மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூம்பொழிற் சோலைகளும், நிழல் தரும் சாலைகளுமாக விளங்கியது அந்தக் காலத்துத் திருவாரூர். கமலாலயத் திருக்குளத்தில் கமல மலர்க் கூட்டத்தையும், தாமரை இலைகளான மரகதத்தட்டுக்களையும் காணமுடியுமே தவிர, கண்ணீரைக் காண்பது அரிது. ஒரே மலர்க்காடு, இலைக்கூட்டம், கொடிப்பந்தல்.
திருக்குளத்தின் மையத்திலுள்ள தீவுக்குச் செல்ல வேண்டுமானால் பக்தர்கள் ஓடங்களில் செல்வார்கள். அந்த ஓடங்களும் மலர்களின்மீது மிதப்பவைப்போல் தோன்றுமே தவிர நீரைக் கிழித்துக் கொண்டு செல்வதாகத்
தோன்றமாட்டா.
கமலாலயக் கரையிலிருந்த சோழ மாளிகையில் அனைவரும் வந்து இறங்கியிருந்தார்கள். படிக்கட்டுக்கு அருகே இருந்த ஒரு பெரிய கூடம் மகிந்தரின் குடும்பத்தாருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மாளிகையின் மத்தியில் தங்கியது மாமன்னரது பரிவாரம்.
சக்கரவர்த்தியும் இளங்கோவும் மேன்மாடக்கூடத்தில் தனித்திருந்தனர். சோர்வும் களைப்பும் மிகுந்தவனாக இளங்கோ சுருண்டுபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். இராஜேந்திரருக்குக் காரணம் விளங்கவில்லை. கப்பலில் அவன் அவர் பார்வைக்குத் தட்டுப்படாமல் தப்பிக் கொண்டிருந்தான். கரைக்கு வந்த பிறகு அவனால் அவரிடமிருந்து விலகிச் செல்ல முடியவில்லை.
“ஏன் ஏதோ சோர்ந்து போய்க் காணப்படுகிறாய்?’’ என்று கேட்டார் சக்கரவர்த்தி. “என்னோடு இன்று பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதும் என்னவோபோல் இருந்தாய்; முகத்தில் உற்சாகமில்லை. இங்கு வந்த பிறகு இன்னும் அதிகமாக முகம் வெளுக்கிறதே! காயம்பட்ட இடம் அதிர்ச்சியுற்றிருக்கிறதா?’’
“அப்படியொன்றுமில்லை’’ என்று கூறிச் சிரிக்க முயன்றான் இளங்கோ. பரிதாபமாக இருந்தது அவன் சிரிப்பு.
“நேற்று மாலை மக்கள் கூட்டத்தினிடையே அகப்பட்டுக் கொண்டு விட்டாயல்லவா? பாவம்! உடல் நலமில்லாதவனைப் படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். அதனால் பாதகமில்லை. ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி வந்த பிறகு, நன்றாக ஓய்வெடுத்துக்கொள்; படுத்து உறங்கு.’’
சக்கரவர்த்தி குளித்து முழுகிவிட்டுச் சித்தமாவதற்குள் வல்லவரையர், மதுராந்தகர் முதலிய பெரியவர்களும் அங்கு வந்துவிட்டார்கள். இளங்கோவும் அவர்களுடன் சேர்ந்து புறப்படலானான்.
‘ஆலயத்துக்குச் சென்று வந்தாலாவது அமைதி கிடைக்குமா?’ என்று ஏங்கியது அவன் மனம். உடல்நிலை பயங்கரமான அளவுக்குச் சீரழிந்தபோதுகூட அவன் இவ்வளவு சஞ்சலப்படவில்லை. உடலில் ஏற்பட்ட புண்ணை உதாசீனம் செய்துவிட்டான். உள்ளத்தில் ஏற்பட்ட புண்ணை அவனால் ஆற்றிக்கொள்ள முடியவில்லை.
‘நான் உங்களை வெறுக்கிறேன்!’ என்று அவனுடைய முகத்துக்கெதிரே ரோகிணி சொன்ன சொல்லுக்கு, மருந்தைத் தேடி அவன் எங்கு போவான்! கூரம்போ, வேல் முனையோ நெஞ்சைத் துளைத்திருந்தால்கூட, அவற்றை நெஞ்சைவிட்டு அகற்றி விடலாம். அவள் சொல்லை எப்படி அகற்றுவது? எப்படிப் பிடுங்கி எறிவது?
