Skip to main content

வாடாமல்லிகை 07




இந்த உலகில் ஒரு இனத்தின் வாழ்வில் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலாக புகையிரதத்தையும் அதன் தண்டவாளங்களையும் புகையிரத நிலையங்களையும் காணமல் விட்டது என்றால் அது நாங்களாகத் தான் இருந்திருப்போம். நான் வவுனியா புகையிரத நிலையத்தில் இறங்கியபொழுது எதோ ஒரு இனம் புரியாத பரவசம் என் மனதில் ஓடியது. எல்லோருக்கும் புகையிரதமும் அதன் நிலையங்களும் ஒரு தரிப்பிடமாகவே இருக்கும். ஆனால் எங்களுக்கோ அவைகள் எல்லாம் இரத்தமும், நிணமும், அழுகைகளும் சோகங்களும் என்று மனதில் அழியா வடுக்களாகவே இருந்திருக்கின்றன. நாங்கள் எமது பயணப் பொதிகளை சரி பார்த்துக்கொண்டு நுழைவாயிலை நோக்கி நகர்ந்தோம். யாழ்தேவி மீண்டும் பளையை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. அந்த இரவு நேரத்தில் வெக்கை தணிந்து புகையிரத நிலைய சுற்றாடல் குளுமையாக இருந்தது. எங்களுக்காக அத்தான் தனது காரில் வந்து காத்திருந்தார். எனது கண்கள் என்னை அறியாமல் அக்காவை தேடின. நேரம் பத்து மணியை தாண்டி கொண்டிருந்து. அத்தானின் கார் எங்களை ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடியது.

எங்களுக்காக இரண்டு அக்காக்களும் மருமகனும் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இரவை குழப்பாது அமைதியாக காரில் இருந்து இறங்கினோம். எங்களின் தொடர்ச்சியான பயணமும், அது தந்த களைப்பும் ஒரு இடத்தில் ஆற அமர இருந்தாலே போதும் என்று  இருந்தது. அக்கா தந்த இரவு சாப்பட்டை முடித்து விட்டு முன் போர்ட்டிகோவில் எல்லோரும் ஒன்று கூடினோம். அந்த வீட்டை சுற்றி இருந்த குரோட்டன்களும், மாமரங்களும் வீசிய காற்றில் சலசலத்தன. தூரத்தே வௌவால் ஒன்று சடசடத்தது. மாமரத்தின் பின்னால் மின்மினி பூச்சிகள் படையொன்று அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன. சிள்வண்டுகளின் சிலுசிலுப்புகள் அந்த இரவுக்கு இனிமை சேர்த்துக்கொண்டிருந்ததன. போர்ட்டிக்கோ வெளிச்சத்தில் ஈசல்கள் எங்களை மொய்த்தன. அந்த சூழல் என்னை வேறு ஒரு உலகத்துக்கு இழுத்துச் சென்றது. மூன்று வருடத்துக் குடும்பக்கதைகளை கண்கள் சொருக சொருக கதைத்து விட்டு நாங்கள் எல்லோருமே படுக்க அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. எனது உடல் களைத்து மனம் நிரம்பியதால் இலகுவாகவே எனக்கு நித்திரை வசப்பட்டது. அங்கே கூடி இருந்த நுளம்புகளை போக்க மின்விசிறி காற்றை அள்ளி வீசியது. அப்படி இருந்தும் ஒன்றிரண்டு நுளம்புகள் சுழிக்கத்தான் செய்தன. ஆனால் இவைகள் எல்லாம் எனது நித்திரையை பெரிய அளவில் குறுக்கே நிற்கவில்லை. உலகை மறந்து நித்திரையில் இருந்தேன்.

அதிகாலை , அருகே இருந்த கோவில் திருப்பள்ளி எழுச்சியும் மசூதியின் காலை தொழுகையும் என்னை எழுப்பி விட்டன. கையில் இருந்த மணிக்கூடு ஆறு மணியைக் காட்டியது. எனது மனைவி நித்திரையின் பிடியில் இருந்தாள். அவளைக் குழப்பாது நான் வெளியே வந்தேன். வீட்டில் பெரிதாக யாரும் எழுந்திருக்கவில்லை. நான் கையில் ஒரு சிகரட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்தேன். அப்பொழுது நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது. காகங்களும், சேவல்களும், அணில்களும் தமது வேலைகளில் கடுமையாக இருந்தன. அந்தகாலை வேளையிலேயே வன்னி மண்ணின் சூட்டை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. வன்னி மக்களின் மனதைப்போலவே வானமும் சிவப்பேறி கொண்டிருந்தது. அருகே இருந்த ரம்பைக்குளத்தின் மீது வந்த காற்றினால் இருந்த சூடு குளிர்மையாக இருந்தது.

