Skip to main content

வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -32



ரோகிணியிடம் அவள் தந்தை கூறிய அடையாளங்களை நினைவில் வைத்துக் கொண்டு கருக்கிருட்டு நேரத்தில் இளங்கோ அந்த மலைச்சுனையைத் தேடித் திரிந்தான். அவனுக்கு எதிரில் பொட்டல் வெளியில் திட்டுத் திட்டாக இரண்டு மலைகள் படுத்துக் கிடந்தன. இடதுபுறம்வெகுதூரத்தில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் ஒரு மலை தலைதூக்கி நின்றது. இந்த மூன்று மலைகளில் எந்த மலையில் சுனை இருக்கிறது? சுனைக்குள்ளே உள்ள குகையை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?

பொழுது விடிவதற்கு முன்னர் சுனையின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கத் துடித்தான் இளங்கோ. மகிந்தரின் ஆட்கள் தன்னைத் தொடர்ந்து வரக்கூடும் என்ற அச்சம் அவனிடம் நிறைந்திருந்தது. ஒரு வேளை, மலையின் உச்சியிலிருந்து பார்த்தால், பகல்பொழுது அவனை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடுமல்லவா? கருக்கிருட்டு நேரத்தைத் தனக்குக் கவசமாக்கிக் கொள்ள நினைத்தான் இளங்கோ.

நேரம் அவனுடைய விருப்பத்துக்காகக் கட்டுப்பட்டு நிற்கவில்லை. பொழுது புலர்ந்துகொண்டு வருவதற்கான அறிகுறிகள் மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கின. கீழ் வானம் தீப்பட்டுக் கனிந்த பொன் தகடாக மாறியது. கானகத்துப் புள்ளினங்கள் பாட்டிசைத்துக் காலைப்பொழுதை வரவேற்றன. இளங்கோ மறைந்து மறைந்து சென்றான். கையில் அவன்குகையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த கூர்வேல் பளிச்சிட்டது. இடையில்உடைவாள் தொங்கியது.

பொட்டல் வெளி மலைகளில் மணிமுடி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவனிடம் எழவில்லை. தேடுவாரற்ற அநாதைகளைப் போல் அவை திறந்தவெளியில் வெறும் பாறைகளாகக் கிடந்தன. அவற்றில் ஒன்றின் மீது ஏறி,

அதன் உச்சி முகட்டுக்கு வந்தான் இளங்கோ. தன்னையும் மறைத்துக்கொண்டு,தொலைவில் தெரிந்த இடது புறத்து மலையைக் கூர்ந்து நோக்கினான்.

முகத்திரை அணிந்த முரட்டுப் பெண்ணொருத்தி பயத்தோடு தலையைத்தூக்கிப் பதுங்கிப் பார்ப்பதுபோல், அடர்ந்த மரக் கூட்டத்தின்மையத்தில், மௌடீகமான தோற்றத்துடன் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது அந்த மலை. இளங்கோவுக்கு நேர் எதிரில் அந்த மலையை ஒட்டினாற்போல் புகை மண்டலம் மேலே எழுப்பிக் கொண்டிருந்தது. மேகத்திரள் அல்ல அது. குளிர் காய்வதற்காகவோ, காலை உணவுக்காகவோ அங்கு சிலர் நெருப்பு மூட்டியிருக்க வேண்டும்.

அதே இடம்தான் என்பது இளங்கோவுக்கு நிச்சயமாகிவிட்டது. ஆனால் அங்கு கட்டுக்காவல் இருக்கக் கூடும் என்று அவன் நினைக்கவில்லை.மகிந்தர் அடுத்தாற்போல் தமது வீரர்களுடன் தங்கியிருந்ததால், சுனைக்கு வேறு தனியான பாதுகாப்பு இருக்காதென்று எண்ணினான். அவருடைய வீரர்கள் தேடி வருவதற்கு முன்பு எவ்வளவோ காரியங்களைச் சாதிக்க முடியும்.

இப்போது அது முடியாது போல் தோன்றியது. என்றாலும் அவன் சற்றும் மனம் தளரவில்லை. முன் வைத்த காலைப் பின்வை க்கவில்லை.

