இளங்கோவின் தோளில் வேல் பாய்ந்த அதே நேரத்தில், வீறிட்டு அலறிக்கொண்டே படுக்கையிலிருந்து பதைபதைத்து எழுந்தாள் அருள்மொழி. பகலுறக்கம் கொள்வது அவள் பழக்கமில்லை. அன்றைக்குப் பொழுது விடிந்ததிலிருந்தே அவளுடைய உடலும் மனமும் சோர்வுற்றிருந்தன. எதிலும் மனம் நாட்டம் கொள்ளவில்லை. பிற்பகலில் ஏதேதோ கற்பனை செய்து தன்னைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டே கட்டிலில் சாய்ந்தாள்.
அரை நாழிகைப் பொழுதுக்குள் பயங்கரமானதொரு பகல் கனவு தோன்றி அவளை இப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தது. தன் தமக்கையின் கூக்குரலைக் கேட்ட அம்மங்கை தேவி தொடுத்துக் கொண்டிருந்த மல்லிகைச் சரத்தை அப்படியே போட்டுவிட்டு, அருள்மொழியிடம் ஓடிவந்தாள்.
அருள்மொழியின் விழிகள் அப்போது அகலத் திறந்தன. வாயில் விரலை வைத்து அவள் தன்னையறியாது கடித்துக்கொண்டாள். அவளுடைய முகத்தில் அருள் இல்லை.
“என்ன, அக்கா, இது?”
தன் தங்கையின் முகம் ஒரு விநாடிக்குப் பிறகே அவளுக்குத் தெரிந்தது. மறுமொழி கூறாமல் அச்சத்துடன் அம்மங்கையை நோக்கினாள்.
“உறங்கிவிட்டாயா, அக்கா?”
“அப்படித்தான் நினைக்கிறேன்.”
“எதுவும் கனவு கண்டாயா?”
“கனவா?” என்று அம்மங்கையிடமே திருப்பிக்கேட்டு விட்டு, கண்ட கனவைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொண்டு, தனக்குள் நடுங்கினாள். “ஆமாம், கனவாகத்தான் இருக்க வேண்டும்.”
“என்ன கனவக்கா?” என்று கேட்டு, அவளருகில் அமர்ந்து அவளைச்செல்லமாக அணைத்துக்கொண்டாள் அம்மங்கை. அவளுடைய கேள்விக்கு அருள்மொழி பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கவே, “என்னிடம் சொல்லக் கூடாதா? என்ன கனவு அது?” என்று திரும்பவும் வற்புறுத்திக் கேட்டாள்.
“எனக்கு அதைச் சொல்லத் தெரியவில்லை. என்னவோ ஒரு பயங்கரக்கனவு.”
“என்னிடம் நீ எப்போதும் எதையும் சொல்வதில்லை” என்று சிணுங்கினாள் அம்மங்கை. “கண்ட கனவு அதற்குள் மறந்துவிடுமா?”
“பகற் கனவு பலிக்காதென்பார்களே, ஒரு வேளை பலித்தாலும் பலித்துவிடுமா?” அருள்மொழி கேட்டாள். அவள் தங்கை பதிலுரைக்கவில்லை. பிறகு தங்கையின் கோபத்தைத் தணிப்பதற்காக அருள்மொழியே தொடர்ந்து கூறினாள்:
“ஈழநாட்டில் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு ஏதோ துன்பமென்று தெரிகிறது. தந்தையாருக்கோ மற்றவர்களுக்கோ ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறேன். போர்க்களத்தில் நடப்பதுபோல் பயங்கரமான காட்சிகள் கனவில் வந்தன. தெளிவாக ஒன்றும் விளங்கவில்லை.”
“பகல் கனவு ஒருக்காலும் பலிக்கது. எழுந்துபோய் முகத்தைக்
கழுவிவிட்டு வா. உனக்காகப் பூச்சரம் கட்டியிருக்கிறேன். வைத்துக்கொள்.”
