Skip to main content

வேங்கையின் மைந்தன் பாகம் 2 , 4. அகந்தைக்கார அழகி


இராஜேந்திரசோழப் பெரிய உடையார் தமது பரிவாரங்கள் புடைசூழ நாகப்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு, அருகில் இருந்த ஆனைமங்கலம் சோழ மாளிகையில் அன்றிரவுப் பொழுதைக் கழித்தார்.

ஜனத்திரளின் பெரும்பகுதி ஆனைமங்கலத்துக்கு அவரைப் பின்பற்றி வந்தது. ஆனைமங்கலத்தின் வரவேற்பு நாகப்பட்டினத்தின் வரவேற்பையும் மிஞ்சிவிட்டது. தெருக்கள் தோறும் குலை தள்ளிய வாழை மரங்களைக் கட்டியிருந்தார்கள். வீடுகள் தோறும் மாவிலைத் தோரணங்களும், மாவிலைக் குருத்துத் தோரணங்களுமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு நெல் குவித்து, அதன் மேல் முளைக்குடம் வைத்து, சுற்றிலும் தீபச் சுடரொளி பரப்பியிருந்தார்கள்.

பெண்டிரின் கைவண்ணம் அற்புதம் அற்புதமான மாக்கோலங்களாகத் தெருக்களில் மலர்ந்திருந்தன. மல்லிகை நிற மாவினால் புள்ளிக் கோலங்கள் தீட்டி, தாமரை நிறச் செம்மண்ணால் அவற்றுக்குக் கரை கட்டியிருந்தார்கள்.கோலப் புள்ளிகளின் மேலே பறங்கிப் பூக்களும், செவ்வல்லிகளும் சிரித்துக் கொண்டிருந்தன.

ஆடுவோர், பாடுவோர், சிலம்பம் விளையாடுவோர், கும்மியடித்துக் குரல் எழுப்புவோர், இப்படியாக ஆனை மங்கலமே ஆனந்தமங்கலமாக விளங்கியது. வாணவேடிக்கைகளால் ஆகாயமே நந்தவனமாக மாறி வானவில்லின் நிறத்தாலான நெருப்பு மலர்களைச் சொரிந்த வண்ணமாக இருந்தது. மறுநாள் அதிகாலையில் அவர்கள் மறுபடியும் பிரயாணத்தைத் தொடங்கி, பிற்பகலில் திருவாரூரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருகிக் கொண்டே வந்தது. களைத்துப்போய்ப் பின் தங்கியவர்கள் பலர் என்றால், புதிதாகக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டவர்கள் பலப்பலர்.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கு, பரிவாரங்களுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த ரதத்தில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனப்போக்குப்படி நினைத்துக் கொண்டார்கள். ரதத்தை நெருங்கிச் சென்று அதற்குள்ளே இருந்தவர்களை யாராலும் பார்க்க முடியவில்லை. அதைச் சுற்றிலும் கடுமையாக கட்டுக்காவல் இருந்தது.

குதிரை வீரர்களின் வேல்முனைகள் சக்கரவட்டம் போல் ரதத்தை வளைத்துக்கொண்டிருந்தன; காற்றில் எப்போதாவது பட்டுத் திரைத்துணி படபடத்தபோது, கூட்டத்தினரின் விழிகள் அங்கே பாய்ந்து செல்லத் தவறவில்லை. பெண்களின் தலைகள் தெரிந்தன, பெரியவர் ஒருவரின் உடல் தெரிந்தது.

வீரமல்லன் மாத்திரமே ரதத்தின் அருகில் நெருங்கிச் சென்றான். அடிக்கடி அவன் உள்ளேயிருந்தவர்களிடம் ஏதோ பேசுவதுபோல் தோன்றியது. ஒருசமயம், அவன் கூட்டத்தினர் கொண்டு வந்து கொடுத்த இளநீரை ரதத்தில் வந்தவர்களுக்குக் கொடுத்தான். அடுத்தாற்போல், அவர்களுடைய சின்னஞ்சிறு தேவைகளையும் கவனித்து உடனுக்குடன் பூர்த்தி செய்துகொண்டு வந்தான்.

ஒரு தேவையும் இல்லாதபோதுகூட, அவர்களை உபசரிக்கும் சாக்கில் அவர்களுக்கு அன்புத் தொல்லைகள் கொடுத்து வரத் தொடங்கினான் வீரமல்லன்.

வழியில் அந்த ரதம் சில விநாடிகள் நின்றபோது அதை நெருங்கிச் சென்று அதன் திரையை விலக்கித் தலையை உள்ளே நீட்டிக்கொண்டு கூறினான், “தங்களுக்கு ஒரு குறையும் தோன்றாதவாறு கவனித்துக்கொள்ளும்படி சாமந்த நாயகர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். விருந்தோம்பும் பணியில் அணுவளவு நான் என் கடமையில் தவறிவிட்டாலும் அவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும். தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நானும் என் ஆட்களும் எப்போதும் சித்தமாக இருக்கிறோம்! இப்போது உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்?’’