எல்லாமே நேற்று போல் இருக்கின்றது.  எல்லோரும் வாழ்க்கை சுவாரசியமாக போகுதில்லையே என்று கவலைப்பட்டு அதற்கு புது வழிகளை தேடி கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த மக்களுக்கோ வாழ்க்கையின் ஒவ்வரு நிமிடமும் ரணகளமாக அல்லவா இருந்தது? இந்த மில்லேனியத்தில் ஒரு மனிதன் வாழக்கூடாத வாழ்க்கை எல்லாம் இவர்கள் வாழ்ந்து விட்டார்கள். இவர்களைப் பற்றிய நியாயங்களும் கற்பிதங்களும் அவரவர் வசதிகளுக்குப் போய்விட்டன. கையில் இருந்த சிகரட்டின் இறுதி வெக்கையும் அக்காவின் குரலும் என்னை சுய நினைவுக்கு கொண்டுவந்தது.

இப்பொழுது எல்லோருமே எழுந்து விட்டிருந்தார்கள். அத்தான் காலையில் வந்த பிள்ளைகளுக்கு ரியூசன் சொல்லி கொடுப்பதும் , சின்ன அக்கா மருமகனை பள்ளிக்கூடம் அனுப்ப மல்லுக்கட்டுவதும், அக்காவும் மனைவியும் அடுப்படி வேலைகள் செய்வதும் என்று அந்த காலை வேளை பரபரக்கத் தொடங்கியது. வெய்யில் இந்தக் காலை வேளையை தன் கோரப்பிடியில் கொண்டு வந்து என்னை வியர்க்கப்பண்ணியது. அக்கா தந்த காலை கோப்பி சீனி இல்லாமலே இனித்தது. எல்லோரும் பரபரத்த பொழுது நான் மட்டும் பரபரப்புகள் ஏதும் இன்றி உதயன் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன். அக்கா நான் சாப்பிடுவதற்காக இடியப்பமும் சம்பலும் செய்திருந்தா. எங்களுக்கு மீண்டும் குடும்ப கதைகள் கதைப்பதிலேயே பொழுது கரைந்தது. மாலை வெய்யில் குறைந்தவுடன் நான் ரம்பைக் குளத்தை பார்வையிட சென்றேன்.

ரம்பைக்குளம் கண்ணுக்கெட்டிய வரை தண்ணீர் பரந்து விரிந்து இருந்தது. இடையிடையே குளம் ஆகாயதாமரையால் பச்சை கட்டி இருந்தது .தண்ணீர் ஊடாக வந்த குளிர்மையான காற்று முகத்தில் மோதி புத்துணர்சியை ஏற்படுத்தியது. குளத்தின் நடுவில் இருந்த புட்டிகளில் நாரைகளும் கொக்குகளும் நிறைந்து இருந்தன. தண்ணீரில் வாத்துக்கள் மிதந்து கொண்டிருந்தன. நான் வைத்த கண் வாங்காமல் குளத்தையும் அதன் சுற்றாடலையும் அவதானித்துக் கொண்டிருந்தேன். அந்தக்குளமும் சுற்றாடலும் கனமான மௌனத்துடன் என்னிடம் கதை பேசியது. இந்த குளத்தைப் போல பல குளங்கள் வன்னியில் இருந்ததால் வன்னிக்காடுகளை தங்கள் கைகளால் பொன் கொழிக்கும் பூமிகளாக்கிய அந்த மக்களை, மிருகங்களை போல திறந்த வெளி கூடுகளில் அடைத்து உணவுப் பொட்டலங்களை எறிந்து அவர்கள் அதற்கு அடிபடுவதை பார்த்து ரசித்த மனிதர்களை என்ன சொல்ல? மனம் ஒரு சூடான தேநீருக்கு ஏங்கியது. அங்கு தொடர்ந்து இருக்க மனம் பிடிக்காமல் மீண்டும் கடைத்தெருக்கள் இருக்கும் வீதியில் எனது கால்கள் நடந்தன. அந்த வீதி வவுனியாவில் இருந்து திரிகோணமலை செல்லும் வீதியாதலால் அதில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு இருந்தது. அதில் உள்ள ஓர் தேநீர் கடையில் எனது கால்கள் நின்றன.

