மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர்.
வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர்
உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது
பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது
உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார்.
நண்பர்கள் பகைவர்களாகிறார்.
பொய்யுரைத்தல் எத்தனை எளிது என்று மகிழ்ந்தனரெல்லோரும்
பொய்யுரைகள் எத்தனை மதிப்புடையன என்று வியந்தான் இளைஞன்
பொய்களின் சந்தையில் கூட்டமும் நாட்டமும் அதிகமாயிற்று.
நெல்லை விதைப்பதை விடவும்
பொய்களை விதைப்பவன் லாபங்களைச் சம்பாதிக்கிறான்
என்பதால் பொய்களே எங்கும் விளைந்தன.
இப்படியே
பொய்யான காலத்தில் பொய்களே மதிப்புடையனவாயிற்று.
இது பொய்களின் யுகம் என்றான் ஞானி
ஆமாம் என்றனர் சனங்களும் தலையசைத்து.
பொய்களின் அரசன்,
பொய்களின் நாடு
பொய்களின் ஆட்சி
பொய்களின் விசுவாசிகள்
என்றாயிற்று எல்லாம்.
அதனால், உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரிக்கிறது
உண்மையைக் கண்டு அஞ்சும் இதயம் பொய்யிடம் சரணடைகிறது.
விலகிய வெள்ளாட்டுக்கு விதியில்லை என்றது நாடு
தனித்தவருக்கும் மறுத்தோடிக்கும் துணையில்லை என்றது ஊர்
எனில்
இது சிதைவின் காலமா?
இல்லை அழிவின் யுகமா?
எனில், உறைந்திருக்கும் காலத்தின் மீதிருந்து
கண்ணீர் சிந்தும் மனிதர்களை
இன்னும் நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
கணத்தில் உருகிப் பின் மெழுகாகும் மனிதர்களை
நானெப்படிக் கொண்டாடுவேன்?
இத்தனை கசப்போடும்
இன்னும் இந்தப் பயண வழியில் நடக்கும்
மனிதர்களைக் குறித்து என் சொல்வேன்?
“தோற்றுத்தான் போவோம் எனினும்
அந்தத் தோல்வியின் அடிவாரத்தில்
உறங்குவோ“மென்ற மனிதர்களை வாழ்த்துவதா?
விட்டுச் செல்வதா?
“பாதிவழியில் பயணம் முறித்தோமென்று எம்மைத் திட்டுவார்“ என்றஞ்சிப்
பின்தொடரும் நண்பர்கள்
பொய்யுரைக்க வெட்கப்படவில்லை.
இன்னும் மீட்பர்களுக்காகக் காத்திருக்கும் தந்தையர்கள்,
இன்னும் “வெளியாரைப் பிரார்த்தியுங்கள்“ என்றுரைக்கும் மதகுருக்கள்
“தூரத்து நட்சத்திரங்கள் ஓர் நாளில் சூரியனாகும்“ என்று நம்பிக்கையுட்டும் ஆய்வறிஞர்
சனங்களைப் பலியாடுகளாக்கும் களமொன்றில்
நானொரு சாட்சியாக இன்னும் இருக்கவோ…
பலியாடுகள் மேய்ப்பர்களின் காலைச் சுற்றி வருகின்றன
அறியவில்லை எந்தப் பலியாடும் மேய்ப்பனின் இரக்கம்
பலியாட்டின் இரத்தத்துக்காகவே என்று.
தன்னைத்தானே சுருக்கிட்டுக்கொண்டிருக்கும்
ஒவ்வொருவரையும் கொண்ட ஊரில்
சாவொலியன்றி வேறென்ன கேட்கும்?
மரண ஓலை தோரணமாகித் தெருவெங்கும் ஆடுமே.
வடிந்த ரத்தம் உறைகிறது
உறைந்த நாட்களை உயிர்ப்பிக்க யாரும் இல்லை.
உறைந்த ரத்தத்தை உயிரூட்டவும் எவருமில்லை.
உறைந்த காலம் நீண்டு
மண்ணாகிறது வாழ்க்கை.
இப்படித்தான் எல்லாம் நிகழ்ந்தன
இப்படித்தான் எல்லாமே நிகழ்கின்றன.
நன்றி :கருணாகரன்
02 ரகசியக் குறிப்பு
பனங்குருவி இன்று வந்து
குளத்தில் நடந்த கதையைச் சொன்னது
திருவிழாப்பொம்மைகள் குளித்துக் கொண்டிருந்தபோது
ரத்தத்தோடு ஒரு கிளி பறந்து சென்றதை
எல்லோரும் பார்த்ததாக.
பிறகு
பார்த்தவர்கள் கோபுர வாசலில்
பெருமாளைச் சந்தித்தபோது இதைப் பற்றிச் சொல்ல,
பெருமாளோ மௌனமாகக் கடந்து சென்று தேவிடம் இதைச் சொன்னார்.
தேவியோ வேர்க்கிளியிடம் அதைச் சொல்ல
வேர்க்கிளி,
அதைக் காற்றுடன் கதைத்துக் கொண்டிருந்த
கடிதத்திடம் சொன்னது.
ஆனால், அந்தக்கிளி எப்படி ரத்தமாகியது
என்று தெரியவில்லை எவருக்கும்.
எல்லோரும் ரத்தக்கிளியைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அது யுத்தகாலமல்ல.
இப்படி ஒரு புதிர்க்காலத்தில் முளைத்த புற்களில்
தாங்கள் நின்று கொண்டிருப்பதாகக் கருதினார்கள் எல்லோரும்
உண்மையும் அதுதான்.
இதை அறிந்த வேர்க்கிளி
பாடக்குறிப்பை எழுதிக் கொண்டிருந்த
வசந்தியிடம் வந்து
ஒரு ரகசியக் குறிப்பைச் சொன்னது.
அந்த ரகசியக் குறிப்பை அறிவதற்காகவே
பதினாறு தலைமுறைகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்
எல்லோரும்.
கருணாகரன்
Comments
Post a Comment