் அடிவயிற்றிலிருந்து முத்தைப் போல் முளைத்தெழுந்து பளபளத்தது.
வெற்றியோடு திரும்பிவரும் தமிழ்மகனைச் சுமந்து வந்த ஆனந்தத்தைக் கீழைக் கடலால் தாங்க முடியவில்லை போலும், தனது ஆயிரமாயிரம் அலைக்கரங்களால் ஆர்ப்பரித்து அது ஆனந்த நடனம் புரியத் தொடங்கியது, கோடிக்கணக்கான வெண்முத்து நீர்த்திவலைகளைக் கரையில் வாரி இறைத்து விளையாடியது. “வாழ்க!’’ “வாழ்க!’’ என்று வாழ்த்தொலி எழுப்பியது கடல்.
“வெல்க! வெல்க!’’ என்று வெண்சங்கம் முழங்கியது காற்று.
வானத்திலிருந்து கதிரவன் தங்கத் தூளைத் தூவிய வண்ணமாகவே இருந்தான். தனது வெம்மையைக் குறைத்துக் கொண்டு மென்னகை புரிந்தான் அவன். சோழநாட்டுத் தென்னஞ் சோலைகள் பாளைமுத்துக்கள் உதிர்க்க, நந்தவனங்கள் நறுமணம் வீச, வாழைத் தோட்டங்கள் குலை தள்ளித் தலை குனிய, கானகத்து வண்டினம் மலர் சொரிந்து மதுமாந்திப் பாட்டிசைக்க, காடும் வீடும், நகரமும் ஒரே கோலாகலத்தில் ஆழ்ந்திருந்தன.
நாகைப்பட்டினத்துத் துறைமுகத்தில் சிறிதுகூட மணல்வெளியைக் காண முடியவில்லை. நீரின் விளம்பிலிருந்து நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம்,கண்ணுக்கெட்டிய தூரம்வரை, அதற்கும் அப்பால் ஒரே தலைகள், தலைகள், தலைகள்! கடலின் மேற்பரப்பில் நீர் முத்துக்கள் அலைமோதின. கரையின் மேற்பரப்பில் மக்களது தலை முத்துக்கள் அலைமோதின.
நாகையம்பதியும் அதை அடுத்திருந்த கிராமங்களும் கடற்கரைக்கே அன்று வந்துவிட்டன. நாகைக்குச் சற்றுத் தொலைவிலிருந்த சிற்றூர்களும் சிறுநகரங்களும் நாகையிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் நெடுஞ்சாலை ஓரங்களில் குடியேறி விட்டன.
ஊருக்கு ஊர் தனித்தனியே தேர்த்திருவிழா உற்சவங்கள் நடைபெறுவது உண்டு. சோழ சாம்ராஜ்யம் முழுமைக்குமே இப்படி ஒரு பெருவிழா இதற்கு முன்பு நடைபெற்றதில்லை. மணிமுடி கிடைத்துவிட்டதென்றும் அதை எடுத்துக் கொண்டு மாமன்னர் திரும்புகிறாரென்றும் பத்துத் தினங்களுக்கு முன்பே செய்தி வந்தது. காற்றினும் கடிதாக அது நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. அதைக் கேள்வியுற்றதிலிருந்து மக்கள் மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் கிடந்து தவிக்கலானார்கள்.
கப்பலை விட்டிறங்கிச் சிறு படகிலேறி மாமன்னரும் இளங்கோவும் மணிமுடிப் பேழையுடன் முதலில் கரைக்கு வந்து சேர்ந்தனர். வல்லவரையர் மாமன்னரது பரிவாரங்களையும் மற்றவர்களையும் கவனித்து இறக்குவதற்காகக் கப்பலில் தங்கினார். முக்கியமான சில பொறுப்புகளை அவரிடம் கொடுத்திருந்தார் சக்கரவர்த்தி.
வரவேற்பதற்காகப் பூரண கும்ப மரியாதைகளுடன் வந்திருந்த மதுராந்தக வேளாரின் கண்கள் ஆனந்தமழை பொழிந்தன. அவரைச் சூழ்ந்திருந்த அரசியல் அதிகாரிகளும் தங்களை மறந்து ஏதோ ஓர் அற்புத உலகத்தில் மிதந்தனர். ‘நடக்க முடியாதது’ என்று நம்பிக்கை இழந்திருந்த பெருஞ் செயல் நடந்திருக்கிறது. ‘இனி என்றுமே முடி திரும்பப் போவதில்லை’ என்ற ஏக்கத்தால் வெம்பிக் கொண்டிருந்த உள்ளங்கள் இப்போது எக்காளமிட்டுத் துடித்தன.