மலையிலிருந்து இறங்கி, புதர்களின் வழியே தவழ்ந்து மரக்கூட்டத்துக்குள் புகுந்தான். பாதை எதுவும் அவன் கண்களுக்குப்படவில்லை. மலையைக் குறி வைத்துக் கொண்டு தன் போக்கில் நடந்தான்.காட்டு மரக்கிளைகள், முரட்டுக் கொடிகள், கூரான முட்புதர்கள் இவையெல்லாம் அவனைத் தடுத்துச் சோதனை செய்து பார்த்தன. பாம்புகள், பறவைகள், அட்டைகள் முதலிய சின்னஞ்சிறு பிராணிகள் அவனுடைய குறுக்கீட்டை விரும்பாமல் அங்குமிங்கும் சிதறிச்சென்றன. விநோதமான அநுபவம் இளங்கோவுக்கு.

மலையின் அடிவாரம் கண்களுக்குப் புலப்படத் தொடங்கிய பின் மிகவும் விழிப்போடு முன்னேறினான் இளங்கோ. அருகில் நெருங்க நெருங்க அந்த இடம் எவ்வளவு பயங்கரமானது என்பது விளங்கியது. இனியும் முன்னால் போக முடியாது. ஆளரவம் கேட்கிறது.

ஓர் ஆள் உயரத்துக்குமேல் தென்பட்ட ஒரே ஒரு குகை வாயிலைத்தவிர, மற்ற இருபுறங்களிலும் அவனுடைய கண்ணுக்கெட்டியவரை மலைசெங்குத்தாகவே நின்றது. தன்னிடம் நெருங்கி வருபவர்களை விழுங்கக்காத்திருப்பது போல் அது தன் வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கிறதா! அதன் கடைவாய் பற்களைப்போல் பக்கத்துக் கொன்றாக இருபுறமும் இரண்டு வேல்முனைகள் நீட்டிக்கொண்டு நின்றன. குகைக்குள்ளே பாறைகளில் அமர்ந்திருந்த இரண்டு வீரர்களின் உருவங்கள் மங்கலாகத்தெரிந்தன.

கைவேலை இடுக்கிக் கொண்டு மரத்தில் மேல் ஏறிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு இலைகளை விலக்கிவிட்டுப் பார்த்தான் இளங்கோ. வலதுபுறம் ஒரு குறுகலான பாதை சென்றது. நீண்ட கயிற்றினால் சிறுபாறையில் கட்டப் பெற்ற இரண்டு குதிரைகள் புல் மேய்ந்து கொண்டிருந்தன.

“இரண்டே இரண்டு வீரர்கள்தானே! பார்த்துக் கொள்ளலாம்” என்ற நெஞ்சுத்துணிவு பிறந்தது அவனுக்கு.

இடதுபுறம் திரும்பிய கண்கள் அங்கே இன்னும் இருவர் மரத்தடியில் உணவு சமைப்பதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திகைத்தன. மெதுவாகக் குகைவாயில் மேலே தன் விழிகளை உயர்த்தினான். விழிகள் இமைப்பை மறந்து நிலைகுத்தி நின்று விட்டன.

குகை வாயில் முடிந்த இடத்திலிருந்து மலைச் சரிவில் பாகத்துக்கொரு மரமும், மரத்துக்கொரு வேல் முனையும் தெரிந்தன. வேல் முனைகளை எண்ணிப் பார்த்தான். இன்னும் அறுவர்.

முன்னால் அவர்களை மரங்கள் மறைத்தன. பின்னால் அவர்களுக்கு மலைக் குடைவுகள் பாதுகாப்பளித்தன. அந்தச் சரிவின் வழியாகத்தான் சுனைக்குப் போகவேண்டும் போலும். அங்கே அவர்கள் நிற்கும் வரையில் அவர்களால் எதிர்ப்பவர்களுக்கு ஆபத்தே தவிர, அவர்களுக்கு ஒரு தொல்லையும் கிடையாது. முன்புறம் மரங்களும் பின்புறம் மலைக்குடைவுகளும் அவர்களைக் காக்கும் கேடயங்கள்.

இருபது முப்பது வீரர்களுடன் அவன் கூட்டமாக வந்திருந்தால் அவர்களை முறியடிக்க வழியுண்டு. இருபது விரல்களும், ஒரு வாளும் ஒருவேலுந்தான் இப்போது இளங்கோவுக்குத் துணை. அவன் தனி மனிதன்.அவனுக்கெதிரே பாதுகாப்பான இடத்தில் பத்துப் பேர்.

