01 இளம் போதியார் இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ் மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி. பி. முதல், அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் பாடல் பின்வருமாறு : ‘பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை ! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே ! கொண்கன் யான்யாய் அஞ்சுவல் ! எனினும் தானே பிரிதல் சூழான் ; மன்னே ! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும் ! அதனால், புலர்வது கொல் அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே!’ 2. அறவண அடிகள் இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலில் இருந்தும் அறியக் கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. ப...
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்