மணிமுடியின் வாழ்வு முடிந்துவிட்டது என்று எண்ணித் தங்களுக்குள் பெருமூச்சுவிட்ட ஒரு சில வயது முதிர்ந்த அதிகாரிகளும் அங்கு வந்திருந்தார்கள். மூன்றுமுறை போர் தொடுத்தும் முடி திரும்பவில்லை. தலைமுறை தலைமுறையாகத் தாக்குதல் நடத்தியும் தமிழரால் தலைநிமிர முடியவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் சிறப்புக்கு அடிகோலி வைத்த செம்மலான இராஜராஜ அருள்மொழித் தேவராலேயே ஆகாத காரியமாயிற்றே
இது!
எத்தனை எத்தனை போராட்டங்களைக் கண்ட முடி இது! எத்தனை எத்தனை இளம் காளையரின் இன்னுயிரைக் குடித்த முடி இது! எத்தனை எத்தனை மக்களின் மனத்திலே சோர்வையும் அவமானத்தையும் குடிகொள்ளச் செய்த முடி இது!
சீதை பத்து மாதங்கள்தான் தென் இலங்கையில் சிறைப்பட்டாள். தென்னவர் மணிமுடியோ சிறைக்குள்ளே ஒரு நூற்றாண்டு காலத்தைப் பார்த்துவிட்டது. புதுப்புது மன்னர்கள் ஈழவள நாட்டில் தோன்றி ஆட்சி
புரிந்து வந்தார்கள். சோழப் பெரு நாட்டிலிருந்து புதுப்புது மன்னர்கள் இதற்காகப் படை திரட்டிச் சென்றார்கள்.
இதற்கு எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு முதற்பராந்தக சோழர் சென்றார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் பராந்தக சுந்தர சோழர் படையெடுத்தார். அதை அடுத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வீரவேங்கையான இராஜராஜ சோழரே முயன்று பார்த்து விட்டார். அவர்களால் ஈழத்தை வெல்ல முடிந்ததே தவிர, தமிழ் மன்னனின் தலைமுடியைத் திரும்பக் கொண்டுவர முடியவில்லை.
அதிகாரிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்காமல் வேறென்ன செய்வார்கள்? மக்கள் மகிழ்ச்சி வெறிபிடித்து ஆனந்தக் கூத்தாடாமல் வேறே என்ன செய்வார்கள்? மணிமுடியின் மதிப்பென்ன, பொன்னா? பொருளா? அல்லது அதில் பதிந்து நின்ற நவரத்தினக் கற்களா? பரம்பரையாகத் தமிழ் மகன் உறிஞ்சி வளரும் தாய்ப்பாலில் கலந்துறைந்த தமிழ்ப் பண்பு அது!
எழுந்தன வாழ்த்தொலிகள்.
“கோப்பரகேசரி வன்மர் இராஜேந்திரப் பெரிய உடையார் வாழ்க!’’
“முந்தையோர் முடி கொணர்ந்த மூவேந்தருக்கு வேந்தர், வாழ்க!’’
“வெஞ்சமர் வீரர் வாழ்க! வேங்கையின் மைந்தர் வாழ்க!’’
அலை ஓசையை ஆழ்கடலுக்குள்ளே அழுத்திவிட்டு மக்களின் குரலோசை விண்ணதிர எழுந்தது. மாமன்னரைப் பார்க்கத் துடித்தவர்களும் மணிமுடியைக் காணத் துடித்தவர்களுமாகக் கூட்டத்தினர் எழும்பி எழும்பிக் குதிக்கலாயினர். சில விநாடிகள் சென்றால் கூட்டத்தின் முன்பகுதி கடலுக்குள் சரிந்து முழுகிவிடும் போல் தோன்றியது.
வேளைக்காரப் படையைச் சேர்ந்த மற்போர் பிரிவினர் ஆங்காங்கே, கூட்டத்தின் நெரிசலிலிருந்த முதியோர், பெண்டிர், குழந்தைகளைக் காப்பாற்றும் நற்பெரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மணிமுடிப் பேழையை இளங்கோவிடம் கொடுத்து விட்டு மதுராந்தக வேளாரைத் தமது இரு கரங்களாலும் தழுவிக் கொண்டார் மன்னர். அப்போது மதுராந்தகரின் கண்கள் எதேச்சையாகத் தமது குமாரனின் பக்கம் திரும்பின. அவனது பரந்த மார்பில் வலது தோள்பட்டையிலிருந்த விழுப்புண் அவர் பார்வையில் பட்டது. இன்னும் அது சரியாக ஆறவில்லை. செக்கச் சிவந்த மலர் மாலையின் ஒரு பகுதி அவன் தோள்களில் தொங்குவதுபோல் தோன்றியது. மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கத் தமக்குள் புன்னகை பூத்துக்கொண்டார் பெரியவேளார்.
