இளங்கோவைத் தூக்கிக்கொண்டு சென்ற இராஜேந்திரர் எதிரில் ஓடிவந்து கொண்டிருந்த ரோகிணியைக் கண்டவுடன், எங்கே அவள் வந்து இளங்கோவின் மீது விழுந்துவிடப் போகிறாளோ என்று ஒரு கணம் துணுக்குற்றார். அதற்குள்ளாக ரோகிணிக்குப் பின்னால் மகிந்தர் வருவது தெரிந்தது. வந்தவர் இளங்கோவையை இராஜேந்திரரையோ ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தமது புதல்வியின் கரத்தைப் பற்றினார். அவளைச் சுட்டெரித்து விடுவதுபோல் ஒரு பார்வை பார்த்தார். ரோகிணி பெட்டிப் பாம்பைப் போல் அடங்கி மௌனமாக அவர் பின்னே சென்றாள். ஒரு விநாடிக்குப் பின் அவள் தன் தந்தையின் பிடியிலிருந்தவாறே திரும்பிப் பார்த்தபோது, இளங்கோ நினைவு தடுமாறிய நிலையிலும் அவளையே ஏக்கத்துடன் நோக்கிய வண்ணம் இருந்தான். அடுத்த விநாடிக்குள் ரோகிணியும் மகிந்தரும் கூட்டத்துக்குள் மறைந்து சென்றுவிட்டார்கள்.
சக்கரவர்த்தி தங்கியிருந்த பெரிய மாளிகையின் ஓர் அறைக்குள் இளங்கோவைக் கிடத்தினார்கள். வைத்தியர் வந்து நாடியைப் பார்த்துவிட்டு நம்பிக்கை தெரிவித்தார். அபாயமில்லையென்றும் பிழைத்துவிடுவானென்றும்
கூறினார். மூலிகைகள் அரைத்து வைத்துக் கட்டுவதிலும், மருந்து கொடுப்பதிலும், அவனுக்குச் சிகிச்சைகள் செய்வதிலுமாக அந்த இரவுப்பொழுது கழிந்தது.
அவன் அயர்ந்து உறங்கத் தொடங்கிய பின்னர் சக்கரவர்த்தியும் வல்லவரையரும் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார்கள். மாளிகையைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களிடம் விவரம் கூறி அவர்களைக் கலைந்து போகச் சொன்னார் சக்கரவர்த்தி. வல்லவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டு அரண்மனையின் காவல் ஏற்பாடுகளைக் கண்காணிக்கச் சென்றார்.
மகிந்தருக்கு, கீர்த்தி எழுதிய ஓலை மாமன்னரிடம் கிடைத்தவுடன் பற்பல ஏற்பாடுகள் மளமளவென்று அரண்மனைக்குள் நடக்கத் தொடங்கின. அதில் முன் ஏற்பாடாகக் காவலர்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காகப் பெருக்கினார்கள். மகிந்தரின் நடமாட்டத்தைக் கவனிக்க ஒற்றர்கள் நியமிக்கப்பட்டார்கள். எல்லோரும் விழிப்புடன் இருக்கிறார்களா என்பதை நேரில் சென்று கவனித்துத் திரும்பினார் வல்லவரையர்.
ரோகிணியைப் பரபரப்போடு இழுத்துக்கொண்டு சென்ற மகிந்தர் அவளைக் கடிந்து கொள்ளவுமில்லை; அவளிடம் சினம் கொள்ளவுமில்லை.
“ரோகிணி! எல்லோரையும்போல் அவனைப் போய் நீ வேடிக்கை பார்க்கும் நேரமா இது? அவன் எப்படிப் போனால் நமக்கென்ன? குழப்பம் நிறைந்திருக்கும் இந்தச் சமயத்தை நாம் விட்டுவிடக்கூடாது. நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து நாம் வெளியே போய்ச் சேரவேண்டும். உன் அம்மாவையும் ஆயத்தமாக இருக்கச்சொல்” என்றார்.
ரோகிணி தன் தாயாரிடம் போவதற்கு முன்னால் அங்கு கந்துலன் வந்து சேர்ந்தான். முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டே அவன் உதட்டைப் பிதுக்கினான். “அரசே! கட்டுக்காவல் பலமாக இருக்கிறது. கற்சிலைகள் போல் நிற்கும் அந்தக் கிராதகர்கள் தங்கள் விழிகளாலேயே நம்மைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள் போலிருக்கிறது.”
