Skip to main content

அறத்துப்பால்- துறவறவியல்-வெகுளாமை-The not being Angry- Ne pas s’emporter-301-310


செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.301

மெலியார் இடத்து சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன் . பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

எனது கருத்து:

ஒருத்தனை விட குறைஞ்ச தகுதி தராதரத்தில இருக்கிறவையிட்டை கோபப் படமால் இருக்கிறவன் தான் கண்டியளோ உண்மையில கோபத்தை அடக்கிறவன். பருப்பு அவியாத இடத்தில் கோபப்பட்டாலும் ஒண்டுதான் கோபப்படாட்டிலும் ஒண்டுதான் .

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein?

Se garder de la colère, là où elle peut produire effet est méritoire. Qu’importe de prendre ou de perde patience, là où la colère doit échouer?

செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.302

வலியாரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும் . மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் பயக்கும்

எனது கருத்து:

உங்கடை பருப்பு அவியாத இடத்திலை உங்கடை கோபத்தை காட்டினியள் எண்டால் சேதாரம் உங்களுக்குத்தான். 

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Là où la colère doit échouer (contre les puissants), s’emporter c’est se faire du mal; là où elle peut produire effet (contre les faibles), il n’est pas de mal pire que la colère.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனால் வரும். 303

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறதுவிட வேண்டும்.சினத்தால் தீமையான விளைவுகளே ஏற்படும் .

எனது கருத்து:

ஆரிலையும் கோபம் வந்தால் எடுத்தன் கவுட்டன் எண்டு தாம்தூம் எண்டு குதிக்காமல் அதை மறக்க வேறை வழியளை நினைச்சியள் எண்டால் அதாலை வாற சேதாரங்கள் குறையும் எண்டு  ஐயன்சொல்லாறார். சரி....... அப்பிடியண்டால் ரௌத்திரம் பழகு எண்டு ஏன் எங்கடை பெரிசுகள் சொல்லீச்சிதுகள்??

If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget.

Qu’on oublie de s’emporter contre qui que ce soit, parce que tous les maux viennent de la colère.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 304

முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்கின்ற சினத்தை காட்டிலும் வேறு பகை இல்லை !

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் சுடுதண்ணி குடிச்ச நாயள் மாதிரி இருப்பினம். அவையின்ரை முகத்தில சிரிப்பு. சந்தோசம் எண்டால் கிலோ என்னவிலை எண்டு கேக்கவேணும் இவையள் தரவளியாலை ஆருக்கு என்ன பிரையோசனம் ? எவை சிரிச்சு சந்தோசமாய் இருக்கினமோ அவையிட்டை வருத்தம் துன்பம் அண்டாது கண்டியளோ .

Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy?

Y a-t-il un ennemi autre que la colère qui tue le sourire et l’épanouissements du cœur ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். 305

ஒருவன் துன்பம் நேராமல் தன்னைக் காத்து கொள்ள நினைப்பான் கோபம் வராமல் அதனை அடக்கி அள வேண்டும். அங்கனம் கோபத்தை அடக்காவிட்டால் அக்கோபம் அவனையே அழித்து விடும் .

எனது கருத்து:

ஒருத்தனக்கு எதுவும் வரலாம் கோபம் வரக்கூடாது . அப்பிடி வந்தால் அந்தகோபமே அவனை அழிச்சுப்போடும் எண்டு ஐயன் சொல்லுறார் . எனக்கு இதிலை உடன்படேலாமல் கிடக்கு. ஒரு கதைக்கு ஒருத்தன்ரை மனிசியை அவனுக்கு முன்னாலை நாலைஞ்சு கிரகங்கள் கற்பழிக்கிது . அப்ப அவர் என்ன சிரிச்சுக்கொண்டு அமைதியாயே நிக்கிறது ?

If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay.

Si vous voulez vous préserver des maux, préservez-vous de la colère, sinon la colère vous tuera vous-mêmes.

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும். 306

கோபமாகிய கொடிய நெருப்பு சினமுற்றோரையே அழிப்பதோடு, அவர் வீடுபேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்.

எனது கருத்து:

ஐயன் இதிலை விளப்பமாய் தான் பிரிச்சு மேஞ்சுருக்கிறார். கோபம் நெருப்பு போலையும் அந்த நெருப்பு அவனைமட்டும் எரிக்காது , அவன்ரை சுத்துப்பட்டியையே எரிக்கும்  எண்டது  உண்மைபோலைதான் கிடக்கு . ஏனெண்டால் கண்ணகி தன்ரை குடும்ப பிரச்சனைக்கு கோபப்பட்டதாலை மதுரையே எரிஞ்சுதுண்டால் கோபம் வில்லங்கமானதுதான்.

Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear.

Le feu tue ceux qui l’approchent; la colère vous détruit ainsi que votre entourage.

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா துஅற்று. 307

தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாகக் கொண்டவன் கெடுவது , நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும்

எனது கருத்து:

நிலத்திலை ஆரும் வெறுங்கையாலை அடிப்பாங்களோ?( மோடையங்களாத்தான் இருப்பாங்கள் ) கை புளிக்கும் . அதை மாதிரித்தான் கோபமும் . அடிக்கடி கோபம் வாறவனுக்கு இதே நிலமைதான் .

The hand that smites the earth unfailing feels the sting;So perish they who nurse their wrath as noble thing.

Celui qui frappe violemment la terre de sa main, ne peut retirer celle-ci indemne de douleur; de même, celui qui cultive la colère comme une qualité est assuré de sa destruction.

இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. 308

பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன்பால் கோபப்படாமல் இருப்பது நல்லது.

எனது கருத்து:

இங்கை ஒருத்தரும் கடவுள் இல்லை அய்யன். சாதாரண ஆசாபாசங்கள் இருக்கிற மனுசர்தான். ஆக ஒருத்தன் தொடர்ந்தும் ஒருத்தருக்கு கேம் கேட்டு கொண்டிருந்தால் அமைதி காக்கிறன் எண்டு இருக்கிறதுக்கு வேறை ஒரு பேர் இருக்கு.  

Though men should work thee woe, like touch of tongues of fire.'Tis well if thou canst save thy soul from burning ire.

Quelqu’un vous fait-il du mal, comme la violente flamme d’un grand feu qui brûle? Pouvoir ne pas s’emporter contre lui est bon.

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 309

ஒருவன் கோபத்தைத் தன் மனத்தில் கொள்ளாதிருந்தால், நினைத்த நன்மைகளையெல்லாம் அவன் விரைந்து பெறுவான்.

எனது கருத்து:

இந்தக்காலத்திலை கோபிச்சு கதைச்சால் தான் அலுவல் நடக்கிது . ஒரு இரவில ஒருத்தன் கோபிச்சு கதைச்சதாலைதான் சரியோ பிழையோ பாக்கிஸ்த்தான் இந்தியாவிட்டை இருந்து பிறிஞ்சிது . எல்லாத்துக்கும் அமைதிகாத்தால் எப்பிடி ஒருத்தனால இந்தக்காலத்தில சீவிக்கேலும் ?

If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.

Le pénitent dont le cœur s’abstient de la colère, obtient de suite tout ce qu’il désire.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர் வாழ்ந்தும் இறந்தவரேயாவர். கோபத்தைக் கொன்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர் ;

எனது கருத்து:

எடுத்ததுக்கெல்லாம் சுடுதண்ணிகுடிச்ச நாயள் மாதிரி கோபப்படுறவை செத்த பிரேதத்துக்குச் சமன் எண்டு சொல்லுவினம். கோபம் இல்லாதவை துறவியளுக்கு சமன் எண்டால் , இந்த துர்வாசர் முனிவர் எல்லாம் எந்த றாங்கில போடிறது எண்ட ஐமிச்சமும் வரத்தான் செய்யுது.

Men of surpassing wrath are like the men who've passed away;Who wrath renounce, equals of all-renouncing sages they.

Celui qui est prompt à se mettre en colère ressemble à un cadavre; celui qui a repudié la colère, est égal à celui qui a vaincu la mort.


Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...