பொட்டலங்களாக பிரிந்து இருந்த பயணிகள் தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார்கள். எனது பார்வையில் இருந்து பரந்தன் மெதுவாக மறைய தொடங்கியது. தூரத்தே ஆனையிறவு வருவதற்கு சாட்சியாக உப்புக்கலந்த காற்று என் முகத்தில் அடித்தது. எமது வாழ்விலும் ஆனையிறவு பல திருப்பங்களை தந்த இடமாகும். மாற்றங்கள் என்பதனை மாறும் களங்களே தீர்மானிக்கின்றன என்பது போல நாங்கள் எடுத்த வியூகங்களும் பல மாறும் களங்களை எடுத்து தந்தன. அதுவே பலர் எம்மீது உறக்கத்தை தொலைத்த ஒரு காலமும் இருந்தது. உறக்கத்தை தொலைத்தவர்கள் நிதானமாக உறக்கத்தில் இருந்து மீள , நாங்களோ வெற்றி தந்த மிதப்பில் மீள முடியாத உறக்கத்துக்கு சென்ற காலப் பிறழ்வும் இங்கேயே ஆரம்பித்தது. இரு பக்கமும் ஆழம் குறைந்த கடல் ஆணை கட்ட. அதன் நடுவே இருந்த ஏ 9 பாதையால் பஸ் விரைந்து சென்றது . கடலில் அங்காங்கே திட்டுத்திட்டுகளாக வெள்ளையாக உப்பு படர்ந்து கொண்டு இருந்தது. இடையில் இருந்த குட்டைகளில் ஒரு மீனாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் பல கொக்குகள் ஒற்றைக்காலில் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தன. அந்த வெளியில் இருந்த ஒரே ஒரு படை முகாமையும் தாண்டி அந்த பஸ் இயக்கச்சியை ஊடறுத்து கண்டி வீதியை நோக்கித் திரும்பியது .
எனது மனைவி எனது தோளில் நித்திரையாகி விட்டிருந்தாள். எனக்கு மட்டும் அந்த சயன சுகம் கிடைக்கவில்லை. ஞாபகவீதியில் பயணம் செய்யும் எனக்கு அவ்வளவு சுலபத்தில் சயனம் என்வசப்படவில்லை. கண்டி வீதியும் அழுது வடியாமல் இருபக்கமும் பல நவீன கட்டிடங்கள் முளைத்துப் புதுப்பொலிவாகவே காணப்பட்டது. சினைப்பர் அடியாலும் செல் எறிகளாலும் காயடிக்கப்பட்ட தென்னைகளும் பனைகளும் மறைந்து, வடலிகளும் தென்னம் பிள்ளைகளும் முகமாலையில் இருந்து பளைவரை இருபக்கமும் நிரை கட்டி நின்றன. இடையிடையே யாழ் தேவி தண்டவாளம் பளை வரை கண்டி வீதியுடன் அருகே வந்து நலம் விசாரித்து சென்றது. அந்த பஸ்ஸில் இப்பொழுது அலுவலகத்துக்கு செல்லும் பயணிகளே அதிகமாக காணப்பட்டனர். பலர் இருக்க இடம் இல்லாமல் நின்றே வந்து கொண்டிருந்தனர். முகமாலை படைமுகாம் வருவதற்கு அறிகுறியாக பஸ் தனது வேகத்தை கட்டுப்படுத்தியது. போர்கள் ஓய்ந்தாலும் தாங்கள் இருக்கின்றோம் என்பதில் இராஜ்ஜியத்தின் சேவகர்களுக்கு ஓர் அற்ப சந்தோசம் என்றே எனக்குத் தோன்றியது. அதே வேளை வேட்டைக்கு என்று வளர்த்த நாய்களை வீட்டு நாய்களாக இரு என்றால் அவை சொல் கேட்குமா என்ன?
