காலை இளம் வெய்யிலில் சோழநாட்டு நெடுஞ்சாலையில் புரவிகள் பூட்டிய ரதங்கள் சில பழையாறையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. ரதங்களுக்கு முன்னும் பின்னும் குதிரை வீரர்கள் வேல்முனைகள் பளபளக்க விரைந்தேகிச் சென்றனர். ரதங்களின் சக்கரங்கள் இன்னிசை பாட குதிரைகளின் குளம்பொலி அதற்குத் தாளமாக அமைந்தது.
இடையில் சென்ற ரதமொன்றில் சோம்பலுடன் இளங்கோ சாய்ந்திருந்தான். அரண்மனை வைத்தியர் அவனுக்கு எதிரில் அமர்ந்து ஏட்டுச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். தன்னைக் கட்டாயமாகச் சிறைபடுத்தி மாமன்னர் பழையாறைக்கு அழைத்துச் செல்வது போல் தோன்றியது இளங்கோவுக்கு. வைத்தியர்தான் அவனுக்குச் சிறைக்காவலர்.
சிறிது நேரம் சித்த வைத்தியத்தின் அருமை பெருமைகளை அவனிடம் விளக்கிக் கொண்டு வந்தார் அரண்மனை மருத்துவர். அவனுடைய சித்தம் சித்த வைத்தியத்தில் லயிக்கவில்லை என்பதைக் கண்டபிறகு அவன் போக்கில் அவனை விட்டுவிட்டுத் தமது சித்தத்தை ஏட்டுச் சுவடிகளுக்குக் கொண்டு வந்தார். இளங்கோவின் சித்தம் சிட்டுக்குருவியாக மாறிச் சிறகடித்துப் பறந்து சென்று கொண்டிருந்தது. ரதத்துக்கு இருபுறங்களிலும் தெரிந்த இயற்கைக் காட்சிகள் அவனைக்கிறங்க வைத்தன. இரண்டு கண்கள் இருந்தாலும் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களிலும் பார்த்து மகிழ முடியவில்லையே!
கொடும்பாளூரின் கொடிய வெய்யில் அவனுக்குப் பழக்கமான ஒன்று. பசுமையை அங்கே காண முடியுமென்றாலும் இது போன்ற குளிர்ந்த மரகதப் பசுமைக்கும் அந்நகருக்கும் வெகு தூரம். நெற்கழனிகளும் வாழைத் தோட்டங்களும், மூங்கிற் புதர்களும் மாறிமாறி வந்து கொண்டேயிருந்தன. தண்ணீர், தண்ணீர், தண்ணீர், பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த தண்ணீர்!
தாமரைத் தடாகங்களும், அல்லிக் குளங்களும், செங்கழுநீர் ஓடைகளும் வழிநெடுகிலும் கண்களுக்கு விருந்தளித்தன. கூட்டம் கூட்டமாகத் திரிந்த ஆநிரைகளையும், குதித்துக் கும்மாளம் போட்டு அந்தப் பொன்விளையும் பூமியைத் தங்களது கொம்புகளால் குத்திக் கிளறி விளையாடிய காளைகளையும் பார்த்தபோது அவனால் ரதத்துக்குள் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. எவ்வளவு செருக்கு அந்தக் கட்டிளம் காளைகளுக்கு? சோழநாட்டில் பிறந்து சோறு படைக்கும் பணிக்காக உழைக்கிறோம் என்ற கர்வமா? அல்லது இராஜ இராஜப் பெரிய உடையார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியபோது தங்கள் குலத்துக்கு மங்காத பெரும்புகழ் கொடுத்து விட்டுப் போய்விட்டார் என்ற ஆனந்தமா?
தஞ்சைப் பெரிய கோயில் நந்தியை நினைத்துக் கொண்டான் இளங்கோ. வலிவு, வனப்பு, மிடுக்கு, கம்பீரம் ஆண்மை இவற்றின் அழியாத நினைவுச் சின்னமல்லவா அது. ‘தமிழ் நாட்டின் ஆண்மகன் ஒவ்வொருவனும் இப்படி இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் ஆணவச் செருக்கால் நாட்டை அழித்து விடாதிருப்பதற்காக, இந்த நினைவை மறவாது தோளில் சுமக்க வேண்டும்’ என்று கூறாமல் கூறுகிறாரா?
காட்சி மாறியது. செங்கால் நாரைகள் வானத்தில் கூட்டம் கூட்டமாய்ப் பறந்தன. குருவிகளும், கொக்குகளும் மீன்கொத்திகளும் குறுக்கும் நெடுக்கும் சிறகடித்துச் சென்றன. வானத்தில் பசும் பந்தர் வேய்ந்தாற்போன்று மரக்கிளைகள் பின்னிப் பிணைந்து சாலையில் நிழல் கவிழ்ந்தன.
ரோகிணியை நினைத்துக் கொண்டான் இளங்கோ. ‘இந்த வேளையில் இந்த ரதத்தில் அவள் என்னருகே அமர்ந்து வந்தாளானால் என்ன இன்பகரமாக இருக்கும்! மாறும் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவளுக்குச் சுட்டிக் காட்டி அவள் கண்களில் ஒளிவிடும் வியப்பைக் கண்டு ஆனந்தமுறலாமே! அவளுடைய நாட்டிலும் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால் அது பயங்கரமான அழகு! மலைகளும், காடுகளும், விலங்குகளும் நிறைந்த குரூரமான அழகு. எளிமையும் இனிமையும், தண்மையும் நிறைந்த இந்தக் காட்சிகளுக்கு அவை ஈடாகுமா என்ன?
சின்னஞ்சிறு கிராமங்கள் குறுக்கிட்டபோது மக்கள் கூட்டம் வாழ்த்தொலிகளை எழுப்பியது; வயல் வரப்புகளில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஓடோடியும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இராஜேந்திர உடையாரின் தரிசனம் அவர்களுக்குக் கடவுளின் தரிசனத்துக்கு ஒப்பானது. பெறவொண்ணாத பாக்கியம் பெற்றவர்களைப் போன்று அவர்கள் முகமலர்ச்சியுற்றார்கள். அகமலர்ச்சியால் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள். வழியில் ஓடையில் நீர் அருந்துவதற்காக ரதத்தைச் சற்று நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிச் சென்றான். இளங்கோவின் ரத சாரதி. பின்னால் வந்து கொண்டிருந்த ரதமும் நின்றது. அதை ஓட்டி வந்தவனும் முன்னவனைப் பின்பற்றி ஓடைக்குச் சென்றான்.
“இளவரசே!’’
திரும்பிப் பார்த்தான் இளங்கோ. பின்புறத்து ரதத்திலிருந்த அம்மங்கை தேவியும் அருள்மொழியும் அவனை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளங்கோ திரும்பியதைக் கண்டவுடன் தன் தலையை உட்புறம் இழுத்துக் கொண்டாள் அருள்மொழி.
“இங்கே சற்று வந்துவிட்டுச் செல்கிறீர்களா இளவரசே?’’ என்று அவனைத் தங்கள் ரதத்துக்கு அழைத்தாள் அம்மங்கை. அருள்மொழி தன் தங்கையின் தோளைப் பற்றி இழுத்ததிலிருந்து அவள் அதை விரும்பவில்லை என்று தெரிந்தது.
“ஒரு முக்கியமான செய்தி! உடனே திரும்பிவிடலாம் வாருங்கள்!’’ என்று மீண்டும் கூவினாள் அம்மங்கை. அவளுடைய கண்களின் குறும்புத்தனத்தை இளங்கோ கவனிக்கவில்லை. மடித்துக் கட்டப் பெற்ற கரத்துடன் மெதுவாக இறங்கி அவர்களிடம் சென்றான். “என்ன செய்தி மங்கையாரே?’’
“சித்த வைத்தியர் பத்திரமாக இருக்கிறாரல்லவா?’’
“எதற்குக் கேட்கிறீர்கள்?’’
“ஒன்றுமில்லை, தமக்கையாருக்குத் தஞ்சையிலிருந்து புறப்பட்டதிலிருந்து சித்தம் சரியாயில்லை. நான் பேசிக்கொண்டே வருகிறேன். அவர்கள் ‘உம்’மென்று கூடக் கேட்காமல் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறார்கள். வற்புறுத்தி நான் ஏதாவது வம்புக்கு இழுத்தால், அவர்கள் வேறு எதாவதுமறுமொழி சொல்லுகிறார்கள்!’’
“அடி, அம்மங்கை! சும்மா இரேன்!’’ என்று அவளைப் பற்றி இழுத்தாள் அருள்மொழி. அவளது செந்தாமரை முகம் அப்போது நாணத்தால் குவிந்திருந்தது. அம்மங்கை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினாள்:
“தமக்கையார் இங்கே இருந்தால் இவர்களுடைய சித்தப்பிரமை எனக்கும் வந்துவிடும் போலிருக்கிறது; அவர்களைச் சற்று உங்கள் ரதத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் நம்முடைய சித்த வைத்தியரிடம் காண்பிக்கிறீர்களா? நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. தமக்கையாரின் முகத்தைப் பாருங்கள்!’’
சிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் பேசியதால் அருள்மொழியை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோ. முகம் என்னவோ போலத்தான் இருந்தது. ஆனால் அவள் அவனைப் பார்க்கவில்லை. குனிந்ததலை நிமிராமல், “பெரியவர்கள் அருகில் இல்லை என்பதால் இவள் வாய்த் துடுக்காகப் பேசுகிறாள். இவளை மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்றாள் அருள்மொழி. “வைத்தியர் உடன் இருக்கும்போதே உங்களுடைய கைக்கட்டை மறந்துவிடாதீர்கள்’’ என்று கூறினாள்.
கலகலவென்று நகைத்தாள் அம்மங்கைதேவி. சின்னஞ்சிறு ஏமாற்ற உணர்ச்சியால் எழுந்த சிறு கோபத்துடன் இளங்கோ ரதத்தில் வந்து அமர்ந்தான். ‘இப்போது மங்கையாருக்கும் மருந்து கொடுக்கச் சொல்லி அவள் வாய்த்துடுக்கை அகற்றினால் நன்றாக இருக்கும்’
என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளது விளையாட்டுப் பேச்சிலும் உண்மையில்லாமல் இல்லை. ‘ஏன் நங்கையார் ஒருவிதமாகச் சோர்ந்து காணப்படுகிறார்? எதனால் வந்த சோர்வு இது?’
மருத்துவரின் சித்த வைத்திய விளக்கத்தை அவன் கேளாமல் அசட்டை செய்தது போலவே, அவளும் தன் நங்கையோடு கலகலப்பாகப் பேசாமல் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அவளும் தன் மனத்தை வேறு எங்கேயாவது பறி கொடுத்திருப்பாளோ என்று நினைத்தான் இளங்கோ. அருள்மொழியைப் போன்ற ஒரு சர்வ வல்லமை பெற்ற பெண், யாரையும் மனத்தால் நினைக்கக் கூடுமென்றே அவனுக்குப் படவில்லை. ஆனால், பாட்டியார் பெரிய குந்தவையாரும் அப்பேர்ப்பட்டவர்தாம். அவரும் வல்லவரையரும் ஒன்றாக இப்போது கடைசி ரதத்தில் வந்து கொண்டிருந்தார்கள். முதல் ரதத்தில் மாமன்னரும் மகாராணி வீரமாதேவியாரும் ஒன்றாய்ச் சென்றார்கள். எல்லோருமே இப்படி மாறுவது இயற்கைதான் போலும். ஒரு வேளை, நங்கையாரின் மனம் வேங்கி இளவரசன் நரேந்திரன் மீது நாட்டம் கொண்டிருக்கிறதோ?
குதிரைகள் விரைந்து செல்லவே, இளங்கோவின் நாட்டம் இந்தச் சமயம் ரோகிணியின் பக்கம் திரும்பியது.
தொடரும்
Comments
Post a Comment