Skip to main content

தமிழர் வாழிவியலில் பௌத்தத்தின் வகிபாகம் ஒரு நோக்கு 01 - 'தமிழ்நாட்டில் வாழ்ந்த பௌத்த பெரியோர்கள்'


01 இளம் போதியார்


இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ் மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி. பி. முதல், அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது.

அந்தப் பாடல் பின்வருமாறு :

‘பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை ! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே ! கொண்கன் யான்யாய் அஞ்சுவல் ! எனினும் தானே பிரிதல் சூழான் ; மன்னே ! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும் ! அதனால், புலர்வது கொல் அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே!’

2. அறவண அடிகள்

இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலில் இருந்தும் அறியக் கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்துவந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு, மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தர்மங் கேட்டுச் சீலத்தை மேற்கொண்டாள்.

சோழமன்னன் மனைவி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறை வீடுசெய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரசகுடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, அங்குச் சிலநாள் தங்கியபின், காஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமா நகரத்திலே நிர்வாணம் பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

இப்பொழுது காஞ்சீபுரத்தில், அறப்பணஞ்சேரி என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அது அறவணஞ்சேரி என்பதன் மருவல் என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி ( சேரி=தெரு) என்று வழங்கப் பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள்.

அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர்போலும். அறவண அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.

அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருக்கவில்லை என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணம் என்னவென்றால், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாகக் கூறப்படுவதுமே. இவை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர்.

இவ்வாறு கருதுவது தவறு என்றே தோன்றுகின்றது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை 'ரித்தி' என்பர். ரித்தி எனினும் சித்தி எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில்மட்டுமில்லாது இந்து மதத்திலும் சங்கராசாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்றே கூறப்படுகின்றது. அதுகொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதமுடியுமா? இவற்றை அவ்வச்சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

3. மணிமேகலை

நான் அறிந்த வரையில், தமிழ் நாட்டுப் பௌத்தப் பிக்ஷணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வத்திற் சிறந்த கோவலன் என்பவனுக்கும் அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள் மணிமேகலை. இக்குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந்நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமாரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

இது இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமா நகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டு இறந்தான். கோவலன் இறந்த செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்கு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக்கணிகை வாழ்க்கையில் புகுத்த அவளது பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் போவதற்கு விரும்பவில்லை. அரசன் மகன் உதயகுமாரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணி கோலத்தை விட்டுவிடும் படி வேண்டினான்.

மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அது முதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கிவந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்கவேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.

காயசண்டிகை என்பவள் வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் அந்நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதயகுமாரன் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டுவிடும்படி கூறிக்கொண்டிருந்தாள்.

காயசண்டிகையைத் தேடிக்கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு, அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னுமொரு ஆணுடன் பேசுவதைக் கண்டு பொறுக்காதவனாக உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமாரன் மணிமேகலையை விட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையால் தன் மனைவி என்று தவறாகக் கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன் இரவில் வந்த உதயகுமாரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதயகுமாரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.

தவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து, மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான்.

இராசமாதேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள் ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக்கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுதலை கொடுத்தாள். பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவார்கள் என்பதினால் , அந்த நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடை பெற்றுச் சாவகநாடு சென்றாள். சிலநாட்கள் சென்ற பின்னர், அங்கிருந்த சேர நாட்டின் தலைநகரமான வஞ்சிமா நகர் சென்று, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சிமா நகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடு நாள் நோற்று, கடைசியில் அவ்வூரிலேயே காலமானாள்.

மணிமேகலையின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.

மணிமேகலை வரலாற்றிலும், பௌத்தமதக் கொள்கைப்படி, வானத்தில் பறந்து செல்லுதல், அமுத சுரபி என்னும் சிறு பாத்திரத்தினின்றும் நினைத்த போதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல் முதலிய ரித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக்கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.

காஞ்சீபுரத்துக்கு அருகில், மணிமேகலை அம்மன் கோயில் ஒன்று இருப்பதாகத் தெரியப்படுகின்றது . மணிமேகலைக் காவியத்தில் கூறப்படும் மணிமேகலை காஞ்சீபுரத்தில் உயிர் நீத்ததாகக் கூறப்படுவதிலிருந்தும், காஞ்சீபுரத்தில் இப்போது மணிமேகலை அம்மன் கோயில் இருப்பதிலிருந்தும், இரண்டுக்கும் தொடர்புண்டாயிருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உண்டாகிறது. அதேவேளையில் மணிமேகலை என்னும் பெயருள்ள பௌத்த தெய்வமும் ஒன்று உண்டு.

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...