அவனுடைய கண்கள் அப்போது தன் முகத்தை வட்டமிடுவதைக் கண்ட ரோகிணிக்கு எரிச்சல் உண்டாயிற்று.

“சாமந்த நாயகர் கூறியதைவிடப் பன்மடங்கு நீ எங்களை அதிகமாக உபசரிக்கிறாய். உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி’’ என்றாள் அவள்.

“ஆமாம்; நீ யார்? சோழ சாம்ராஜ்யத்தில் உனக்கு என்ன வேலை?’’

‘நீ’ என்று ஒருமையிலே ரோகிணி தன்னைக் குறிப்பிட்டது வீரமல்லனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் வயதில் சிறியவள், தோற்றுப்போன வேற்றுநாட்டு மன்னரின் மகள். அதற்காக வீரமல்லன் கவலைப்படவும் இல்லை. முதன் முறையாக அவள் தன்னைப் பொருட்படுத்திச் சில வார்த்தைகள் பேசியதே அவன் தலையைச் சுற்ற வைத்தது.

“நான் ஆயிரவர் படைத் தலைவன். என் பெயர் வீரமல்ல முத்தரையன்’’ என்றான் கர்வத்தோடு. “பொறுப்புள்ள கடமையென்பதால் இதற்கென என்னைத் தனியாகப் பொறுக்கி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். முன்பே நானும் ஈழ நாட்டுக்கு வந்திருக்க வேண்டியவன். வந்திருந்தால் அங்கேயே தங்களைச் சந்தித்து மகிழ்ந்திருப்பேன்.’’

“இந்த மகிழ்ச்சியே உனக்குப் போதும்! இனிமேல் தந்தையாரோ நானோ அழைத்தால் நீ எங்கள் உதவிக்கு வரலாம். இப்போதைக்கு திரைத்துணியை மூடிவிட்டு, நீ சற்று உன் முகத்தை வெளியே இழுத்துக் கொள்கிறாயா?’’ என்றாள் ரோகிணி.

‘என்ன அகந்தை இவளுக்கு!’ என்று நினைத்துக் கொண்டே, அவ்விடத்தை விட்டு விலகிக்கொண்டான் வீரமல்லன். குதிரையில் ஏறிக்கொண்டு கூட்டத்தினரைச் சுற்றிப் பார்த்தான். எல்லோருடைய  கண்களும் அவன் மேல் பதிந்திருந்தன. அவனைச் சேர்ந்த வீரர்கள்கூட அவனைச் சற்றுப் பொறாமையோடு பார்த்தார்கள்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத பாக்கியம், அவர்களை நெருங்கி உரையாடும் பாக்கியம், தனக்கு மட்டும் கிடைத்தது பற்றி அவனுக்கு ஒரே பூரிப்பு. அந்தக் கர்வம் பிடித்த இளவரசி அவனிடம் என்ன பேசினாள் என்று மற்றவர்களுக்குத் தெரியவா போகிறது! வீரமல்லன் தன் தலையைத் தூக்கிக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலட்சியப் பார்வையால் கூட்டத்தினரின் மனப் புழுக்கத்துக்கு ஆளாகிக் கொண்டு, குதிரையின் கடிவாளத்தைச் சுண்டிவிட்டான்.

கூட்டத்தில் சிலர் இடித்துப் புடைத்துக் கொண்டு அவனைத் தங்களிடம் கூப்பிட்டுப் பார்த்தார்கள். “ரதத்தில் வருபவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?’’ என்று அவனிடம் வினாக்களை வீசினார்கள். வீரமல்லன் அவர்களைத் திரும்பிப் பார்க்கவுமில்லை, அவர்களுக்கு விடையளிக்கவும் இல்லை.

“யாரோ ஈழநாட்டு விருந்தினர்கள். சக்கரவர்த்திகளுக்கு வேண்டியவர்கள். எங்களுக்கு யார் என்று தெரியாது’’ என்று பதிலளித்தான் முன்னால் சென்ற குதிரைச் சேவகன்.

வீரமல்லனின் குதிரை அவனிடம் விரைந்து சென்றது. “பேசாமல் வாயை மூடிக்கொண்டு போவதைவிட்டு, அவர்களிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது’’ என்று சீறினான்.