மனத்தின் மருத்துவச் சாலையாகிய ஆண்டவன் ஆலயத்துக்கு அவன் மாமன்னருடன் போய்ச் சேர்ந்தான். மூடிய விழிமலர்களைத் திறவாமல் சிறுபொழுது தனக்குள் கசிந்துருகினான்.
அகிலத்தையே ஆளும் வல்லமை பெற்ற சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, திருவாரூரில் எழுந்தருளிய தியாகேசன் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தெண்டனிட்டார். அவர் பூண்டிருந்த பொன்னாபரணங்கள் தரையில் விழுந்து புரண்டன. அவர் உடுத்திருந்த கலிங்கத்துப் பட்டாடை அடியார்களது காலடி தோய்ந்த மண்ணிலே தோய்ந்தது.
மாமன்னரின் மலைபோன்ற மேனி மண்ணைத் தழுவி நிற்பதைக் கண்ணுற்றான் இளங்கோ. வெறும் மண்ணா அது? பெற்று வளர்த்த மண்; பீடுற வாழச் செய்த மண்; பிறவியை மறைக்கப் போகும் மண்.
“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’’
உள்ளங்குழைந்துருக உத்தமனைத் துதித்துப் போற்றினார் சக்கரவர்த்தி. மளமளவென்று அவர் கண்களில் குளிர் அருவி பெருக்கெடுத்தது. இறைவனது திருப்பணிக்கென்று அவர் எவ்வளவோ பொன்னும் பொருளும் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அவர் வழங்கிய தேவ தானங்களும், பள்ளிச் சந்தங்களும் கணக்கில் அடங்காதவை.
எனினும் அவையெல்லாம் கண்ணீராகிய விலைமதிப்பற்ற காணிக்கைக்கு முன்பு எம்மாத்திரம்? அகத்தின் ஆணவத்தை, மனத்தின் மாசை, சிற்றறிவின் செறுக்கை அலம்பிக் கழுவும் ஆனந்தப் பொன்னீரல்லவா அது? மாமன்னரின் மனம் தியாகத்தின் திரு உருவிடம் முறையிட்டது:
‘தியாகப் பெருமானே! போர்த் தொழில் புரிவது நாடாள்பவனின் கடமை என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். கொலை, புலை, கொடுமை, வெறித்தனமாகிய குரூரங்கள் நிறைந்த மறத்தொழில் தான்
அது. ஆனால் அறம் என்று நம்பிச் செய்திருக்கிறேன். அதன் புண்ணிய பாவங்கள் அனைத்தையும் நீயே ஏற்றுக் கொள். போரில் நான் வெற்றி பெற்றேன்; நட்பு முயற்சியில் தோல்வியுற்றேன். இந்த வெற்றி, தோல்வி இரண்டையும் நீயே ஏற்றுக்கொள்!
‘பண்பற்ற பகைவர்கள் நாட்டின் வடக்கு எல்லையில் எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உட்பகைவர்களோ உணர்ச்சிவெறி கொண்டிருக்கிறார்கள். இவர்களது தீமைகளிலிருந்து நாட்டைக் காக்கும் சக்தியைக் கொடு!
‘என் தங்கத் தமிழ்நாட்டில் வங்கத்தின் கங்கை பாய வேண்டும். நாட்டு மக்கள் வளம் பெற்ற வாழ்வு வாழ வேண்டும். தென்னாடுடையவனே! இந்நாட்டைப் பொன்னாடாக்கிவிடு!’
பூசனையை முடித்துக்கொண்டு மன நிம்மதியுடன் மௌனமாகத் திரும்பி நடந்தார் மாமன்னர்.
இளங்கோவும், ‘தியாகேசா! அந்த அற்பச் சிறுமியின் சுடுசொல்லால் என் மனம் வேதனையுறுகிறது. அந்தச் சொல்லை மறந்திருப்பதற்கு ஓர் உபாயம் கற்றுக்கொடு’ என்று வேண்டிக்கொண்டு வந்தான்.
இரவு உணவு முடிந்தவுடன் படுக்கைக்குச் செல்வது போல் பெரியவர்களிடம் போக்குக் காட்டிவிட்டு, கமலாலயக் குளக்கரை ஓரமாக நடந்து சென்றான் இளங்கோ. திருவாரூர் தனது உல்லாசக் களியாட்டங்களை
முடித்துக் கொண்டு களைத்துப்போய் உறங்க முற்பட்டது. குளக்கரையைச் சுற்றிலும் ஆங்காங்கே தீப்பந்தங்கள் எரிந்தன. குளத்தின் மையத்தில் அமைந்திருந்த நடுவனார் ஆலயத்திலிருந்தும் விளக்கொளி பரவியது.
மகிந்தர் தங்கியிருந்த கூடத்துக்கு எதிரே, குளத்தின் படிக்கட்டில் யாரோ ஒரு பெண்பிள்ளை தனிமையில் அமர்ந்திருந்தாள். மங்கலான ஒளிக் கலவையில் முதலில் அவள் யாரென்று இளங்கோவுக்குத் தெரியவில்லை.
யாரென்று தெரிந்துகொண்டவுடன், மேலே நடக்காமல் படிக்கட்டின் சுவருக்குப் பின்னால் தயங்கி நின்றான். கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நீரின் பக்கம் திரும்பியிருந்தாள் ரோகிணி.
மற்றொரு உருவம் படிக்கட்டில் மெல்ல இறங்கி வந்தது. மெதுவாக அவளுக்குப் பின்னால் போய் நின்று கொண்டு, “இளவரசி! இந்த அகாலவேளையில் நீங்கள் இங்கே இப்படித் தனியாக வரலாமோ!’’ என்று
கேட்டது.
அந்தக் குரலையும் உருவத்தையும்கொண்டு, வந்திருப்பவன் வீரமல்லன் என்பதை அறிந்தான் இளங்கோ. ஒரு கணம் அவன் மனம் துணுக்குற்றது. பிறகு இளங்கோ தன் வியப்பைக் குறைத்துக் கொண்டான். மகிந்தரின் குடும்பப் பாதுகாப்பு வீரமல்லன் பொறுப்பிலிருந்தது, அவன் நினைவுக்கு அச்சமயம் வந்தது.
வீரமல்லனின் கேள்விக்கு மறுமொழி கூறாமல் அவனைத் திரும்பிப் பார்த்தாள் ரோகிணி. இளங்கோ மறைவில் இருந்ததால் அவளுக்கோ, வீரமல்லனுக்கோ, அவன் அருகில் நின்றது தெரியவில்லை.
“உங்களைத்தான் இளவரசி! - தனியாக இங்கு எங்கே வந்தீர்கள்?’’ என்று கேட்டான் வீரமல்லன்.
“ஏன், வரக்கூடாதோ?’’ என்று திருப்பிக்கேட்டாள் ரோகிணி.
“உங்கள் சித்தப்படி நீங்கள் எங்கும் போகலாம், வரலாம். ஆனால், நீங்கள் இங்கிருந்தால் நானும் உங்கள் காவலுக்கு நிற்கவேண்டியிருக்கும்.’’
‘எனக்கொன்றும் அச்சமும் இல்லை; எனக்குக் காவலும் வேண்டாம்’ என்று கூற நினைத்த ரோகிணி, அப்படிக் கூறாமல், சிறுபொழுது எதையோ யோசனை செய்தாள். பிறகு, “வீரமல்லா! இப்படிச் சற்று அருகில் வா’’ என்று
அவனை அழைத்தாள்.
மிகவும் நெருங்கிச் சென்றவனை, “போதும் அப்படியே நில்’’ என்று கூறிவிட்டு, “உனக்குக் கொடும்பாளூர் இளவரசர் இளங்கோவைத் தெரியுமா?’’ என்று மென் குரலில் கேட்டாள்.
இளங்கோவின் செவிகள் அவள் குரலை கிரகித்துக் கொண்டன. வீரமல்லன் கணப்பொழுது மௌனமாக நின்றான். அதிர்ச்சியுற்றவன்போல் காணப்பட்டான்.
“என்ன யோசிக்கிறாய்? உனக்கு அவரைத் தெரியுமா?’’
“ஏன் கேட்கிறீர்கள்?’’
“காரணத்தோடுதான் கேட்கிறேன். உன்னால் எனக்கு அவரிடம் ஒரு காரியம் ஆகவேண்டும்.’’
“அவனை எனக்குத் தெரியும்’’ என்றான் வீரமல்லன். அவன் குரல் என்னவோபோல் இருந்தது. “அவனா! உங்கள் நாட்டுப் பழக்கம் விசித்திரமாயிருக்கிறதே! ஓர் இளவரசரைப் பற்றி நீ இவ்வளவு அலட்சியமாய்ப் பேசுகிறாயே?’’
“அவன் என்னுடைய நண்பன், இளவரசி! இளவரசனாக இருக்கலாம். ஆனால் அவனும் என்னைப்போல் ஒரு மனிதன்தானே!’’
