Skip to main content

வேங்கையின் மைந்தன்-பாகம் 2- 3-வெறுப்புத்தானா?




எத்தனை நாழிகை ரோகிணி அதே இடத்தில் ஆடாத அசையாத சிலையாக நின்று கொண்டிருந்தாளோ, அவளுக்கே தெரியாது.

கடற்காற்றில் அவளது கருங்குழலின் திவலைகள் நெற்றியில் படர்ந்து துடித்தன. மேலாடை கதிரொளியில் மினுமினுத்துப் பின்னோக்கிப் பறந்தது. கொடி மரத்தை வளைத்துக் கொண்டிருந்த பட்டுக் கயிறுபோல், அவள் துவண்டுபோன பசலைக் கொடியாக அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அதே மேல் தளத்தில் மறுகோடியில், ஒரு தங்கக் கட்டிலில் சாய்ந்துன் கொண்டு கிடந்தான் இளங்கோ. அவனால் ஓரளவுக்கு எழுந்து நடமாட முடிந்ததே தவிர, அவனுடைய உடல் நலம் பழைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. வேல் பட்ட காயம் வெளிப்புறம் ஆறிக்கொண்டு வந்தாலும் உள்ளே வேதனையைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

வைத்தியர் ஏதோ தைலம் தடவிய துணியைக் காயத்தின்மேல் போட்டு வைத்திருந்தார். அதைப் பிய்த்து எடுத்துக் கடலில் வீசி எறியவேண்டும் போல் இருந்தது. நோய்ப் படுக்கை விவகாரமே அவனுக்குப் பிடிக்கவில்லை. சிற்சில சமயங்களில் காயத்தின் தொல்லை தாங்காதபோது வேல் எறிந்து தொலைத்தவன் இன்னும் சிறிது வேகமாக எறிந்திருக்கக் கூடாதா? மணிமுடிப் பேழையை மாமன்னரிடம் கொடுத்தவுடன் இந்த உயிர் உடலை விட்டுப் போயிருக்கக் கூடாதா என்றுகூட அவன் நினைத்திருக்கிறான்.

ஆனால், ரோகிணி அவன் அருகே வந்து பேசிக்கொண்டிருந்த வேளைகளில் அவனுக்குத் தன் உயிரின்மேல் வெறுப்பு ஏற்பட்டதில்லை. வாழவேண்டும் என்ற அளவுகடந்த ஆசையை அவனுக்கு அவள் கண்கள் கொடுத்தன. சொற்கள் கொடுத்தன; முகம் கொடுத்தது.

திடீரென்று ரோகிணி மாறிப் போய்விட்டாள். நேற்றிலிருந்து அவள் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனுடைய உடல்நிலை பற்றி முன்னைப் போல் அன்போடு விசாரிக்கவில்லை. கண்டும் காணாதது போல்
பாராமுகமாக நடந்து கொண்டாள்.

இன்று பொழுது புலர்ந்ததிலிருந்து ரோகிணி, ரோகிணியாகவே இல்லை. இரவெல்லாம் அவள் தேம்பித் தேம்பி அழுதிருக்க வேண்டும். தன் தாயாரின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மியிருக்க வேண்டும். முகம் கன்றிச் சிவந்திருந்தது. கண்கள் கொவ்வைக் கனியாகப் பழுத்திருந்தன.

கப்பலின் மேல்தளத்துக்கு அவன் வந்துகொண்டிருந்த போது எதேச்சையாக அவள் கண்கள் இளங்கோவைச் சந்தித்தன. பார்வையா அது! நெருப்பை அள்ளி அவன் மீது வீசிவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இளங்கோவுக்கு ஏன் இந்த மாற்றம் என்று விளங்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவன் தன்னிடம் திரும்பி வந்து பேச்சுக் கொடுப்பாள் என்று நினைத்தான். அன்போடு அவள் பேச வேண்டியதில்லை. பெயரளவுக்காவது ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போகலாமல்லவா!

அவள் எதையும் செய்யவில்லை.

இளங்கோவுக்கு மனத்தவிப்பு மிகுதியாயிற்று. மெல்லத் தன் கட்டிலை விட்டு எழுந்து வந்தான்.