“நீங்கள் ரதத்துக்குப் பக்கத்தில் வருகிறீர்கள்; நாங்கள் மக்களிடம் நெருக்கடி பட்டுக்கொண்டு திண்டாடுகிறோம். அவர்கள் கேள்விக்கு ஏதும் மறுமொழி சொல்லாவிட்டால் உற்சாக வெறியில் அவர்கள் ரதத்தையே கூண்டோடு தூக்கிச் சென்று விடுவார்கள் போலிருக்கிறது. நம்முடைய அதிகாரத்துக்கு இது நேரமல்ல. அதோ பாருங்கள்! யானை மீதிருந்து சக்கரவர்த்திகள் அடிக்கடி இந்தப் பக்கமே திரும்பிப்
பார்த்துக்கொண்டு போகிறார்கள்.’’

வீரமல்லன் முன்னால் சென்றுகொண்டிருந்த யானைகளை ஏறிட்டுப் பார்த்தான். முதல் யானையின்மேல் அம்பாரியில் ஈழத்திலிருந்து கொண்டு வந்த மணிமுடி, உடைவாள், இந்திரனாரம் முதலிய அரசுரிமைப் பொருள்கள் இருந்தன. அடுத்தாற்போல் சென்ற யானையில் மாமன்னர் இராஜேந்திரரும் இளங்கோவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

ஏற்கனவே வீரமல்லன் கண்டு ஆத்திரப்பட்ட காட்சிதான் அது. அந்த ஆத்திரம் இப்போது அவன் நெஞ்சில் நெருப்பாய்ப் பற்றியது. ‘சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியோடு சரிசமமாக அமர்ந்து செல்லும் அளவுக்கு இளங்கோவின் புகழ் உயர்ந்து விட்டதா?’

‘போர்க்களத்தில் எத்தனை எத்தனையோ வீரர்கள் மாண்டு மடிந்திருக்கிறார்கள். எத்தனை எத்தனையோ பேர் அங்க ஈனர்களாக மாறி இருக்கிறார்கள். கேவலம் ஒரு முடியைத் தேடிச் சென்று எடுத்து வந்து விட்டான் என்பதற்காகவா இத்தனை ஏற்றம் இவனுக்கு. என்னை ஈழத்துக்கு அனுப்பியிருந்தால் இந்தக் காரியத்தை நான் செய்திருக்க மாட்டேனா, என்ன? இந்தப் பரந்த சாம்ராஜ்யத்தில் இவன் ஒருவன் மட்டும்தானா வீரன்?’

வீரமல்லன் ஒருவனைத் தவிர வேறு யாருமே இப்படி நினைக்கவில்லை. ஈழத்துப் போர்க்களத்திலிருந்து குற்றுயிரும் குலை உயிருமாய்த் திரும்பி வந்தவர்களும், தங்களது கைகால்களைப் பறிகொடுத்தவர்களும் இளங்கோவுக்குக் கிடைத்த பெருமையைத் தங்களுக்குக் கிடைத்ததாகவே நினைத்துக் கொண்டார்கள்.

நெருங்கிப் பழகிய ஒரே காரணத்தால் வீரமல்லனுக்கு இளங்கோவின் அருமை தெரியவில்லை. மலையின் அருகில் நிற்பவர்களால் அதன் அழகையும் கம்பீரத்தையும் காண முடியாது. தன்னைப்போன்ற ஒருவனைச் சக்கரவர்த்தி வேண்டுமென்றே உயர்த்திவிட்டதாக அசூயைப்பட்டான் வீரமல்லன்.

உயரப் பறந்த பருந்தைக் கண்டு, அதை ஒட்டிப் பறந்த ஊர்க்குருவின் பொறாமை கொள்ளத் தொடங்கியது.

வீரமல்லன் ரதத்தைத் திரும்பிப் பார்த்தான். அதன் பட்டுத் திரை சற்றே விலகியிருந்தது. அதற்குள்ளிருந்து எட்டிப் பார்த்த ரோகிணி, யானைமேல் சென்றுகொண்டிருந்த இளங்கோவின் முதுகுப்புறமாகத் தன் விழிகளை மிதக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

பாஸ்"போர்ட் - சிறுகதை - கோமகன்

யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான அந்த அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி  பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே "சமரசங்கள்" என்ற பரம்பரையலகு  அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இருந்து வந்திருக்கின்றது. அதனால் வெளிப்படையாகத் தங்கள் கடுப்பைக் காட்ட முடியாது வாய்க்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்தனர் அங்கே இருந்த சனங்கள். சின்ராசாவும் அவர் பதினேழு வயது நிரம்பிய பேரனும் அந்தகூட்டத்தில் இருந்தனர். பேரனுக்கு அந்த இடத்துக்கு வரவே பிடிக்கவில்லை. பாட்டனார் சின்ராசாதான் மன்றாட்டமாக அழுது குளறி அவனை கூட்டிவந்திரு...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...