அந்த அதிகாலை வேளையில் வல்லிபுரத்தாழ்வாரின் சன்னதி மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் வல்லிபுரத்தாழ்வார் அனந்த சயனமாகியிருந்தார். மனைவி கோயிலின் உள்ளே செல்ல நான் வெளியே இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்தேன். காலைவேளையின் சீரான தென்றல் முகத்தில் அடித்தது. தூரத்தே கடல் அலையோசை மெதுவாகக் கேட்டது. நான் நின்ற மரத்தின் மேலே புலுனி ஒன்று தனியாக குரல் கொடுத்துக்கொண்டது. அதற்கும் என்னைப்போல யாரும் இல்லையோ என்னவோ. அதன் குரலில் ஒருவித சோகம் இளையோடியிருந்தது. அந்த சந்தடியில்லாத அமைதியான சூழல் மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ஒருவிதத்தில் பயம் தருவதாகவே இருந்தது. தூரத்தே பச்சைப் படையணி ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தது .பச்சைக்கச்சான் வறுக்கும் மணமும், தோசை சுடுகின்ற மணமும் ஒரேசேர மூக்கில் நுழைந்தன. மனதில் பலவிதமான சிந்தனைகள் ஒரேநேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பின்னிப்பிணைந்தன. அதில் ஒர் சிந்தனை என்ற பாம்பு "எதுவாகினும் நீ ஒரு அந்நியன் தானே .இந்த மண் உனக்கு சொந்தமானதா? வீண் ஆசைகளை ஏன் வளர்க்கின்றாய் "? என்று என் மனதில் ஓங்கி ஓர் கொத்து கொத்தியது. ம
எனது தளத்தில் வெளியாகும் ஆக்கங்களை எங்கும் பகிர்ந்து கொள்ளலாம்