கப்பல் மிகப் பெரிய கப்பல். இராஜேந்திரர், வல்லவரையர் முதலிய பெரியவர்கள் அதன் கீழ்த்தளத்தில் இருந்தார்கள். மீகாமனும் அவனுடைய ஆட்களும் அடித்தளத்தின் பக்கவாட்டிலிருந்து கலத்தைச் செலுத்திக்
கொண்டிருந்தார்கள். சார்ந்த காற்று வீசியதால் பாய்மரச் சேலைகள் புடைத்திருந்தன. அதனால் துடுப்பு வலிப்பவர்களுக்கு அதிகமாக வேலையில்லை.

ரோகிணியின் அருகே சென்று கைப்பிடியில் சாய்ந்து கொண்டே சில விநாடிகள் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் இளங்கோ. அவனுடைய வரவு அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. எனினும் ரோகிணி அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட முன்வரவில்லை.

“ரோகிணி!’’

சட்டென்று திரும்பிப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டாள் அவள். சற்றே விலகி நின்றாள்.

“ரோகிணி!’’ என்று கனிவுடன் அழைத்தான் இளங்கோ. “என்னோடு நீ எங்கள் நாட்டுக்கு வருகிறாய் என்று தெரிந்ததிலிருந்து நான் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறேன் தெரியுமா? என்னிடம் உன் கோபத்துக்குக்
காரணத்தைச் சொல்லமாட்டாயா? ஏன் நீ என்னைத் திரும்பிக்கூடப் பாராமல் இரண்டு தினங்களாக விலகி விலகிச் சென்று கொண்டிருக்கிறாய்?’’

“இப்போது நீங்கள் விலகிப் போகமாட்டீர்களா?’’ என்று முகத்தில் அறைவது போல் கூறினாள் ரோகிணி.

பகைவனின் வேல் அவன் தோளில் பாய்ந்தபோது கூட இளங்கோவுக்கு இவ்வளவு வேதனை ஏற்படவில்லை. ரோகிணி எறிந்த சொல்லம்பு அவனது நெஞ்சத்தின் நடுமையத்தில் பாய்ந்து விட்டது.

அந்த வலியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, “நான் உனக்கு என்ன கொடுமை செய்துவிட்டேனென்று கூற மாட்டாயா?’’ என்று கெஞ்சுவது போல் கேட்டான்.

“இதைவிட வேறென்ன கொடுமை வேண்டும்? அரச கோலத்தில் இருந்தவர்களை அடிமைகளாக்கி, ஆண்டிகளாக்கி இழுத்துக் கொண்டு போகிறீர்களே, போதாதா? எங்கள் நாட்டைப் பறித்து வீட்டைப் பறித்து எங்கள் வாழ்வையே பறித்துக் கொணடீர்களே, போதாதா? பெண்களைச் சிறை செய்து கொண்டு போவதற்குக் கொஞ்சமும் வெட்கமாக இல்லை?’’

“கடவுளே!’’ என்று அலறினான் இளங்கோ. “ரோகிணி! உனக்கு என்ன புத்தி தடுமாறிவிட்டதா! நாங்களா உன்னையும்

உன் தாயாரையும் எங்கள் நாட்டுக்கு அழைத்தோம்? உங்களை நாங்கள் வரச்சொல்லி வற்புறுத்தினோமா? கட்டாயப் படுத்தினோமா? ஏன் இப்படிப் பேசுகிறாய்?’’

“இனி நீங்கள் எதை வேணடுமானாலும் சொல்வீர்கள்?’’ என்றாள் ரோகிணி. “நீங்கள் வெற்றி பெற்றவர்கள்; நாங்கள் தோற்றுப் போனவர்கள். நீங்கள் சாதாரண வெற்றியா பெற்றிருக்கிறீர்கள். சரித்திரம் காணாத மாபெரும் வெற்றியல்லவா இது? இந்த வெற்றி மயக்கத்தில் உங்களுக்கு மற்றவர்களின் மனத் துன்பம் எங்கே புரியப் போகிறது? ஏன், எங்கள் தந்தையாரைக் கொண்டுபோனால் அப்போது நாங்களும் அவர் பின்னோடு வந்தே தீருவோம் என்பதற்காகத்தானே இப்படி நீங்கள் செய்திருக்கிறீர்கள்?’’

இதைக்கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று இளங்கோவுக்குத் தோன்றவில்லை.

“இதில் நான் ஒன்றுமே செய்யவில்லை. மாமன்னரின் கட்டளைப்படி உன் தந்தையார் எங்களுடன் வருகிறார். நீயோ உன் சொந்த விருப்பத்துக்காக உன் தாயாரையும் அழைத்துக்கொண்டு வருகிறாய். உனக்கு விருப்பம்
இல்லாவிட்டால் இப்போதே சொல்லிவிடு. உனக்காக நான் சக்கரவர்த்தியிடம் முறையிட்டு, உங்கள் இருவரையும் திருப்பி அனுப்புகிறேன்; வா, நாம் இருவருமே சக்கரவர்த்தியிடம் போவோம்.’’

“உங்கள் பேச்சு எனக்கு வெறுப்பைத்தான் தருகிறது’’ என்று சிடுசிடுத்தாள் ரோகிணி. “உங்களை நான் என் மனதார வெறுக்கிறேன்!’’

“என்ன சொன்னாய்?’’ இளங்கோவின் இளம் மீசை துடிதுடித்தது. அவன் கண்கள் கொப்பளித்தன.

“நீங்கள் என்னை ஏமாற்றினீர்கள்! என்பதைத் துரோகியாக மாற்றினீர்கள்! என்னுடைய தந்தையாருக்கு வஞ்சனை செய்யத் துண்டினீர்கள். என் தம்பி காசிபனை என்னிடமிருந்து விரட்டினீர்கள்! இவ்வளவும் செய்து விட்டு, இப்போது கூண்டுக்கிளிபோல் கொண்டுபோய் உங்கள் நாட்டில் ஓர் அறைக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள். உங்களுடைய பேச்சு, செயல், சாகசம் ஒன்றுமே எனக்குப் பிடிக்கவில்லை. நான் உங்களை வெறுக்கிறேன், வெறுக்கிறேன், வெறுக்கிறேன்.’’

“பெண்ணல்ல இவள்; பேய்தான்!’’ என்ற முடிவுக்கு வந்தான் இளங்கோ. அழகான நாகப்பாம்பு தன் அலங்காரப் படம் விரித்து ஆடத் தொடங்குகிறதா?

“எவ்வளவு அழகான கண்கள், எவ்வளவு அடர்த்தியான புருவங்கள்! எவ்வளவு எடுப்பான நாசி! அடடா, எத்தகைய செவ்விதழ்கள்-இவ்வளவு அழகும் கொண்ட ஒருத்தியா இப்படி விஷத்தைக் கக்குகிறாள்?’’

இளங்கோவின் வலது கரம் பரபரத்தது. அவளுடைய முகத்தின் அழகுச் சேர்க்கையனைத்தும், அவனுடைய ஒரே ஓர் அறையைத் தாங்க வலிமையற்றவை. ‘என்ன துணிவு இவளுக்கு? யாரிடம் பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் பேசுகிறாளா?’

இளங்கோவின் முகத்தில் திடீரென்று கோரக் களை தாண்டவமாடியது. புருவங்கள் நெரிந்தன. விழிகள் குத்திட்டு நின்றன. அவளருகில் நெருங்கி, அவளைப் பார்த்துப் பயங்கரமாக விழித்துக்கொண்டே, “நீ என்ன
சொன்னாய்?’’ என்று திரும்பவும் கேட்டான்.

“நீங்கள் என் குல விரோதி! நான் உங்களை வெறுக்கிறேன்’’ என்று கலங்காமல் கூறினாள் ரோகிணி.

மறுகணம் ‘பளீ’ரென்று சத்தம் கேட்டது. ரோகிணியின் மூக்கிலிருந்து ரத்தத் துளிகள் கசிந்தன. செவிகள் ரீங்காரம் செய்தன.

அத்துடன் அவன் நிற்கவில்லை. வெறிகொண்டவன் போல் அவள் இடையைப் பற்றி மேலே தூக்கினான். கீழே கடல் அலைகள், மரக்கலத்துடன் முட்டிமோதிக் கொண்டு பயங்கரப் பேயாட்டம் போட்டன. உணர்ச்சி வேகத்தில் தான் செய்துகொண்டிருப்பது என்ன என்பதையே அவன் மறந்துவிட்டான். “உன்னைத் தொலைத்து விடுவேன்! என்னை யாரென்று நினைத்தாய்? யார் என்று நினைத்தாய்?’’ என்று அலறினான்.