ஜன்னலின் வெளியே முகமாலை படை முகாம் பரந்த வெளியில் அகன்று விரிந்து இருந்தது. என் கண்கள் என்னை அறியாது குளம் கட்டின. எத்தனை உயிர்கள்? அவைகளின் மரணஓலம் எங்கோ தொலைவில் கூட்டைச் சுற்றிய தேனீக்களாக என் காதுகளில் ரீங்காரமிட்டது. அன்று வீசிய காற்றுக்கும், பனைக்கும் , தென்னைக்கும் மட்டுமே தெரிந்த அந்த மரண ஓலங்கள் சுமந்த காற்று என் முகத்தில் ஓங்கி அடித்து எனது இருப்பை பார்த்து பல்லு இளித்தது. வீதியின் இருபக்கமும் கிடுகு வேலிகளும் பனை ஓலை வேலிகளும் அரவணைத்து வர எனது ஐரோப்பிய வாழ்வின் ஜீவன் இல்லாத பளபளப்பு இந்த வீதியில் என்னால் காண முடியவில்லை. கள்ளங்கபடமில்லாத மக்களும், எதுவந்த போதும் சிரிப்பை இழக்காத மனிதர்களும் என்னை வேறு ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றனர். நினைவுகள் தந்த களைப்பில் எனது தலை வலி எடுத்தாலும், அரிப்பெடுத்த தோலை மீண்டும் மீண்டும் சொறிந்து இன்பம் அனுபவிப்பது போல எனக்கு ஞாபக வீதியில் பயணம் செய்வதே இன்பமாக இருந்தது. இந்த அவஸ்தைகள் ஏதும் இல்லாமல் எனது மனைவி எனது தோளில் தூங்கிக் கொண்டு இருந்தாள். தூக்கம் என்பது அவளுக்கு வசியப்பட்டதொன்றாகவே இருந்தது. பஸ் இப்பொழுது கொடிகாமம் சந்தியில் இருந்து பருத்தித்துறை நோக்கி திரும்பும் பாதையில் திரும்பியது. கொடிகாமம் சந்தியில் பலர் ஏறி இறங்கினர். எதிரே இருந்த கொடிகாமம் சந்தை, உழைப்பின் விளைச்சல்களை விற்றவர்களாலும் அதனை வாங்க வந்தவர்களாலும் உயிர்ப்புடன் இயங்கிகொண்டிருந்தது. வாழைக்குலைகளும், பலா பழங்களும், வாழை இலை கட்டுக்களும் பஸ்ஸை நிறைத்தன. பலாப் பழத்தின் வாசம் என் மூக்கைத் துளைத்தது. மீண்டும் காலை ஒன்பது அரை மணியளவில் பஸ் தனது பயணத்தை பஸ் தொடங்கியது.
எமது பயண நிறைவை அடைய இன்னும் அரை மணித்தியாலங்களே இருந்தன. கொடிகாமம் சந்தியில் இருந்து புறப்பட்ட பஸ் குடிமனைகள் நிறைந்த கிறவல் பாதையால் குலுங்கி குலுங்கி ஓடியது. குடிமனைகளை கடந்து முள்ளி வெளியை தொட்ட பொழுது அங்கே மீண்டும் ஒரு படை முகாம் இருந்தது . அந்த காலை வேளையில் படைவீரர்கள் வீதியால் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். இதனால் எமது பஸ் தனது வேகத்தை குறைக்க வேண்டி இருந்தது. பல சாதனைகளை கடந்த முள்ளி வெளி ஏதும் அறியாத அமசடக்கிக் கள்ளனைப் போல என் கண் முன்னே விரிந்து கிடந்தது. வரலாற்றைப் புரட்டிப் போட்ட பல மறவர்களின் ஏக்கமும் துயரமும் கண்ணீரும் அங்கே மௌனக் காற்றாக என் முகத்தில் அடித்தது. பஸ் முள்ளிவெளியை கடந்து மீண்டும் வறணியை அடைந்தது.
வறணி ஓர் நீண்ட நிலப்பரப்பாகும். முன்பு போரினால் சிதைவடைந்து காணப்பட்ட மத்திய கல்லூரி இப்பொழுது மன்னர்களின் கடைக்கண் பார்வையினால் புதுக்கோலம் கொண்டிருந்தது. கிராமங்கள் என்கண் முன்னே தோன்றி மறைந்து கொண்டிருந்தன. விரைவாக வந்து கொண்டிருந்த பஸ் சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோவிலடியில் அடியார்களை இறக்க தன்னைத் தயார்ப் படுத்தியது. பொட்டல் வெளியில் சுற்றி வர ஆல மரங்கள் சூழ கண்ணகை அம்மன் வீற்றிருந்தது மனதுக்கு குளிர்ச்சியாகவே இருந்தது. ஒருகாலத்தில் தமிழகத்தில் இருந்து வந்த சீர்காழி கோவிந்தராஜன் இந்த சுட்டிபுரம் கோவிலில் வைத்த இன்னிசை கச்சேரி இன்றும் எனது காதுகளில் ரீங்காரமிட்டபடியே இருகின்றன. என்னதான் சிறப்பாக இந்த கண்ணகை அம்மன் இருந்தாலும் அம்மன் குடியிருந்த இந்த வீட்டையும் மன்னர்களின் சேவகர்கள் விட்டு வைக்கவில்லை. அம்மனுக்கும் அவர்களை எதிர்த்து போரிட மனம் வரவில்லை. ஆனாலும் தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த பக்தர்களை தாய் கோழி போல் அடைகாத்தாள் என்பதனையும் சொல்லத்தான் வேண்டும்.
எனக்கு எப்பொழுது பருத்தித்துறையை அடைவோம் என்று இருந்தது. பஸ்சும் எனது மன ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து நெல்லியடியை தாண்டி பருத்தித்துறை வீதியில் தன்னை திருப்பியது. பருத்தித்துறை வீதியும் கார்பெட் நகை அணிந்து மிடுக்காக இருந்தது. காலை பத்து மணியை நெருங்கி கொண்டு இருந்தது. எனக்கு பசி எடுக்கத் தொடங்கியது. பருத்திதுறையில் இறங்கியவுடன் ஒரு கபே குடிக்க வேண்டும் என்று தீர்மானமாகவே இருந்தேன். இதற்கு எனது மனைவி ஒத்து வருவாளா என்பது கேள்விக்குறியாக இருந்தது. கார்பெட் வீதியில் வாகனங்கள் வாகவே பறந்தன. எதற்கும் மெதுவாக செல்ல வேண்டும் என்ற உளப்பாங்கு இருந்திருக்கவில்லை. புலத்தில் பல சிக்னல்களை கொண்டிருந்த பாதைகளில் பயணித்த எனக்கு இவைகள் எரிச்சலையே ஏற்படுத்தின. பஸ்ஸில் இப்பொழுது எண்ணி நான்கு ஐந்து பேர்களே இருந்தார்கள். முதலாம் கட்டை சந்தியை கடந்த பஸ் பருத்தித்துறை பஸ் நிலையத்தில் தன்னை நிலை நிறுத்தியது.
பஸ்ஸில் குறைந்தளவு பயணிகள் இருந்ததினால் நாங்கள் நின்று நிதானமாகவே இறங்கினோம். நீண்ட நாள் பயணத்தின் முடிவை அடைந்ததில் இருவருமே களைப்பை மீறி சந்தோச நிலையை அடைந்தோம். நான் பயணப் பொதிகளை வைத்து விட்டு சுற்று முற்றும் பார்த்தேன். முன்பு நீண்டகாலமாக அதி உயர் பாதுகாப்பு வலையமாகவும், யுத்தத்தின் கோர வடுக்களையும் சுமந்து கொண்டிருந்த பருத்தித்துறை இப்பொழுது நகர் என்ற நிலையை அடைந்து காணப்பட்டது. காலை பத்தரை மணியில் அந்த நகரம் மக்கள் வெள்ளத்தில் கலகலத்துக் காணப்பட்டது. மக்களுக்கு எரிக்கும் வெய்யில் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பொருட்டாகத் தெரிந்திருந்தால் பருத்தித்துறை இந்த அளவு வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே நினைத்தேன். எனக்கு வெய்யிலின் கொடுமையினால் வியர்த்து கொட்டியது. கையில் இருந்த சிறிய பருத்தியில் ஆன துவாய் வியர்வை துடைத்து துடைத்தே நாற்றம் எடுத்தது. மூச்சை நிறுத்தி மீண்டும் மீண்டும் துவாயால் துடைத்துக் கொண்டிருந்தேன்.