“போகட்டும்! அது உன் சொந்த விஷயம்’’ என்று சொல்லி விட்டு,
“எனக்கு நீ ஒரு சிறு உதவி செய்ய முடியுமா?’’ என்று கேட்டாள்.
“நீங்கள் இட்ட பணியைச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். சிறு உதவி என்ன? பெரிய உதவி செய்வேன்.’’
“என் தந்தையார் என்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்லியிருக்கிறார். அதை நான் கொடும்பாளூர் இளவரசரிடம் நேரில் சொல்ல வேண்டும். எனக்காக அவரிடம் சென்று நான் அவரை உடனே காண
விரும்புவதாய் சொல்லுகிறாயா? நான் இந்த இடத்தில் காத்திருப்பதாய்ச் சொல்.’’
வீரமல்லன் அங்கேயே நின்றான். திரும்பிப் போகவில்லை.
“போய் வருகிறாயா?’’ என்று கெஞ்சும் மொழியில் கேட்டாள் ரோகிணி.
“உங்களுக்கு அவனை நன்றாகத் தெரியுமா?’’ என்று திருப்பிக் கேட்டான் வீரமல்லன்.
“தெரியாமலா வரச் சொல்வேன்?’’
“உங்கள் தந்தையாருக்கு இளங்கோவைத் தெரியுமல்லவா?’’
“தெரியும்.’’
“அவரே அவனிடம் அதை நேரில் கூறிவிட்டால் என்ன? தங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம்?’’
“வீரமல்லா! உன்னிடமிருந்து நான் எவ்விதமான யோசனையையும் எதிர்பார்க்கவில்லை, நீ போய்ச் சொல்ல முடியுமா? முடியாதா?’’
“முடியாது, இளவரசி! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.’’
“சற்று முன்பு உதவி செய்வதாகச் சொன்ன நீயா அதற்குள்ளாக இப்படி மறுத்துப் பேசுகிறாய்?’’
“வேறு எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன்; இந்தக் காரியத்தை என்னால் செய்ய முடியாது.’’
“ஏன்?’’
“அவனைச் சுற்றிப் பலரும் பேசிக் கொண்டிருப்பார்கள்!’’
“இருந்தால்...?’’
“இது இரவு நேரம்; நீங்கள் இங்குத் தனித்திருக்கிறீர்கள், இந்தச் சமயத்தில் அவனை இங்கு வரும்படிக் கூறினால் மற்றவர்கள் ஏதும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.’’
“நீ அவரைத் தனியே அழைத்துச் சொல்ல முடியாதா?’’
“முடியாது!’’
“உனக்கு விருப்பமில்லை எனக் கூறு!’’
“அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். நான் தூதுவனல்ல, காவற்படைத் தலைவன்.’’
“தெரிந்துகொண்டேன்! சரி நீ இங்கிருந்து போகலாம். நான் தனித்திருக்கும் வேளையில் நீயும் இங்கு நிற்பது தவறுதான்.’’
“கோபித்துக்கொள்ளாதீர்கள், இளவரசி!’’ திரும்பிப் போகாமல் அங்கேயே நின்றான், வீரமல்லன்.
“நீ போகிறாயா, இல்லையா? இல்லை, உன்னைப் போக வைக்கட்டுமா?’’
வீரமல்லன் திரும்ப மனமில்லாதவன் போல் திரும்பிச் சென்றான். மாளிகைக் கூடத்துக்குள்ளே அவன் நுழையும் வரையில் காத்திருந்துவிட்டு,
“யாரது அங்கே?’’ ஏதுமறியாதவன் போல் கேட்டுக்கொண்டே இளங்கோ படிக்கட்டுக் கரைக்கு வந்தான்.
திடுக்கிட்டு எழுந்து நின்று திரும்பிப் பார்த்தாள் ரோகிணி.
“யாரது?’’
ரோகிணி பதிலளிக்கவில்லை. பதிலளிக்காமல் எங்கே தன் குரலைக் கேட்டுவிட்டு இளங்கோ திரும்பிப் போய் விடுவானோ என்ற அச்சத்தில், பதறிக்கொண்டு அவனிடம் ஓடி வந்தாள்.
“இளவரசே! நிச்சயம் உங்களுக்கு நூறு வயது!’’
மன வருத்தத்துடன் நகைத்தான் இளங்கோ. “பெண்களின் சுடு சொல்லுக்கு நூறு வயதுக்காரனையும் ஒரே நொடியில் கொன்றுவிடும் சக்தி இருக்கிறதே, உனக்குத் தெரியுமா?’’
ரோகிணிக்குப் பேச நா எழவில்லை.
தொடரும்
Comments
Post a Comment