“மதுராந்தகர் அவர்களே! நமது வெற்றியில் முதல் பங்கைப் பெறவேண்டியவன் உங்கள் மைந்தன். தனியாகச் சென்று மணிமுடியை எடுத்து வந்தவனும் அவன்தான்! அதற்குக் கிடைத்த வெகுமதியைப் பார்த்தீர்களா?’’ என்று இளங்கோவின் விழுப்புண்ணைச் சுட்டிக்காட்டினார் மாமன்னர்.
மாமன்னர் கூறுவதற்கு முன்பாகவே அதைப் பார்த்து மகிழ்ந்த மதுராந்தகர் தமது மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,
“கொடும்பாளூர்க் குலம் தனது செஞ்சோற்றுக் கடனை மறந்துவிடவில்லை. கடமையைச் செய்திருக்கிறது!’’
சுற்றியிருந்தவர்களிடம் சக்கரவர்த்தி, இளங்கோவின் வீரதீர சாகசங்கள் பற்றி ஒரு விநாடி புகழ்ந்துரைத்தார். மரணத்தின் வாயிலிருந்து தப்பியவனுக்கு மனநிறைவு ஏற்படுவதற்காகவும், மற்ற இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ஓரிரண்டு வார்த்தைகள் கூறினார்.
“கொடும்பாளூர்க் குலக்கொழுந்து இளங்கோவேள் வாழ்க!’’ என்று வாழ்த்தொலி எழுப்பியது கூட்டம்.
அவ்வளவுதான். மல்லர்களின் தலைவனான மாங்குடிமாறன் ஓடோடி வந்து இளங்கோவைத் தூக்கித் தோளில் இருத்திக்கொண்டு கூட்டத்துக்குள் வெறி பிடித்தவனைப்போல் ஓடத் தொடங்கினான். அவன் எழுப்பிய வாழ்த்தொலி ஆயிரமாயிரம் குரல்களாக அங்கு எதிரொலித்தது.
மதுராந்தக வேளார் மாங்குடி மாறனைத் தடுத்து நிறுத்த முயன்றபோது சக்கரவர்த்தி அவருக்குச் சைகை செய்து கையமர்த்தினார். அதற்குள் மாங்குடிமாறன் கூட்டத்தைப் பிளந்துகொண்டு அதன் மத்திக்கே போய்
விட்டான். சின்னஞ்சிறு குன்று தன் தோளில் இளங்கோவைச் சுமந்துகொண்டு கூட்டத்தினிடையே குதூகலத்துடன் துள்ளிக் குதிப்பது போல் தோன்றியது.
ஆனந்த வெறி கூட்டத்தின் தலைக்கேறி அதைக் கிறங்க அடித்துவிட்டது. நாலா பக்கங்களிலும் இளங்கோவைப் பற்றி இழுத்து வாழ்த்துக் கூறினார்கள். அவன் மீது மலர்மாரி பொழிந்தார்கள். கையில் மலர் இல்லாதவர்கள் தாங்கள் சூடியிருந்த மலர்மாலைகளைப் பற்றி இழுத்து அவன்மேல் வீசத் தொடங்கினார்கள். மாங்குடி மல்லனின் பாடே மூச்சுத் திணறும் நிலைக்கு வந்தது. பலப் பலர் இளங்கோவைப் பற்றி இழுத்துத் தங்கள் தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு கூத்தாட முற்பட்டனர். பேழையை இறுக்கமாகப் பற்றிய வண்ணம் மக்களின் அன்பு வலையில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடித் திணறிப் போனான் இளங்கோ.
கொடும்பாளூர் பெரிய வேளாருக்கு இந்த வெறியாட்டம் சிறிதுகூடப் பிடிக்கவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே நன்கு தெரிந்தது.
“மதுராந்தகரே! மக்களின் உணர்ச்சி வெள்ளத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமல்லவா?’’ என்றார் மாமன்னர்.
“அவர்கள் ஆடுகிற வரையில் ஆடிக் களைக்கட்டும். நாம் தஞ்சைக்குப் புறப்படுகிற அலுவலைக் கவனிப்போம்.’’