மரத்தை விட்டுக் கீழே இறங்கி நெற்றியை அழுத்தித் தேய்த்துக்கொண்டான் இளங்கோ. தனியே துணிந்து சென்றால் அவர்களிடம் உயிரைப் பறிகொடுக்க வேண்டியதுதான். மூடியிருக்கும் சுனையை எட்டிப் பார்க்கக்கூட இளங்கோவை விடமாட்டார்களே!

பேசாமல் திரும்பிச் சென்று விடலாமா? கப்பகல்லகத்துக்குச் சென்று,வேண்டிய அளவு வீரர்களைத் திரட்டிக் கொண்டு வருவதுதான் நல்லது.ஆனால் அதுவரையில் மணிமுடி இந்த இடத்தில்தான் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? மகிந்தரின் வீரர்கள் எந்த வேளையிலும் இங்கு வருவார்கள்.எடுத்துக் கொண்டு போய் வேறிடத்தில் மறைத்து வைக்கத் தவற மாட்டார்கள்.அவர்கள் தலைநகரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த விஷயம் அவனுக்குத்தெரியாது.

இடத்தைக் கண்ட பிறகு அவனுக்கு அதை விட்டுப் போகவே மனமில்லை. எப்படியாவது எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும். ஒருநாளானாலும் சரி, ஒன்பது நாளானாலும் சரி, வெறுங்கையோடு திரும்பக்கூடாது.

வலது கைப்புறமாகவே மரங்களுக்கிடையில் புகுந்து மலையைச் சுற்றிவந்தான் இளங்கோ. மலை எந்த இடத்திலும் சரிந்து காணப்படவில்லை.மனிதனின் காலடிச் சுவடு தன் குகை வாயில் தவிர, வேறெந்தப் பகுதியிலும் படக்கூடாதென்பது போல் அது நிமிர்ந்து நின்றது. சிறிது சாய்வு கண்டிருந்த இடைவெளிகளையும் மரங்களே நிரப்பிக் கொண்டிருந்தன.

நேரம் ஆகியது. வருவது வரட்டும் என்ற முடிவோடு இளங்கோ ஒருநெடுமரத்தைப் பற்றிக்கொண்டு தொத்தினான். மரத்துக்கு மரம் அடுக்காக நெருங்கியிருந்தது. மரத்துக்கு மரம் தாவும் வானரமாக மாறுவதைத் தவிரவேறு வழியில்லை. நெடுவேலைத் தன் பற்களால் இடுக்கிக் கொண்டு கிளைகளில் அது மோதி அவனைக் கீழே தள்ளாமல் பார்த்துக் கொண்டு, தழைத்துப் பெருகியிருந்த இலைக் கூட்டத்துக்கு இடையே மறைந்தான்.

நின்று கொண்டிருக்கும் யானையின் முதுகில் யாரும் அதன் வாலைப்பிடித்துக்கொண்டு ஏறும் வழக்கமில்லை. யானையின் வாலாக இளங்கோவுக்கு மரங்கள் பயன்பட்டன. மலையின் முதுகுப்புறத்துக்கு எப்படியோ தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்தான். வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வழிந்த வேர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டான்.

நல்ல வேளையாக மலையின் முதுகில் பச்சைப்பசேலென்று மலைப்புல் புதராக மண்டிக் கிடந்தது. அதனிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்தான் இளங்கோ. மலையின் நடுப்பகுதிக்கு வந்தவுடன்,திடீரென்று வீசிய குளிர்க் காற்று சுனையின் அருகே அவன்

நெருங்கிவிட்டதைச் சொல்லிற்று. இன்னும் சில விநாடிகளில் மலைப்புல்லின் இடுக்குகள் வழியே அவன் சுனையை நேரில் கண்டான்.

கதிரொளியைக் கண்ட மயக்கத்தில் அது படிகம் போலத் தேங்கிக்கிடந்தது. அவனுக்கு நேர் எதிரில் சுனையின் சில பழுப்பு இலைகள் விழுந்து அழுகிக் கொண்டிருந்தன. ஒருபுறம் பாறை செங்குத்தாகக் கீழ் நோக்கி இறங்கியும், மறுபுறம் சரிவாகக் கரைக்கு வந்தும் சுனை நீரைத் தேக்கிக் கொண்டிருந்தது.