அலைகடல் அவன் கரங்களில் அகப்பட்டிருந்த சிறு பிராணியைத் தனக்கு உணவாகப் போடச் சொல்லிக் கூத்தாடியது. ரோகிணி தன் வாழ்வின் முடிவு நெருங்கி விட்டதென்ற எண்ணத்தில் தன் பலமனைத்தையும் சேர்த்துக்கத்தினாள். கைகால்களை உதறிக்கொண்டு பதறினாள். கூக்குரலிட்டாள்.

மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்டது.

“இளங்கோ!’’ என்று அதட்டிக்கொண்டே அங்கு ஓடிவந்தார் வல்லவரையர். தாவிச் சென்று ரோகிணியை அவனிடமிருந்து பற்றி இழுத்தார்.

அவனுடைய கோலத்தைக் கண்டவுடன், ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்க வேண்டுமென்று தோன்றியது வல்லவரையருக்கு.

ரோகிணியை ஒரு புறம் நிறுத்திவிட்டு, இளங்கோவிடம் நெருங்கி வந்து,

“நீ என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய்?’’ என்று பதறினார்.

“இப்போது என்ன நடந்து விட்டது?’’

அவன் மறுமொழி கூறாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு கடலின் பக்கம் திரும்பினான். கண்ணீர்த்துளிகள் வெடித்துச் சிதறின. அவன் முதுகு குலுங்கி, அங்கம் பதறி நடுங்குவதை ரோகிணி மிகுந்த அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன இளங்கோ, இது?’’ வல்லவரையர் மீண்டும் கேட்டார்.

“என்னை இவள் இகழ்ந்து பேசிவிட்டாள் தாத்தா. என்னால் அதைப் பொறுக்க முடியவில்லை!’’ என்று மீண்டும் குமுறினான். “என்னை இவள் அலட்சியப்படுத்திவிட்டாள், தாத்தா!’’

‘இந்தச் சிறிய விஷயத்துக்காகவா இவ்வளவு பதற்றம்’ என்று கேட்பவர்போல் முதலில் விழித்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். உடனே அவருக்கு கொடும்பாளூர்ப் பெரிய வேளாரின் நினைவு வந்தது. தந்தையைப் போல்தானே மகனும் இருப்பான்!

ரோகிணி ஏதோ தகாத குற்றம் புரிந்துவிட்டவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு பரிதாபமாக நின்றாள். வல்லவரையர் அவளை நெருங்கி,

“கொடும்பாளூர்க் குலம் மிகவும் பொல்லாத குலம், ரோகிணி! நெருப்போடு பழகுவதுபோல் அதனுடன் பழக வேண்டும்’’ என்று கூறினார்.

பதிலளிக்கக்கூடிய தெம்போ, துணிவோ அவளிடம் இல்லை. பயங்கரக் கனவிலிருந்து விழித்துக்கொண்டவள் போல் காணப்பட்டாள்.

“ரோகிணி! பெற்று வளர்த்த தாயார் ஒரு சுடுசொல் சொன்னால்கூட அவர்கள் தாங்கமாட்டார்கள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் சக்கரவர்த்திகளே அவர்களிடம் இன்மொழியால் நயந்து உரையாடுவது வழக்கம். இளங்கோவுடன் நெருங்கிப் பழகும் நீ இதையெல்லாம் தெரிந்துகொண்டு பழகவேண்டும் அம்மா!’’

“நான் ஒன்றுமே சொல்லவில்லையே!’’ என்றாள் ரோகிணி. “என்னுடைய துன்பம் தாங்காமல் நான் தனிமையில் புழுங்கிக்கொண்டிருந்த போது அவர்தாம் வந்து குறுக்கிட்டார்.’’

“பாதகமில்லை, இனியாவது கவனமாக நடந்துகொள். அவன் கொடும்பாளூர் அரசரின் செல்வப் புதல்வன்; நாடாளவிருக்கும் இளவரசன். நயந்து பேசுகிறவர்களுக்கு அவன் நல்லவன். சுடுசொல்லை வீசுகிறவர்களுக்கு எரிமலை. தெரிந்து கொண்டாயா!’’

