மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன் வரலாறுகளைப் புதுப்பித்துக்கொண்டிருந்தன.அவையே சந்ததி சந்திகளாக கடத்தப்பட்டும் கொண்டிருக்கின்றன.இதற்கு ஈழத்தமிழர்களது வரலாறும் விதிவிலக்கல்ல.ஈழத்தின் பெரும்பான்மை சமூகம் தமது இருப்பை தகவமைத்துக்கொள்ள பல புதிய கருத்தியல் யுத்தங்களை முன்னெடுக்கின்ற அளவிற்கு ஈழத்து தமிழ் சமூகம் தமது வரலாறுகளை தகவமைத்துக்கொள்ளப் பின்நிற்கின்றது. மூன்று கொலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்த ஈழத்துத் தமிழர்களது வரலாற்றுத் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தவில்லை. அண்மையில் ஈழத்தை சேர்ந்த அருளினியன் பொதுவெளியில் எழுதியிருந்த “கேரளா டயரீஸ்” ஈழத்துத் தமிழர்களது வாழ்வியலையும் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை கண்டடைவதில் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றது. அத்துடன் நில்லாது மலபாரின் வாழ்வியலும் ஈழத்துத்தமிழரது வாழ்வியலும் எந்தவகையில் ஒத்துப்போகின்றது என்பதை கருத்தியல் ரீதியாக நிரூபணம் செய்ய விழைகின்றது. இந்த வேளையில் ஈழத்தின் மூத்த குடிகளான இயக்கர்கள் நாகர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி என் மனதில் தோன்றுகின்றது.
“கேரளா டயரீஸ்” கொலனித்துவ நாடுகளின் அதிகாரத்தில் இருந்த ஈழத்துத்தமிழரது வாழ்வியலை அமெரிக்க மிஷனரிகள் எவ்வாறு புரட்டிப் போட்டன என்றும், அவர்களது கல்விப் பாரம்பரியம் எவ்வாறு உச்சம் பெற்றிருந்தன என்பதையும் சொல்ல விழைகின்றது. இந்த மிஷனரிகளுக்கு எதிராக ஆறுமுக நாவலரின் “சைவ எழுச்சி” கருத்தியல் யுத்தம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் நேர் எதிர் விழைவுகளை சமரசத்துக்கு இடமின்றி சொல்கின்றது. இதுவரையில் யாழ்ப்பாணிகள் ஆறுமுக நாவலரது சமையத்தொண்டையும் அவர் தமிழுக்கு ஆற்றிய சேவைகளையும் முன்நிலைப்படுத்தினரே ஒழிய ஆறுமுக நாவலரது சாதீயம் தொடர்பான கறுப்புப் பக்கங்களை மறந்தும் தொட்டது கிடையாது. ஆனால் அருளினியன் மிகவும் துணிச்சலாக ஆறுமுக நாவலரின் சைவ எழுச்சியும் அதனுடாக உச்சம் பெற்ற யாழ்ப்பாணிகளது மேட்டிமைகளை “வெள்ளாளர்கள் யாழ்ப்பாணத்தின் துயரம்” என்று ஒரேயடியாகப் போட்டு தாக்கியுள்ளார். அதன் உச்சக்கட்டமாக ஓரிடத்தில் அருளினியன் பின்வருமாறு கூறுகின்றார்,
“தமிழ் ஈழம் கிடைத்திருந்தால்; அது நிச்சயமாக சாதிய வேறுபாடு இல்லாமல்தான்இருந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால், புலிகள்கடும் இனவாதிகளாக இருந்தனர். ஆனால், சாதியவாதிகளாக அவர்கள் என்றைக்குமேஇருந்ததில்லை. ”
அருளினியானது பார்வையான இந்த இடம் மிகவும் சர்ச்சைக்குரியது. இனவாதத்தின் தோற்றுவாய் என்பதே சாதியம் என்ற ஆணிவேருடன் தொடர்புபட்டது. புலிகளது காலத்தில் “சாதிய வேறுபாடுகள்” என்ற கருத்தியல் வாதத்தை அவர்கள் ஓரளவுதான் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அதில் அவர்கள் முற்றுமுழுதாக வெற்றிபெற முடியவில்லை என்பதை ஈழத்தின் போரியல் எழுத்துக்கள் எம்முன்னே வரலாற்று சாட்சிகளுடன் நிறுவி இருக்கின்றன.அதேவேளையில் ஈழத்தமிழர் யுத்தத்தில் வரலாறுகாணாத பாரிய அழிவுகளை சந்தித்திருந்தாலும் சாதிய வேறுபாடுகளைக் களைவதற்கு அவர்கள் என்றுமே தயாராக இல்லை என்பதை சமகாலத்தில் சாதீயம் தொடர்பான தாயக நிகழ்வுகள் எம்முன்னே உரைகல்லாகக் காட்டி நிற்கின்றன.
“கேரளா டயரீஸ்” -ஐ வாசித்ததில் ஈழவர் பண்பாட்டு விழுமியங்களின் ஆணி வேரை மலபாரில் கண்டடைவதில் வெற்றி கண்டுள்ளது என்றுதான் சொல்லத்தோன்றுகின்றது. அருளினியனின் இலகு சொல்லாடல் நகர்த்துகை அதை மேலும் இலகுவாக்கியிருக்கின்றது என்றே சொல்வேன். “கேரளா டயரீஸ்” -ஆனது வராலற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுபோன்ற ஈழத்தவர் வரலாறுகள் இன்னும் இன்னும் தோற்றுவிக்கப்படல் வேண்டும் என்பதே என்போன்றவர்களது வேணவா.
Comments
Post a Comment