Skip to main content

வேங்கையின் மைந்தன்-பாகம் 2 , 7. மலர் தூவிய மங்கையர்

 


அவள் சென்று மறைந்த இருள்வெளியைப் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோ, சட்டென்று படிகளில் ஏறிக் கரையோரமாக நடந்தான். இனம் புரியாத வேதனையால் அவன் மனம் புழுங்கத் தொடங்கியது. விரும்புகிறேன் என்று ஒரே ஒரு சொல் அவள் சொல்லிவிட்டுப் போகக்கூடாதா? வெறுப்பையாவது அவனால் ஒருவகையில் தாங்கிக் கொள்ள முடிந்தது. விருப்பும் வெறுப்புமற்ற சூனியத்தை எப்படித் தாங்குவது?

ஒன்று சொர்க்கத்தில் மிதக்க வேண்டும். அல்லது நரகத்தில் உழல வேண்டும். சொர்க்கமும் நரகமுமற்ற ஓர் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுப் போய்விட்டாளே!

குனிந்த தலை நிமிராமல் அவன் நடந்து கொண்டிருந்த போது,

“இளங்கோ’ என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டான். குளத்தங்கரைச் சுவரில் ஓர் உருவம் சாய்ந்து கொண்டு நின்றது.

“யாரது?’’

“பாவம்! குரல்கூட உனக்கு மறந்துவிட்டது. இந்த ஏழை நண்பனை நீ அதற்குள்ளாக மறந்திருக்க முடியாது இளங்கோ!’’

வீரமல்லனின் கரம் உரிமையோடு இளங்கோவின் தோளை வளைத்துக் கொண்டது. இளங்கோவுக்கு அது பிடிக்கவில்லை. மெதுவாக அவன் கரத்தைத் தன்னிடமிருந்து எடுத்துவிட்டுக் கொண்டே, “ஓ, நீயா?’’ என்று ஏதோ கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போலக் கேட்டான்.

“ஆமாம்! நான்தான்; உன்னுடைய துர்ப்பாக்கியசாலியான நண்பன். கப்பலைவிட்டு நீ இறங்கியவுடனேயே ஓடி வந்து உன்னைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். அது கைகூடவில்லை. நீயோ மிகப் பெரியவனாகி விட்டாய். பெரியவர்களிடமிருந்து உன்னைப் பிரித்துக் காண முடியவில்லை. போகட்டும்! உன்னுடைய வெற்றி என் வெற்றி! நீ வெற்றியுடன் திரும்பி வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை ஏற்றுக்கொள், இளங்கோ!’’

“நமக்குள் இந்த உபசார மொழியெல்லாம் எதற்கு?’’ என்று கேட்டுச் சிரிக்க முயன்றான் இளங்கோ. சிரிப்பு வரவில்லை. சிரிப்புக்குப் பதிலாகச் சினம் கொப்பளிக்கத் தொடங்கியது. “வீரமல்லா! களைப்பாக இருக்கிறது; மாளிகைக்குப் போய் உறங்கவேண்டும். காலையில் மீண்டும் சந்திக்கலாம்.’’

“உன்னிடம் ஒரு செய்தி சொல்வதற்காகத் தேடிக் கொண்டிருந்தேன். அதை மட்டும் கேட்டுவிட்டுப் போய் விடு.’’ என்றான் வீரமல்லன்.

“என்ன!’’

“ரோகணத்திலிருந்து வந்திருக்கும் அந்த அடிமைப்பெண் உன்னைத் தனியே சந்திக்கவேண்டுமென்று கூறினாள். எனக்கு அது பிடிக்கவில்லை. என்றாலும் செய்தியைச் சேர்த்துவிட வேண்டியது என் கடமையல்லவா?’’

“அடிமைப் பெண்ணா! யாரது?’’ இளங்கோவின் கண்கள் எரி நெருப்பாக மாறின. வீரமல்லனை நன்றாக உற்றுப் பார்த்தான். அவன் தன்னைத் தேடி எங்கும் போகவில்லை யென்பதும், தானும் ரோகிணியும் சந்தித்து விட்டதால் தன்னிடம் நல்லவனென்று பெயரெடுப்பதற்காக இப்படிச் சொல்கிறானென்றும் இளங்கோவுக்கு விளங்கி விட்டது.

“வீரமல்லா! யார் அந்த அடிமைப்பெண்?’’ என்று மீண்டும் அவனைக் கேட்டான் இளங்கோ.

“சக்கரவர்த்திகள் சிறைப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்களே, அந்த மகிந்தரின் மகள்!’’

“ஓ!’’ என்று வினயமான வியப்பொலி கிளம்பியது இளங்கோவிடமிருந்து.

“ரோகிணியைப் பற்றிச் சொல்கிறாயா? அவள் உன்னிடம் என்ன கூறி அனுப்பினாள்?’’

“இளங்கோ! நீண்டநாள் பிரிவுக்குப்பின் சந்திக்கும் நாம் இப்போது நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசலாம். ரோகணத்துப் போர்க்களம் எப்படி இருந்ததென்று சொல். நீ எப்படி அந்த மணிமுடியை எடுத்துக்கொண்டு
வந்தாய்?’’

‘ரோகிணையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாய்...’’

“எனக்கென்னவோ அவளைப் பற்றிப் பேசவே பிடிக்கவில்லை, ரோகணத்துப் பெண்கள் எல்லோருமே இவளைப் போல்தான் இருப்பார்களா? சிறிதுகூட நாணமில்லாமல் என்னை உன்னிடம் இந்த வேளையில் தூது அனுப்பத் துணிந்தாளென்றால், அவளைப் பற்றி என்ன சொல்வது? குளத்தங்கரையில் உன்னிடம் ஏதோ தனித்து ரகசியம் பேச வேண்டுமென்றாள். காத்திருப்பதாய்ச் சொன்னாள். இதைக் கேள்வியுற்றால் மாமன்னர் உன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வார்?’’

“ஒன்றுமே நினைக்க மாட்டார்; மாமன்னருக்கும் அவளைத் தெரியும். அந்த நாட்டின் மற்ற பெண்களைப் போலவே அவளும் கள்ளம் கபடமின்றிப் பழகக் கூடியவள்.’’

“உன் பேச்சைப் பார்த்தால் நீ கூட அவளுடைய சாகசத்துக்கு அடிமையாயிருப்பாயென்று தெரிகிறது’’ என்று கூறி நகைத்தான் வீரமல்லன்,

“நண்பனென்ற முறையில் உன்னைச் சற்று எச்சரித்து வைப்பது என் பொறுப்பு. இன்னும் தன்னை ஒரு நாட்டின் இளவரசி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப்போல் அகந்தை கொண்ட சாகசக்காரியை நான் பார்த்ததே இல்லை. நீ மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் இளங்கோ!’’

“மிகவும் நன்றி வீரமல்லா, எனக்கும்அவளைப் பற்றி ஓரளவு தெரியும். இரண்டு மூன்று மாதங்களாக நான் அவளுடன் பழகியிருக்கிறேன்.’’

“என்ன!’’

“ஆமாம்; ஒரு முறை என் உயிரைக் காப்பாற்றியவள். மணிமுடி இந்நாட்டுக்கு வந்து சேர்வதற்கே ஒரு வகையில் காரணமாக இருந்தவள்.’’

“வீரனாக ஈழத்துக்குப் புறப்பட்டவன் கோழையாகத் திரும்பி வந்திருக்கிறாய், இளங்கோ!’’ என்றான் வீரமல்லன். “அடிமைப் பெண்ணுக்காக நீ பரிந்து பேசுவதைப் பார்த்தால் ஏதோ அங்கே விபரீதம் நடந்திருக்குமென்று தோன்றுகிறது. கேவலம் ஒரு பெண் பிள்ளை உன் உயிரைக் காப்பாற்றுவதாவது; மணிமுடியை எடுத்து வந்தவன் நீதான் என்று மாமன்னர் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார். நீயோ அந்தப் பெருமைக்குரியவள் அந்த அடிமைப் பெண்தானென்கிறாய். நீ சொல்வது விசித்திரமான கதை நண்பா!’’

அதற்குமேல் அங்கு நின்றால் தன் பொறுமை பாழாகிவிடும் என்று தோன்றியது இளங்கோவுக்கு. “சரி, நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் விரைந்தான்.

மறுநாள் மாலை தஞ்சை மாநகரத்தின் கிழக்கு வாயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் மக்கட் பெருங்கடல் அலைமோதிக் கொண்டிருந்தது. மாமன்னரது வெற்றி ஊர்வலம் செல்லக் கூடிய பிரதான சாலைகள்தோறும் நகரத்து மாந்தர்கள் வந்து குழுமிய வண்ணமாக இருந்தனர். கிழக்கு வாயிலுக்கு வெளியே தனது பரிவாரங்களை நிறுத்தி முறைப்படி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.

இதுகாறும் அந்தப் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்த ரதம் ஒன்று இப்போது அங்கு காணப்படவில்லை. பட்டுத்திரை தொங்கிய அந்தப் புரவிகள் பூட்டிய ரதத்தை வல்லவரையரின் துணையோடு தெற்கு வாயில் வழியாக நகருக்குள் அனுப்பிவிட்டார் இராஜேந்திரர். ரதத்துக்குள்ளே வருபவர்கள் யாரென்று தெரிந்துவிட்டால் ஒருவேளை மக்களின் உற்சாக வெறி கட்டுக்கடங்காது போய்விடலாம்.

அந்நிய விருந்தினர்களின் மனதைக் கலக்கக்கூடிய அசம்பாவித நிகழ்ச்சிகள் ஏதும் நடந்துவிடக்கூடாதல்லவா? லட்சக்கணக்கான மனிதர்களில் யாரோ சிலர் கட்டுப்பாட்டை மறந்து நடந்து கொண்டாலும் அது நாட்டின் பண்பாட்டைத்தானே பாதிக்கும்?

மகிந்தரின் குடும்பத்தார் பத்திரமாகத் தெற்கு வாயில் வழியே நகருக்குள் நுழைந்து அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். வல்லவரையரின் கண் சாடையிலும் கண் அசைப்பிலும் அங்கு அவர்களுக்குச் சற்றும் எதிர்பாராத உபசாரங்கள் நடந்தன. மகிந்தர் பிரமித்துப் போனார். ரோகிணியோ வாயடைத்துப் போய் நின்றாள். விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பிறவிக் குணங்களில் முதன்மையானதா?

அருள்மொழி நங்கைக்கு ரோகிணியை அறிமுகப்படுத்திய வந்தியத் தேவர். “அருள்மொழி! ரோகணத்திலிருந்து உன்னைப் பார்க்க உன் தங்கை ரோகிணி வந்திருக்கிறாள்! தங்கமான பெண்’’ என்று கூறினார்.

பெண்ணுக்குப் பெண் அழகைக் கண்டு பொறாமைப் படுவது வழக்கம். ரோகிணியின் அழகைப் பார்த்து அருள்மொழி பெருமை கொண்டாள். அருள்மொழியின் அடக்கம் கண்டு ரோகிணி வியப்புற்றாள். மாபெரும் சோழ சாம்ராஜ்யத்து மாமன்னரின் மகளா இவள்?

“தாத்தா; அக்காளுக்கு இவர்கள் தங்கை; எனக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்டுக்கொண்டே குதித்தோடி வந்தாள் அம்மங்கை தேவி.

“அருள்மொழிக்குத் தங்கை; உனக்குத் தமக்கை’’ என்றார் வல்லவரையர். பிறகு ரோகிணியிடம், “ரோகிணி உனக்கு உன் சகோதரிகளைப் பிடித்திருக்கிறதா?’’ என்று கேட்டார்.

“நான் பாக்கியம் செய்தவள்!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறிக்கொண்டு இரண்டு பெண்களுக்கும் கரம்கூப்பி வணக்கம் தெரிவித்தாள் ரோகிணி. ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது, அவளது நீண்ட விழிகளிலிருந்து.

அருள்மொழியும் அம்மங்கையும் அவளை ஆளுக்கொரு புறமாய்ப் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

“நான்கு நாழிகைப் பொழுதில் ஊர்வலம் அரண்மனை வாயிலை அடைந்துவிடும். வரவேற்புக்கு ஆயத்தம் செய்யுங்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார் வந்தியத்தேவர்.

ஊர்வலம் ஊருக்குள் நுழைந்தது.

“ஜல் ஜல்! ஜல ஜல ஜல்! ஜல்!’’ என பல்வகைத் தாளங்களான கஞ்சக் கருவிகள் ஒலி உதிர்த்தன. பெரிய மேளம், முரசங்கள் முதலிய தோற்கருவிகளெல்லாம் முழக்கம் செய்தன.

இன்னும் துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கண்டக் கருவிகள் ஆகிய அனைத்தும் அவற்றோடு ஒன்று சேர்ந்து வீரர்களின் புரவிக் கூட்டம்.

பட்டத்து யானையின் அம்பாரி மீது தமிழ் மன்னரின் மணிமுடி தனியே சென்றது. மாலைக் கதிரவன் அந்தப் பொன் முடிக்குப் புது மெருகு கொடுத்துக் கொண்டு வந்தான்.

அதற்கடுத்த யானையின்மீது வேங்கையின் மைந்தன் கொடும்பாளூர் குலக்கொழுந்தோடு சரியாசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கம்பீரமான பார்வை தமது குடிமக்கள் கூட்டத்தை அடிக்கடி தழுவிக் கொண்டு வந்தது. இளங்கோவேளுக்கு அங்கு இருக்கை கொள்ளவில்லை. மாமன்னரின் ஆணை என்பதால் அமைதியோடு அமர்ந்து வந்தான்.

அரண்மனைக் கோட்டை வாயிலின் மேல்மாடத்தில் நந்தவனத்துச் செடிக்கொண்டைகள் போல் மங்கையர்கள் மலர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிரில் குவியல் குவியலாக நறுமலர்கள் பொற்தட்டுக்களில் குவிந்திருந்தன.
அருள்மொழி ஒருபுறமும் அம்மங்கை மறுபுறமும் நிற்க, ரோகிணி அவர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தாள்.

மணிமுடி தாங்கிய பட்டத்து யானை ஆடி அசைந்து கோட்டை வாயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. மற்ற இரு பெண்களும் அதை நோக்க, ரோகிணி மட்டும் அடுத்த யானைமீது வரும் இளங்கோவை நோக்கினாள். அவளுடைய கரங்கள் இரண்டுமே அவளையறியாமல் மற்ற பெண்களைப் போல் எதிரே குவிந்திந்த மலர்களை அள்ளி மணிமுடியின்மீது தூவின.

இளங்கோவின் மீது தூவுவதாக எண்ணம் ரோகிணிக்கு.

இந்த காட்சியைக் கண்ட அருள்மொழிக்குப் புல்லரித்தது. அருள்மொழி ரோகிணியின் கரங்களைத்தான் கண்ணுற்றாளே தவிர, அவள் கண்களைக் கவனித்துப் பார்க்கவில்லை.

‘தாங்கள் பறிகொடுத்த முடி என்று கூடப் பாராமல் இந்த வெற்றிவிழாவில் பங்கு கொள்கிறாளே, இவள். எவ்வளவு பரந்த மனம் இவளுக்கு.’

அடுத்தாற்போல், மாமன்னரும் இளங்கோவும் வீற்றிருந்த மதக்களிறு கோட்டை வாயிலை நெருங்கியது. பெண்கள் மூவரும் தங்களை மறந்து மலர்களை வாரி வாரித் தூவத் தொடங்கினர். அருள்மொழி இப்போது ரோகிணியின் செய்கையைக் கவனித்தாள். ‘வெற்றி பெற்ற சக்கரவர்த்தியின்மேல், தோல்வி கண்ட மன்னரின் மகளுக்குச் சிறிதுகூடப் பகைமையில்லையே! தந்தையார் மீது இவள் சற்றும் தயங்காமல் மலர்மழை பொழிந்த வண்ணமாக இருக்கிறாளே!’

மூன்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு எதிரில் பொற்தட்டுக்களில் இருந்த மலர்க் குவியல்களைக் கரைக்க முற்பட்டனர்.

யானையின் மீதிருந்த இளங்கோ தன் தலையைத் தூக்கி மேலே கோட்டை மாடத்தைப் பார்த்தான். இரண்டு பெண்கள் மட்டிலுமே அவன் கண்களுக்குத் தெரிந்தனர். ஒருத்தி அருள்மொழி, மற்றொருத்தி ரோகிணி. அவர்கள் இருவரது கரங்களிலுமிருந்து உதிர்ந்து மலர்கள் அவனுடைய இரு தோள்களிலும் விழுந்து சிதறின.

மேலே நோக்கி அவன் கையசைத்துச் சிரிப்பதற்குள் யானை அவனைக் கோட்டைக்குள் கொண்டு சென்றது.

அருள்மொழிக்கு அவன் தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல் தோன்றியது. ரோகிணிக்கு அவன் தன்னைப் பார்த்துக் கையசைப்பதுபோல் தோன்றியது.

ஒருகணம் சென்றவுடன் “ரோகிணி! எங்கள் நாட்டுப் பண்புக்கு ஈடு இணை கிடையாதென்று இதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன்; உங்கள் நாட்டுப் பண்பும் எங்களுடையதை ஒத்திருக்குமென்று இப்போது தெரிகிறது’’ என்றாள் அருள்மொழி.

ரோகிணிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“முதலில் மணிமுடியின்மீது மலர் தூவினாய், பிறகு மாமன்னரின் மீது தூவினாய். ரோகணத்து இளவரசியாக இருந்தும் உன்னிடம் வேற்றுமையைக் காணோம்.’’

‘மாமன்னர் மீது மலர் தூவினேனா?’ என்று நினைத்துத் தனக்குள் வியப்புற்றாள் ரோகிணி. மறுகணமே நிலைமையை உணர்ந்துகொண்டு அவள் விழிப்படைந்து விட்டாள்.

“நீங்கள்தாம் என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! என்ற சொற்கள் ரோகிணியிடமிருந்து வெளிவந்தன.

“உண்மையில் நீ என் தங்கைதான்!’’ என்று அவளை அன்பின் மிகுதியால் தழுவினாள் அருள்மொழி.

தொடரும்

Comments

Popular posts from this blog

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம