மூன்று பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த தென்பாண்டி நாடு ஒன்றாக இணைந்தது. பாண்டியர்களின் ஆட்சியில் பயத்தையும் பஞ்சத்தையுமே அநுபவித்துவந்த மக்கள், அவற்றிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் பாண்டியர்கள் என்பதை மறக்கவில்லை. தங்களை ஆட்சி செய்யப் போகும் மன்னர் பாண்டியர் என்ற பெயரை ஏற்கவேண்டுமென்பதே அவர்களது விருப்பம்.
இராஜேந்திரரின் இளைய குமாரனான சுந்தரசோழன் பாண்டியர்களின் பட்டப் பெயர்களில் ஒன்றான சடையவர்மன் என்பதை ஏற்றுக் கொண்டு, சுந்தரசோழ பாண்டியனாக ஆட்சி செய்வான் என்பதைக் கேள்வியுற்ற பாண்டிய மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு அந்தச் செய்தியை வரவேற்றார்கள். “பரம்பரைப் பாண்டியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள் பரம்பரையின் பெருமையைக் காப்பாற்றவில்லை. ஈழத்தில் விட்டுவந்த மணிமுடிக்காக அவர்கள் ஒரு சொட்டு ரத்தம்கூடச் சிந்தவில்லை.
நட்பினாலோ, பகையினாலோ அதை அவர்கள் பாண்டிய நாட்டுக்குக் கொண்டு வந்திருந்தால் அவர்களை நாம் போற்றியிருப்போம்!’’ என்று பேசிக்கொண்டனர்.
மணிமுடியைக் கொடுக்க விரும்பாத ரோகணத்திடமும் தமிழ்மண்ணில் இரத்தக்கறை பூச விரும்பிய மேலைச் சளுக்க நாட்டிடமும் பாண்டியர்கள் உறவு பூண்டிருந்ததற்காக அவர்களைத் தூற்றினார்கள் பலர்.
இன்னும் பலர், “சோழர்களே மெய்யான பாண்டியர்கள்! நம்முடைய நாட்டின் முடிவுக்காக நான்குமுறை போர் தொடுத்திருக்கிறார்கள். கடைசியில் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்! பயமும் பஞ்சமும் அவர்கள் ஆட்சியில் இருக்காது’’ என்றார்கள்.
“நம்முடைய தலைமுறை பாக்கியம் செய்த தலைமுறை. நமக்கு முந்தியவர்கள் பார்க்கக் கொடுத்து வைக்காத மணிமுடியை நாம் நம்முடைய கண்களால் பாக்கப் போகிறோம். சக்கரவர்த்திகள் தமது கரங்களாலேயே
அதைச் சுந்தரசோழ பாண்டியருக்குச் சூட்டிவிடப் போகிறாராம்!’’
“ஆமாம்! மதுரைப் புதுமாளிகையில் முடிசூட்டுவிழா விரைவில் நடக்கப்போகிறது. சடையவர்ம பாண்டியரின் சிரத்தில் நாம் நமது முடியைக் காணப்போகிறோம். நம்முடைய மகிழ்ச்சிக்காகத் தமது குமாரருக்குப் பாண்டியர் என்ற பெயர் தந்த பெருந்தகையை எப்படிப் புகழ்ந்து போற்றுவதென்றே தெரியவில்லை!’’
மதுரைப் புது மாளிகையில் முடிசூட்டுவிழா நடக்கும் திருநாளை எதிர்பார்த்துப் பாண்டிய மக்கள் பரவசம் அடைந்து கொண்டிருந்தார்கள். முன்பு வாய்திறந்து பேசுவதற்குப் பயந்து கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது கூட்டம் கூடிக் குதூகலித்தார்கள். சுந்தரசோழ பாண்டியர் என்ற சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசர் ஒருவருக்கு நடக்கப்போகும் விழாவாக அவர்கள் அதைக் கருதவில்லை. அவர்களுடைய சொந்த விழா அது.
பாண்டியநாட்டுக் கட்டிளங்காளை ஒவ்வொன்றும் தலை நிமிர்ந்து செருக்கு நடை போட்டது.
ஆம்! ஒவ்வொரு ஆண்மகனின் சிரத்திலுமே அந்த மணிமுடி திகழப் போகிறது! ஒவ்வொருவனுமே தன்னைச் சடையவர்ம சுந்தர சோழ பாண்டியனாக நினைத்துக் கொண்டு, தன் முடிசூட்டு விழாவுக்காகக் காத்திருந்தனர்.
பாண்டிய நாட்டின் பழம் பெருமையைக் காப்பாற்றிய இராஜேந்திர சோழப் பெருமான் தமது கரங்களால் ஒவ்வொரு தமிழ் மகனுக்குமே முடிசூட்டி விடப்போகிறாரா?
விழாவுக்குரிய நாளுக்குச் சில தினங்களுக்கு முன்பே தஞ்சை மாநகரிலிருந்து பட்டத்து யானை மணி முடியைச் சுமந்து கொண்டு மதுரை மாநகருக்குப் புறப்பட்டு விட்டது. முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான குதிரை வீரர்களும் உயர்தர அதிகாரிகளும் சென்றார்கள். கொடும்பாளூரில் ஒரு தினம் தங்கிவிட்டு மேலே நடந்தன யானைகள்.
அதை அடுத்து இரண்டு தினங்களில் மாமன்னர் தமது பரிவாரங்களோடும் குடும்பத்தாரோடும் கிளம்பினார். பழையாறையில் இருந்தவர்கள் முன்பே தஞ்சைக்குத் திரும்பிவிட்டதால் அவர்களையும் உடன் அழைத்தார் சக்கரவர்த்தி.
முடிசூட்டு விழாவுக்காகக் கிளம்பிய ரதங்களின் மத்தியில் மகிந்தரின் ரதமும் காணப்பட்டதுதான் வியப்புக்குரிய காட்டிசியாக இருந்தது. மாமன்னர் தம்மை இந்த விழாவுக்கு அழைக்கக் கூடும் என்று மகிந்தரும் நினைக்கவில்லை. தாம் அழைத்தால் அவர் வந்துவிடுவார் என்று மாமன்னரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டுமே எதிர் பாராதவாறு நடந்து விட்டன!
மாமன்னரே மகிந்தரின் மாளிகைக்கு நேரில் சென்று “என் இளையகுமாரனின் முடிசூட்டு விழாவுக்குத் தாங்கள் யாவரும் வந்திருந்து எனக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும்’’ என்றார். இந்தச் செய்தி மகிந்தருக்கு மகிழ்ச்சியளிக்காத ஒன்றென்பது மாமன்னருக்குத் தெரியும். அவரிடமிருந்து பணிவான மறுப்பை எதிர்பார்த்தார்.
“தங்களோடு மதுரைக்கு வருவது எங்கள் பாக்கியம்’’ என்று யோசிக்காது விடையளித்தார் மகிந்தர். யோசனை செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது சக்கரவர்த்திக்கு வந்து விட்டது. என்றாலும் அழைப்பின் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண்டார்.
ரதத்திற்குள்ளிருந்த மகிந்தர் தமது மனைவியையும் மகளையும் பார்த்துச் சிரித்துவிட்டு, “பாவம் சக்கரவர்த்தி என்னிடம் ஏமாந்து விட்டார்’’ என்றார்.
“இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் எப்படி என்னால் மதுரைப் புது மாளிகையின் அமைப்பையும் கொடும்பாளூர்க் கோட்டையின் ரகசியங்களையும் அறியமுடியும்?’’
“கொடும்பாளூர்க் கோட்டை ரகசியமா?’’ என்று அளவு கடந்த வியப்புடன் வினவினாள் ரோகிணி.
“ஆமாம் ரோகிணி! அந்தரங்க வழி இல்லாத அரண்மனைகளே கிடையாது இந்த நாட்டில். நமக்கோ காடுகளும் மலைகளும் பாதுகாப்பு அளிக்கின்றன. இவர்கள் அவற்றுக்கெல்லாம் எங்கே போவார்கள்? கோட்டை மதில்களையும் சுரங்க வழிகளையும் நம்பித்தான் சாம்ராஜ்யத்தைப் பரப்பி வருகிறார்கள்.’’
கடகடவென்று பேரொலி எழுப்பி உருண்டு கொண்டிருந்த ரதங்களின் சந்தடியில் தமது குரல் சாரதிக்குக் கேட்காதென்பதால், தமது எண்ணங்களை விரிவாகவே வெளியிடத் தொடங்கினார் மகிந்தர்.
‘காஞ்சிபுரிதான் இவர்களுடைய சாம்ராஜ்யத்தின் தலை. அதை இப்போதைக்கு நம்மால் வெட்ட முடியாது. மேலைச் சளுக்கர்கள் செய்ய வேண்டிய வேலை அது. தஞ்சைத் தலைநகரம் இவர்களுடைய நெஞ்சு. அதைப் பிளக்க நினைப்பதும் எளிதான காரியமல்ல. ஆனால் கொடும்பாளூர் இருக்கிறதே அது இவர்களுடைய கால்களுக்குச் சமமானது.
கால்களை வெட்டிவிட்டால் பிறகு இவர்கள் நிச்சயம் கீழே சாய்ந்து விடுவார்கள்.’’
ரோகிணியின் முகம் பயந்தால் வெளுத்தது. இளங்கோவின் கால்களை வெட்டி விடுவதற்கு அவளுடைய தந்தை திட்டமிடுகிறாரா? அவள் தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். தான் வாய் தவறி ஒரு சொல்லும் கூறிவிடக் கூடாது என்று தனக்குள் முடிவு செய்து கொண்டாள்.
மகிந்தர் அவளை விடவில்லை. “நாம் திரும்பி வரும் வழியில் சில நாட்கள் கொடும்பாளூரில் தங்கி வரவேண்டும் ரோகிணி!’’ என்றார்.
“வேண்டாம், அப்பா!’’
“உனக்கு விருப்பமில்லாவிட்டால் நீ தஞ்சைக்குத் திரும்பிவிடு. நாங்கள் இருவரும் சில தினங்கள் தங்கி வருகிறோம்.’’
ரோகிணி மௌனம் சாதித்தாள். அவர்கள் ஏறிச்சென்ற ரதம் ஒரு மேட்டின் மீதேறிப் ‘படார்’ என்ற சத்தத்துடன் ஒரு கணம் நின்றது. ரோகிணியின் தலையும் மகிந்தரின் தலையும் மோதிக்கொண்டன. அந்த வலியை ரோகிணியால் தாங்க முடியவில்லை. ரதம் மேலே சென்றது.
மதுரைப் புது மாளிகையின் உள்ளும் புறமும் மக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர். சிற்றரசர்களும் அதிகாரிகளும் தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்திருக்க, அரச சபை மண்டபத்தின் பீடத்தில் சிம்மாசனத்தில் மாமன்னர் வீற்றிருந்தார். அருகிலிருந்த புதிய ஆசனத்தில் இளவரசன் சுந்தர சோழன் அடக்கத்தோடு அமர்ந்திருந்தான்.
முடிசூட்டு விழாவுக்கான இதர நிகழ்ச்சிகள் யாவும் ஒருவாறு நடந்து முடிந்தன.
அரசசபை மண்டபத்தில் புதிதாக ஒரு பொன்வளைவு நிர்மாணிக்கப் பெற்றுத் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. அந்த வளைவின் உச்சிக்குக் கீழே நடுமையத்தில் சுந்தர சோழனின் ஆசனத்தை அமைத்திருந்தார்கள்; வளைவின் ஒருபுறம் பாண்டிய நாட்டுச் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மறுபுறம் பாயும் புலிகளாலான சின்னம் சுடர்பரப்பிக் கொண்டிருந்தது. நவரத்தினக்கற்கள் வைத்து இழைக்கப் பெற்ற அந்த வளைவு அங்கிருந்த அனைவரது கவனத்தையுமே கவர்ந்து கொண்டிருந்தது.
அந்த வளைவின் உச்சியைத் தொடுவது போன்ற ஒரு தேக்குமர ஏணியை அதன்மேல் சாய்த்து வைத்திருந்தார்கள். முற்றிலும் பொற் தகட்டினாலான அந்த வளையத்தின் உச்சியில் மாத்திரம் பொன்னாலான வேலைப்பாடுகளைக் காணோம். புலித்தலையும் மீன்தலையும் சேர்ந்த விதமாக அதைத் தேக்கில் இழைத்திருந்தார்கள்.
மாமன்னர் தமது ஆசனத்திலிருந்து எழுந்தார். மக்களது ஆரவாரமும் ஒன்றாக எழுந்தது. கையமர்த்தினார். மூச்சு இழையும் ஒலிகூட எழவில்லை.
“இது இந்த நாடடின் பழம்பெரும் மணிமுடி! இதன் சரித்திரம் உங்கள் எல்லோருக்கும் தெரியும்! ராஜசிம்ம பாண்டியரின் முன்னோர்கள் இதை ஈழநாட்டு மன்னர்களின் காலடியில் வைப்பதற்காகச் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் ஏனோ அவர் அப்படிச் செய்து விட்டார். அவரைக் குறைகூறிப்
பயனில்லை. அவர் செய்த செய்கையால் அவருக்குப்பின் ஒரு கோழைகளின் பரம்பரையே உருவாகி விட்டதை அவர் ஆவி உணர்ந்திருக்கும்.
“இதன் விலை ஒரு லட்சம் வீரர்களின் உயிர்! ஆம், நான்கு போர்களிலும் நாம் பறிகொடுத்த வீரர்களின் எண்ணிக்கை இது. பாண்டியர்களின் பண்பு வேறு, சோழர்களின் பண்பு வேறு என்று எங்கள் மூதாதையர்கள் நினைத்திருந்தால் இதற்காக இவ்வளவு போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள். தோல்வியுற்றிருக்க மாட்டார்கள். பாண்டியர்கள் வேறு, சோழர்கள் வேறு என்று இன்னும் நீங்கள் நினைக்கிறீர்களா?’’
“இல்லை! இல்லை!’’
“இல்லை! இல்லை!”
ஆயிரக்கணக்கான குரல்கள் அவருக்கு மறுமொழியளித்தன.
“இளவரசன் சுந்தரசோழன் இந்த முடிக்காகப் போராடிய பரம்பரையில் பிறந்தவன். இவனைச் சடைய வர்ம பாண்டியன் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்ளுகிறேன். என்னுடைய கருத்தை நீங்களும் ஒப்புக் கொள்வீர்களா?’’
“சடையவர்ம சுந்தர சோழ பாண்டியர் வாழ்க!’’ என்ற பேரொலிகள் எழுந்து புதுமாளிகை மண்டபத்தையே அதிர வைத்தன.
“அப்படியானால் இந்த முடிக்கு ஏற்றவன் சடையவர்மன் என்பதுதானே உங்கள் கருத்து!’’
“ஆமாம்! ஆமாம்!’’
“நான் அப்படி நினைக்கவில்லை’’ என்று அவர் கூறியவுடன் அந்த அரசசபை மண்டபம் முழுவதுமே பயங்கரமானதோர் அமைதியில் ஆழ்ந்தது. “ஆம், நான் அப்படி நினைக்கவில்லை?’’ என்று குரல் எழுப்பினார் சக்கரவர்த்தி.
“இந்த மணிமுடியே இந்த நட்டின் உண்மையான பேரரசாக விளங்கவேண்டும். இந்த மணிமுடியைச் செய்த பெருநில மன்னரின் ஆன்மாவுக்கு நாம் அஞ்சலி செய்வோம். இதையே இந்த நாட்டுக்கும் பேரரசாக்குவோம். இந்த முடி இருக்க வேண்டிய இடம் எது தெரியுமா?’’
மளமளவென்று ஏணியின் மீதேறி அந்தப் பொன்வளைவின் உச்சியில் அதைப் பொருத்தி வைத்தார் சக்கரவர்த்தி. அங்கிருந்து இறங்கி வந்து, “அந்த முடியின் சார்பில் உங்களுடைய பாதுகாவலனாக இனி சுந்தர சோழபாண்டியன் ஆட்சி செய்வான்’’ என்றார்.
ஆயிரமாயிரம் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
“முடி கொடுத்த சோழ வள்ளலே!’’ என்று உணர்ச்சி பொங்கக் கூவினார் ஒரு பெரியவர். “முடி கொடுத்த சோழ வள்ளல் வாழ்க’’ என்ற ஆரவாரம் அடங்கவே இல்லை.
“இதோ, இதுவே இன்றைக்கு நான் என் இளைய குமாரனுக்கு இளவரசன் என்ற முறையில் சூட்டப்போகும் முடி!’’ என்று வல்லவரையர் பொற் தட்டில் ஏந்தி நின்ற முடியைத் தமது கரங்களில் எடுத்தார் மாமன்னர். முடியை இளவரசனின் சிரத்தருகே அவர் கொண்டு செல்வதற்குள் மலர்மாரி நாலாபுறங்களிலிருந்தும் பெய்யத் தொடங்கியது. சிரத்தில் அதைச் சூடுவதற்காக இளவரசனை நெருங்கினார்.
அதற்குள் எங்கிருந்தோ ஓர் அம்பு பாய்ந்து வந்து அவர் கரத்தில் தைத்தது. முடியில் மீது இரண்டு சொட்டு இரத்தத் துளிகள் உதிர்ந்தன. மாமன்னர் தமது கரங்களிலிருந்து முடியை நழுவ விடவில்லை. அந்த அம்பில் சிறிய ஓலை நறுக்குக் கட்டப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார்.
மகிந்தரின் முகத்தில் உயிர்களை வற்றிவிட்டது.
தொடரும்
Comments
Post a Comment