“காவலர்கள்தான் அந்தக் கொடும்பாளூரானைச் சுற்றிக் கவலையுடன் நின்று கொண்டிருக்கிறார்களே!’’
“அவர்கள் பகலில் பணி செய்துவிட்டு ஓய்வில் இருப்பவர்கள். இரவுநேரத்து ஆந்தைகள் இருந்த இடங்களை விட்டு அசையவில்லை. பாகத்துக்கு ஒருவன் வீதம் இந்த அரண்மனையை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’
கந்துலனை அங்கு நிறுத்திவிட்டு மகிந்தர் தாமே வெளியில் வந்து கவனித்தார். மாமன்னரது மாளிகைக்குச்செல்பவர்போல் போக்குக் காட்டி நடக்கலானார். இதைக் கண்ணுற்ற காவற்படைத் தலைவன் அவரை அணுகிப் பணிவோடு வணங்கினான். திரும்பினார் மகிந்தர்.
“தங்களைப் பாதுகாக்கும்படி எங்களைச் சக்கரவர்த்திகள் பணித்திருக்கிறார்கள். துணையின்றித் தாங்கள் இருளில் நடமாடுவதால் தங்களுக்கு ஏதும் அபாயம் நேரலாம். தாங்கள் கட்டளையிட்டால் வீரர்கள் சிலரை உடன் அனுப்பி வைக்கிறேன்’’ என்றான் காவல் தலைவன்.
அவனிடம் என்ன மறுமொழி கூறுவதென்று மகிந்தருக்குத் தோன்றவில்லை. பரிதாபமாக அவனைப் பார்த்து விழித்துவிட்டு, “நன்றி, எனக்கு அபாயமும் வரவேண்டாம் என்னை யாரும் காக்கவும் வேண்டாம்’’ என்று சொல்லிக் கொண்டே அரண்மனைக்குள் புகுந்தார்.
“ரோகிணி!’’ என்று அன்போடு தமது புதல்வியைத் தழுவியவாறு, “இனி நாம் இங்கிருந்து தப்ப முடியாது. இந்த ஜன்மம் முழுவதுமே முயன்றாலும் முடியவே முடியாது!’’ என்று கலக்கத்துடன் கூறினார். “வா! நிம்மதியாகப் போய்உறங்கலாம்.’’
மறுநாள் பொழுது புலர்ந்தது. முற்பகல் பத்து நாழிகை ஆயிற்று. இரவு முழுவதும் மாமன்னரும் வல்லவரையரும் கண்ணுறங்கவில்லை. இளங்கோவை உறங்கவிட்டு வந்த பிறகு, அரசியல் ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபடலானார்கள். காலையில் நீராடிவிட்டு, வல்லவரையரைத் தனியாக மகிந்தரிடம் அனுப்பி வைத்தார் மாமன்னர். தாமும் வந்து பேச்சில் பிறகு கலந்து கொள்வதாகக் கூறினார்.
வல்லவரையர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சக்கரவர்த்திக்கு இளங்கோவின் நினைவு வந்தது. அவன் படுத்திருந்த அறையை நோக்கி நடந்தார். அறைக்குள்ளிருந்து ஏதோ பேச்சுக் குரல் கேட்கவே, காவலாளியை உற்று நோக்கினார் இராஜேந்திரர்.
“ரோகணத்து இளவரசி பார்க்க வேண்டுமென்றார்கள். அதனால் அனுமதித்தேன்’’ என்றான் காவலன்.
அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டுக் கதவோரமாகத் தயங்கி நின்றார் மாமன்னர். கதவின் இடுக்கு வழியே உள்ளே இருப்பவர்கள் தெரிந்தார்கள்.பேச்சுக்குரலும் கேட்டது. இளங்கோவின் அருகே ரோகிணி நின்றுகொண்டிருந்தாள். இளங்கோ அநுபவித்துக் கொண்டிருந்த வேதனை ரோகிணியின் முகத்தில் பிரதிபலித்தது. அவனோ ஒரு துன்பமும் இல்லாதவன் போல் ரோகிணியைப் பார்த்துச் சிரித்தான்.
“ரோகிணி!’’ இளங்கோவின் இதழ்கள் அசைந்தன. “நான் உனக்கு இருவகையிலும் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் நீ என் உயிரைக் காப்பாற்றினாய். உன் தந்தையார் பறித்துக்கொண்டுவிட்ட உயிரை அவரிடமிருந்து கவர்ந்து கொண்டுவந்தாய். அடுத்தாற்போல் என் உயிருக்கும் மேலான மணிமுடியை எனக்குக் கொடுத்தாய். ஆம், நீயே அதைக் கொடுத்துவிட்டதாகத்தான் நான் நினைக்கிறேன்.’’
“பேசாதீர்கள்; உங்களை நான் பார்க்க வந்தேனே தவிர, உங்கள் பேச்சைக் கேட்க வரவில்லை’’ என்றாள் ரோகிணி. அதை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “ரோகிணி! உன்னிடம் நான் சில சமயம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன். உன்னைப் பல வகையில் துன்புறுத்தியிருக்கிறேன். அவற்றுக்காக என்னை மன்னித்து விடு.’’
ரோகிணியின் கண்களில் நீர் வழிந்தது.
“என் உயிருக்காகக் கவலைப்படுகிறாயா!’’ என்றான் இளங்கோ. “இனி நான் பிழைத்தாலும் ஒன்றுதான்; பிழைக்காவிட்டாலும் ஒன்றுதான். என் கடமை தீர்ந்துவிட்டது. மணிமுடி கிடைத்து விட்டதல்லவா?’’
“உங்கள் உயிருக்காக நான் கவலைப்படவில்லை’’ என்று வெடுக்கெனப் பதிலளித்தாள் ரோகிணி. “நீங்கள் பகை நாட்டைச் சேர்ந்தவர்கள். உங்களுக்காக நான் எதற்குக் கவலைப்படவேண்டும்? நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். நான் ஏமாந்தேன்.’’ ரோகிணியின் குரல் துக்கத்தால்
தழுதழுத்தது.
இதைக்கேட்டு இளங்கோ அதிர்ச்சியுற்றதைப் போலவே வெளியில் நின்றுகொண்டிருந்த மாமன்னரும் அதிர்ச்சியுற்றார். மாமன்னரின் செவிகள் மேலும் கூர்மை பெற்றன.
“நானா ஏமாற்றினேன்?’’ என்று இளங்கோ பதறினான்.
“ஆமாம். மாறுவேடத்தில் என்னைப் பின் தொடர்ந்து எதற்காக மலையடிவாரத்துக்கு வந்தீர்கள்?’’ என்று கேட்டாள் ரோகிணி. “உங்களைக் காப்பாற்ற நினைத்து என் தந்தையாருக்கும் தாய் நாட்டுக்கும் துரோகம் செய்தேன். என் தந்தையார் இப்போது புலிக்கூண்டில் அகப்பட்டவர் போல் உங்களிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாம் என்னால் வந்தவினை!’’
“நன்றாக யோசித்துப் பார், ரோகிணி! நீ யாருக்குமே துரோகம் செய்யவில்லை. உன் தந்தையார் இங்கு வந்திருப்பதும் நன்மைக்குத்தான். காலங்காகலமாகப் பகைமை பாராட்டி வந்த நம்முடைய நாடுகள் அதைத் தீர்த்துக்கொள்ளப் போகின்றன. இதுவா துரோகம்?’’ அதை அவள் நம்பாதவள் போல் தலையசைத்தாள். இளங்கோவுக்கு எப்படி அவளை நம்பச் செய்வதென்றும் தோன்றவில்லை.
அவளுக்கு மன ஆறுதல் சொல்வதாக நினைத்துக் கொண்டு,
“உன்னுடைய அன்பை நான் என்றுமே மறக்க மாட்டேன்; என் நன்றியை ஏற்றுக்கொள்’’ என்றான் இளங்கோ.
எரிமலை வெடிப்பதுபோல் வெடித்தாள் ரோகிணி. “நான் உங்களிடம் அன்பு செலுத்தவும் இல்லை; நீங்கள் எனக்கு நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை!’’
