தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது. வெளியே எங்கும் அந்தகாரக் கரும் இருள் அப்பியிருந்தது. அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை. இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர். அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள். அரேபிய ஷேக்குளின் ஷோக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள். அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது. மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்த்து தங்களை உறைநிலைக்கு கொண்டு செல்வது போல அந்த விமானமும் தன் வெளிச்சங்களை உறைநிலைக்கு கொண்டு வந்தது. மெல்லிய இருள் அந்த விமானம் எங்கும் பரவி இருந்தது. சயனசுகம் எல்லோரையும் மெதுமெதுவாக அணைத்துக் கொண்டிருந்தது. எனது மனைவி நான் இருக்கும் தைரியத்தில் என் தோள் மீது உறங்கிப் போனாள். குளத்தில் கல்லினால் எறிந்த பொழுது வந்த தொடர் அலைகள் போல் என்மனமோ சிந்தனை அலைகளால் நிரம்பி வழிந்தது.
எனது முதல் பயணமும் அது தந்த அனுபவங்கழும் நேற்றுப் போல இருக்கின்றது. காலம் என்ற ஓட்டத்தில் சிறிது தூசி படிந்து இருந்தாலும், அது தந்த வலி என்னவோ கணனியின் வன்தகட்டில் அழியாது இருக்கும் கோப்புகள் போல பசுமையாகவே என் மனதில் இருக்கின்றன. அவைகள் பாம்புகள் போல இப்பொழுது படம் எடுத்தாடியபடியே தம் நாக்குகளை வெளியே விரித்தன. என்மனதில் இனம் புரியாத வலி ஒன்று பாத்திக்கு வாய்க்கால் கட்டி ஓடியது. அது என் நித்திரையை குலைக்கும் அளவுக்கு வீறுகொண்டு எழுந்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் எப்படி என்னை அரவணைக்கப் போகின்றார்கள்? என்னதான் இரத்த உறவாக இருந்தாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சொந்தங்களையும், ஓடித் திரிந்த மண்ணையும் தொலைத்த எனக்கு என்ன பெரிய வரவேற்பு அவர்களிடம் இருக்கப் போகின்றது? நான் அந்நியன் அந்நியன் தானே? யார் யாரை நோவது? எல்லோருமே கால ஓட்டத்தில் அள்ளுப்பட்ட குப்பைகள் தானே? கால ஓட்டத்தில் அள்ளுப்படாது எதிர்த்து நிற்கும் ஆலமரங்களை நோக்கி வலசை போகும் பறவைகள் போல நான் செல்வது எனக்கே என்மீது அருவருப்பாக இருந்தது. என்னை அறியாது என் கண்கள் கண்ணீர் திரையினால் பார்வையை மட்டுப்படுத்தியது. மீண்டும் ஓர் வலியதும் சிறியதுமான பாம்பு ஒன்று என் நெஞ்சில் ஓங்கி கொத்தியது. எனது கண்ணீர் எனது மனவியை எழுப்பியிருக்க வேண்டும் போல தன் முகத்தை திருப்பி என்ன என்று பார்வையால் கேட்டா. ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்பது போல என் கைவிரல்களை இறுக்கப் பற்றிக்கொண்டா. அந்த இறுக்கம் தந்த அரவணைப்பில் நான் கரையலானேன்.