தொலைவில் அசைந்தாடும் குன்றுகளென யானைகள் அம்பாரிகளுடன் ஆயத்தமாக நின்றன. அவற்றையும் தாண்டிக் குதிரைக் கூட்டம் வாலைச் சுழற்றிக்கொண்டு நின்றது. அதையடுத்து நின்ற புரவிகள் பூட்டிய ரதத்தை உற்றுப் பார்த்தார் சக்கரவர்த்தி. ரதத்தில் சாரதி அமரும் வெளிப்புறத்தைத் தவிர, மற்ற பக்கங்களில் பட்டுத்திரை தொங்கவிட்டு மறைத்திருந்தனர்.
“மகிந்தருக்காக வந்திருக்கும் ரதம்தானே அது?’’ என்று மதுராந்தக வேளாரை வினவினார் சக்கரவர்த்தி.
“ஆமாம்!’’
“அவர்களையெல்லாம் அதோ வல்லவரையர் அழைத்துக் கொண்டு வருகிறார். கூட்டத்தினரின் கவனம் மகிந்தரின் பக்கம் திரும்புவதற்கு முன்னால் அவர்களையெல்லாம் ரதத்தில் ஏறிக்கொள்ளச் செய்யுங்கள்.’’
வல்லவரையர் மகிந்தரை மட்டும் தனியாக அழைத்துக்கொண்டு வரவில்லை. மகிந்தருடன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியும், குறுகுறுத்த விழிகளை உடைய ஓர் இளம்பெண்ணும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களையொட்டிக் கந்துலனும் அவன் மகளும் வந்தனர்.
மகிந்தருடன் வந்த பெண்ணின் கண்கள் கூட்டத்துக்குள்ளே மிதந்து கொண்டிருந்த இளங்கோவையே உற்று நோக்கின. மலர்ச்செண்டுகளை அவன்மீது வீசிக்கொண்டிருந்த மக்கள், அவனையே மலர்ச்செண்டாக்கிப் பந்தாடத் தொடங்கிய காட்சி, அந்த வேல்விழியாளைக் கிறங்க வைத்தது.
‘வீரத்துக்கு இந்த நாட்டில் இப்படியொரு வரவேற்பா? லட்சக்கணக்கான மக்களின் மனத்தை ஒருங்கே கவர்ந்த வீரப் பெருமகனா அவன்!’
விரிந்த தாமரை போன்றிருந்த அவளது வேல்விழிகள் பல விநாடிகள் வரை கூம்பவே இல்லை.
அவர்கள் நாடி வந்துகொண்டிருந்த ரதத்தைச் சுற்றிலும் ஐந்தாறு குதிரை வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அந்த வீரர்களின் தலைவனான வீரமல்லனும் அப்போது கூட்டத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோவின் உருவத்தைவிட்டு அவனும் தன் கண்களை வேறிடத்துக்குத் திருப்பவில்லை. விநாடிக்கொரு பெருமூச்சு அவனிடமிருந்து சீறி வந்தது.
‘இதெல்லாம் என்ன அக்கிரமம்? சக்கரவர்த்திகளுக்கு எதிரிலேயே இவ்வளவு களியாட்டங்கள் நடக்கலாமா? அவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்! நெருங்கிய நண்பனாக இருந்த இளங்கோவைக் கூட்டத்தினர் தொலை தூரத்துக்குக் கொண்டு செல்கிறார்களே; மேலே, மேலே உயர்த்திக்கொண்டு போகிறார்களே...ஹு ம்! ஈழத்துக்குச் செல்லும் வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால்...’
பெண்களின் குரல் ஒலிப்பதைக் கேட்டுச் சட்டென்று பின்னால் திரும்பினான் வீரமல்லன். மகிந்தருடன் நெருங்கி வந்த பெண், கூட்டத்துக்கிடையே தன் விழிகளை அலைய விட்டிருந்ததால், அவளை அவனால் நன்றாகப் பார்க்க முடிந்தது.
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் வீரமல்லன்.
அவனுடைய நெஞ்சு ஒரு கணம் திக்கென்று தன் துடிப்பை நிறுத்திக்கொண்டு, மீண்டும் பரியின் வேகத்தில் பதறிக் கொண்டு ஓடியது. யார் இந்தப் பேரழகி? மானிடப் பெண்தானா? அல்லது மதி ஒளியை உருக்கி வார்த்து உயிரூட்டப் பெற்ற வானமண்டலச் சிற்பமா? யார் இவள்!
தொடரும்
Comments
Post a Comment