உடலில் தொடர் வியர்வை இழப்பினால் தண்ணீர் தாகம் தொண்டையை வறட்டியது. அருகில் இருந்த கடையில் தண்ணீர் போத்திலை வங்க நூறு ரூபாய் தாளை நீண்டினேன். அது நாப்பது ரூபாயாக மீண்டும் என்னிடம் தண்ணீர் போத்தலுடன் வந்தது. ஒரே மிடறில் அரைப்போத்தல் தண்ணீர் தொண்டையில் குளிருடன் இறங்கியது. நாங்கள் வீட்டிற்கு போவதற்கு மனைவிக்கு தெரிந்த ஒரு ஓட்டோவே வந்திருந்தது. அதை ஓட்டியவர் குடும்ப ரீதியாக தெரிந்த, சிறுவயதில் மனைவியை பள்ளிக்கூடதற்கு அழைத்து சென்றவர். இப்பொழுது போரின் அவலத்தால் மனைவியை இழந்து, காரையும் தொலைத்து ஓட்டோ ஓடி சீவிக்கின்றார். நான் அவரிடம் அனுமதி பெற்று சிகரட்டை எடுத்து அதன் முனையை சிவப்பாக்கினேன். எனது மன வெக்கையும் உடல் களைப்பும் அந்த சிகரட் புகையினால் வெளியேறியது. எங்களை சுமந்து கொண்டு ஓட்டோ அம்மன் கோவில் ஒழுங்கைக்கு திரும்பி கல்லூரி வீதி வீ எம் வீதியை கடந்து ஓடக்கரை வீதியினுள் நுழைந்து ஓடிக்கொண்டு இருந்தது. இரண்டு பக்கமும் குரோட்டன்கள் மூடிய மதில்களும், கிடுகு வேலிகளும் அவரவர் வசதிக்கு ஏற்றவாறு ஓடி மறைந்தன. பதினைந்து நிமிட ஓட்டத்தில் எங்கள் வீடு வந்தது. எங்கள் மணம் அறியாத வீட்டு நாய் உக்கிரமாக குலைக்கத் தொடங்கியது. எங்களைக் கண்ட மாமியின் கண்கள் நீரால் பளபளத்தன. எங்கள் பயணப்பொதியை இறக்கி விட்டு வந்த ஓட்டோ ஓடியவருக்கு மாமி தேனீர் கொடுப்பது தெரிந்தது. நான் அவரை தனியே அழைத்து அவர் எதிர்பார்த்த தொகையை விட அதிகமாகவே கொடுத்தேன். அது அவரின் வீட்டு ஒருவேளை சாப்பாட்டை போதுமானதாக இருந்திருக்கலாம்.
அந்த வேளையில் மாமி சமைத்து வைத்திருந்த மதிய உணவு எங்களுக்கு பெரும் சுவையாகவே இருந்தது. வயிறு காய்ந்து இருந்தால் எதுவுமே சுவையாக இருக்கும் போலும். சிலுசிலுத்த வேப்ப மரத்து நிழலில் சாய் மனை கதிரையில் படுத்து இருந்த என்னை ,உண்ட களைப்பும் தொடர் பயண அலைச்சலும் சயன சுகம் இந்த முறை இலகுவாகவே தன் பிடியினுள் கொண்டு வந்தது.
எனது ஐம்புலன்ங்களும் என்னிடம் உறை நிலையில் இருந்த பொழுது அருகே இருந்த கைத்தொலைபேசி எனது ஒரு புலனை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தது. நேரம் ஒன்பது மணியை நெருங்கி கொண்டிருந்ததை கைக்கடிகாரம் காட்டிக்கொண்டிருந்தது. கைத்தொலைபேசியில் அனாமோதைய அழைப்பு அழைத்துக்கொண்டிருந்தது. யாராய் இருக்கும் இருக்கும் ? என்ற எதிர்பார்ப்புடன் கைத்தொலைபேசியில் அழுத்தினேன். எதிர் முனையில் கோப்பாயில் இருந்து அண்ணையின் குரல் கேட்டது. நாங்கள் எப்பொழுது கோப்பாய் வருவோம் என்பதை அறிய எடுத்திருந்தார். அவருடன் பல விடயங்களை கதைத்ததில் நேரம் எனது கட்டுக்குள் இருந்திருக்கவில்லை. அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பொழுது நேரம் பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
நிலம் நன்றாக இருட்டி விட்டிருந்தது. முற்றத்தின் அருகே இருந்த வீட்டின் முன்பக்கத்திலே நுளம்புகளுக்காக ஒரு சட்டியில் இருந்து வேப்பம் கொட்டை புகை வீடு முழுக்க நிரவி அதன் வாசம் எனது மூக்கை அடைத்தது. புகையின் ஊடாக எல்லோரும் மங்கலாகவே தெரிந்தார்கள். எனது கண்ணில் எதோ கோளாறு இருக்க வேண்டும் என நினைத்து கண்ணை கசக்கி விட்டுப் பார்த்தேன். அப்பொழுதும் எல்லோரும் மங்கலாகவே தெரிந்தார்கள். சிறு வயதில் பார்த்த வேப்பம் புகை என்னை மிகவும் பரவச நிலையை ஏற்படுத்தியது. நான் சாய் மனை கதிரையை விட்டு எழுந்து போய் கிணத்தடியில் நன்றாக முகம் கழுவினேன். சிலுர்த்த நீர் முகத்தில் பட்டு புத்துணர்ச்சி முகமெங்கும் பரவியது. மனைவி இரவு சாப்பிட அழைத்தா. எனக்கும் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. எல்லோரும் என்னை சுற்றியிருக்க, என் முன்னே கோதமை மா புட்டும் மாதுளம் பழமும் கப்பல் வாழைப்பழமும் இருந்தன. தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய் பொரித்த குழம்பாக மாறி இருந்தது. மண் சட்டியில் வைத்த கத்தரிக்காய் குழம்பு மாறுபட்ட சுவையுடன் புட்டுடன் சேர்ந்து உள்ளே இறங்கியது. நீண்ட காலத்தின் பின்பு எல்லோருடனும் இருவரும் கதைத்து சாப்பிட்டு கொண்ருந்தோம்.