அந்த கடை அதிக ஆடம்பரம் இல்லாது இருந்தது. கடையின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி பெட்டியில் வடைகளும் றோல்ஸ்களும் அழகாக அடுக்கி வைக்கப்படிருந்தன.கண்ணாடிப்பெட்டியின் அருகே கப்பல் வாழைப்பழ குலை ஒன்று தொங்கியது. அந்த கடையில் ஒரு வயோதிபரே பட்டறையில் இருந்தார். அவர் கண்களில் ஒருவித சோகம் இழையோடியதை என்னால் அவதானிக்க முடிந்தது. அவர் தந்த தேநீரை குடித்தபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் முல்லைத்தீவில் இருந்து புனர்வாழ்வு பெற்று வந்த ஒரு பெரியவர். சொந்தமாக விவசாயம் செய்த அவருக்கு, மூன்று ஆண்களும் மூன்று பெண்களுமாக என்று ஆறு பிள்ளைகள் இருந்தனர். ஆண்களையும் பெண்கள் இருவரையும் போர் பலி வாங்கியிருந்தது. ஒரு பெண் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் இவருடன் இருக்கின்றாள். எனக்கு அவரின் கதைகளை கேட்கும்பொழுது மனதில் துயர் மீண்டும் அப்பியது. நான் அவருடன் மேலும் தொடர்ந்து பேச்சுக்கொடுத்து அவரின் மனதை ரணப்படுத்த விரும்பாமால் தேநீருக்கு காசைக்கொடுத்து விட்டு தளர்ந்த நடையுடன் வீடு திரும்பினேன் .வீட்டின் முன்பக்கத்தில் எனது மனைவி உட்பட எல்லோரும் இருந்து குடும்ப கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தனர். எனக்கு எப்பொழுது நாங்கள் பருத்தித்துறை போவோம் என்று இருந்தது. நானும் அக்காக்களுடன் குடும்பக்கதைகளை கதைத்து இரவு சாப்பாட்டையும் முடித்தேன். மறுநாள் காலை ஆறுமணிக்கு எம்மை சுமந்து கொண்டு இ.போ.ச பஸ் வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

01 வைகாசி 2014

Comments

Popular posts from this blog

உங்களுடன் நான்-என்னுரை

போதைகளில் பலவகையுண்டு. அவைகளின் அடிப்படை ஊக்கியே நடைமுறை வாழ்வியல்சிக்கல்களினால் சோர்ந்து போயிருக்கும் மனிதர்களின் ஆழ்மனதை கிளர்த்துவதேயாகும். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தும் ஒருவகையான போதையே. எனது எழுத்துகள் பத்திரிகைகளில் வெளியாகி அதனை வாசகர்கள் படித்து கருத்துச் சொல்லும்பொழுது மகிழ்ந்திருக்கின்றேன். அதாவது எனது தனிப்பட்ட துயர்களுக்கான வடிகாலாக இந்த எழுத்துக்கள் எனக்கு இருந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ஆர்வக்கோளாறில் 'எதையாவது எழுதவேண்டும்' என்று துடியாய் துடித்ததின் விளைவினால் வெளியாகியது கோமகனின் 'தனிக்கதை' சிறுகதைத் தொகுப்பு. ஆனால் எழுத்தில் முதிர்வுத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் 'எதையாவது எழுதவேண்டும்' என்ற ஆர்வக்கோளாறை அடக்கி, அதனை நேர்வழிப்படுத்தி எனது மூன்றாவது படைப்பாக உங்கள் முன் 'முரண்'- என்ற சிறுகதைத்தொகுப்பின் ஊடாக உங்களைச் சந்திக்கின்றேன். இந்த சிறுகதைத் தொகுப்பில் பதினொரு சிறுகதைகளைத் தொகுத்திருக்கின்றேன். இந்தக்கதைகள் ஒவ்வொன்றிலும் நான் தனிப்படப் பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை ம...

சிக்கிய மரமும் சில்லெடுத்த பெயரும் -அறிவியல் – பாகம் 02- 11 – 20

11 நெல்லி மரம் – star gooseberry or gooseberry tree – Phyllanthus distichus கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியம் கூறுகின்றது . நெல்லி ஒரு தாவர இனத்தைச் சேர்ந்த்தது . இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைக...

முரண் தொடர்பாக ப தெய்வீகனது பார்வை

சுறுக்கர் என்று செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய உலகின் டான்களில் ஒருவரான கோமகனின் "முரண்" சிறுகதைத்தொகுதி வெளிவந்திருக்கிறது. "எதிர்" வெளியீடாக இம்முறை புத்தகச்சந்தை களேபரங்களோடு வெளிவந்திருக்கும் "முரண்" ஈழத்து படைப்புலக பரப்பில் பரந்துபட வாசிக்கப்படவேண்டிய பிரதி என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இலக்கியத்தில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் சுருக்கர். "நடு" என்ற இணைய இலக்கிய இதழை நடத்திவருபவர். இவை எல்லவற்றுக்கும் மேலாக, இலக்கியத்தின் அடிப்படைத்தகுதியான அறத்தின்பால் செயற்படுதல் என்ற பண்புநிலை தவறாதவர். அரிதாரம் பூசிக்கொண்டு இரட்டைவேடம்போடுகின்ற திறமை அறியாதவர். "முரண்" தொகுதியில் வெளிவருகின்ற கதைகளில் அநேகமாக அனைத்தையும் படித்திருக்கிறேன். புலம்பெயர்ந்து வந்த பின்னர் ஊர்க்கதை எழுதப்போகிறேன் என்று திரும்பி உட்கார்ந்திருக்கும் பலர் மத்தியில் தான் சார்ந்த சூழலையும் அதன் வழியான தரிசனங்களையம் தனது அநேக கதைகளுக்குள் கோமகன் கொண்டுவந்திருக்கிறார். தனது கதைகளை வடிவப்பிரக்ஞையுடன் வெளிக்கொண்டுவரவேண்டும் என்று வித்தியாசங்களை பரிசோதனை செய்வதில...