இப்படிச் சொல்லிக் கண்களை உருட்டி விழித்துவிட்டுத் திரும்பிப் போக முயன்றாள் ரோகிணி. வாயிலை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள்.
“ரோகிணி... ரோகிணி... ரோகிணி!’’
இளங்கோ தன் வலியை மறந்து, இடது கரத்தைத் தலையணையில் ஊன்றிக் கொண்டு எழுந்திருக்க முயன்றான். வெளியில் நின்ற இராஜேந்திரர் பதறினார். இதற்குள் ரோகிணியே அவனிடம் திரும்பி வந்தாள்.
அவனை மெல்லத் தலையணையில் சாயவைத்துவிட்டு “நிம்மதியாகஉறங்குங்கள்!’’ என்று கட்டளையிடும் குரலில் கூறினாள். போர்வையை இழுத்து விட்டாள். தலையணைகளையும் நகர்த்தி விட்டாள். பிறகு, “நான்
சொல்வதொன்றும் எனக்கே பிடிக்கவில்லை’’ என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பிப் போக முற்பட்டாள்.
மாமன்னர் நின்றுகொண்டிருந்த வாயிலை அவள் அணுகியவுடன் அப்போதுதான் இளங்கோவைக் காண வருகிறவர் போல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் சக்கரவர்த்தி.
“யாரது? ரோகிணியா! வா அம்மா! எங்கே இவ்வளவு அவசரமாய்த்திரும்புகிறாய்? போகலாம் வா!’’
தலையைக் கவிழ்த்துக்கொண்டு தயங்கி நின்றாள் ரோகிணி.
“இப்போதுதான்... வந்தேன்...’’ என்று தடுமாறினாள். “ஆமாம், ஆமாம், இப்போதுதான்...ரோகிணி...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினான் இளங்கோ.
“நானும் இப்போதுதான் வருகிறேன்’’ என்று கூறித் தமக்குள் நகைத்துக் கொண்டார் மாமன்னர்.
பின்னர ரோகிணியைப் பார்த்து, “ரோகிணி! இளங்கோ என்ன சொல்கிறான்? உடல்நலம் குன்றியிருப்பவனிடம் உற்சாகமாகப் பேசுவதே ஒருமருந்து. நீ அவன் நலத்தை விசாரித்தாயா? என்ன சொல்கிறான்?’’ என்றார்.
ரோகிணி மறுமொழி கூறாமல் இளங்கோவைத் திரும்பிப் பார்த்தாள்.
“வலி மிகவும் குறைந்திருக்கிறது’’ என்றான் இளங்கோ. ஆனால் உண்மையில் வலி அவனை அப்போது மென்று கொண்டு தானிருந்தது.
ரோகிணிக்கு மாமன்னர் அங்கு வந்த பிறகு அந்த இடத்தில் நிற்கப்பிடிக்கவில்லை; மீண்டும் மெதுவாக நழுவிச் செல்லத் துடித்தாள்.
“ரோகிணி! ஆண்களுக்குள் ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் பெண்கள் இரக்கச் சித்தமுள்ளவர்கள் என்பதை நீரூபித்து விட்டாய். இளங்கோவை நீவந்து பார்க்க விரும்பினால் உன்னை யாரும் இங்கே தடுக்கமாட்டார்கள்.எப்போது வேண்டுமானாலும் நீ வந்து செல்லலாம்’’ என்றார் இராஜேந்திரர்.
கண்களால் அவருக்கு நன்றி கூறிவிட்டு, அதே கண்களால் இளங்கோவிடம் விடைபெற்றுக்கொண்டு, அவ்விடத்தை விட்டு விரைந்து சென்றாள் ரோகிணி.
இளங்கோவுக்கு அருகில் அமர்ந்து சிறுபொழுது உற்சாகமாகப் பேசிக்கொணடிருந்தார் சக்கரவர்த்தி. பேச்சோடு பேச்சாக அவன் கப்பகல்லகத்தை விட்டுச் சென்றதிலிருந்து நடந்த விஷயங்களையும் கேட்டுக்கொண்டார். பிறகு மன்னர் மகிந்தரைக் காண்பதற்காக அங்கிருந்து எழுந்து சென்றார்.
தொடரும்
Comments
Post a Comment