அருவியைச் சுற்றிலும் மேல்புறத்தில் செடிகொடிகளோ மறைவிடங்களோ காணப்படவில்லை. எதிர்க்கரையில் ஒரே ஒரு காட்டுமரம் தலைவிரித்து நின்று கொண்டிருந்தது. அவ்வளவு பழுப்பு இலைகளும் அதிலிருந்து விழுந்தவையாகத்தான் இருக்க வேண்டும்.

பளிங்கு போன்ற தண்ணீரில் தெரிந்த அந்த மரத்தின் பிரதி பிம்பத்தை உற்று நோக்கினான் இளங்கோ. நிழலில் மரத்தின் கிளை நடுங்குவதையும், நடுங்கும் கிளையில் ஒருவன் சாய்ந்து கொண்டு சோம்பல் முறிப்பதையும் கண்டான். அவனுடைய கால்களில் ஒன்று கிளைக்குக் கீழே தொங்கியது.பெரிய வில்லும் அம்புகள் நிறைந்த தூணியும் அவனிடம் இருந்தன.

அம்புக் கூட்டைக் கிளையில் கட்டியிருந்தான். வில் அவன் காலைப்போலவே மரக்கிளையிலிருந்து தொங்கியது. காவலுக்கு நிற்கும் பத்துப்பேர்கள் போதாதென்று இவனும் ஒருவனா!

மூச்சுவிட்டால் கூடப் புல் நடுங்குமென்று பயந்து இளங்கோ சுவாசத்தைக் கட்டுப்படுத்தித் திணறிக் கொண்டிருந்தான். அவனுடைய விழிகள்மரத்தை ஒட்டினாற்போல் அதற்குப் பின்னால் தெரிந்த வட்ட வடிவப்பாறையை நோக்கின. பெரிய பந்தைப்போல் உருண்டை வடிவத்தில் அது மலையோடு மலையாக ஒட்டிக் கொண்டு நின்றது.

அந்த உருண்டைக் கல்லுக்குப் பின்னால் இன்னும் எத்தனை பேர்கள் மறைந்திருக்கிறார்களோ? நின்று கொண்டிருந்தால் மனிதர்களின் தலைகள் மேலே தெரியும், உட்கார்ந்திருந்தால் தெரியாது. அங்கே யாரும் இருக்கிறார்களோ, இல்லையோ!

இளங்கோவிடம் இப்போது கேடயமும் கிடையாது! கவசமும் கிடையாது.மகிந்தரின் ஆட்கள் அவற்றைப் பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். மரத்தின் மேல் இருப்பவனின் கண்களில் இப்போது தட்டுப்பட்டுவிட்டால் மரணத்தின் கண்களுக்குத் தட்டுப்படுவது போலத்தான். கேடயம் இல்லாவிட்டாலும் அவன் எறியும் அம்புகளை இளங்கோ தன் கை வேலால்த டுத்துக்கொள்ள முடியும்.ஆனால் அவன் கூக்குரல் எழுப்பிக் கூட்டம் சேர்த்துத் தொலைப்பானே!

வீரத்துடன் விவேகமும் வேண்டுமென்று சொல்லி அனுப்பியிருக்கிறாள் அருள்மொழி நங்கை. அந்த விவேகம் முதல் நாளிரவு ரோகிணியைக்கண்டவுடன் விடைபெற்றுக் கொண்டுவிட்டது. அதன் பலனையும் அனுபவித்து மீண்டாயிற்று. இனியாவது விவேகத்தை நம்பி அதே இடத்தில் சிறிது நேரம் காத்துக் கிடக்க வேண்டும்.

நெல் நாற்றுப் படுகை போன்ற மலைப்புல் படுக்கைக்குள் இளங்கோ சலனமற்றுப் படுத்துக் கிடந்தான். சிறிது நேரத்தில் எங்கிருந்தோ ஒருகூக்குரல் எழுந்து அவனை அதிர்ச்சியுறச் செய்தது. நாடி நரம்புகள் அனைத்தும் அவனுக்குக் கலகலகத்துவிட்டன.

மரத்தின் மீதிருந்தவன் பதில் குரல் கொடுத்துக் கொண்டே அந்த உருண்டைக் கல்லில் மேல் குதித்துக் கீழே இறங்கினான் சுற்றுமுற்றும் ஒருமுறை கூர்ந்து நோக்கினான். இளங்கோவுக்கு வேர்த்துக்கொட்டியது. அவனுடைய வரவு அவர்களுக்குத் தெரிந்துவிட்டதா?