எங்கள் முன்னே எமது நாய் குந்தி இருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. நான் அதற்கும் புட்டு வைத்தேன் அது ஒரு நன்றிப் பார்வையுடன் என்னருகில் வந்து சாப்பிட்டது. அதற்கு அப்படி சாப்பாடு கொடுத்து பழக்கவேண்டாம் என்று மாமி கடிந்து கொண்டா. எல்லோரும் சாப்பிட நாய் மட்டும் சாப்பிடாமல் இருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. இரவுச் சாப்பிடு முடிந்ததின் பின்பு கையில் ஒரு சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டு படலைக்கு வந்தேன். ஒழுங்கையின் இருட்டை விலத்த லைட் போஸ்ற்றில் மின்னிய டியூப் லைற் போதுமானதாகத் தெரியவில்லை. ஒழுங்கை அமைதியின் கோரப்பிடியில் இருந்தது. மெதுவாக வீசிய காற்றில் வீட்டு மதிலின் மேல் சடைத்து இருந்த இப்பிலிப்பில் இலைகளும், பூவரசம் இலைகளும் சலசலத்தன. முன்னைய காலத்தில் இந்த ஒழுங்கை என்ன பாடு பட்டிருக்கும்? எத்தனை குண்டுகள் உடல்களை சல்லடை போட்டிருக்கும்? எத்தனை உடல்கள் எடுக்க ஆட்கள் இல்லாமல் நாள் கணக்காக இருந்திருக்கும் ? இன்று இந்த ஒழுங்கை எல்லாவற்ரையும் உள்வாங்கிக்கொண்டு அமைதியில் உறைந்திருப்பது எனது மனத்தை பிசைந்து கொண்டிருந்தது.
நீண்ட காலத்தின் பின்பு நிலத்தில் பாயில் படுத்தால் இலகுவில் தூக்கம் என்னை அணைக்க மறுத்தது அப்பிய இருட்டும் . குண்டூசி விழுந்தால் ஒலி எழுப்பும் அந்த இரவு நேரமும் ஒருவித பய உணர்வயே ஏற்படுத்தின. கண்களை மூடிக்கொண்டு இலக்கங்களை தலைகீழாக எண்ணத் தொடங்கினேன். இதனால் கைமேல் பலன் கிடைத்தது. அடங்க மறுத்து அழிச்சாட்டியம் செய்த நித்திரை என்சொல் கேட்டது. சொல்லிவைத்தால் போல் அதிகாலை நான்கு ஒரு சேவல் ஓங்காரமாக கூவ, அதனைத் தொடர்ந்து மற்றைய சேவல்கள் பக்கப்பட்டுப் பாடத் தொடங்கின. அன்றைய நாளை வரவேற்கும் முதல் குரலாக அந்த கூவல் இருந்தது. பண்டாரி அம்மன் கோவில் மணியோசை காற்றில் கலந்து வந்து நேரம் ஐந்து மணி என்பதை உறுதிப்படுத்தியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை குலைக்காது அருகில் இருந்த சேர்ட்டை அணிந்து கொண்டு மெதுவாக கையில் சிகரட்டுடன் வெளியே வந்தேன். வெளியே வெளிச்சதிடம் இருள் மண்டியிட்டுகொண்டிருந்தது. பக்கத்து தோட்டத்தில் மிளகாய் கண்டுகளுக்கு தண்ணீர் இறைக்கும் சத்தம் கேட்டது. எதிர் வீட்டில் மாமி வீடு கூட்டத் தொடங்கியது தெரிந்தது. பால் வாங்க புறப்பட்ட மாமாவிடம் பால் போத்தலை வாங்கிக்கொண்டு மந்திகை சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
25 வைகாசி 2014
Comments
Post a Comment