முகத்தைக் கழுவிக் குங்குமம் இட்டுக்கொண்டு வந்தாள் அருள்மொழி.பெரிய கோயிலுக்குடையவனை மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டாள்.அம்மங்கையின் வண்ணக் கரங்கள் தன் தமக்கையின் கொண்டைக்கு அழகுற மலர் சூட்டிவிட்டன. என்றைக்குமே எதற்குமே கலங்காத அருள்மொழி, சிறுகனவு கண்டு பதறியது அவளுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
அருள்மொழி அந்தப்புரத்திலிருந்து அரண்மனையின் ஆலோசனை மண்டபத்துக்குச் சென்றாள். அவளுடைய மனமோ தன்னுடைய ஆழத்தைத்தானே தேடுவதுபோல் உள்நோக்கி விரைந்தது. அவள் கண்ட கனவு இளங்கோவைப் பற்றியது. இளங்கோவின் உயிரைப் பற்றியது. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? திரும்பி வருவானா? மாட்டானா? ஒன்றும் புரியவில்லை.
ஈழத்துப்பட்ட கொடும்பாளூர் சிறிய வேளாரைப் போலவே அவனும் உயிரற்று விழுந்து விட்டதாகக் கனவு கண்டாள், அருள்மொழி. பகற்கனவு பலிக்காது. அப்படியே இரவுக் கனவு போன்று இருந்தாலும் எதிரிடையான நிகழ்ச்சி நடக்கும் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அவள். மனத்தின் சக்திக்கு எல்லையென்பதே கிடையாது போலும். ஒன்றையே திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டிருந்தால், நினைக்கும் பொருளை நாடி அது காலம், தூரம், இடமெல்லாம் கடந்து சென்று பின்பற்றும் போலும். இளங்கோ ரோகணத்தில் வேல்பட்டு அலறிய அதே நேரத்தில்,அருள்மொழியிடமிருந்து எப்படித்தான் எதிரொலி கிளம்பியதோ!
ஆலோசனை மண்டபத்துக்குள் கொடும்பாளூர் மதுராந்தக வேளார்தனியாக அமர்ந்திருந்தார். அருள்மொழி அருகில் வந்து நின்றது, அரை விநாடிக்குப் பிறகு அவருக்குத் தெரிந்தது. வழக்கமாக அவள் அங்குவருவதும் இல்லை, அவருடன் கலகலப்பாகப் பேசுவதும் இல்லை.
“வா அம்மா!” என்று அமரச்சொல்லி இருக்கையைச் சுட்டிக் காட்டினார் மதுராந்தக வேளார். “ஏன் என்னவோ போலிருக்கிறாய்?”
“ஈழத்திலிருந்து ஏதாவது செய்திகள் வந்ததா, மாமா? எல்லோரும் அங்கு நலந்தானா?”
பெருமூச்சு விட்டார் பெரிய வேளார். “நலத்துக்கொன்றும் குறைவிருக்காது; ஆனால் ரோகணந்தான் என்றும்போல் நம்மை ஏமாற்றப் பார்க்கிறது” என்றார் மதுராந்தகர். “வழக்கம் போல் அங்கு என்னென்ன நடைபெறுமோ அவை நடந்திருக்கின்றன. நாட்டை நம்மிடம் விட்டுவிட்டு
அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். மணிமுடி மாயமாக மறைந்துவிட்டது.”
இரண்டு மூன்று தினங்களாக ரோகணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவருக்குத் தெரியாதவை. ஒரு வாரத்துக்கு முன் கிடைத்த கடைசிச்செய்தியில் அவர் உலவிக் கொண்டிருந்தார்.
“எப்போது எல்லோரும் திரும்பி வருவார்கள் மாமா?” என்று கேட்டாள் அருள்மொழி நங்கை.
“எல்லோருமா?” விசனத்துடன் சிரித்தார் வேளார்.
“போருக்குச் சென்றவர்கள் எல்லோருமே திரும்பி வருவதென்றால் அது சாத்தியப்படுமா அருள்மொழி? போனவர்கள் போக, இருப்பவர்கள் வருவார்கள்.”
‘இந்தப் பெரியவேளார் எப்போதுமே இப்படித்தான்’ என்று நினைத்தாள் அருள்மொழி. நல்ல சொல் சொல்லி அவர் நாவுக்குப் பழக்கமில்லை.
“தந்தையார் திரும்புவார்களா?” என்று சிறிது சினத்துடன் வினவினார். “எப்போது வருவார்கள்?”
நாட்டு நிலைமையில் அவரது நாட்டம் திரும்பியது. “அதையா கேட்கிறாய்? மிக விரைவில் திரும்பிவிடுவார்கள்; சக்கரவர்த்திகளுக்கு நான் திருமுகம் அனுப்பியிருக்கிறேன்.”
அவர் தொடர்ந்து கூறலானார்;
“ஈழத்தின் நிலைமை என்றும்போல் இழுத்துப் பறித்துக்கொண்டு நிற்கிறது. இந்தச் சமயத்தில் நம்மைப் பாண்டியர்கள் வெளிப்படையாகவே பகைத்துக் கொள்ளத் துணிந்து விட்டார்கள். அவர்களை நிர்மூலம் செய்தாலொழிய, சோழ சாம்ராஜ்யத்துக்கு வாழ்வு கிடையாது. அவர்கள் வாழ்வதா நாம் வாழ்வதா என்று முடிவுசெய்து தீரவேண்டும். சக்கரவர்த்திகள் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுத்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களைக் கலந்து கொண்டே பாண்டிய நாட்டுக்குப் படை அனுப்ப விரும்புகிறேன். ஈழத்துக்கும், காஞ்சியில் இளவரசர் இராஜாதிராஜனுக்கும் தூதுவர்கள் சென்றிருக் கிறார்கள்.”
“ஈழத்திலிருந்து தந்தையாரும் மற்றவர்களும் திரும்பி விடுவார்கள் என்று கூறுங்கள்!” குரலில் மகிழ்ச்சி ஒலிக்கக் கூறினாள் அருள்மொழி. ‘மற்றவர்கள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறாள் என்று வேளாருக்கு விளங்கவில்லை. இளங்கோவிடம் அவள் கொண்டிருந்த பற்றுதல் இளங்கோவுக்கே தெரியாதபோது அவருக்கு எப்படித் தெரியும்?
“மற்றவர்கள் என்று யாரைச் சொல்கிறாய் அருள்மொழி?”
“வந்தியத்தேவர், இன்னும்...”
தடுமாறினாள் நங்கை. கண்ணிமைகள் படபடவென்று அடித்துக்கொண்டன. அவர் முகத்தைப் பார்த்தாள். மேலும் கீழும் பார்த்தாள். தனது மார்பகத்தை மறைத்திருந்த துகிலின் நுனியை விரலால் சுற்றினாள்.
“இன்னும்... கொடும்பாளூர் இளவரசர்!” என்று கூறிச் சட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
பெண்ணின் மென்மையான மன உணர்ச்சிகளுக்கும் கொடும்பாளூர் வேளாருக்கும் வெகுதூரம். அவள் ஏன் தயங்கினாள், ஏன் தடுமாறினாள், ஏன் தவித்தாள் என்பதிலெல்லாம் அவர் மனம் செல்லவில்லை.
“மணிமுடி வந்தால், அது வரும்போது, என் மகன் வருவான்” என்றார். “அது வராவிட்டாலும் சக்கரவர்த்திகள் வருவார்கள்.”
‘நீங்களும் உங்கள் மணிமுடியும்!’ என்று அவரைத் தன் விழிகளால் சுட்டுவிட்டு எழுந்து நின்றாள் அருள்மொழி. விழிகளின் சூடு அவருக்கு ஒன்றும் உறைக்கவில்லை. பாண்டிய நாட்டின் நெருக்கடி நிலைமை பற்றி ஒரு விரிவான சொற்பெருக்காற்றினார். சற்றுநேரம் நின்று வேண்டா வெறுப்போடு அதைச் செவிமடுத்து விட்டு,அந்தப்புரத்துக்குள் வந்தாள். நல்ல வேளையாக அங்கு அம்மங்கைதேவிஇல்லை. கட்டிலில் கிடந்த பட்டுப் பஞ்சணை அவள் கண்களில் கசிந்த ஈரத்தைத் துடைத்துவிட்டது. நள்ளிரவுநேரம். ஆனால் கப்பகல்லகம் அரண்மனை வாயில் ஒரே ஒளிமயமாக விளங்கியது. இளங்கோவைச் சுமந்து வந்த கறுப்புக் குதிரை தள்ளாடிக் கொண்டே கோட்டைக்கு உள்ளே நுழையப் பார்த்தது. சட்டென்று யாரோ அதன் கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தினார்கள். இளங்கோவினால் அது யார் என்று தலை தூக்கிப் பார்க்க முடியவில்லை. உயர்த்திய தலை மீண்டும் பேழையை நோக்கித் தாழ்ந்தது. கண்களை நன்றாகத் திறந்து விழித்தான். மங்கலான பார்வை கூர்மை பெற்றது.
கடிவாளத்தைப் பற்றியிருந்த உருவத்தை உற்றுப் பார்த்தான். அப்படிப் பார்த்த கண்கள் மெல்லச் சிரித்தன. பேச முயன்றான்; உதடுகள் அசைந்தனவே தவிர ஒலி பிறக்கவில்லை. மலையைப்போல் நின்றுகொண்டிருந்த மாமன்னரின் மனத்துக்குள்ளேயே ஓர் எரிமலை வெடித்துக் குமுறியது. கடிவாளத்தைப் பற்றியிருந்த கரம் தம்மையும் மீறி நடுங்குவதைக் கண்டார். அவரால் அவரது உணர்ச்சிக் குலைவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உதடுகள், கன்னங்கள், புருவங்கள் அனைத்துமே துடித்தன. மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் தலைவரது கண்களும் கலங்குவதுண்டா? கலங்குகின்றனவே!
“இளங்கோ! இளங்கோ!”
இளைஞனின் புன்னகையே அவருக்குக் கிடைத்த மறுமொழி. தம் இரு கரங்களாலும் அவனைப் பற்றிக் குதிரையிலிருந்து இறக்கினார் மாமன்னர். இளங்கோவின் உடல் அவரோடு நகர்ந்ததே தவிர, அவன் கரங்கள் பேழையை விட்டு நகரவில்லை. பேழையைத் தன்னோடு எடுத்துக்கொண்டான். மாமன்னர் அவனைத் தமது அகன்ற மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டார். அவனது உச்சியை அன்புடன் வருடினார். இளங்கோவினால் நிற்க முடியவில்லை. மெல்லச் சிரித்தான்; மாமன்னரின் பாதங்களில் பேழையை வைத்துவிட்டுத் தரையில் விழுந்தான். பிறந்த குழந்தையை வாரி எடுப்பது போல் அவனை வாரி எடுத்துக்கொண்டார் பெரிய உடையார். அரண்மனைக்குள் திரும்பி அடிமேல் அடி வைத்து நடந்தார். தஞ்சைத் தலைநகரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நினைத்து அவரது கண்ணிமைகள், குவிந்தன. முத்து முத்தாக உதிர்ந்தன கண்ணீர். நெக்குருகும் நெஞ்சத்தோடு நிமிர்ந்த நடை போடலானார். மணிமுடி கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் வாழ்த்தொலி எழுப்பத் தொடங்கினார்கள் சிலர்; வல்லவரையர் அவர்களைக் கையமர்த்தினார். எங்கிருந்தோ கூட்டத்தை விலக்கியவாறே ரோகிணி அங்கே ஓடி வந்து கொண்டிருந்தாள்.
தொடரும்
Comments
Post a Comment