காவலன் பிறகு உருண்டைக் கல்லுக்குப் பின்புறம் சென்று மறைந்தான்.அங்கே அவனும் மற்றொருவனும் ஏதோ பேசிக் கொண்டார்கள்.அடுத்தாற்போல் முதலில் சென்றவனே கையில் தூக்க முடியாமல் ஒரு பெரிய ஆலம் விழுதைத் தூக்கிக்கொண்டு திரும்பி வந்தான். ஆலம் விழுதா அது? அல்ல மலைப்பாம்பு!

உயிருள்ள பாம்பாக இருந்திருந்தால் அது தன்னைத் தூக்கி வந்தவனை உயிருடன் விட்டிருக்காது. அதை அவன் சிரமப்பட்டுச் சுமந்துகொண்டு சுனைக்குள் இறங்கினான். வாலைப் பிடித்துக்கொண்டு அதன் தலையைத்தண்ணீரில் விட்டுத் துழாவினான்.

“இந்தா! விரைந்து வா! எனக்குப் பசிக்கிறது; நீ இதை விழுங்குகிற நேரத்துக்குள் நானும் போய் உணவருந்திவிட்டு வருகிறேன்.”

இளங்கோவின் கண்களுக்குப் புலப்படாத எதனிடமோ பேச்சுக் கொடுத்தான் அவன்.மறு கணத்தில் அந்தச் சுனையே கலங்குவதுபோல் பேரலைகள் எழுந்தன. ‘பளீர் பளீர்’ என்று நீர்த்திவலைகள், நாலாபுறமும் சிதறி விழுந்தன.பாம்பை வீசி நடுச்சுனையில் எறிந்துவிட்டுத் தலைதெறிக்க ஓடினான் காவலாளி.

இளங்கோ கண்ட காட்சி அவன் வயிற்றைப் புரட்டியது. மிகப் பெரிய முதலையின் முதுகு மலைக்குன்றின் மேல்பாகம் போல் தெரிந்தது. வாயைப்பிளந்து கொண்டு வந்து மலைப்பாம்பின் தலையைக் கவ்வியது அது. அதை அடுத்துச் சுனை நீரில் அந்த முதலை சுழித்த சுழிப்புகளும் வளைத்த வளைவுகளும் பயங்கரமாக இருந்தன. உயிருள்ள பாம்புடன் போராடுவதாக அது நினைத்துக் கொண்டது போலும்!

காவல் காத்துக் கொண்டிருந்தவன் தன் வில்லையும் அம்புக் கூட்டையும் மரத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டான். அவனுடைய தலை உருண்டைப் பாறைக்குப் பின்மறைந்தவுடன் மெல்ல எழுந்து நடந்தான் இளங்கோ. பாறைக்குப் பின்னால் எட்டிப் பார்த்தான். அங்கு வேறு யாருமில்லை.

விசாலமற்ற குறுகலான ஒரு பாதை அங்கிருந்து நேரே சென்று குகைவாயிலின் பின்பக்கம் முடிவடைந்தது. சுரங்க வாயிலைப் போன்று தெரிந்த சின்னஞ்சிறு பிலத்துக்குள் நுழைந்து குகைக்குள் இறங்கிக்கொண்டிருந்தான் அந்தக் காவலன். இடுப்பளவு தெரிந்த அவன் உருவம் ஒரு விநாடிக்குப் பின்பிலத்தின் இருளில் மறைந்தது.

அரை நாழிகை அல்லது ஒரு நாழிகைக்குள் அவன் திரும்பி வரக்கூடும். இந்தப் பொன்னான நேரம் போய் விட்டால் பிறகு மண்ணில் பிறந்ததில் பயனில்லை’ என்று எண்ணிக் கொண்டான் இளங்கோ.

வீரன் விட்டுச் சென்ற வில்லும் அம்புகளும் அவனுக்குத் தெம்பு தந்தன.மலைப்பாம்பை விழுங்கிக் கொண்டிருந்த முதலை அவனை மலைக்கவைத்தது.

பளிங்குச் சுனையின் மார்பகத்தில், செங்குத்தான பாறையில், நீர்மட்டத்துக்குக் கீழே குகை இருப்பது இளங்கோவின் கண்களுக்குத்தெரிந்தது. பாம்பை முதலை பாதி அளவு விழுங்கிவிட்டு, மறுபகுதியைக் குகைக்குள் இழுத்துச் சென்றது.




தொடரும்
















Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம