இன்றைய நாள் மிக அற்புதமானது. கோமகன் முதலாவதாக தொலைபேசியூடாக நூல் வெளியீட்டுக்கு அழைத்த போது வகுப்புகள் இருந்த காரணத்தால் போவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அவர் மீண்டுமொரு முறை அழைத்ததும் கட்டாயம் சென்று விடுவது என முடிவு செய்தேன்.
எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் அறிவும்,பண்பாடும் நிரம்பி வழியும் மனிதர்களிடையே நான் அமர்ந்த முதலாவது நூல் வெளியீட்டு விழா. கோமகனின் அன்புடன் துவக்கப்பட்டது. விழாவை பூரணப்படுத்தாமல் நோன்பு திறக்க வேண்டி இருந்ததால் இடையில் வந்தது மிக வருத்தமடையச் செய்தது.
என்றாலும் நீண்ட நாட்களுக்கு பிறகு என்னைக் கவர்ந்த முறையில் பேசினார் அந்த மனிதர். அவர் யார்,இலக்கியத்தில் அவர் பங்கு என்பதை இன்னும் அறியவில்லை. ஆனால் பெயரை மாத்திரம் பாய்வா என அறிந்து கொண்டேன். இலக்கியத்தில் அடுத்த படைப்பிற்கான இடைவெளி எடுக்கும்போது படைப்பாளியின் சரக்கு தீர்ந்து விடுவதாக நினைப்பவர்கள் பற்றிய அவர் கூற்றும், மூத்த இலக்கியவாதிகள் பலர் புதியவர்களுக்கு வழிவிட்டு தங்கள் மகுடங்களை இறக்கி வைக்கும் மனநிலைக்கு பெரும்பாலும் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்…
அதே போல நவீன மேற்கத்திய இலக்கியபாணியுடன், தமிழ் இலக்கியத்தை கலந்ததான புதிய படைப்புகள் பற்றி எழுத்தாளர்கள் பெரும்பாலும் யோசிக்க மறுக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். அவரின் குரல் வளத்தில் கொஞ்சம் லயித்துப் போயிருந்தேன் என்றும் சொல்லலாம். கோமகன் பதில் சொல்ல வேண்டுமென குரலற்றவர்களின் குரலில் இருந்து தலித்தியம் மற்றும் இலக்கிய சர்ச்சைகள் சார்பாக அவர் வைத்த சுவாரசியமான இரண்டு கேள்விகளுக்கும் கோமகன் என்ன பதிலளித்தார் என்று அறியும் ஆர்வமும் எனக்கிருக்கிறது.
எது எப்படியோ கோமகனை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி. அவருக்கு எனது அரிந்த ஆப்பிளை அளித்ததும் பெரு மகிழ்ச்சி.
நஸீஹா முகைதீன்
Comments
Post a Comment