நாங்கள் பதிவு செய்திருந்த மகிழூந்து எங்கள் அருகில் வந்து நின்றது. வண்டி சாரதி பவ்வியமாக இறங்கி வந்து எமது பயணப் பொதிகளை வாங்கி கார் டிக்கிக்குள் வைத்தான். அவன் சிங்களவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக்கொண்டென். மகிழூந்தில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாவில் இருந்து தொடங்கியது. மகிழூந்து எங்களை ஏற்றிக்கொண்டு பம்பலப்பிட்டி பிளட்ஸ் நோக்கி வழுக்கியது . மகிழூந்து ஓடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே வழக்கமான பாதையில் செல்லாது அதிவிரைவு பாதையில் செல்லத் தொடங்கியது . அந்த பாதை மகிந்த சிந்தனையில் உதித்து சீனத்தின் உதவியுடன் சமீபத்தில் திறக்கப்பட்ட அதி வேகப்பாதை என்று ரக்சி சாரதியுடன் கதைத்த பொழுது அறியக்கூடியதாக இருந்தது. ஏறத்தாழ இருபது நிமிடங்களை விழுங்கி விட்டு அந்த மகிழூந்து கொழும்பு நகரினுள் நுழைந்தது. அதிகாலையில் கொழும்பு அரை அவியல் முட்டை நிலையில் இருந்தது. ஆங்காங்கே மக்கள் தங்கள் நாளை தொடங்குவதற்கு ஆயத்தமாக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர். வீதிகளில் சோதனை சாவடிகளோ வீதி தடைகளோ காணப்படவில்லை. எந்த இடத்திலும் விளம்பரத் தட்டிகளில் நாட்டைக் காத்த மகிந்த ஒரு மந்தகாசப் புன்னைகையுடன் காணப்பட்டார். இதுவும் ஒரு மலிவான விளம்பர உத்தி தான் என்றே நினைத்தேன் . ஏனெனில் மக்களால் மறக்கப்படுகின்ற இராஜ்சியங்களின் அரசர்கள் பலர் மக்கள் எப்பொழுதும் தங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று இப்படியான மலிந்த வேலைகளில் இறங்குவதுண்டு.
எங்களை சுமந்த மகிழூந்து ஒருவழியாக காலை நாலு மணியளவில் பம்பலப்பிட்டி பிளட்ஸ்-க்கு வந்து சேர்ந்தது. சாரதி நாங்கள் இறங்க முன்பே காரை விட்டிறங்கி எமது கதவை திறந்து விட்டிருந்தார். வருகின்ற வழியில் எம்மிடம் ஒரு வார்த்தையேனும் அளவுக்கு அதிகமாக அவர் கதைக்கவில்லை. அவரே எமது பயணப்பொதிகளை காரில் இருந்து இறக்கி வைத்தார். நான் ஆரம்பம் முதலே அவரை கவனித்து வந்ததில் வேற்று இனத்தவராக இருந்தாலும் " வாடிக்கையாளர் சேவை " என்ற விடயத்தில் ஒரு பண்பட்ட அணுகுமுறையை அவரிடம் காண முடிந்தது. எம்மவர்களிடம் குறைந்த அளவிலேயே இந்த அணுகு முறையினை அவதானித்து இருக்கின்றேன். நான் மனைவியிடம் வாய் திறக்க முதலே அவா மீற்றரில் இருந்த தொகையை விட இரண்டு சைபருகளை அதிகமாக கொடுத்திருந்தா. அந்த சாரதி மிகுந்த மகிழ்ச்சியுடன் அன்றைய நாளுக்கும் எமக்கும் வாழ்த்துச் சொல்லி எம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டார். மனைவியின் தோழி முதலாவது மாடி பல்கணியில் நின்று கொண்டிருந்தா. அந்த வீட்டில் ஒரு சோகசம்பவம் போன வருடம் நிகழ்ந்ததால் அந்த தோழியின் முகத்தில் ஒரு வாட்டம் காணப்பட்டது. தனது தோழியை கண்டவுடன் அந்த சோகம் கண்ணீராக வெளிப்பட்டது. எனக்கு தர்மசங்கடமான நிலையாகப் பொய் விட்டது .
ஒரு நாள் தொடர் பயணத்தால் அழுக்கும் தலை இடியும் உடலில் சேர்ந்து கொண்டன. எனது உடல் குளிப்பதற்கு ஏங்கியது. மனத்தில் எழுந்த திட்டத்தை செயல்படுத்த தயாரானேன். அந்தக்காலை வேளையில் தண்ணீர் ஹீட்டர் இல்லாமலே கதகதப்பாக இருந்தது. தண்ணீர் உடலெங்கும் பாய மனதும் உடலும் புதிய நாளை வரவேற்பதற்காக தயாராகின. குளித்து முடித்து விட்டு வெளியே வர சூடான கோப்பி தயாராக இருந்ததது. நான் கோப்பியை எடுத்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன். வெளியே நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது. அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கடல் பரந்து விரிந்து இருந்ததது. அதன் அலைகள் ,காமம் தலைகேறிய காதலன் தன் காதலியின் உதட்டை மூர்க்கமாக கவ்வுவதைப்போல கரையை முத்தம் இட்டுக்கொண்டிருந்தன. தூரத்தே சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளே தோழிகள் குடும்ப கதைகள் கதைத்துகொண்டிருந்தர்கள். கோப்பியில் அதிக அன்பு கலந்து இருந்திருந்ததால் கையில் இருந்த கோப்பி சீனி இல்லாவிட்டாலும் இனிமையாக இருந்தது. கீழே நாகரீக மக்கள் நாகரீகத்தால் வந்த கலோரியை குறைக்க ஓடியும் நடந்தும் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிலர், நைட்டிகள் ட்றெசிங் கவுன்கள் என்று பாரம்பரியத்தை கை விடாது காலுக்கு மட்டும் சப்பாத்து என்றும் விநோதமான நாகரீக மக்களும் இருந்தார்கள். அந்தக்காலை வேளையில் சூடான கொப்பியும் சிகரட்டும் மனதுக்கு இதமாக இருந்தன. அன்றைய நாளின் சூடு மெது மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது .
இந்த மூன்று வருட இடைவெளியில் கொழும்பில் என்னால் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. விலை வாசிகள் ஏறத்தாழ ஐரோப்பிய நிலையிலேயே இருந்தன. ஆனால் மக்களது வருமானமோ ரூபாய்களில் இருந்தன. மனைவியின் நண்பி நாங்கள் வவுனியா செல்வதற்கு அன்று மாலை யாழ்தேவியில் பதிவு செய்திருந்தா. நானும் மனைவியும் காலை ஒன்பது மணியளவில் ஒரு சில சாமான்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றோம். நாங்கள் வெளியே வந்த பொழுது தொடர் மாடியின் முன் உள்ள தேமா மரங்கள் பூக்களை சொரிந்திருந்தன. பாடசாலைக்கு பிள்ளைகள் சென்று கொண்டிருந்தார்கள். கொழும்பு நகரம் பரபரப்பு வட்டத்தினுள் தன்னை முற்று முழுதாகவே புதைத்துக் கொண்டிருந்தது. நாங்கள் கொண்டுவந்த யூரோக்கள் சிலவற்றை மாற்றி வாங்கவேண்டிய சாமான்களை வாங்கினோம்.
எல்லா நாணயங்களிலும் புத்தமத சின்னங்களே வியாபித்திருந்தன. ஒரே இராஜ்ஜியம், குடியானவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற அரசர்களின் சிந்தனைகளில் வேற்று மத சின்னங்களை மருந்துக்கும் காணமுடியவில்லை. நேரம் பன்னிரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது. வெய்யில் அனலாக கொதித்தது . உடலெங்கும் வெப்பம் கூடி வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. காலை சாப்பிட்ட உணவு கரைந்து இப்பொழுது வயிறு அடுத்த கட்ட காட்சிக்காக தயாராகி கொண்டிருந்தது. எனது மனமோ குளிர்மைக்கு ஏங்கியது. நாங்கள் வெள்ளவத்தையில் பிரபல்யமான " ரேஸ்ற் ஒப் ஏசியா " க்குள் நுழைந்தோம். எமது முகத்தில் அறைந்த குளிரூட்டி எமக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது .
" ரேஸ்ற் ஒப் ஏசியா " உணவகம், அதன் சுவையினாலும் வாடிக்கையாளர் சேவையினாலும் தமிழர் மத்தியில் பிரபல்யமானஒரு உணவகமாகும். அந்த உணவகம் அதி நவீன வசதிகளுடன் நாங்களாகவே சுயமாக பரிமாறும் வசதிகளுடன் இருந்தது. நாங்கள் எங்களுக்குத் தேவையான உணவுவகைகளை எடுத்துக்கொண்டு ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டோம். அந்த இடத்தில் இருந்து காலி வீதியை எம்மால் வடிவாக பார்க்க கூடியதாக இருந்தது. மக்களும் வாகனங்களும் விட்டதை தேடும் ஆவலில் பறந்து கொண்டிருந்தார்கள். நேற்றில் இருந்து சரியான உணவுகள் இல்லாததால் எனக்கு அந்த உணவுவகைகள் அமிர்தமாக இருந்தது. வயிறு காய்ந்து பசித்தால் தான் உணவையும் ரசித்துப் புசிக்கலாம் என்ற உண்மை அப்பொழுது தான் எனக்கு விளங்கியது. நாங்கள் ஆறுதலாக எமது மதிய உணவை முடித்து விட்டு வெளியே வந்தோம். மீண்டும் அனல் வெக்கை முகத்தில் அடித்து முகம் எரியத் தொடங்கியது. ஒருநாள் கால மாற்றம் என்னை உடனடியாக இயல்பாக்கம் பெறுவதற்கு முரண்டு பிடித்துக்கொண்டது. அதனால் நான் மிகவும் அவதிப்பட வேண்டி வந்ததது. நாங்கள் மீண்டும் கையில் தூக்க முடியாத சுமைகளுடன் வீட்டை வந்து சேர்ந்தோம். நான் காற்று வேண்டி வீட்டின் பல்கணிக்கு வந்து நின்றேன். கடல் காற்று குளுமையுடன் முகத்தில் தாக்கியது அந்த வேளைக்கு இதமாக இருந்தது. நேரம் இரண்டு மணியை நெருங்கிகொண்டிருந்தது. நாங்கள் வவுனியா செல்ல வேண்டிய நேரம் நெருங்கியதால் மனைவியின் நண்பியே தனது காரில் எங்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு சென்றா.
17 சித்திரை 2014
Comments
Post a Comment