அவளிடம் அவர் பேசிய சொற்கள் இளங்கோவின் செவிகளில் விழவில்லை. அவற்றைக் கேட்க அவன் விரும்பவில்லை.

“இளங்கோவிடம் வந்து, வீராதி வீரனான நீ, கேவலம் ஒரு பெண் பிள்ளையிடந்தானா உன் வீரத்தைக் காட்டத் துணிந்தாய்!’’ என்று பரிகசித்தார்.

“பாவம் அவளுடைய கவலை அவளுக்கு! வா, வந்து ஓய்வெடுத்துக்கொள்.’’

அவனைத் தள்ளிக்கொண்டுவந்து கட்டிலில் கிடத்திவிட்டு படிகளில் இறங்கிக் கீழ்தளத்துக்குச் சென்றார் வல்லவரையர். சின்னஞ் சிறுவர்களின் கோபம் சிலவிநாடிகளில் தீரக்கூடியது என்பது அவர் எண்ணம்.

இளங்கோ தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு குப்புறப் படுத்தான். மலைகளைப் போன்ற பேரலைகள் நான்கு பக்கங்களிலும் எழும்பி வந்து அவனுடைய கட்டிலைத் தனியே கடலுக்குள் அடித்துக் கொண்டு போவதுபோல் தோன்றியது. “நான் உன்னை வெறுக்கிறேன்! நான் உன்னை வெறுக்கிறேன்!’’ என்று எக்காளமிட்டபடியே அவை ஒவ்வொன்றாக அவன் கண்ணெதிரே சுருண்டெழுந்து நர்த்தனம் புரிந்தன.

அற்பத்திலும் அற்பமான விஷயம் என்று நினைத்து அதைத் தன் மனத்திலிருந்து ஒதுக்கிவிடப் பார்த்தான் இளங்கோ. அற்பமான சிறு வித்திலிருந்துதானே மிகப்பெரிய ஆலமரம் முளைத்தெழுகிறது? எண்ணங்களான ஆல விருக்ஷங்கள் அவனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் விழுதுகளையும் வேர்களையும் பாய்ச்சி அவனை ஆட்டுவிக்கத்
தொடங்கின.

முதற் பார்வையிலிருந்து எவளிடம் அவன் தன் மனத்தைப் பறிகொடுத்தானோ, அவள் அவனைப் பகைக்கிறாள்; வெறுக்கிறாள்; துரும்பென எண்ணித் தூற்றுகிறாள்.

வெகுநேரம் சென்ற பின்பு, “இளவரசே’’ என்ற மெல்லிய குரலொன்று அவன் தலைமாட்டில் கேட்டது. அந்தக் குரலை அவன் முதலில் நம்பவில்லை. தன் மனம் எழுப்பும் பிரமைக் குரலாக இருக்குமோ என்று சற்றே தயங்கினான்.

இளவரசே!’’ என்று மீண்டும் அதே குரல் ஒலித்தது.

தலையைத் தூக்கிப் பார்த்தான்:

நான்... நான் வந்து...’’ ரோகிணி தடுமாறினாள்.

யாரது? யார் நீ’’ என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டான் இளங்கோ. “நான் உன்னை வெறுக்கிறேன், நீ என் முகத்தில் இனி விழிக்கவேண்டாம்!’’ என்று தன் சொற்களில் ஆத்திரத்தின் வஞ்சத்தையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி வைத்து அவள்மீது வீசினான். அம்பு பட்ட அன்னப் பறவை தன் சிறகுகளைச் சிதற விட்டு, கப்பலின் கீழ்த்தளத்துக்கு உருண்டோடிச் சென்று அங்கு குற்றுயிர் குலை உயிராக விழுந்து துடித்தது.

அதன் பிறகு ரோகிணியுடன் இளங்கோ முகம் கொடுத்துப் பேசுவதையே நிறுத்திவிட்டான். நாகப்பட்டினத்துக்கு அவர்கள் வந்த பின்னரும், அதைவிட்டு அவர்கள் புறப்பட்ட பின்பும் அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தொடரும்

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...