நேரம் அதிகாலை இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த இயந்திரப்பறவை தனது உயரத்தை மெது மெதுவாக கீழே இறக்கியது ஜீ பி எஸ் இல் தெரிந்து கொண்டிருந்தது. தூரத்தே கொழும்பின் ஒளிப்பொட்டுகள் தெரிய ஆரம்பித்தன. இப்பொழுதே எல்லோரும் தங்களை ஆயத்தப்படுத்த தொடங்கி விட்டார்கள். எனது கண்களோ நித்திரையைத் தொலைத்து வைன் நிறத்துக்கு மாறி இருந்தது. எனது முகம் எண்ணைப் பிசுக்கினால் அப்பி இருந்தது. ஜெட்டாவிலும் விமானத்திலும் ஒழுங்கான சாப்பாடு இல்லாததால் மனமும் உடலும் ஒரே சேரக் களைத்திருந்தன. நரம்புகளை முறுக்கும் ஓரு சூடான கபே க்கும் சிகரட் வளையத்திற்கும் மனது ஏங்கியது. நமநமத்த நாக்கை என் மனது "சும்மாய் இரு" என்று அதட்டியது. அதுவோ மனதிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. அந்த அதிகாலை வேளையில் அந்த விமானம் தரையுடன் நளினமாக மோதி சிறிது தூரம் ஓடி , கட்டுநாயக்கா விமான நிலையத்தின் நீண்ட இறங்கு குழாயுடன் தன்னை அணைத்து தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. எல்லோருமே வெளியில் செல்வதற்கு முன்னணியில் நின்றார்கள். ஆனால் போவதற்கு ஒரு பாதை மட்டுமே உள்ளது என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருந்தார்கள் .
பட்டியில் அடைபட்டிருந்த மாடுகள் முட்டி மோதி எட்டிப் பாய்வது போல பயணிகள் விமான வாயிலை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்கள். நாங்கள் எமது கடவு சீட்டுகளை சரிபார்த்துக் கொண்டே இறுதியாக வெளியேறினோம். கட்டுநாயக்கா விமான நிலையம் முன்னைவிட பளபளப்பு கூடி இருந்தது. அந்தப் பளபளப்பின் பின்னால் தெரிந்தும் தெரியாத பாசிகள் பல படர்ந்திருந்தன. நான் எச்சரிக்கையாகவே கால்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். என் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது.
குடிவரவு குடியகல்வு ஐரோப்பியர்களுக்கு ஒரு புறமாகவும் , ஏனையோருக்கு ஒரு புறமாகவும் இருந்தது. நாங்கள் ஐரோப்பியர்களுகான வரிசையில் நின்று கொண்டிருந்தோம். குடிவரவு மேசையில் ஒரு சிங்கள நங்கை கப்பாயம் அணிந்து இருந்தாள். எமக்கு முன்னால் ஓர் பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர். அவர்களிடம் தேவைக்கு அதிகமாக தனது பல்லுகளைக் காட்டியவள் எமது முறை வந்ததும் அந்த முகம் தானாகவே கருமை கொண்டது. நாங்கள் ஐரோப்பியர்களாக இருந்தும் ஐயத்துடனேயே எமது கடவுச் சீட்டுகளை நோண்டினாள் . இறுதியில் என்னை நோக்கி "நீங்கள் விசா எடுத்தீர்களா?" என்ற கேள்வியை வீசினாள். நான் ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்த விடயத்தை சொன்னேன்.
"உங்கள் கடவுசீட்டு இலக்கம் பிழையாக இருக்கின்றது போய் காசை கட்டி மீண்டும் எடுத்து வாருங்கள்." என்று எனது கடவுசீட்டை தந்தாள். நான் அவளுடன் தர்க்கம் செய்ய வாய் உன்னுவதை கண்ட எனது மனைவி எனது கையை பிடித்து அழுத்தினாள் .
நாங்கள் மீண்டும் எனது கடவுசீட்டை ஆராய்ந்ததில் எனது கடவுசீட்டு இலக்கத்தில் உள்ள "ஐ " ( I ) என்ற ஆங்கில எழுத்து ஒன்றாக ( 1 ) என்னால் மாறி எழுதப்பட்டிருந்தது. நீ என்னதான் ஒழுங்காக செய்திருக்கின்றாய் ? என்பது போல என் மனைவி பார்வையால் என்னை எரித்தாள். நாங்கள் மீண்டும் முப்பது டொலர்கள் தண்டமாக செலுத்திவிட்டு விசாவை எடுத்து கொண்டு குடிவரவை விட்டு வெளியேறினோம். நாங்கள் எல்லாவற்றையும் முடித்து வெளியே வர அதிகாலை மூன்றரை ஆகி விட்டிருந்தது. நாங்கள் பம்பலபிட்டி செல்வதற்கு ரக்சிக்காக காத்திருந்தோம்.
April 23, 2014
Comments
Post a Comment